திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவநாள் பக்தி முயற்சி

நவநாள் பக்தி முயற்சி:

திவ்விய தஸ்நேவிஸ் மாதாவிடம்   விசுவாச அறிக்கை

ஓ! இடைவிடா திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும். 

*ஆமென்*

நவநாள் பக்தி முயற்சி: *

 திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவநாள் ஜெபம்

*சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்* 

*(3 முறை)* 

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு காடு கடல்களைக் கடந்து ஓடி வந்தோம், துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!. 

*ஆமென்*

நவநாள் பக்தி முயற்சி:

அர்ச்சியசிஷ்ட தஸ்நேவிஸ் மாதாவுக்கு செபம்

பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே! சர்வலோகத்துக்கும் ஆண்டவளே! உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும். மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய், நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி தடுக்கும் பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி, நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! ஆமென். ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள்பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 

*ஆமென்*

*அருள்நிறைந்த… (3 முறை)*

திவ்விய தஸ்நேவிஸ் மாதாவிடம் நவ மன்றாட்டுகள்

முதல் மன்றாட்டு

வானுலகவாசிகள் சிரசிற் புனைகின்ற தூய லீலியை நிகர்த்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தெய்வீகத்தின் ஆலயமே! பகலவனின் ஒளிபட பதுங்கியொழிவது பனியின் சுபாவமாயிருக்கிற நீர் எஸகலின் மலைமேல் பனிபெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் நீர் உறைபனியைப் பெய்து ஆலயங் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்து, சூரியனின் வெப்பத்தால் பனி உருகிப் போகாதிருக்கச் செய்து, உமது மகத்துவம் வாய்ந்த வல்லபத்தைக் காண்பித்தீரே. அமலோற்பவியே! தேவன் அடியோர்களின் ஆத்துமத்திலும் தமது வரப்பிரசாதங்களைப் பெய்து, உமது காலால் தலை நொறுங்குண்டு ஓலமிட்டழுது கிடக்கும் பிசாசின் தந்திரங்களால் அவ்வரப்பிரசாதங்கள் சிதறிப்போகாதிருக்க கிருபை பாலித்தருளும். 

*1பர*

*1 அருள்நிறைந்*

*பிதாவுக்கும்*

இரண்டாம் மன்றாட்டு

மகா புதுமைக் களஞ்சியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே! ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடிய இராக்கினியே! நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, “அமலோற்பவி” யென்றும் நாம அலங்காரத்தினால் சர்வலோகத்திலும் பிரகாசிக்கின்றீரே! மாதாவே, புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டியாகிய வந்தியின் வயிற்றில் உற்பவித்ததை யெண்ணுகையில் சர்வேசுரன் உம்மைப் “புதுமைக்கரசி” யென்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையென்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே! சர்ப்ப வடிவங் கொண்ட பேயின் மாய்கைக்குள் அகப்பட்ட ஏவையின் மக்களென்னும் பாவிகளாகிய எங்களிடத்தில், மோட்சப் பேரின்பத்திற்கு இன்றியமையாததான நன்மைகள் உற்பவிக்க கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

மூன்றாம் மன்றாட்டு

புண்ணியவான்கள் ஆசையோடணிந்து கொள்ளும் ஆபரண மலையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே! தேவலோகாதிபதியாகிய கடவுள், முக்காலத்திலும் கன்னித்துவங்குன்றாத உமது திருவுதரத்தில் அவதாரம் பண்ணும்போது, நீர் அடைந்த ஞான சந்தோஷத்தை எடுத்துச் சொல்ல இலகு, சூட்சுமம், அகஷயம், பிரகாசமென்னும் நான்கு வரங்களால் நிறைந்த வானோர்களாலுங் கூடுமோ! நல்ல தாயாரே! அடியோர்களும் அப்பரலோக நாயகனை நற்கருணை வழியாய் எங்களுடைய இருதயத்திற் கொண்டு, பகையைச் செய்கின்ற பஞ்சேந்திரியங்களை அடக்கிச் சந்தோஷிக்கக் கிருபை பாலித்தருளும்.

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

 நான்காம் மன்றாட்டு

நீண்ட கோலைக் கொண்டு ஆட்டு மந்தைகளை மேய்த்துவந்த தாசர்களாகிய மோயீசன், தாவீது என்பவர்களை, செழிய கோலைத்தாங்கி பூலோகத்தை அரசாளச் செய்த சர்வ வல்லபரின் மகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உமது மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி, கபிரியேலென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து, மனோதைரியங் கொடுத்தருளினீரே! நல்ல தாயாரே, அடியோர்களும் சத்திய வேதத்தின் பரம இரகசியங்களில் சந்தேகங் கொண்டால், அவைகளைத் தேவ உதவியால் நிவர்த்தி செய்து மனோ தைரியம் அடையக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஐந்தாம் மன்றாட்டு

பசாசுகளை எதிர்த்துத் தாக்கி, அவைகளுடைய அடாத கர்வத்தை அடக்கிப் பாதாளலோகத்திற்கு விரட்டியோட்டுகிறவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே! நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே! அடியோர்களும் சர்வேசுரனின் திருவுளத்திற்கமைந்து இந்த அநித்திய உலகத்தில் வரும் துன்பங்களைத் தாழ்மையோடு அனுசரிக்கக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஆறாம் மன்றாட்டு

வாசனை கமழுந்தேனைச் சொரிகின்ற பசிய நிறங்கொண்ட திரண்ட கனிகளைக் கொடுக்கும் திராட்சைக் கொடியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! எல்லாத் தலைமுறைகளும் பாக்கியவதியெனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே! சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி, நீர் பயந்தருளிய பால சுவாமியையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்தலகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே! நல்ல தாயாரே! யேசுவின் மந்தையாடுகளாகிய எங்களை, இம்மையில் ஓநாய்களாகிய நஞ்சிலுங்கொடிய பதிதக்கூட்டங்கள் நாசஞ்செய்யாதபடி பாதுகாத்து, மறுமையில் நாங்கள் ஆறு லகஷ்ணராகிற உமது திருக்குமாரனை வாழ்த்தி நமஸ்கரிக்க கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஏழாம் மன்றாட்டு

பெத்லேகமென்னும் திருத்தலத்தில், யாக்கோபு என்பவருக்குக் கடவுளால் காண்பிக்கப்பட்ட மோட்ச ஏணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! சர்வ வல்லபம் பொருந்திய கடவுளைத் திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தீரே! நல்ல தாயாரே, அடியோர்களும் அழிந்துபோகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச் சரீரத்தின் தொந்தரைகளினாலும் அலைகழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். களங்கமில்லாத கன்னிகையே! அடியோர்களுக்கு மோட்ச வீட்டில் சிறிது இடம் தருவித்துதவக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

 எட்டாம் மன்றாட்டு

சுடர்விட்டெரிந்த தீக்குள்ளிருந்தும் சிறிதும் வேகாமல் ஜொலித்து நின்ற முட்செடியும், சுகந்த பரிமளம் மிகுந்த சந்தன விருட்சங்களால் நிறைந்த நந்தவனமுமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மகத்துவந் தங்கிய ஜெயசீலியே! நீர் கானா நகரின் மெய்விவாக விருந்தில் உமது திருச்சுதனை வேண்டிச் செய்த மகா புதுமையை சர்வலோகமும் அறியுமன்றோ! மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி! மரியாயினடைக்கலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கும் எல்லாருக்கும் பரலோக கபாடம் திறக்கப்படுமென்று அர்சிசியசிஷ்ட பெனவந்தூர் உரைத்த வாக்கியத்தையெண்ணி, உம்மைத் தேடிவரும் அடியோர்களுடைய அவசர நேரத்திலும், தனித்தீர்வை நாளையிலும் உமது திருக்குமாரனை வேண்டி கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஒன்பதாம் மன்றாட்டு

மேகஞ்சூழ்ந்த எஸ்கலின் மலைத்தேவாலயத்தில் எழுந்தருளிப் பிரகாசிக்கின்ற தேவ நாயகியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மாசில்லாத உமது திருமேனியிலாடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டையில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாதத் தாமரையானது பொழியும் தேவனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய் தயைசெய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கிறோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவிபுரியாத மாதாவுமுண்டோ! இல்லையே, ஓ! திரியேக கடவுளால் பரலோக இராக்கினியாகக் கிரீடஞ் சூட்டப்பட்ட மாதாவே! உமதடைக்கலத்தைத் தேடி ஓடி வருபவர், எவ்வளவு பெரிய பாவியாயிருந்தபோதிலும், உமது கிருபாகடாட்சம் அவரைப் புறக்கணித்துத் தள்ளினதில்லையெனுஞ் சத்தியத்தை சருவலோகமும் அறியுமே! பனிமயத் தாயே! உம்மைப் பாவிகளின் அடைக்கலமென்று திருச்சபை உரத்துச் சொல்லுவது அபத்தமாமோ! அமலோற்பவ நாயகி, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந்தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ? ஒருபோதும் இல்லை. ஓ! இரட்சணிய இருப்பிடமே! எங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக இவ்வுலகில் வரும் பஞ்சம், படை, கொள்ளைநோய், பெரவாரிக்காய்ச்சல் முதலிய பயங்கரமான தீமைகளை விலக்கிப் பாதுகாத்து இரட்சியும். ஆ! ஆபத்திற்கபயமே! பசாசின் தந்திரத்தினால் திருச்சபையினின்று விலகிக் கெட்டுப்போன பதிதர், பிரிவினைக்காரர் மனந்திரும்பி மறுபடியும் திருச்சபையிற் சேரத் தயை செய்யும். உலகத்தின் எத்திசையிலும் சத்திய வேதம் பரவச் செய்யும். அன்புள்ள அன்னையே! எங்கள் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக் கண் நோக்கியருளும். நல்ல தாயாரே! இந்த மன்றாட்டுகளையெல்லாம் சர்வ வல்லமையுள்ள எங்களாண்டவரான யேசுக்கிறிஸ்து நாதரை வேண்டிக் கிருபை பாலித்தருளும்.

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

*ஆமென்**பிதாவுக்கும்*

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 31

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 31
நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுப்பதின்பேரில்!

ஒப்புக்கொடுத்தலின் இயல்பு.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுத்தலானது இந்தப் பரம நாயகிக்குப் பொருந்தும்படியாகவும், நமக்குப் பயனுள்ளதாய் இருக்கும் படியாகவும் உண்மையாய் இருக்கவேண்டும். குறையில்லாமல் இருக்க வேண்டும். நிலையாய் இருக்க வேண்டும். அந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, உட்கருத்தும் பக்தி வணக்கமுமின்றி, நாவினால் மட்டும் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல், உறுதியான மனதோடும் பக்தி வணக்கம் நிறைந்த, சிநேகத்தோடும் அன்னைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். மீளவும் நம்மிடத்திலிருக்கிற புத்தி மனதையும் சக்திகளையும், நினைவு ஆசைகளையும், வார்த்தைக் கிரிகைகளையும் நம்முடைய மேலான ஆண்டவளும் உன்னத இராக்கினியுமாய் இருக்கிற தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டியதல்லாமலும் இந்தப் பரம நாயகிக்கு நம்மை ஒப்புக்கொடுக்க பின்வாங்காமல் ஞானப் பிள்ளைகளைப் போலவும் குடிமக்களைப் போலவும், ஊழியர்களைப் போலவும் எண்ணி எப்பொழுதும் நம்மை ஆண்டு பாதுகாத்துவர மன்றாடுவோமாக. தேவமாதாவே உமக்கும் உம்முடைய திரு மைந்தனுக்கும் ஒப்புக் கொடுக்கப்பட்டவர்களாய் உமக்காகவும் அவருக்காகவும் வாழ்ந்து வருவது எவ்வளவு பாக்கியம்!

ஒப்புக்கொடுத்தலின் கடமை.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுக்கும் பொழுது நாம் அனுசரிக்க வேண்டிய கடமைகளை நன்றாய் ஆராய்ந்து பார்த்து நாம் பரலோக பூலோக இராக்கினியின் பிள்ளைகளும் ஊழியருமாய் இருக்கிறதினால் நமது வாழ்நாள் முழுதும் தேவமாதாவுக்குரிய பக்தி வணக்கத்துடன் சேவித்து நம்முடைய இருதய அன்போடு நம்முடைய அடைக்கலமாக மன்றாடி எங்கும் அன்னையின் மகத்துவ மேன்மை பரவும்படி செய்து மனுமக்கள் எல்லாரும் அன்னைக்குப் பணிவிடை செய்யுமாறு பிரயாசைப்பட்டு அன்னைக்குரிய ஆராதனையை எவ்விடத்திலும் விளங்கும்படி செய்து, புண்ணிய மாதிரிகைகளைச் சமுத்திரையாய்க் கண்டுபாவிப்பதே நமது பேரில் சுமந்த கடனாகும். அதைச் செய்வதற்கு மனமும் உறுதியும் உண்டோ, இல்லையோவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒப்புக்கொடுத்தலின் பயன்.

நம்மைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுப்பதினால் உண்டாகும் பயனைக் குறித்துப் பக்தியுள்ள ஒருவர் எழுதி வைத்ததாவது: தேவ மாதாவின் பேரில் வைக்கும் பக்தி வணக்கம் எண்ணிலும் சொல்லிலும் அடங்காத நன்மைகளை உண்டாக்கும் என்பதற்கு சந்தேகமில்லை. இந்தப் பரமநாயகியிடத்தில் ஏழைகள் செல்வங்களை அடைவார்கள். பிணியாளர் தங்களுடைய வியாதியில் வேண்டிய சுகத்தையும் கல்வி அறிவில்லாதவர்கள் கல்வியையும், பலவீனர் தைரியத்தையும் கஸ்திப்படுகிறவர்கள் தேற்றரவையும் வருத்தப்படுகிறவர்கள் இளைப்பாற்றியையும் கிலேசப்படுகிறவர்கள் அமைதியையும் யுத்தத்தில் அகப்பட்டவர்கள் சமாதானத்தையும் பாவிகள் மனந்திரும்புதலையும் இஷ்டப்பிரசாதத்தையும் நல்லோர் புண்ணிய வழியில் வழுவாமையையும் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருக்கிற ஆத்துமாக்கள் மோட்ச பாக்கியத்தையும் அடைவார்கள். இந்த பரம ஆண்டவளுடைய சகாயங்களைப் பெறாதவர் எவருமில்லை. அன்னையின் ஆதரவைப் பெறாத இராச்சியமும் தேசமுமில்லை. பூமியெல்லாம் கிருபையால் நிறைந்திருக்கின்றன. அன்னையின் மாசற்ற இருதயம் இயேசுநாதரின் திருஇருதயம் நீங்கலாக விலையேறப் பெற்றதுமாய் பரிசுத்தமுள்ளதுமாய் சாந்தக் குணமுள்ளதுமாய் கிருபையுடைத்தானதுமாய் இருக்கின்றமையால் சகல சம்மனசுகளையும் மோட்சவாசிகளையும் பார்க்கிலும் அதிக மேன்மையுள்ளதுமாய் நம்மை ஆதரித்துக் காப்பாற்றுவதற்கு விருப்பமுள்ளதுமாய் இருக்கிறது. இந்தக் கிருபையுடைத்தான இருதயத்தினின்று ஓர் வற்றாத ஊரணிபோல் அநேக நன்மைகள் மக்கள் மீது சொரிந்து வருகிறது. ஆனால் இந்தப் பரம நாயகி எல்லோரிடத்தும் இப்பேர்ப்பட்ட கிருபையுள்ளவர்களாய் இருக்கிறதினால் விசேஷமாய்த் தங்களை அன்னைக்கு ஒப்புக் கொடுத்தவர்கள் அடையப்போகிற ஞான வரங்களை எவ்வளவென சொல்லவும் முடியாது.

செபம்.

தேவசிநேகத்தின் தாயாரே, உமது திருமைந்தனான இயேசு கிறிஸ்துநாதர் தமது திருப்பிதாவினிடத்தில் எமக்காக மனுப்பேசுவது போல நீர் அடைந்த மீட்பரிடம் எங்களுக்காக மன்றாடுவதற்கு நியமிக்கப்பட்டவர்களாய் இருக்கிறீர். அவரும் உமது மன்றாட்டுக்களை புறக்கணிக்க மாட்டாதவராதலால் நீர் எல்லாவற்றையும் அடைவதற்கு வல்லபமுள்ளவர்களாய் இருக்கிறீர். ஆதலால் நிர்ப்பாக்கியருக்கு ஆதரவுள்ள உம்மிடத்தில் ஓடிவந்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைக்கிறேன். உம்மால் ஆதரிக்கப்பட்டவள் நித்திய நரகத்துக்கு போகிறவளல்ல. அதனால் இவ்வுலகத்தில் இருக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் என்னை கைவிட்டாலும் நீர் என்னை ஆதரித்து காப்பாற்றுவீராகில் கரையேறுவேன் என்கிறதே மறுக்கப்படாத சத்தியமாம். ஓ! தேவ அன்னையே உம்மை நம்பியிருக்கிறேன். இந்த நம்பிக்கையோடு மரித்து இரட்சணியத்தை அடைவேனென்று நம்புகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

உம்முடைய பிள்ளைகளாய் இருக்கிற எங்களைக் காப்பாற்றி இரட்சியும் தாயாரே.

முப்பத்தி ஒன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்த நாளை தேவமாதாவைக் குறித்து ஓர் பெரிய நாளைப்போல கொண்டாடுகிறது.

புதுமை!

தேவமாதாவின் விசேஷ கிருபையினால் அல்போன்ஸ் இராத்திஸ் போன் மனந்திரும்பின நிகழ்ச்சி திருச்சபையெங்கும் பெயர் பெற்றதாகும். அவர் யூத குலத்தில் பிறந்து யூதர்களுடைய வேதத்தில் வளர்ந்து அவ்வேதத்தில் மிகவும் பற்று உடையவராய் உறுதியாக இருந்தார். அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்பொழுது தன் அண்ணன் மனந்திரும்பி சத்திய வேதத்தில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றதின் காரணமாக அதிக அகங்காரம் கொண்டு சத்திய வேதத்தை அளவு கடந்து தூஷணிக்கத் துணிந்தார். ஆனாலும் இந்தச் சகோதரனும் தேவமாதா இருதயச் சபையார் எல்லாரும் அவருக்கு நல்ல புத்தி உண்டாக்குமாறு இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தார்கள். சில நாட்கள் கழித்து அல்போன்ஸ் மற்ற தேசங்களை பார்க்க புறப்பட்டு உரோமபுரி வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் இருக்கும்பொழுது தனக்கு அறிமுகமான பக்தி விசுவாசமுள்ள ஒரு பிரபுவிடத்தில் போனார். அந்த பிரபு அவர் சொல்லுகிற தேவ தூஷனங்களையும் அருவருப்பான பேச்சுக்களையும் பொறுமையோடு சகித்துக்கொண்டு அவரை நோக்கி நீர் சொன்ன யாவும் இருக்கட்டும் ஆனால் ஒளிவு மறைவின்றி ஓர் பரீட்சையை செய்யத் துணைவிரோ? என்றார். அதற்கு அவர் அது என்னவென்று கேட்க, பிரபு நாம் தமக்குக் கொடுக்கப்போகும் தேவமாதாவின் அற்புத சுரூபத்தை (Miraculousmedal) உமது கழுத்தில் அணிந்து கொள்ளும் என்றார். யூதன் நகைத்துச் சிரித்து தூஷணித்து விக்கினம் செய்தாலும் சுரூபத்தை வாங்குமாறு பிரபு அவரைச் சம்மதிக்கச் செய்தார். அதன்றியும் அவர் தினமும் புனித பெர்நர்து செய்த செபத்தை காலை மாலை செபிக்கும்படி செய்தார். யூதன் அந்த செபத்தைக் கட்டாயத்தின் பேரில் செபித்து வந்தார்.

இரண்டு மூன்று நாட்களுக்கு பின்னர் அவர் மேற்சொல்லிய பிரபுவுடன் புனித பெலவேந்திரர் கோவிலுக்குச் சென்று அதிலுள்ளவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மோட்சத்தின் ஓர் மகா பிரகாசம் விளங்கி அவர் மனதில் ஞான ஒளியானது பிரகாசிக்கும்படியாய்ச் சர்வேசுரனுக்கு சித்தமானதினால் சொல்லிலடங்காத பிரகாசமான காட்சியைக் கண்டார். உடனே அவர் முழுவதும் மனந்திரும்பி அதிக சந்தோஷத்தை அடைந்து பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வெள்ளம்போல் கண்ணீர் விட்டு தரையிலே கிடந்து மிகுந்த மனஸ்தாபத்தோடு அழுது கொண்டிருந்தார். அப்பொழுது ஓர் முக்கிய அலுவல் காரணமாக வெளியே சென்றிருந்த மேற்சொல்லிய பிரபு கோவிலுக்கு வந்தார். அப்பொழுது இந்த பாவி சாஷ்டாங்கமாக பீடத்தண்டையில் விழுந்து அழுகிறதைக்கண்டு அதிசயித்து அவரை எழுப்பி அதென்ன விஷயமென்று கேட்டார். அதற்கு அவர் தேவமாதாவின் திருஇருதயச் சபையார் எனக்காக வேண்டிக்கொண்டார்களென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் என்னை எங்கே கூட்டிக்கொண்டுபோக விரும்புகிறீர்களோ அங்கே என்னைக் கூட்டிக்கொண்டு போங்களென்றார். ஆனால் நீர் கண்ட காட்சி என்னவென்று பிரபு கேட்க அவர் தன் கழுத்தில் போட்டிருந்த தேவமாதாவின் சுரூபத்தை எடுத்து முத்தமிட்டு அதின்மேல் கண்ணீரை விட்டு சர்வேசுரன் எவ்வளவோ நன்மையுள்ளவராயிருக்கிறார். அவர் மகா அன்புள்ளவராதலால் பெரும் பாவியாகிய என்பேரில் இரங்கி என் இருதயத்தில் வரப்பிரசாதத்தின் ஆனந்தமாகிய பூரண வெள்ளம் பெருகச் செய்தார். நான் இப்போது எவ்வளவு பாக்கியமுள்ளவனா யிருக்கிறேன்! இப்பேர்ப்பட்ட கடவுளை அறியாதவர்கள் எவ்வளவோ நிர்ப்பாக்கியர்களாய் இருக்கிறார்களென்று நெஞ்சில் பிழை தட்டிக் கொண்டு சந்தோஷமான வார்த்தைகளைப் பேசி, நான் சீக்கிரத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும். குருவானவரிடத்தில் என்னை கூட்டிக் கொண்டு போங்கள் என்றார். குருவானவரிடத்தில் சேர்ந்தவுடனே முழங்காலிலிருந்து தன் கழுத்தில் போட்டிருந்த தேவ மாதாவின் சுரூபத்தை எடுத்து காண்பித்து மிகுந்த சந்தோஷத்துடனே இத்தாயாரைப் பார்த்தேன் என்று கூவினார். பின்பு தம் மனமகிழ்ச்சியை சற்றுநேரம் அடக்கி குருவானவரைப் பார்த்து சுவாமி! நான் இக்கோவிலில் பிரவேசித்து அதிலுள்ளவைகளைப் பார்த்து கொண்டிருக்கும்போது திடீரென்று மிகவும் திகில் கொண்டவன் போல சொல்லப்படாத பயங்கரத்துக்குள்ளானேன். உடனே என் கண்களை உயர்த்திப் பார்த்தேன். அப்பொழுது கோவில் முழுவதும் இல்லாதது போல எனக்கு ஒளி தோன்றினது. பின்பு புனித மிக்கேல் சம்மனசானவருடைய பீடத்தின்மேல் மாத்திரம் அவருக்கப்படாத ஓர் பிரகாசம் விளங்கிற்று. அந்த பிரகாச வெள்ளத்தின் நடுவில் மகிமை உள்ளவளுமாய் குளிர்ந்த பிரகாச ஜோதியுள்ளவளுமாய் மனோவாக்குக் கெட்டாத பிரதாபத்தோடு தயையும் இரக்கமும் நிறைந்தவளுமாய் புனித கன்னிமரியம்மாள் இச்சுரூபத்திலிருக்கிற மேரையாய் எனக்கு நேரில் காட்சியளித்தாள். என்னை நோக்கி நல்லதென்றாற்போல தலை சயிக்கினைக் காட்டி என்னோடு ஒன்றும் பேசாமல் தம்முடைய இரக்கத்தினால் என் மனதில் மெய்யான வேத இரகசியங்களை பதிப்பித்தாள் என்றார்.

மூர்க்கனான யூதனாயிருந்த இவர் நினையாத ஷணத்தில் மனந்திரும்பப்பட்டு ஓர் புத்தகத்தையும் வாசியாமலும் யாதொருவரிடத்தில் படியாமலும் வேத சத்தியங்களை அற்புதமாக அறிந்து முழுமனதோடு ஏற்று தாம் முன்னர் புறக்கணித்து தூஷணித்த வேதத்தை மெய்யான வேதமென்று விசுவசித்து ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று கேட்டார். அவர் விரும்பியவண்ணமே சிறிது நாட்களுக்குப்பிறகு தக்க ஆயத்தத்துடன் ஞானஸ்நானம் பெற்று தான் சேர்ந்த மெய்யான வேதத்தில் உறுதியாய் நடந்ததுமல்லாமல் உலக வாழ்வை அறவே வெறுத்து சந்நியாசிகளின் சபையில் சேர்ந்து பாக்கியமாய் மரித்தார்.

கிறிஸ்தவர்களே! மேற் சொல்லிய புதுமையில் விளங்குவதுபோல தேவமாதாவின் வல்லபமும் கிருபையும் மட்டில்லாததாய் இருக்கிறதென்று அறியக்கடவீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 30

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 30
தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டிய பக்தி வணக்கத்தின் நிலைமையின் பேரில்!

இந்த நிலைமையின் அவசரம்.

கப்பலோட்டுபவன் தான் மேற்கொள்ளும் பிரயாசைக்கு பின்வாங்காமல் கரை சேர்ந்த பின்பு மாத்திரமே இளைப்பாறுகிறதைப் போலவும் போர் செய்பவன் கலங்காது தன் எதிரிகளை வென்று வெற்றி அடைவதைப்போலவும் விவசாயம் செய்பவன் சகல வேலைகளுக்கும் பின்வாங்காமல் அறுப்புக் காலத்தில் தேடின தானியத்தை அடைவது போலவும் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவன் தான் கொண்ட பக்தி வணக்கத்தில் மரணம் மட்டும் நிலைகொண்டால் மாத்திரமே அதனுடைய ஞானப்பிரயோசனம் எல்லாவற்றையும் அடைவானென்பது குன்றாத சத்தியமாம். அதைப்பற்றி புனித லிகோரியுஸ் என்பவர் எழுதி வைத்ததாவது: பரிசுத்த கன்னிகையே! உம்மை நேசித்து மன்றாடி இடைவிடாது உமக்கு ஊழியம் செய்பவனாக உமது இரட்சணியத்தை அடைவேன் என்பது நிச்சயம். ஆனால் சில வேளை உம்மை மறந்து உம்முடைய திரு ஊழியத்தை கைநெகிழ்வேனோ என அஞ்சுகிறேன்.

அதெப்படியெனில், எத்தனையோ பேர் தங்களைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து சுகிர்த செபங்களை செபிக்கவும் நற்கிரிகைகளைச் செய்யவும் பரமநாயகிக்குத் தோத்திரமாக சுத்தபோசனம் ஒரு சந்தி அனுசரிக்கவும் பழகிய பின் பின்வாங்கி எல்லாவற்றையும் விட்டு விட்டு இந்தப் பரமநாயகியின் பேரில் அசட்டையுள்ளவர்களானார்கள். அவர்கள் இந்த நிர்ப்பாக்கிய அந்தஸ்திலே விழுந்த பிறகு அவர்களை தேவமாதா நேசத்தோடு காப்பாற்றி அவர்கள் கெட்டுப் போகாதவாறு கிருபை செய்வார்களென நிச்சயமாக சொல்ல முடியும். உங்களுக்கு பயங்கரமான பொல்லாப்பு வருமோ என்று பயந்து உறுதியோடு தேவமாதாவுக்குச் செய்யும் ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நடக்கக்கடவீர்கள்.

அதற்கு விக்கினம்.

இந்த நிலைமைக்கு முதல் விக்கினம்: உங்களுடைய உறுதியின்மையும் தைரியக் குறைவுமாகும். உங்கள் இருதயத்தில் ஞான சந்தோஷமும் தேவ சிநேகத்தின் இன்பமும் இருக்குமட்டும் மிகுந்த சுறுசுறுப்போடும் கவனத்தோடும் செய்ய வேண்டியதெல்லாம் செலுத்திக் கொண்டு வருவீர்கள். ஆனால் இந்த ஞான விருப்பமும் சுகிர்த சந்தோஷமும் குறையுமானால் அத்தோடு உங்களுடைய இருதய சுறுசுறுப்பும் மாறிப்போவதுமன்றி நீங்கள் தேவமாதாவைப் பற்றித் தொடங்கின நற்கிரிகைகளையும் விட்டுவிடுவீர்கள். இந்தப் பொல்லாப்பு உங்களுக்கு நேராவண்ணம் நீங்கள் தேவ தாய்க்குச் செய்வோமென்று வாக்களித்த செபங்களையாவது நற்கிரிகைகளையாவது என்ன விக்கினங்கள் நேரிட்டாலும் விடாமலும் குறைக்காமலும் இருக்கக் கடவீர்களாக.

இரண்டாம் விக்கினம்: பசாசினுடைய கொடுமையாகும். அதெப்படியென்றால், தேவமாதாவின் மூலமாக எண்ணிக்கையில்லாத சனங்கள் நரகத்துக்குத் தப்பி மோட்சத்துக்குச் சேருகிறார்களென்றும், அநேகம் பாவிகள் மனந்திரும்பி பாவத்தை விடுகிறார்களென்றும், தேவ வரங்கள் இவ்வுலகிற்கு வெள்ளம் போல் வருகிறதென்றும் பசாசு அறிந்து அந்தப் பரம நாயகியின்பேரில் வைத்த பக்தி வணக்கத்தைச் சகல மனிதரிடத்தினின்றும் அழிக்கப் பிரயாசைப்படும். ஆகையால் அந்த பசாசின் சோதனைகளுக்கு இடங்கொடாமலும் அது சொல்லும் பொய்யான நியாயங்களைக் கேளாமலும் பின்வாங்காமலும் நடக்கக்கடவீர்கள்.

அதற்குச் செய்ய வேண்டியவைகள்.

தேவமாதாவைத் தோத்தரிக்க வேண்டிய பக்தி வணக்கத்தில் நிலைகொள்ளும்படியாய் அந்தப் பரம நாயகியினுடைய மகத்துவத்தையும் மேன்மையான குணங்களையும் தியானித்து அன்னையால் கொடுக்கப்படுகிற எண்ணிறந்த உபகாரங்களையும் நினைவுபடுத்தி நமக்கு மெய்யான தாயாகிய தேவதாய் நம்மீது கொண்டுள்ள அளவு கடந்த நேசத்தை ஆராய்ந்து நினைக்க வேண்டியதுமல்லாமல், தம்முடைய ஊழியத்தில் நமக்கு உறுதியையும் நிலைமையையும் கொடுக்கும்படியாக அடிக்கடி மன்றாடக் கடவோம். தினந்தோறும் நன்றியறிந்த மனதோடு வாழ்த்திப் புகழ்ந்து வேண்டிக்கொள்ளாது இருப்போமானால் மதி கெட்டுப் புத்திமயங்கி அதிக ஆபத்துக்குள்ளாவோமன்றோ! ஆகையால் ஒவ்வொரு நாளும் பின்வாங்காத சுறுசுறுப்போடு அன்னைக்கு தோஸ்திரம் சொல்லவும் அன்னையின் விசேஷ உதவியை இரந்து மன்றாடவும் நற்கிரிகைகளைக் கண்டு அதன்படி நடக்கவும் கடவோம்.

செபம்.

கிருபையுடைத்தான தாயாரே! இஷ்டப்பிரசாதத்தால் நிறைந்தவர்களே, என் நிலையற்றதனத்தையும் உறுதியின்மையையும் அறிந்திருக்கிறீரே. நீர் என்னைக் கைவிட்டு விடுவீராகில் உம்மை இழந்து போவேன். ஆகையால் நான் உம்மை இழந்து போகாதபடிக்கு என்னைக் கைதூக்கி காப்பாற்றியருளும். என்னை உமது அடைக்கலத்தில் வைத்து உமது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களில் என்னையும் ஒருவனா(ளா)க தற்காத்தருளும். நான் தவறி விழுவேனாகில் என்னைக் கை தூக்கியருளும். நான் தவறிப்போவேனாகில் எனக்கு உமது நல்ல வழியைக் காட்டியருளும். என் ஆத்துமத்தின் சத்துருக்களோடு போர் தொடுப்பேனாகில் அவைகளை நான் வெல்லும் பொருட்டு எனக்கு உமது உதவியை நல்கியருளும். நான் பலவீனமாய் இருப்பேனாகில் என்னை உறுதிப்படுத்தும் இவ்வுலக சமுத்திரத்தில் மோசம் போகிறதாய் இருப்பேனாகில் என்னை கரை சேரப்பண்ணும். நான் நோயுற்றிருப்பேனாகில், என்னைக் குணப்படுத்தும். கடைசியில் என் மரண வேளையில் என் ஆத்துமத்தைக் கையேற்று மோட்ச பேரின்பம் இராச்சியத்தை அடையச் செய்யும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடியவர் சுகிர்தத்தைப் பெறாமலிருப்பவர்களுண்டோ ?

முப்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்தமாதக் கடைசியில் தேவமாதாவைக் குறித்து ஏதாகிலும் சிறப்புக் கொண்டாட்டம் செய்கிறது.

புதுமை

பிரான்ஸ் நாட்டின் லீயே ஸென்னும் ஊரில் தேவமாதாவின் பெயரால் கட்டப்பட்ட ஓர் பிரபலியமான கோவிலுண்டு. அக்கோவிலில் வணங்கப்படுகிற பரிசுத்த கன்னிகையின் திருச்சுரூப் வரலாறு அதிக அற்புதமாய் இருந்தாலும் நிச்சயமாய் இருக்கிறதினால் பரிசுத்த கன்னிமரியாயின் வல்லபமும் மகிமையும் அதிகரிக்கும்படி அதைச் சொல்லிக் காட்டுவோம்.

உயர்ந்த குலத்தில் உதித்தவர்களுமாய் போர் செய்வதில் மகாதீரர்களுமான மூன்று போர்வீரர்கள் ஆயிரத்து நூற்று முப்பத்திரண்டாம் ஆண்டில் துலுக்கரோடு வெகுநாள் யுத்தம் செய்த பிறகு பிடிபட்டுக் கொடிய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். பின்பு துலுக்கருடைய இராயன் அவர்களை எகிப்து தேசத்துக்குக் கூட்டிக் கொண்டுபோய் அவர்களின் வேதத்தை விடுமாறு துன்புறுத்தினான் பொய்யான முகாந்தரங்களைச் சொன்னான்.

தங்களுடைய வேதத்தில் அவர்களைத் திருப்ப தன்னுடைய ஆட்களை அவர்களிடம் அனுப்பினாலும், அவர்கள் துன்பங்களுக்கு அஞ்சாமலும், போலி நியாயங்களுக்கு இடங்கொடாமலும் தங்களுடைய விசுவாசத்தில் அதிக உறுதியாய் இருந்தார்கள். அப்பொழுது இராயன் நான் உங்களுக்கு ஆஸ்தி வெகுமான வரிசைகளைக் கொடுப்பேன். நீங்கள் என் மதத்தில் மாத்திரம் சேருங்கள் என ஆசைவார்த்தைக் காட்டி அவர்களை மோசஞ் செய்ய பார்த்தான். அவனது எண்ணம் வீணானதைக் கண்டு, மீண்டும் அவர்களுக்கு வேறோர் தந்திரத்தைச் செய்யத் துணிந்தான். மிகுந்த ஒழுக்கசீலமுள்ளவளும், மதிநுட்பம் வாய்ந்தவளுமான இஸ்மேரியா என்ற பெயருடைய தன் மகளை அவர்களிடம் அனுப்பி அவர்களை தன் மதத்தில் சேர இணங்கும்படி ஏற்பாடு செய்தான். ஆனால் இந்தப் பக்தியுள்ள போர் வீரர்கள் அவளுடைய வார்த்தைகளுக்கு இடங்கொடாமல் அவளிடத்தில் நம்முடைய பரிசுத்த வேதத்தைப்பற்றியும், கன்னி மகிமை கெடாத பரிசுத்த தேவமாதாவைப்பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். அப்பொழுது அவள், இந்தப் பரிசுத்த கன்னிகையின் ஓர் படத்தை பார்க்க மிகவும் ஆசையுள்ளவளாயிருக்கிறேன் என்றாள். அதற்கு அவர்கள் இந்தச் சிறைச் சாலையில் எங்களுக்கு ஒன்றும் இல்லாததினால் நீர் கேட்டதை எங்களால் செய்ய முடியாது என்றார்கள். அவளோ தனது ஆசையைப் பொறுக்கமாட்டாமல் அவர்களிடத்தில் ஓர் மரக்கட்டையையும் சில எத்தனங்களையும் கொண்டு வந்து கொடுத்து எப்படியாகிலும் தேவமாதாவின் ஓர் ரூபத்தைச் செய்ய வேணுமென்றாள். இந்த போர்வீரர்கள் பரம ஆண்டவள்பேரில் தங்களுடைய முழு நம்பிக்கையை வைத்து தங்களுடைய இக்கட்டுகளில் உதவி செய்யுமாறு மிகுந்த பக்தியோடு மன்றாடினார்கள். மறுநாள் காலையில் விழித்தெழுந்து தங்களுடைய சிறைச்சாலையை நோக்கவே மோட்ச இராக்கினியின் நிகரில்லாத ஓர் பிரகாசம் பொருந்திய சுரூபத்தைக் கண்டார்கள். உடனே அந்த அற்புதமான சுரூபத்தின் முன்பு சாஷ்டாங்கமாய் விழுந்து சர்வேசுரனுக்கு தோத்திரம் செலுத்தினார்கள். அப்பொழுது இராயனின் மகளாகிய இஸ்மேரியா அங்கு அவர்களை சந்திக்க வந்தபோது தேவமாதாவின் திருச்சுரூபத்தின் இன்பமான பிரகாசத்தையும் கண்டு பிரமித்துத் தெண்டனிட்டு அதைப் பக்தியுடன் வணங்கினாள். அன்று இரவு வேளையில் தேவமாதா இம்மூன்று போர்வீரருக்கும் தம்மைக் காண்பித்து அவர்கள் அடிமைப்பட்டிருக்கும் நகரைவிட்டு போகுமாறு பணித்தாள். இதுபோலவே அரசனின் மகளுக்கு தம்மைக் காண்பித்து அவளும் நகரைவிட்டு இம்மூன்று கிறிஸ்தவர்களோடு செல்லுமாறு பணித்தாள். ஆதலால் நால்வரும் மோட்ச இராக்கினியின் விசேஷ உதவியினால் அந்நகரைவிட்டு ஆபத்தின்றி வெளியேறியதுடன் தாங்கள் வைத்திருந்த தேவமாதா சுரூபத்தை மிகுந்த பூச்சியமாய்க் கொண்டு போனார்கள். நகரை விட்டு வெளியேறினாலும் அவர்கள் துலுக்கரின் தேசத்திலிருந்ததன் காரணமாக எந்நேரத்திலும் தங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கலங்கியவர்களாய் அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குள்ளேயே ஆலோசனை செய்து நித்திரை செய்தார்கள். பின்பு எழுந்து பார்க்கும்பொழுது தாங்கள் இந்த இரவு வேளையிலேயே எகிப்து தேசத்திலிருந்து, தங்களுடைய சொந்த பூமியான பிரான்சு தேசத்துக்குத் தேவ வல்லமையால் கூட்டிக்கொண்டு வரப்பட்டதை அறிந்தார்கள். இந்த அற்புதத்தை அவர்கள் கண்டு தங்களுக்கு நிகழ்ந்தவைகள் அனைத்தையும் மற்றவர்களுக்கு அறிவித்தபோது எல்லாரும் மகா அற்புத மென்றார்கள். முன் செல்லப்பட்ட தேவமாதாவின் அற்புதமான சுரூபம் அவர்களோடு இருந்ததினால் அவ்வூர் ஆயர் இந்த அற்புத வரலாறை அறிந்து வேண்டிய பரிசோதனை செய்து இராயன் மகளான இஸ்மேரியாளுக்கு நானஸ்நானம் கொடுத்து மரியாளென்ற பெயரை அவளுக்கிட்டு இவர்கள் நால்வரும் இருந்த இடத்திலேயே தேவமாதாவின் பெயரால் ஒரு கோவிலை, கட்டுவித்து மேற்சொல்லிய சுரூபத்தை அதில் ஸ்தாபித்தார்கள். அந்நாள் துவக்கி இந்நாள் வரையில் அநேக அற்புதங்கள் அவ்விடத்தில் நடந்து வருகின்றன. அக்கோயிலை அரசர்கள் ஆயர்கள் முதலானோர் சந்தித்து அதில் விலையேறப் பெற்ற காணிக்கைகளைச் செலுத்தி வந்தார்கள்.

கிறிஸ்தவர்களே, இப்புதுமையை, நீங்கள் வாசிக்கும் பொழுது தேவமாதாவின் மட்டில் வைத்த பக்தி விசுவாசத்தினால் எவ்வளவு ஞானப்பலன் உண்டென்று அறியக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 29

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 29
தேவமாதாவின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையின் பேரில்!

அன்னை நமது தேவைகளையெல்லாம் அறிகிறார்கள்.

தேவமாதா மோட்சத்தில் நிகரில்லாத சந்தோஷ மகிமை அடைந்திருந்தாலும், சகல நிர்ப்பாக்கியமும் நிறைந்த இவ்வுலகில் இருக்கிற தம்முடைய பிள்ளைகளை மறந்து போகாமல் இரக்கமும் அன்புமுள்ள தாயைப்போல் நம்மை நோக்கி தம்முடைய திருக்கண்களைத் திருப்பி, நமது தேவைகளை அறிந்து, நம்மைக் கெடுக்கத் திரியும் பொல்லாத பசாசின் தந்திரங்களை அறிந்து, நாம் இடுகிற அபய சத்தங்களைக் கேட்டு, நம்முடைய மன்றாட்டுக்கு இரங்கி, நம்மை மிகுந்த அன்புடன் ஆதரித்து வருகிறார்கள் இந்தப் பரம நாயகி நம்மைப் போல் இந்த கண்ணீர்க் கணவாயில் இருந்தபோது, நாம் படுகிற வருத்தங்களைத் தாமும் அனுபவித்து, நாம் படுகிற துயரங்களைத் தாமும் அனுபவித்து, நாம் படுகிற துன்பங்களைப் பட்டுணர்ந்திருந்தார்கள். தம்முடைய பிள்ளைகளாகிற நம்முடைய சகலவித கஸ்திகளுக்கும் இரங்கி உதவி செய்வார்களென்று நாம் நினைத்து தேவமாதாவினிடத்தில் முழுதும் நம்பிக்கை வைத்து நம்முடைய நல்ல உபகாரியாக அன்னையை கேட்டு தயாளத்தின் இராக்கினியாயிருக்க, மன்றாடி நம்முடைய ஆதரவாகவும் அடைக்கலமாகவும் தேற்றரவாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்படி மன்றாடக்கடவோம்.

அன்னை சர்வேசுரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவளா யிருக்கிறார்கள்.

முத்திப்பேறு பெற்ற ஆத்துமாக்கள் மோட்சத்தில் அடைந்த வல்லபம் அவர்கள் இப்பூமியில் இருக்கும் பொழுது செய்த புண்ணியங்களுக்கு ஏற்ற அளவாய் இருக்கும். ஆகையால் பரிசுத்த கன்னிகை எல்லா புண்ணியங்களுடைய மாதிரிகையாய் இறையருளின் உன்னத முடியை அடைந்திருப்பதால், சர்வேசுரனிடத்தில் பெற்றுக் கொண்ட வல்லபத்துக்கு அளவே இல்லை. நூல் ஆசிரியர்கள் எழுதியிருக்கும் வண்ணம் இயேசுக் கிறிஸ்துநாதர் எல்லா வரப் பிரசாதங்களுக்கும் காரணமாய் இருக்கிறதினால், இந்த வரப் பிரசாதங்களை நம்மில் பொழிய வருகிற வாய்க்காலாக தேவமாதாவை ஏற்படுத்தியிருக்கிறார் இயேசுக்கிறிஸ்துநாதர் தமது நேச அன்னையின் மேல் வைத்த அன்பு மிகுதியினால் அன்னையின் மன்றாட்டைப் புறக்கணியாமல், ஏதெதை கேட்பார்களோ அதைக் கொடுப்பாரென்பதற்குச் சந்தேகமில்லை. புனித தமியானுஸ் என்பவர் கூறுவது போல பரலோகத்திலும், பூலோகத்திலும் தேவமாதாவுக்கு மட்டில்லாத வல்லபம் கொடுக்கப்பட்டு மீட்பருடைய சிம்மாசனத்தருகில் அடிமையைப்போல் இராமல் ஆண்டவளாய் நிற்கிறார்களென்பதில் சந்தேகமில்லை. நாமும் திருச்சபையுடன் தேவமாதாவைத் தயாளத்தின் இராக்கினியாகவும், மனிதரின் உறுதி நம்பிக்கையாகவும் வாழ்த்தி நம்மைத் தமது அடைக்கலத்தில் வைத்து எப்பொழுதும் காப்பாற்றுமாறு அன்னையை மன்றாடக்கடவோம்.

அன்னை மனிதர் பேரில் மிகவும் அன்பாயிருக்கிறார்கள்.

எவ்வித பாக்கியத்தாலும் நிரம்பிய இந்தக் கன்னிகை தமது திருவுதரத்தில் உலக இரட்சகரைத் தரித்தவுடனே இந்தப் பரம இரட்சகர் நம்மீது வைத்த மட்டற்ற நேசத்தை, அன்னையை ஏற்றுக்கொண்டு நம்முடைய காரியங்களெல்லாம் தம்முடையதாய் இருக்கிறதுபோல பாவித்துக் கொள்ளுகிறார்கள் இயேசுக்கிறிஸ்துநாதர் சிலுவையடியில் நின்ற தம்முடைய திருத்தாயை நமக்குத் தாயாகக் கையளிக்கும் பொழுது, அன்னையின் திருஇருதயத்தில் பற்றி எரிந்த அன்பானது அதிகமதிகமாய் வளர்ந்ததென்பதில் சந்தேகமில்லை. அப்போது மனுமக்களைக் குறித்து வந்த தயவும் அன்பும் கவலையும் எவ்வளவென்று ஒருவராலும் சொல்லி முடியாதிருந்தாலும் தாம் பெற்று வளர்த்த பிள்ளையை மிகவும் அன்புள்ள தாயானவள் அளவின்றி அணைத்து நேசிக்கிறதைப் பார்க்க தமது ஞானப் பிள்ளைகளாகக் கொடுக்கப்பட்ட மனுமக்களை அதிக பட்சத்தோடு தேவமாதா அணைத்துக் காப்பாற்றி நேசித்துக் கொண்டு வருகிறார்கள். இப்போது இந்தப் பரமநாயகி தேவசிநேகத்தின் சுவாலையான மோட்சத்தில் வாழ்ந்திருந்த போதிலும் அவர்கள் தம்முடைய பிள்ளைகளின் பேரில் வைத்த அன்பானது அதிகரித்ததேயொழிய கொஞ்சமேனும் குறையவில்லை. மோட்சத்தின் இராக்கினியான எங்களுடைய தாயாரே! உம்முடைய பிள்ளைகளான நாங்கள் இவ்வுலகில் வருத்தப்படுகிறதையும் எண்ணிக்கையில்லாத ஆபத்துக்களில் அகப்பட்டிருக்கிறதையும் கண்டு நாங்கள் அனைவரும் உம்மிடத்தில் சேரும் பொருட்டு கிருபை செய்தருளும்.

செபம்.

அகில உலகையும் உண்டாக்கி ஆண்டு வருகிற ஆண்டவருடைய தாயாரே! புத்தியுடைத்தான சகல படைப்புகளிலும் யோக்கியமுள்ளவர்களே, அநேகர் துர்க்குணத்தினாலும் துஷ்டப்பேயின் சோதனையினாலும் உம்மைச் சிநேகியாமலும் சேவியாமலும் அறியாமலும் இருக்கிறார்கள். நானும் அவர்களைப்போல் உம்மை இந்நாள் மட்டும் தக்க பயபக்தியோடு வணங்காதிருந்தேன். ஆனால் வான் வீட்டில் கோடான கோடி சம்மனசுகளும் மோட்சவாசிகளும் உம்மைச் சிநேகித்து ஸ்துதித்து வாழ்த்துகிறார்கள். பூமியிலோவென்றால் எண்ணிக்கையற்ற புண்ணிய ஆத்துமாக்கள் உம்மை மகா நேசத்துடன் வணங்கி ஸ்துதித்து புகழ்ந்து கொண்டாடுகிறார்கள். அத்தகைய சிநேகப் பற்றுதல் என் இருதயத்திலே பற்றி எரிந்து நான் உம்மிடத்தில் மனிதரெல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்து எல்லாரும் உம்மை சிநேகிக்கும்படி செய்யக்கூடுமாகில் எவ்வளவோ பெரிய பாக்கியம்!

ஓ! தாயாரே, நீர் சர்வ தயாபர சர்வேசுரனுக்கு உகந்தவர்களாயிருக்கும்போது அற்பப் புழுவாயிருக்கிற நான் உம்மை சிநேகியாமல் போகிறதென்ன? பரிசுத்த தாயாரே, என் வாயும் என் நாக்கும் பேச்சில்லாமல் போனாலும் என் கையானது திமிரடைந்து என் விரல் இரண்டாய்ப் பிளந்து போனாலும் உம்மை ஒருக்காலும் சிநேகியாமலும் வணங்காமலும் இருக்கமாட்டேன். பேரின்ப இராச்சியத்தில் சகலமான வானோர்களும் உம்மை வாழ்த்துகிறதினால் அவ்விடத்தில் நான் சேருமளவும் உம்மை இவ்வுலகில் இடைவிடாமல் நேசித்துக் கொண்டு வருவேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

மோட்ச இராக்கினியே! நான் உம்மிடத்தில் சேருமளவும் என்னைக் கைவிடாதேயும்.

இருபத்தி ஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்களுக்காகப் திருப்பலி செய்விக்கிறது. அல்லது ஐம்பத்து மூன்று செபம் செய்கிறது.

புதுமை!

இயேசு சபையை நிறுவி அதை அனேக, ஆண்டளவாக நடத்தி வந்த, புனித இஞ்ஞாசியார் தேவமாதாவினத்தில் அதிக பக்தி நம்பிக்கை வைத்திருந்ததுமன்றி, தாம் நடத்தி வந்த சபையில் சேருகிறவர்கள் எல்லாரும் அந்த ஆண்டவளை உள்ளம் நிறைந்த நேசத்துடன் வணங்குமாறு கற்பித்திருக்கிறார். அவர் தேவமாதாவின் விசேஷ கிருபையினால் மனந்திரும்பி தம்மை முழுதும் இயேசு கிறிஸ்துநாதருக்கும் தேவமாதாவுக்கும் ஒப்புக்கொடுத்தார். ஓர் நாள் இரவில் பரிசுத்த கன்னிகை தம்முடைய திருக்கையில் குழந்தையான இயேசுக்கிறிஸ்துநாதரை ஏந்திக்கொண்டு தம்மை அவருக்குக் காண்பித்த பொழுது புனித இஞ்ஞாசியார் தேவமாதாவின் மகிமை பெருமையையும் குளிர்ந்த ஒளியையும் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து இவ்வுலக சுகபோகத்தை வெறுத்து புண்ணியத்தின் ஞான பேரானந்தத்தை மாத்திரமே தேட வேண்டுமென்று உறுதியான மனதை அடைந்தார். அந்நாள் துவங்கி அவர் சாகுமளவும் தேவமாதாவின் அனுக்கிரகத்தினால் கற்புக்கு விரோதமான ஓர் அற்ப நினைவு முதலாய் நினைக்கவில்லை.

கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு உலக செல்வங்கள் அனைத்தையும் தாம் தொடங்கப்போகும் தவ தர்மக் கிரிகைகளைத் தமது திரு மாதாவான தேவ அன்னையின் அடைக்கலத்தில் வைக்குமாறு மோன்சேராத்துஸ் என்னும் மோட்ச இராக்கினியின் பெயரால் கட்டப்பட்ட கோவிலுக்குச் சென்று அதில் பொதுப் பாவசங்கீர்த்தனம் செய்து சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் தம்மை முழுதும் ஒப்புக் கொடுத்து, தாம் அன்று முதல் உலக மன்னர்களுக்கு இனி ஊழியம் செய்யாமல் பரிசுத்த கன்னிகையின் சபையில் பெயர் கொடுத்து ஆண்டவருடைய ஞான யுத்தங்களை மட்டுமே செய்யத் தீர்மானித்திருப்பதன் அடையாளமாகத் தாம் இராணுவத்தில் வைத்திருந்த போர்க் கருவியை பரமநாயகியின் பீடத்தில் காணிக்கையாக வைத்து அந்தத் திருப்பீடத்தண்டையில் ஓர் இரவு முழுதும் செபம் செய்து அதிகாலையில் திவ்விய நற்கருணை வாங்கித் தாம் அணிந்திருந்த நேர்த்தியான ஆடைகளை ஏழை ஒருவனுக்கு அளித்து சாதாரண உடை உடுத்தி மன்ரேசாவென்னும் பட்டணத்திற்கு ஓரமாயிருக்கிற ஓர் பயங்கரமான குகையில் ஒளிந்துகொண்டார். அதில் கடின தவம் செய்து துன்பங்கள் பல மேற்கொண்டு தூய தமத்திரித்துவத்தையும் இயேசுகிறிஸ்து நாதரையும் அவருடைய திருமாதாவையும் பன்முறை காட்சி கண்டு, மிகவும் சுகிர்தமான தம்முடைய ஞானத் தியானங்களடங்கிய புத்தகங்களை எழுதி நாலைந்து ஆண்டுகளுக்குப்பிறகு பாரீஸ் நகரில் கல்வி சாஸ்திரத்தில் தேர்ந்த சில சீடர்களைத் தம்மிடத்தில் சேர்த்து மோன்மார்த் என்னும் தேவமாதாவின் கோவிலிலேயே இயேசு சபையின் முதல் அஸ்திவாரம் இட்டார். பின்பு உரோமாபுரிக்குச் சென்று தமது சபைக்கு அர்ச். பாப்பானவருடைய அனுமதியைப் பெற்று தேவமாதாவின் அடைக்கலத்தில் இச்சபையை முழுவதும் வைக்கத்தக்கதாக புனித சின்னப்பர் கோவிலிலிருக்கும் அற்புதமான தேவமாதாவின் பீடத்தில் தாமே தமது சீடர்களோடு பெரிய வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார்.

அதற்குப்பிறகு சர்வஜீவ தயாபர சர்வேசுரனுடைய கிருபாகடாட்சத்தினாலும் எவ்வித கிருபையையும் உடைத்தான பரிசுத்த கன்னிகையின் உதவியினாலும் இயேசுசபை மென்மேலும் எங்கும் பரப்பி இச்சபையில் சேர்ந்துள்ள குருக்கள் அனைவரும் நன்றியறிந்த மனதோடு தங்களுடைய இராக்கினியான தேவமாதாவுக்குத்தக்க வணக்கத்தைச் செலுத்திக் கொண்டு வருகிறதுமன்றி இப்பரிசுத்த கன்னிகையின் வணக்கத்தைத் திருச்சபை முறையின்படியே எங்கும் பிரசித்தம் பண்ணப் பிரயாசைப்படுகிறார்கள்.

கிறிஸ்தவர்களே! புனித இஞ்ஞாசியாரைப்போல் உங்களையும் உங்களைச் சேர்ந்த எல்லாரையும் தேவமாதாவின் அடைக்கலத்தில் வைக்கக்கடவீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 28

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 28
தேவமாதாவைக் கண்டு பாவித்தலின் பேரில்!

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது மிகவும் பிரியமான காரியம்.

தேவமாதாவினுடைய சுகிர்த புண்ணியங்களைக் கண்டு பாவிக்கிறது. அந்த பரம நாயகியைக் குறித்துச் செய்யக் கூடியவைகளில் உத்தமமான சுகிர்த பணிவிடையாகும். உங்களுடைய இச்சைகளை நீங்கள் அடக்காமல் சந்தோஷமான மனமோடு பாவச்சேற்றில் அமிழ்ந்திருக்கும் பொழுது நீங்கள் இந்த பரிசுத்த கன்னிகையை நோக்கி செபிக்கிற செபங்களும் வழக்கமாய் செய்கிற கிரிகைகளும் ஆனால் பாவத்தில் விழுந்தால் அதை விட்டுவிடும்படிக்கு நீங்கள் பிரயாசைப்பட்டு அன்னையைப் பின்பற்றி உறுதியாய் நடக்க முயற்சிப்பீர்களாகில் அன்னைக்கு பிரியப்பட்டவர்களாய் இருப்பீர்கள். உங்களுடைய வேண்டுதல் ஸ்துதி வணக்கம் முதலான கிரிகைகளை பிரியத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது மகிமை உண்டாக்குகிற காரியம்.

தாங்கள் பெற்ற பிள்ளையினுடைய மேன்மையான நடக்கையினாலும் சுகிர்த புண்ணியங்களால் உம் தந்தை தாய்க்கு மகிமை வருகிறதல்லவோ? இப்படியிருக்கும்பொழுது தேவமாதாவின் ஞானப்பிள்ளைகள் நல்ல மாதிரிகைகளைக் கண்டுபாவிக்க அதிக சுறுசுறுப்போடு பிரயாசைப்படுகிற பொழுது இந்தப் பரமநாயகிக்கு எத்தகைய மகிமை உண்டாகும்! தேவமாதாவைத் தங்களுடைய தாயாகவும் ஆண்டவளாகவும் இராக்கினியாகவும் வைத்து கொண்டாடி வருகிறவர்கள் எல்லாரும் இவ்வாறு அன்னையுடைய உத்தம மாதிரிகையைப் பின்பற்ற முயற்சிப்பார்களாகில், அன்னையுடைய மகத்துவத்தை பாராட்டி எல்லாரும் பணிவிடைக்காரர் போல சேவிப்பார்கள். இத்தகைய மகிமை இவ்வுலகில் துலங்கி மோட்ச பேரின்ப இராச்சியத்தில் கூட கொண்டாடப்படும். அந்தப் பரிசுத்த கன்னிகை தம்மைச் சிநேகித்து வணங்கித் தம்முடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்துத் தம்முடைய உதவியைக்கொண்டு இரட்சணியமடையும் ஆத்துமங்களை மோட்சத்தில் அதிசயிக்கப் பண்ணும் பொழுது மோட்சவாசிகள் எல்லாரும் வாழ்த்திப் புகழ்ந்து ஸ்துதிப்பார்கள். நாமும் சகல புண்ணியங்களுக்கும் உத்தமமான மாதிரிகையாயிருக்கிற பரிசுத்த மாதாவை எக்காலத்திலும் கண்டுபாவிக்கக்கடவோம்.

தேவமாதாவைக் கண்டு பாவிக்கிறது நமக்கு மிகவும் பயனுள்ள காரியம்.

தேவமாதாவை நல்ல முறையில் கண்டு பாவிக்கிறது. நமக்கு மிகவும் பயனுள்ள காரியமாகும். சகல புண்ணியங்களும் உத்தம மேரையாக இந்த பரிசுத்த கன்னிகையிடத்தில் விளங்குபவைக் கண்டு பாவிப்போமாகில் அதனால் எல்லா நன்மையுமுடைத்தான சர்வேசுரனுக்கு பிரியப்படுவோம் என்பதற்குச் சந்தேகமில்லை. நற்குணமுள்ள பிள்ளையானவன் தன் தாய்க்கு சந்தோஷம் வரும்படியாய் நற்கிரிகைகளை செய்கிறது போல தேவமாதாவினிடத்தில் பக்தியுள்ளவனின் புண்ணியமானது, இந்தப் பரமநாயகிக்குப் பிரியமாயிருக்கிறதென்று அறிந்து அதை முழுமனதோடு செய்து கொண்டு வருவான். மோட்ச இராக்கினியோவென்றால் தான் நேசித்து இரட்சணியத்துக்கு சேர்க்க விரும்புகிற தம்முடைய பிள்ளைகளைக் கைவிடாமல் அவர்களை உறுதிப்படுத்திப் புண்ணிய வழியில் நடப்பித்து அவர்கள் தங்களுடைய எதிரிகளை வென்று, அவர்கள் இரட்சணியத்துக்கு சேருமளவும் அவர்களை ஆதரித்துக் காப்பாற்றிக் கொண்டு வருவார்கள். இரட்சணியமடைவதற்கு உங்களுக்கு விருப்பமுண்டானால் இதுவே நல்ல எளிதான வழியாகும்.

செபம்.

மோட்சவாசிகளின் இராக்கினியே! நீர் எங்களுக்கு மாதிரிகையாகக் காண்பித்த சுகிர்த புண்ணியங்களை நான் பார்க்கும் பொழுது மிகுந்த சந்தோஷத்தினால் அகமகிழ்கிறேன். உம்முடைய கிரிகைகளையும் நடக்கைகளையும் எவ்வளவுக்கு ஆராய்ந்து பார்க்கிறேனோ அவ்வளவுக்கு உமது திருமைந்தன் நீங்கலாக, மற்றவர்களிலும் நீர் உத்தமமான மாதிரிகையாய் இருக்கிறீரென்று கண்டுகொள்கிறேன். பரிசுத்த கன்னிகையே, நீர் அடைந்த உன்னத சாங்கோபாங்கத்தை நான் அடைய முடியாதென்பது நிச்சயம். ஆகிலும் என் பலவீனத்தினால் முடிந்த அளவு அதில் அபிவிருத்தியடைய உழைத்துப் பிரயாசைப் படுவேன். உமக்கு மிகவும் பிரியமுள்ள புண்ணியங்களான மனத் தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும் தேவசிநேகமும் அருந்தவமும் இலெளகீக காரியங்களின் மட்டில் வெறுப்பும் அடைவதற்கு எனக்கு உதவியருளுவீர் என்று நம்பிக்கையாயிருக்கிறேன். என் அன்புள்ள தாயே! உம்முடைய புண்ணியங்களை நான் கண்டுபாவிக்கிற உமக்கு மிகவும் பிரியமாய் இருக்கிறதை அறிந்து இன்று முதல் அதன்மேல் அதிகக் கவனமாயிருப்பேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

சகல மோட்சவாசிகளுக்கும் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இருபத்தி எட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

இந்த மாத முடிவில் செய்ய வேண்டிய பாவ சங்கீர்த்தனத்திற்கு தயார் செய்கிறது.

புதுமை!

250 வருஷங்களுக்கு முன் தேவமாதாவின் மீது அதிக பக்தி வைத்த பெர்நந்து என்னும் ஓர் குருவானவர் வாழ்ந்து வந்தார். அவர் உயர்ந்த வம்சத்தில் பிறந்தவராய் இருந்த போதிலும் இயேசுக் கிறிஸ்துநாதருடைய எளிமைத்தனத்தைப் பின்பற்ற விரும்பி உலக வாழ்வை உதறித் தள்ளி தம்மை எளிமையான குரு என்று அழைக்கச் சொன்னார். அவர் புனித பொநர்து இயற்றிய செபத்தை அச்சிட்டு மக்களிடத்திலே ஏராளமாக பரப்பியது. அந்த செபத்தைக்கொண்டு மூர்க்க பாவிகளான அநேகரை அற்புதமாய் மனந்திருப்பினார். ஓர் நாள் மரண தண்டனை அளிக்கப்பட்ட ஓர் மனிதன் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் சிறைச்சாலையில் கிடக்கிறானென்று சொன்னார்கள். உடனே அவர் அவனிடத்தில் வந்து அவனுக்கு நல்ல புத்திமதிகள் சொல்லி மிகுந்த அன்புடன் வேண்டிய நியாயங்களையும் எடுத்துக்காட்டி அவனை மனந்திருப்ப பிரயாசைப்பட்டாலும் அந்தப் பாதகன் ஓர் மறுமொழியும் சொல்லாதிருந்தான். அப்பொழுது குருவானவர் தன்னோடு சேர்ந்து ஓர் சிறு செபம் செய்ய வேண்டுமென்று சொல்ல, அவன் கோபித்து உடனே தடுத்தான். அதைக்கண்டு குருவானவர் அவன் சொல்லும்படி செபத்தை சத்தமாய்ச் சொல்லத் தொடங்கினார். ஆனால் அந்தப் பாதகன் பல்லைக் கடித்துப் பேசாமல் இருந்தான். அப்போது குருவானவர் கோபமடைந்து, இந்த செபத்தினுடைய ஓர் பிரதியை . அவன் வாயிலே வைத்து அதைச் சொல்ல மாட்டேன் என்கிறாயே, கொஞ்சமாவது அதைச் சாப்பிடு என்றார். அந்தப் பாதகன் விலங்கோடு இருந்ததால் குருவானவர் சொன்னதைத் தடுக்க முடியாதவனாய் முழங்காலிலிருந்து குருவானவரும் இவனும் இச்செபத்தைச் சொல்லத் தொடங்கினவுடனே, அந்தப் பாதகன் புது மனிதனாகி திரளான கண்ணீர் விட்டு தான் செய்த பாவங்களுக்கு மனஸ்தாபப்பட்டு அழுது, பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்றான். குருவானவர் இதைப் பார்த்து தம்பி, தேவமாதாவின் கிருபையால் இரட்சணியம் அடைவாய் என்றார். பின்பு அவன் துர்நடக்கை அனைத்தையும் குருவானவரிடம் வெளிப்படுத்தின பிறகு அவன் தன் பாவங்களுக்குப் பட்ட மனஸ்தாப மிகுதியானாலும் சர்வேசுரன் தனக்குக் காண்பித்த இரக்கத்துக்கு அவன் பட்ட சந்தோஷத்தினால் மூர்ச்சையாய் விழுந்து மரித்தான்.

வேறொரு நாள் மேற்சொல்லிய குருவானவர் மரண தண்டனை அளிக்கப்பட்ட ஓர் மனிதனைக் கொலைக்களத்துக்குக் கொண்டு செல்லுவதைக் கேள்விப்பட்டு, உடனே அவனைப் பின்தொடர்ந்து ஓடிவந்து சேர்ந்தார். அந்தப் பாதகன் அப்பொழுதுகூட சொல்லத்தகாத தேவதூஷணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தான். அநேகர் அவனுக்குப் புத்தி சொல்லியிருந்தாலும் ஒன்றையும் அவன் கேட்கவில்லை அவனை கழுமரத்தில் ஏற்றினார்கள். அங்கேயும் குருவானவர் ஏறி பாதகனுக்கு நற்புத்திகளைச் சொல்லும் பொழுது அவன் அவரைப் பலத்த உதையால் கீழே விழ உதைத்தான். குருவானவர் கீழே விழுந்து காயப்பட்ட போதிலும் உடனே முழங்காலிலிருந்து பலத்த சத்தத்தோடு புனித பெர்நர்து செபத்தை வேண்டிக்கொண்டதுடன் அந்தப் பாதகன் மனந் திரும்பி அழுது அதிக மனஸ்தாபத்தோடு தான் செய்த பாவமெல்லாம் உடனே குருவானவரிடத்தில் வெளிப்படுத்தி தக்க ஆயத்தத்தோடு மரித்தான்.

கிறிஸ்தவர்களே! தினந்தோறும் பக்தியோடு புனித பெர்நர்து செய்த மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற செபத்தை வேண்டிக்கொள்வீர்களானால் அதன் ஞானப்பலன்களை அடைவீர்கள் என்பது நிச்சயம்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தின் பேரில்!

இந்த மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்து நாதர் நீங்கலாக எல்லா இருதயங்களிலும் மேன்மை உள்ளதுமாய் இருக்கின்றது.

எல்லாம் வல்ல சர்வேசுரன் படைத்த இருதயங்களில் திவ்விய இயேசுவின் திரு இருதயத்துக்கு இரண்டாவதாக மரியாயின் மாசற்ற இருதயமானது மேன்மையுள்ளதும் எவ்வித வணக்க, ஸ்தோத்திரத்துக்கும் தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது. திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் இந்த மேன்மையான இருதயத்தைப் படைக்கவும் உன்னத வரங்களாலும் விலையேறப்பெற்ற வரப்பிரசாதங்களினாலும் பூரண நிறைவுடன் அலங்கரிக்கவும் விரும்பினதினால் பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய அளவில்லாத வல்லபத்தைக் கொண்டு அந்த பரிசுத்த கன்னிகை தமக்கு தகுதியுள்ள குமாரத்தியாய் இருக்கிறதினால் அன்னைக்கு வணக்கம் அமைதி கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொடுத்தார். சுதனாகிய சர்வேசுரன் இந்த பரிசுத்த கன்னிகையின் திருவயிற்றில் ஒர் தகுதியான இருப்பிடத்தில் இருப்பதுபோல வாசம் பண்ணச் சித்தமாயிருந்ததால் தம்முடைய தாயாவதற்கு தகுதியான இருதயத்தைக் கொடுத்தார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் இந்த கன்னிகை தமக்கு மிகவும் பிரியமுள்ளவர்களா யிருக்கிறபடியால் அன்னைக்கு தேவ சிநேக அக்கினியினால் எரிகிற இருதயத்தைக் கொடுத்தார். இது இப்படியிருக்க இந்த திருஇருதயத்தில் கூடி இருக்கிற மேன்மையான சாங்கோபாங்கத்தை எந்த மனிதராலும் சொல்லவும் கண்டு பிடிக்கவும் இயலாது. மோட்சத்தில் இந்த மாசற்ற இருதயத்தை வாழ்த்திக் கொண்டாடி வருகிற சம்மனசுகளோடு நாமும் சேர்ந்து இந்தத் திருஇருதயத்தை உருக்கமான பக்தியோடு நேசித்து இந்தத் திரு இருதயத்தின் உன்னத மேன்மையை மோட்சத்தில் பார்த்துக் கொண்டாட முயலுவோம்.

பரிசுத்தம் உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது பரிசுத்தம் உள்ளதாக இருக்கிறது. எல்லா சுகிர்த புண்ணியங்களுடைய அதிசயத்துக்குரிய மாதிரிகையான இயேசுகிறிஸ்துநாதருடைய இருதயத்தின் உத்தம சாயலான இந்தத் திருஇருதயம் தேவ சிநேகத்தின் வேகமான அக்கினியால் பற்றியெரிந்து பக்தி சுவாலகர்களைக் காட்டிலும் சர்வேசுரனை அதிகமாய் நேசித்து மேலான கிரிகையினால் சர்வேசுரனுக்கு செலுத்தின மகிமையைக் காட்டிலும் அதிகமான தோத்திர மகிமை உண்டாயிற்று என்பது உறுதியான சத்தியம். தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இஷ்டப்பிரசாதத்தின் பொக்கிஷமே, சாங்கோபாங்கத்தின் சாயலே, எல்லா புண்ணியங்களின் இருப்பிடமே, நீர் எனக்கு எப்பொழுதும் மாதிரிகையாய் இருப்பீர் நான் உம்மிடத்தில் வந்து மனத்தாழ்ச்சியையும், கற்பையும், சாந்தகுணத்தையும், பொறுமையையும், உலக வெறுப்பையும், இயேசுகிறிஸ்துநாதருடைய சிநேகத்தையும் பெற்றுக்கொள்வேன்.

சிநேகிக்கத்தக்க தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்துநாதருடைய திருஇருதயம் நீங்கலாகத் தமது நிகரில்லாத சுகிர்த குணங்களினாலும் பொறுமை தயையினாலும் நமது மட்டில் வைத்த அன்பினாலும் நமது அன்புக்கும் நன்றியறிந்த மனதுக்கும் மிகவும் பாத்திரமுள்ளதாகும். அந்தத் திருத்தாயார் நமது அவசரங்களில் சிந்தையுள்ளவர்களாய் நாம் அடைந்துவரும் சகல துயரங்களிலும் நமக்கு ஆதரவும் தஞ்சமும் தேற்றரவுமாகத் தம்முடைய இருதயத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். நாம் அன்னையுடைய சிநேகத்துக்கு பிரதி சிநேகத்தை செலுத்தி பணிவிடையில் பிரமாணிக்கமாய் நடந்து அதிசயமான புண்ணிங்களைச் சுறுசுறுப்போடு கண்டுபாவித்து நம்முடைய நன்றியறிந்த பட்சத்தை அன்னைக்கு காண்பிக்கக்கடவோம்.

செபம்.

தேவமாதாவின் மாசற்ற திவ்ய இருதயமே! தேவசிநேகத்தின் இருப்பிடமே, தயாளத்தின் சமுத்திரமே, சமாதானத்தின் சிம்மாசனமே, மிகவும் சிநேகிக்கப்படத்தக்க இருதயமே, ஆராதனைக்குரிய ஏக திரித்துவத்துக்கு உகந்த தேவாலயமே, சம்மனசுகளாலும் மனிதர்களாலும் வணங்கப்பட தகுதிவாய்ந்த இருதயமே, எல்லாப் புண்ணியங்களுடைய மாதிரிகையே, இயேசுகிறிஸ்துநாதர் இருதயத்துக்கு ஒத்திருக்கும் சாயலே, எங்களுடைய அன்புள்ள தாயாருடைய திருஇருதயமே, எங்களுடைய துன்பங்களை உணர்ந்து எங்களுக்காக மிகுந்த கஸ்தி அவமானப் பாடுகளை அனுபவித்த திரு இருதயமே! சகல மனுமக்கள் இருதயங்களாலும் நன்றியறிந்த மனதோடும் உறுதியான நம்பிக்கையோடும் சிநேகிக்கப்படுவதற்கு பேறுபெற்ற திருஇருதயமே! நீசப்பாவியாயிருக்கிற அடியேன் உமக்கு செலுத்துகிற வணக்கத்துக்கு இரங்கி அடியேனுடைய மன்றாட்டுக்களைக் கேட்டு என்னுடைய அற்ப வேண்டுதலை ஏற்றுக்கொண்டு சகல மனிதருடையவும் இருதயங்களை உமது திருமைந்தன் பக்கமாய் திருப்பி உம்மிடத்தில் இடைவிடாமல் பற்றியெரிகிற தேவ சிநேக அக்கினி எங்களிடத்திலே எரியும்படி செய்தருளும். எங்களுடைய அவசரங்களிலே எங்களுக்கு உதவியாயிரும். துயரங்களில் தேற்றரவாயிரும். சோதனைகளில் திடனாயிரும். ஆபத்துக்களில் தஞ்சமாயிரும். மரணவேளையில் ஆதரவாயிரும், நித்திய ஜீவியத்தில் எங்களுக்கு பாக்கியமாயிரும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இயேசுகிறிஸ்து நாதருடைய திரு இருதயத்தின் உத்தமமான சாயலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருபத்தி ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயச் சபையில் பெயர் எழுதி வைக்கிறது.

புதுமை!

சகல மனிதருக்கும் பகைவனாக பசாசு அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய அநேக உபாயங்களைப் பண்ணப் பிரயாசைப்படுகிறது மன்றி அவர்கள் பாவத்தில் விழுந்த பின்பும், தாங்கள் செய்த பாவங்களுக்காக அதிக கூச்சத்தை உண்டாக்க அதைக் குருவிடத்தில் வெளிப்படுத்தாதவாறு தடை செய்யும்.

ஓர் மனிதன் நெடுநாள் புண்ணிய வழியில் நடந்து ஓர் நாள் பசாசினுடைய கொடிய சோதனையில் அகப்பட்டு பாவத்தைக் கட்டிக்கொண்டான். உடனே அதிக வருத்தமடைந்து பாவத்தினுடைய கொடூரத்தைக் கண்டு அதிகமாய் பயப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்ற நினைவு தேவ ஏவுதலினால் அவன் மனதிலே வந்தாலும் தான் கொண்ட கூச்சத்தினால் இந்த பாவத்தை எப்படி வெளிப்படுத்துவேனென்று கலங்கிப் பின்வாங்கினான். அப்படி பின் வாங்கினாலும் தான் செய்த குற்றத்தை நினைத்து அதிக மனவருத்தம் அடைந்து சாப்பிடவும் நித்திரை செய்யவும் முடியாத நிலையிலிருந்தான். அப்பொழுது அந்த தொந்தரவெல்லாம் நீங்கும் பொருட்டு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ஆற்றுக்குச் சென்றான். ஆற்றை அடைந்ததும் தனக்கு நித்திய நரக வேதனை நிச்சயம் கிடைக்குமெனப் பயந்து திரளான கண்ணீரை விட்டு ஆண்டவரைப் பார்த்து, என் பாவத்தைப் பொறுக்க வேண்டுமென்று மன்றாடின போதிலும் பாவசங்கீர்த்தனம் செய்ய தைரியமின்றி தத்தளித்து, அநேக கோவில்களை வேண்டுதலாக சந்தித்து அநேக செபங்களைப்பண்ணி தர்மங்களைச் செய்து தன் மனவருத்தம் தீரும்படியாய்த் திரிந்தாலும் எத்தகைய பயனும் ஏற்படவில்லை. ஓர்நாள் இரவில் தான் படும் மனக்கஷ்டத்தின் காரணமாக அதிக வருத்தப்பட்டு எப்படியும் பாவசங்கீர்த்தனம் செய்தே தீர்வேனென்று நினைத்து அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு அருகிலே சேர்ந்ததும் கூச்சத்தினால் பின்வாங்கி பாவசங்கீர்த்தனம் செய்யாமல் வந்து விட்டான். வேறொரு நாள் கோவிலுக்கு வந்து அதிகமான கூச்சத்தால் தடுக்கப்பட்டு ஒருபோதும் அந்த பாவத்தை சொல்லமாட்டேனென்று பின்வாங்கித் தன் வீட்டுக்குத் திரும்புமுன்னே தேவமாதாவுக்கு தன் நிர்ப்பாக்கியத்தைச் சொல்ல வேண்டுமென்று இந்தப் பரம நாயகியின் திருப்பாதத்தண்டையில் விழுந்து அன்னை தன் பேரில் இரங்கித் தன்னை கைவிடாதபடிக்கு மன்றாடினான். எவ்வித கிருபையும் உடைத்தான தேவமாதா இந்த நிர்ப்பாக்கியமான பாவியின் பேரில் இரங்கி அவன் படும் பயங்கரமான கூச்சத்தை நீக்கி விட்டாள். திருக்கன்னிகையின் பாதத்தில் அவன் விழுந்தவுடனே புது மனிதனாகி எழுந்து தைரியத்தோடு குருவானவரிடத்தில் போய்த் திரளான கண்ணீர் சிந்தி தான் செய்த பாவமெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் வெளிப்படுத்தினான். அப்போது அவன் மனதில் வந்த சந்தோஷமும் அமைதியும் எவராலும் எடுத்துரைக்க இயலாத அரிய காரியமாயிருந்தது.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய தேவமாதாவின் மாசற்ற இருதயத்தை மன்றாடக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26
தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!

தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.

தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எழுந்தருளி போனது விசுவாச சத்தியமென்று 1950-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அர்ச். பாப்பானவர் வரையறுத்துக் கூறினார்.

தேவமாதா இவ்வுலகத்தை விட்டு மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகிறபொழுது ஒன்பது விலாச சபைகளின் சம்மனசுகள் எல்லோரும் முத்திப்பேறுப்பெற்ற மோட்சவாசிகள் அனைவரும் தங்கள் இராக்கினிக்கு எதிர்கொண்டு வந்து இன்பமான பாட்டுக்களை பாடி பிரபலமான கொண்டாட்டம் செய்தார்கள். மோட்ச இராச்சியத்தின் எப்பக்கத்திலும் பரமநாயகி ஜெயசீலியாக வருகையில் ஓர் விசேஷ சோதிப் பிரகாசம் துலங்குவது போன்றிருந்தது. திவ்விய இயேசுவே தமது திருத்தாயாருக்கு எதிராக வந்து மிகுந்த அன்பு பட்சத்துடன் மோட்ச மகிமையான இராச்சியத்துக்குள் பிரவேசிக்க செய்தார். பிதாவாகிய சர்வேசுரன் அன்னையை தமது பிரிய குமாரத்தியாக ஏற்றுக்கொண்டு தம்முடைய ஏக குமாரரான உலக மீட்பரின் வலதுப் பக்கத்தில் அன்னைக்கு ஸ்தாபித்திருந்த சிம்மாசனத்தில் உட்காரச் செய்து அன்னையுடைய திருச்சிரசில் நித்திய ஆனந்தத்தின் முடியை சூட்டி பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாக ஸ்தாபித்து அன்னையுடைய திருக்கையில் தமது அளவில்லாத பொக்கிஷங்களைக் கொடுத்து தேவமாதாவாகவும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளாகவும், புத்தியுள்ள சகலரும் அன்னையை வணங்கி ஸ்துதித்து கொண்டாட வேண்டுமென கற்பித்தார். நாம் எல்லாரும் மோட்சவாசிகளுக்கு ஆனந்தமான அந்த வேளையில் அவர்கள் தேவமாதாவைக் குறித்து அனுபவித்த அகமகிழ்ச்சியை கொண்டு அந்த பரமநாயகியை அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடக்கடவோம். நமது அன்னையிடத்தில் எப்பொழுது சேருவோமோ என்ற ஆசை மிகுதியால் நம்மை மீட்க வேண்டுமென மன்றாடுவோம்.

தேவமாதா மோட்சத்தில் அடைந்த மகிமை.

தேவமாதா மோட்ச இராட்சியத்தில் அடைந்த உன்னத மகத்துவத்தை சிறிது ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரம் நாயகி உலக மீட்பருடைய மெய்யான தாயுமாய் எல்லா வரப்பிரசாதங்களினாலும் பூரணமாக அலங்கரிக்கப் பட்டவர்களுமாய் வாழ்ந்த 70 வருஷமளவும் உத்தம சுகிர்த புண்ணியங்கள் அனைத்தையும் செய்து தமது திருக்குமாரனுக்கு பக்தியுடன் பணிவிடை புரிந்து, புண்ணியவான்களை எல்லாரையும்விட உன்னத சாங்கோபாங்கத்தை அடைந்திருந்தார்கள். மோட்சத்தில் அடைந்த மகத்துவம் இவைகள் எல்லாவற்றிற்கும் ஏற்றவாறு விளங்குகிறது. அப்படியே எல்லா மோட்சவாசிகளுக்கும் மேலானவர்களும் தூதர் அதிதூதர் முதலிய சம்மனசுகளுக்கும் உயர்ந்தவளுமானார்கள். அன்னைக்கு மேல் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் மாத்திரம் மேற்பட்டவராயிருக்கிறார். நாம் அந்தப் பரமநாயகி பாத கமலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நம்மால் முடிந்த அளவு மகத்துவத்துக்கு தகுதியான தோத்திரமும் ஸ்துதியும் வாழ்த்துதலும் செலுத்தக்கடவோம்.

தேவமாதாவுக்கு மோட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லபம்.

தேவமாதா இந்த மேன்மையான உன்னதத்தை பெற்று எல்லா தோத்திரத்துக்கும் ஸ்துதிக்கும் உரிமையுள்ளவர்களாய்க் குறையற்ற ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்தாலும் இவ்வுலகில் துன்பப்பட்டு உழலும் தமது அன்புப் பிள்ளைகளான நம்மை மறக்கிறவர்களல்ல! அவர்கள் திருச்சபைக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாதுகாவலும் தாயாரும் இராக்கினியுமாய் இருக்கிறதுமன்றி புண்ணியவாளர் நன்னெறியில் நடக்குமாறும், பாவிகள் பாவத்தைவிட்டு புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க துணியுமாறும் எல்லாருக்கும் அடைக்கலமும் ஆதரவுமாயிருக்கிறார்கள். இடைவிடாது நமக்காக தமது திருமைந்தனிடத்தில் மனுப்பேசி தம்மை மன்றாடுகிறவர்களுக்கும் விலையேறப் பெற்ற வரங்களையும் விசேஷ உபகாரங்களையும் அளிக்கிறார்கள். நாமும் இந்த அன்புள்ள தாயின்மீது தகுதியான மரியாதையும், உறுதியான நம்பிக்கையும், உண்மையான அன்பும் வைத்து வணங்கவும் நேசிக்கவும் சேவிக்கவும் கடவோம். நமது வாழ்நாளெல்லாம் நம்மைக் காப்பாற்றி நாம் சாகிற வேளையில் நம்மை மோட்ச இராச்சியத்தில் சேர்க்க அன்னையை மன்றாடுவோம்.

செபம்.

இயேசுகிறிஸ்துநாதருடைய பரிசுத்த தாயாரே! நீர் இந்தக் கண்ணீர் கணவாயை விடுவதற்கு சமயமாயிற்று. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறதற்கு நாங்கள் பேறுபெற்றவர்களல்ல. அதிக பாக்கியமும் அதிக யோக்கியமும் உள்ள இடமான மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகக்கடவீர். என் அன்புள்ள தாயே! நித்தியத்தின் மகிமையான முடியைத் தரித்துக்கொள்ள எழுந்தருளும். நீர் மகிமை நிறைந்த புண்ணியங்களால் பேறு பெற்ற சம்பாவனையை கைக் கொள்ள எழுந்தருளும். உமக்கு ஸ்தாபிக்கப்பட்ட சிம்மாசனத்தில் இராக்கினியாக உட்கார்ந்தருளும். ஆனால் உம்முடைய நீசப் பிள்ளைகளான எங்களை விடுகிறபோது எங்களுடைய பக்தியுள்ள உணர்ச்சிகளுக்கிரங்கி நீர் எங்களுக்கு எப்பொழுதும் அடைக்கலமும் அன்னையுமாய் இருப்பீராக. எங்களுக்கு ஓர் அடையாளமும் உறுதிப்பாடும் தந்தருள மன்றாடுகிறோம். எங்களைப் பெற்ற தாயைப்பார்க்கிலும் அதிக அன்பான தாயே! இரக்கமுள்ள மரியாயே! உம்முடைய பரிசுத்த திருஇருதயத்தை எங்களுக்கு கொடுத்தருளும். இந்தப் பரிசுத்த இருதயமானது தாய் தந்தையற்ற பிள்ளைகளைப்போல் இந்த நிர்ப்பாக்கிய கணவாயில் துன்புறும் எங்களுக்கு உதவியும் ஆதரவும் தஞ்சமுமாயிருக்கும் நாங்கள் பாவ வெள்ளத்தில் அமிழ்ந்திப் போகாதபடிக்கு தற்காக்கும் பேழையைப்போல் இருக்கிற உமது திரு இருதயத்தின் ஆதரவில் ஒடிவந்து நாங்கள் உமது உதவியை அடைந்து மோட்சத்தில் சேருமளவும் புயல்களுக்கு அஞ்சாத நிலை பெறுவோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த தாயாரே, எங்களை பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.

இருபத்தி ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய கோவில்களில் ஞான புஸ்தகங்கள் உண்டோ, இல்லையோ என்று பார்க்கிறது. இல்லாதிருந்தால் அவைகளை வாங்கிக் கொடுக்கிறது.

புதுமை!

1228-ஆம் ஆண்டில் ஓர் குருவானவர் தேவமாதாவைக் குறித்து திருப்பலி செய்யும்பொழுது அந்த ஊரில் இருந்த பதிதர் எல்லாரும் கூட்டமாய் கோவிலுக்குள் வந்து பூசை செய்த குருவைப் பிடித்து அவருடைய நாக்கை அறுத்தார்கள். அந்த பாதகத்தை செய்தவர்கள் போனபின் குருவானவர் ஒரு மடத்துக்கு போய் அங்கு இருக்கும் சன்னியாசிகளால் மிகுந்த சிநேகத்தோடும், மரியாதையோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்தக் குருவானவருக்கு தேவமாதாவை ஸ்துதிக்கவும் திருப்பலி செய்யவும் இனி முடியாதென்று வருத்தமுற்று மனதால் தினமும் அன்னையை மனதிலே வேண்டிக்கொண்டு மூன்று இராஜாக்கள் திருநாளில் தேவமாதாவின் பேரில் அதிக பக்தி வைத்து அன்னையின் கோவிலுக்கு வந்து ஆண்டவளே! நான் உம்மைக் குறித்து திருப்பலி செய்ததினால் உமக்குப் பகையாளிகளாய் இருக்கிற எதிரிகளாகிய பதிதர் என் நாக்கை அறுத்தார்களே; நீர் எனக்கு நலமானதொரு நாக்கு கொடுக்க முடியும் என்ற புதுமை உம்மால் முடியுமென்று நம்பிக்கையாய் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு மன்றாடிய பொழுது தேவமாதா அவருக்குத் தம்மை காண்பித்து, நீ நமக்காக உன் நாக்கை இழந்ததினால் நாம் இப்பொழுது உனக்கு வேறு நலமானதொரு நாக்கு கொடுத்தோம் என்று சொல்லியவுடனே, அந்தக் குருவானவர் பலத்த சத்தத்தோடு அருள்நிறை மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு கோவிலிலிருந்த சன்னியாசிகள் அருகில் வந்து அற்புதமாய் நாக்கை அடைந்த புதுமையைக் கண்டு வெகுநேரம் தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினார்கள்.

இரண்டாவது!

1793 ஆம் ஆண்டில் ஒரு துஷ்டப் பெண் தான் பெற்ற குழந்தையைக் கொன்று பிரேதத்தை தெரு வீதியில் இருக்கும் குப்பை மேட்டில் அடக்கம் பண்ணினாள். அப்பொழுது ஓர் மனிதன் வேட்டைக்குப் போகிற பொழுது அவனுடைய நாயானது அந்த குப்பையை காலால் பறித்துப் பிரேதத்தை வெளிப்படுத்தினதினால் அநேகர் அந்த பிரேதத்தை பார்க்க வந்தார்கள். சிலர் அதை எடுத்து அடக்கம் பண்ணப் போகையில் ஓர் பெண் இந்தப் பிள்ளை சிலவேளை ஞானஸ்நானம் இல்லாமல் இறந்திருக்கும் என்று அதற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி தேவமாதாவை வேண்டிக்கொள்ளுவோம் என்றாள். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய நானூறு பேர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அதற்குச் சம்மதித்து, அருகில் இருக்கும் தேவமாதாவின் கோவிலுக்கு வந்து அங்கு இருக்கும் சந்நியாசிகளையும் வேண்டிக்கொள்ளச் சொல்லி தாங்களும் வேண்டிக் கொண்டார்கள்.

அப்படி வேண்டிக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தை சத்தமிட்டு உயிர்த்த புதுமையை அவர்கள் கண்டு கோவில் மணி அடித்து தெதேயும் என்ற கீர்த்தனையை சர்வேசுரனுக்குத் தோத்திரமாகப் பாடி, அந்தக் குழந்தைக்கு மரியாள் என்னும் பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அக்குழந்தை ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு பால் குடித்து விட்டு மூன்று மணி நேரம் உயிருடனிருந்து பின்னர் இறந்தது. அந்தப் பிரேதத்தை மிகுந்த ஆரவாரத்தோடு அடக்கம் செய்தார்கள்.

கிறிஸ்தவர்களே ! எவ்வித அற்புதங்களையும் புதுமைகளையும் செய்விக்க வல்லபமுள்ள மோட்ச இராக்கினியை நம்பி உங்களுக்கு வேண்டியதெல்லாம் அன்னையிடத்தில் கேளுங்கள். ( தினமும் குடும்ப ஜெபமாலை சொல்வோம்)

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25
தேவமாதா உயிர்த்ததின் பேரில்!

தேவமாதாவின் திருச்சரீரமானது கல்லறையில் அழியாதிருக்கும் வரம் பெற்றது.

ஜென்மப் பாவத்தினின்றும் தேவமாதாவின் திரு ஆத்துமத்தை நோக்கி மீட்ட சர்வேசுரன் அன்னையின் பரிசுத்த சரீரம் கல்லறையில் அழியாதிருக்க திருவுளங்கொண்டார். நீதியுள்ள கர்த்தர், ஆதி மனிதனை நோக்கி, நீ மண்ணாயிருக்கிறாய், திரும்ப மண்ணாய்ப் போவாயென்று பெரிய சாபத்தையிட்டு மனிதராகப் பிறந்தவர்களின் சரீரம் அழிந்து போக வேண்டுமெனத் தீர்மானித்தார். ஆனால் பரிசுத்த கன்னிகை அந்தப் பொதுவான கட்டளைக்கு உட்படாதபடி கிருபை செய்திருக்கிறார். சாகுமளவும் ஓர் அற்ப மாசில்லாமல் பரிசுத்தமுள்ளவராய் இருந்ததாலும் அன்னையுடைய திரு உதரமானது அவதரித்த இரட்சகருடைய இருப்பிடமாகித் தெய்வீகத்தினுடைய தேவாலயமும் இஷ்டப்பிரசாதத்தினுடைய சுகிர்த பீடமுமாய் இருந்ததாலும் அன்னைக்கு இந்த அழியா வரத்தை கொடுக்க திருவுளங் கொண்டார். நீங்களும் பரிசுத்த திவ்விய நற்கருணை வழியாக அவதரித்த கர்த்தரை வாங்குகிறீர்களே! கர்த்தர் உங்களிடத்தில் வந்து உங்களோடுகூட அமிர்தமான விதமாய் ஐக்கியப்பட்டு உங்கள் சரீரத்தை தூய்மைப்படுத்த நித்திய ஆனந்தத்துக்கு அச்சாரங் கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரால் தூய்மைப்படுத்தப்பட உங்களுடைய சரீரத்தை எவ்வித தீய பாவத்தினாலும் களங்கப்படுத்தாதபடிக்கு மிகுந்த எச்சரிக்கையோடு நடக்கக்கடவீர்களாக.

அந்தப் பரம நாயகி இறந்தபின் உயிர்க்க வரம் பெற்றது.

மனிதர் எல்லாரும் உலக முடிவில் உயிர்ப்பார்கள். ஆனால் பரமநாயகி மனுமக்களுக்கு ஜீவியமும் உத்தானமுமாயிருக்கிற இயேசுநாதரைப் பெற்று, அவருடைய முன்மாதிரிகையைப் பின் சென்று, ஆத்தும இரட்சணிய அலுவலில் அவருடன் ஒத்துழைத்தபடியால், அன்னை இறந்த மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்தெழுந்தருளும் வரம் பெற்றார். அன்னையுடன் திருச்சரீரத்தோடு ஒன்றாகி பாக்கியமும் மகிமையும் கொடுத்ததாம். இந்தத் திருச்சரீரமானது கல்லறையினின்று எழுந்து சூரியனைப் பார்க்க அதிக ஜோதியோடும் சந்திரனைப் பார்க்க அதிக குளிர்ந்த பிரகாசத்தோடும் இலகு, சூட்சம், அழகு, சாகாமை என்னும் இந்நான்கு வாரங்களை அடைந்து துலங்குகிறதாம். ஓர் கஸ்தியும் படாமல் என்றென்றும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் வாழ்ந்திருப்பார்கள். நாம் நம்முடைய திருத்தாயாருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தைக் கண்டு அன்னையை வாழ்த்திப் புகழக் கடவோமாக. நடுத்தீர்க்கிற நாளில் நாமும் உயிர்ப்போமென்பது சத்தியம். ஆனால் நாம் உயிர்த்து மோட்சத்துக்குப் போவோமோ அல்லது நரகத்துக்குப் போவோமோ தெரியாது. அது நமது நடக்கைக்குத் தகுந்தது போலிருக்கும்.

தேவமாதாவின் உத்தானமானது நாம் அன்னை பேரில் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கின்றது.

தேவமாதாவின் மகிமை நிறை ஆரோபணம் நமக்குச் சந்தோஷமும் நம்பிக்கையும் வருவிக்கின்றது. தமது சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளி அதில் நிகரில்லாத மகிமையை அடைந்து இன்னமும் நம்முடைய தாயாருமாய் அடைக்கலமுமாய் ஆதரவுமாய்ப் பாதுகாவலுமாயிருக்கவும் அன்னையை அழைக்கப்படவும் சித்தமானார்கள். நாம் அனுபவிக்கிற தீமைகளிலும் இக்கட்டுகளிலும் சும்மா இருக்கிறதெப்படி? இதோ அவைகளினின்று நம்மை மீட்க நமது நேச அன்னை காத்திருக்கிறார்கள். அன்னையிடத்தில் அபய சத்தமிட்டு நம்பிக்கையோடு மன்றாடுவோமாகில் அன்னை நமக்கு வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் அடைந்து கொடுப்பார்களென்பது திண்ணம்

செபம்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியான திவ்விய கன்னிகையே, உமது திருஆத்துமம் உமது பரிசுத்த சரீரத்தோடு சேர்ந்து உயிர்க்கிறபோது நீர் அடைந்த மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தைப்பற்றி உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டாடுகிறோம். ஓ! தாயாரே, புயல் அடிக்காத துறைமுகமான மோட்சத்தில் சேர்ந்து சர்வேசுரனுடைய சிம்மாசனத்தருகில் இருக்கிறீர். ஆனால் எவ்வித காற்றினாலும் புயலினாலும் எழுப்பப்பட்ட சமுத்திரமான இந்த நிர்ப்பாக்கிய உலகில் உழைத்து வருத்தப்படுகிற உம்முடைய பிள்ளையாகிய எங்களைக் கைவிடுவீரோ? அதில்லையே, நீர் எங்களுக்காகச் சர்வேசுரனிடத்தில் மனுப்பேசும்படியாய் உருக்கத்தோடு மன்றாடுகிறோம். ஓ! தாயாரே, எங்களைக் கிருபைக் கண் கொண்டு பார்த்து எங்களுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கி நாங்கள் அனுபவிக்கிற தீமைகளை நீக்கி ஈடேற்றத்தை அடைவதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களைப் பெறச் செய்விரென்று நம்பிக்கையாய் இருக்கிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தாயாரே, உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் இருக்கிறது பேரின்ப பாக்கியம்.

இருபத்திஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இன்னமும் சில பிறமதத்தவர்களோடு நல்ல புத்தி சொல்லுகிறது.

புதுமை!

அர்ச். சிமோன் ஸ்தோக் என்பவர் தேவமாதாவை உத்தம மேரையாய் வணங்க ஆசையுள்ளவராய்த் தினமும் அன்னையைப் பார்த்து, நாம் உம்மை வணங்கும் விதம் எப்படியென்று எனக்கு அறியப் பண்ணியருள வேண்டுமென மன்றாடிக்கொண்டு வந்தார். தேவமாதா அவருடைய ஆசையைக் கண்டு அவர் தமது சுரூபத்துக்கு முன் வேண்டிக்கொள்ளுகிற நேரத்தில் அவருக்குத் தம்மைக் காண்பித்து அவருக்கு உத்தரியத்தைக் கொடுத்துச் சொன்னதாவது: நீ நமக்கு ஏற்றவிதமாய் ஸ்துதிக்க வேண்டுமானால் இந்த உத்தரியத்தையும் அணிந்து மற்றவர்களும் இதைத் அணிக்கும்படி தூண்டுவாயாக. அதை விசுவாசத்தோடு அணிவிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்நாளில் நம்முடைய உதவியைப் பெற்று, அத்தோடு சாகிறவர்கள் நரகத்துக்குத் தப்பி கரையேறுவார்களென்று திருவுளம் பற்றினார்கள். இந்தப் புதுமை பிரசித்தமான பின்பு, தேவமாதா அந்த உத்தரியத்தைக் கையளித்ததினாலும் புனித பாப்புமார்கள் அதைத் தரிக்கிறவர்களுக்கு அநேக பலன்களைக் கொடுத்ததினாலும், அரசர்கள் முதல் எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் உத்தரிய சபையில் சேர்ந்தார்கள்.

அந்த சபையில் சேர்ந்த ஓர் சேவகனிடத்தில் நடந்த புதுமையானது: பிரெஞ்சு நாட்டு அரசராகிய பதின்மூன்றாம் ஞானப்பிரகாசியார் என்பவர் மொப்பெலியர் என்னும் நகரை முற்றுகையிட்டு அதைப் பிடிக்கப் பிரயாசைப்படுகையில் உத்தரியத்தை தரித்துக்கொண்டிருந்த ஓர் போர்ச் சேவகன் எதிரிகளோடு போராடும்பொழுது துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு அவன் நெஞ்சிலே உத்தரியம் இருக்கிற இடத்தில் பாய்ந்ததும் மேலாடையை ஊடுருவிச் சென்றாலும் சரீரத்துக்குள் புகாமல் உத்தரியத்தில் பட்டவுடனே நசுங்கிப்போய்க் கீழே விழுந்தது. அரசர் அந்த செய்தியை அறிந்து அந்த போர்ச் சேவகனை வரவழைத்து அவனிடத்தில் நடந்த புதுமையை நிச்சயித்து உத்தரியம் தரிக்கிறவர்களுக்கு தேவமாதா எவ்வளவு உதவியாய் இருக்கிறார்களென்று மகிழ்ச்சியுற்று அவரும் அநேகரும் உத்தரியத்தை அணிந்தார்கள்.

இரண்டாவது!

பிளோரென்ஸ் என்ற நகரில் வெறிபிடித்த ஓர் சிங்கம் தான் இருக்கும் கூண்டை விட்டு வெளிச்சென்று நகரில் எங்கும் வந்து கர்ச்சித்து அனைவருக்கும் பயத்தை உண்டாக்கி தெருவீதிகளில் திரிந்தது. பின்னர் தேவமாதாவின் கோவில் அருகே நின்றது. அதைப்பிடிக்க ஒருவரும் வெளியே வராமலிருக்கும்பொழுது ஒரு பெண் தேவமாதாவின் பெயர் சொல்லி அந்த சிங்கத்தை பிடிக்கத் துணிந்து அதன் அருகே வந்து தான் அணிந்திருந்த உத்தரியத்தை எடுத்து சிங்கத்தின் கழுத்திலே போட்டு ஓர் ஆட்டுக்குட்டியைப்போல அதை இழுத்து கூட்டிக்கொண்டு போனாள். ஜனங்கள் அதைக்கண்டு தேவமாதாவின் கோவிலுக்கு வந்து பரலோக இராக்கினியைத் தோத்திரம் செய்தார்கள்.

மூன்றாவது!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இயேசுசபை குருக்களில் ஒருவராகிய ஞானப்பிரகாசியார் என்னும் குருவானவர் எழுதி வைத்த புதுமையானது: ஒரு ஊரில் ஓர் பிற சமய மனிதன் மீது பசாசின் ஆவேசம் ஏறி அவனை உபத்திரவப்படுத்தி அவனைத் துஷ்ட பைத்தியக்காரனாக்கி எல்லாருக்கும் பயத்தை உண்டாக்கியது. அவன் ஊரில் சுற்றித் திரியும் பொழுது மற்றவர்கள் தங்கள் வீட்டு கதவுகளை அடைத்து ஒருவரும் வெளியே செல்லாமல் ஒளிந்திருப்பார்கள். அவர்கள் பிற மதத்தவர்களாய் இருந்தபோதிலும் குருவிடத்தில் வந்து அந்த மனிதன் மேல் மனமிரங்கும்படி மன்றாடினார்கள். குறிப்பிடம் படிக்கும் ஓர் சிறுவன் குருவிடத்தில் மன்றாடுகிறதை அறிந்து நானே அந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன் உத்தரியத்தை, அந்த பைத்தியக்காரனின் கழுத்தில் போட்டு ஒரு காத வழி தூரம் அவனை கூட்டிக்கொண்டு வந்து பிற மதத்தவர் அனைவரும் வியக்கத்தக்க விதமாக குருவினிடத்தில் விட்டான்.

மேற்சொன்ன ஊரில் நடந்த இப்புதுமைக்கு அடுத்த, சம்பவமானது மாசில்லாமல் உற்பவித்த தேவமாதா கோவிலிலிருக்கும் சுரூபம் அதன் பாதத்தில் ஓர் பாம்பை மிதித்திருக்கும் பாவனையாய், செய்திருந்தது. இயேசு சுவாமி பிறந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் எல்லாரும் அங்கே, வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, ஓர் நல்ல பாம்பு கோவிலில் உட்புகுந்து நடுவில் நகர்ந்து வந்து ஓர் பெண் குழந்தையின் மேல் ஏறியதினால் அவள் அதைக்கண்டு அபயமிட்டு கையால் பிடித்து சனங்கள் மத்தியில் எறிந்துவிட்டாள். எல்லோரும் பயந்து தேவமாதாவை வேண்டிக்கொண்டதினால் பாம்பு ஒருவருக்கும் தீமை செய்யாது வெளியே சென்றுவிட்டது. அன்று பல மதத்தவர்களும் ஓர் சத்திரத்தில் படுத்திருக்கும் பொழுது புகுந்த அந்த பாம்பினால் ஏழுபேர் கடிக்கப்பட்டு இறந்தார்கள்.

தேவமாதாவின் வெற்றிக்கொடியின் கீழ் பசாசுடன் போராடுகிற நீங்கள் அனைவரும் பரிசுத்த கன்னிகையின் அடையாளமான உத்தரியத்தை தரித்து கொள்வீராகில் அநேக நன்மைகளை அடைவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 24

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 24
தேவமாதாவின் திரு மரணத்தின் பேரில்!

தேவமாதா சாவுக்கு உட்படுகிறதற்குக் காரணம்.

சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் தேவமாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவிக்க வேண்டுமென திருவுளங்கொண்டிருந்தாலும் பாவத்துக்கு ஆக்கினையாகிய சாவிலே நின்று அவர்களை நீக்கவில்லை. சர்வேசுரன் மனுமக்களை எல்லாரும் சாக வேண்டுமென்று இட்ட தீர்ப்பை எல்லாருக்கும் பொதுவாய் மறுக்கக்கூடாததுமாய் இருக்கிறதாகவும், திருக்குமாரன் சகல ஜீவஜந்துக்களுக்கும் ஜீவிய காரணமாய் இருக்கவும், மரணமடையத் திருவுளமானதைப்பற்றி அன்னை அவருக்கொத்தவர்களாய் இருக்கவும் அவ்வேளையிலே நாம் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு மாதிரிகையாய் இருக்கவும் அன்னை சாகவேண்டுமென்று தீர்மானித்தார். சாக வேண்டுமென்ற தீர்வையானது கடினமும் வருத்தமுமாயிருந்தபோதிலும் இந்தத் தீர்வைக்கு தேவமாதா மிகுந்த மனத்தாழ்ச்சியுடனேயும் அமைதியுள்ள மனதுடனேயும் மாறாத நம்பிக்கையுடனேயும் தமது திருமைந்தனிடத்தில் சேர வேண்டுமென்ற ஆசையுடனேயும் சம்மதிக்கிறார்கள். நாமும் அப்பேர்ப்பட்ட மனத்தாழ்ச்சி, அமைதி, நம்பிக்கை, தேவ சிநேகத்தோடு நமக்கு வரப்போகிற சாவைக் கைக்கொள்வோமாகில் சாவு எவ்வளவோ பாக்கியமுள்ளதாயிருக்கும்!

அன்னை மரித்த மேரை.

வேத சாஸ்திரிகள் சொல்லியிருக்கும் வண்ணம் பரிசுத்த கன்னிகையின் சாவானது ஓர் மதுரமான நித்திரையைப்போல் சம்பவித்ததாம். திவ்விய தாயானவள் வருத்தப்படாமலும் கஸ்தி அனுபவியாமலும் இளைப்பாறுவது போல இந்தக் கண்ணீர் கணவாயை விட்டு விட்டு ஆனந்தமான நித்தியத்துக்குச் சேர்ந்தார்கள். மரித்தது வயதின் மிகுதியினாலேயாவது, வருத்தத்தினாலேயாவது நிகழாமல் அன்னையுடய திருஇருதயத்தில் சுவாலை விட்டெரிந்த தேவ சிநேக அக்கினியால் வந்தது! மரத்தின் கொம்பிலே நின்று பழுத்த கனி விழுகிறதைப்போலவும், சூரியன் பகலிலே எங்கும் உஷ்ணப் பிரகாசத்தைப் பொழிந்து தன்னாலே அஸ்தமிக்கிறதைப் போலவும் தேவமாதாவின் திரு ஆத்துமம் எல்லாப் புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தன்னிடத்தில் எரிகிற சிநேக உக்கிரத்தினால் தேவன்னையின் திருச்சரீரத்தை விட்டுப் பிரிந்தது. இந்தப் பரம நாயகியின் அமிர்தமான மரணத்தைக்கண்டு அகமகிழ்ந்து நாம் இஷ்டப்பிரசாதத்தோடு சாகும் பொருட்டு அன்னையை மன்றாடக் கடவோம். நல்ல மரணத்தை அடையதக்க பக்தியோடு நடக்கக்கடவோம்.

சாகிறவர்களுக்கு அடைக்கலமாய் இருக்கிற விதம்.

தேவமாதா சாகிறவர்களுக்கு அடைக்கலமுமாய் மாதிரிகையுமாய் தமது திருமைந்தனால் நியமிக்கப்பட்டவர்களாகும். மரண வேளையில் பசாசு செய்கிற கடின சோதனைகளில் நாம் விழாதபடிக்கு நமக்கு உதவி செய்து அப்பொழுது வருத்தமான இக்கட்டுகளில் ஆதரவாயிருந்து நாம் பாக்கியமான மரணத்தை அடைய விசேஷ கிருபை செய்கிறார்கள். இதுவுமல்லாமல் பாக்கியமான மரணத்துக்கு ஏதுவாயிருக்கிற ஆத்தும சுத்தத்தையும் அருந் தவத்தையும் உலக வெறுப்பையும் தேவ சிநேகத்தையும் மற்ற புண்ணியங்களையும் அனுசரிக்கிறதற்கு உதவி செய்கிறார்கள். நீங்களும் நித்திய பாக்கியத்தையாவது, நிர்ப்பாக்கியத்தையாவது வருவிக்கிற மரண வேளையில் இந்தத் திவ்விய தாயார் உஙகளுக்கு ஆதரவாய் இருக்கும்படிக்கு அன்னையைப் பார்த்து, தினம்தோறும் மிகுந்த பக்தி நம்பிக்கையுடன், சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளுமென்று மன்றாடக் கடவீர்கள். இப்படி மன்றாடினால் நித்திய பாக்கியத்தைக் கொடுக்கும் நல்ல மரணம் உங்களுக்கு கிடைக்கும்.

செபம்.

என் அன்புள்ள தாயாரே! நீசப் பரவியிருக்கிற அடியேனுக்கு நல்ல மரணம் வருமோ, அகோரமான மரணம் வருமோவென்று நான் நினைக்கிறபோது அங்கலாய்த்துப் பயந்து நடுநடுங்குகிறேன். நான் எத்தனையோ முறை கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டு எனக்கு நரகத்துக்குப் போகிற ஆபத்து வருவித்தேனென்று அறிந்து தேவ தீர்வைக்கு மிகவும் பயப்படுகிறேன். கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆதரவே, இந்தக் கஸ்தி சமயத்தில் என்மீது இரங்கி என்னைக் காப்பாற்றியருளும். அப்போது பொல்லாத பசாசு என்னைக் கெடுக்கவும் நரகத்திலே இழுக்கவும் விடாதேயும். உமது திருமைந்தனிடத்தில் எனக்காக உருக்கமாய் மன்றாடி, நான் செய்த எண்ணிக்கையில்லாத பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு, இன்று முதல் இடைவிடாமல் தேவ கற்பனைகளை அனுசரித்து, விசேஷமாய் நான் மரண அவஸ்தைப்படும் பொழுது ஆண்டவர் பாதத்தை சிநேகத்தோடு பற்றி பாக்கியமாய்ச் சாகும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். என் தாயே! என் நம்பிக்கையே, அப்போது என்னைக் கைவிடாதேயும். நான் உம்மிடத்தில் சேருமளவும் எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

மரியாயே, இஷ்டப்பிரசாதத்தின் மாதாவே, தயையின் சமுத்திரமே, என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றி என் மரண வேளையில் என்னைக் கைவிடாதேயும்.

இருபத்திநான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இயேசுக்கிறிஸ்துநாதரின் திரு இருதயம் மனிதர்பேரில் வைத்த அளவறுக்கப்படாத அன்பை நினைக்கிறது.

புதுமை!

அர்ச்சியஷ்டவர்கள் எல்லாரும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தி விசுவாசமுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பது சத்தியமாம். ஆனால் அவர்களுக்குள் இயேசு சபையை சேர்ந்த புனித ஸ்தனிஸ்லாஸ் என்பவர் இந்தப் பாரம்பரிய பக்தியின் பேரில் அதிக அன்பும் நம்பிக்கையும் வைத்தார் என்று சொல்ல வேண்டும். அவர் சிறு பிராயத்திலேயிருந்து பரம நாயகியை மிகுந்த அன்போடு நேசித்து வணங்கினதுமல்லாமல் அன்னையுடைய பழுதற்ற கன்னிமையைக் குறித்துச் சந்திரனுடைய வெண்மையான கதிர் போலிருக்கிற கற்பென்கிற புண்ணியத்தைச் சொல்லிலடங்காத எச்சரிக்கையுடன் அனுசரித்துக்கொண்டு வந்தார். யாராவது இந்தப் பரிசுத்த வாலிபர் முன்பாக ஓர் ஆகாத வார்த்தையைச் சொல்லுவானாகில் உடனே அவர் பயந்து நடுங்குவார். அவருடைய செளந்தரியமுள்ள முகத்தை கண்டவர்கள் எல்லாரும் புண்ணியத்தின் பேரில் அதிக மதிப்பையும் பிரியத்தையும் அடைவார்கள். அவர் தேவமாதாவின் விசேஷ உதவியால் ஓர் அற்ப குற்றமில்லாமல் நடந்தார். அவர் படிக்கும்பொழுது கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகி மரணத்தறுவாயிலிருந்தார். அப்பொழுது தேவமாதா குழந்தையான இயேசுக்கிறிஸ்துநாதரோடு அவருக்குக் காண்பித்துத் திருப்பாலனை அவருடைய கையிலே வைத்து அவருடைய மனம் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்தியிருக்கச் செய்தாள். பின்பு பரம நாயகி, என் மகனே! நீ இப்பொழுது சாகமாட்டாய், நமது திருக்குமாரன் இயேசுநாதருடைய சபையிலே பிரவேசித்து அதில் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ண வேண்டுமென்று சொல்லி மறைந்து போனாள். அவர் இந்தக் காட்சியில் அடைந்த சந்தோஷத்தினால் விரைவில் குணமடைந்து இயேசு சபையில் சேரும்படி அதிகம் முயற்சித்தார். அதில் சேர்ந்து எவ்வித புண்ணியங்களையும் அதிகமதிகமான சுறுசுறுப்போடு அனுசரித்து வந்தார். தேவமாதாவின் திருநாமத்தை அவர் உச்சரித்தாலாவது மற்றவர்கள் உச்சரிக்கிறதைக் கேட்டாலாவது தமக்குள்ளே உண்டான சந்தோஷ மிகுதியால் பரவசமாய் இருப்பார். தமது மனதில் எரிகிற தேவ சிநேகத்தின் உக்கிரத்தினால் அடிக்கடி உஷ்ணமடைந்து தமது நெஞ்சின் மேல் குளிர்ந்த தண்ணீர் வைத்துத் தாம் அனுபவிக்கிற தேவ உஷ்ணத்தைத் தணிக்கப் பிரயாசைப்படுவார். அவருடைய நல்ல மாதிரிகைகளைப் பார்த்தவர்கள் எல்லாரும் அவர் மனிதனல்ல. சம்மனசாயிருக்கிறார் என்பார்கள். அப்படியே சிறிது காலத்தில் புண்ணிய சாங்கோபாங்கத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்று பிரக்யாதி பெற்ற அர்ச்சியஷ்டவர்களுக்கு ஒப்பானார். சுகிர்த பிரகாசமுள்ள இந்த ஞான மாணிக்கமானது குப்பை போல் இருக்கிற இந்த உலகத்தில் இருக்கக்கூடாதென்றும், அவர் அனுபவிக்கிற தேவசிநேக அக்கினியை இந்த அழிந்துபோகிற சரீரமானது பொறுக்கக் கூடாதென்றும் சர்வேசுரன் அவரைத் தம்மிடத்தில் வரவழைக்கச் சித்தமானார்.

தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளை மோட்சவாசிகள் எல்லாரும் மோட்சத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று நினைத்து புனித ஸ்தனிஸ்லாஸ் தாமும் அவர்களோடுகூட அந்தத் திருநாளை மோட்சத்தில் கொண்டாடப் போகவேண்டுமென்று மிகவும் ஆசையாயிருந்தார். அதற்காக அந்தத் திருநாளுக்கு முன்னதாக அந்த பாக்கியம் தமக்குக் கிடைக்க வேண்டுமென்று ஓயாது மன்றாடிக் கொண்டிருந்ததுமல்லாமல் இந்த திருநாளை மோட்சத்திலேயே கொண்டாடப் போவேன் என்று எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததுபோல் திருநாளுக்கு முன் நாலைந்து நாள் வியாதியாய் விழுந்து மிகுந்த சந்தோஷப்பட்டார். திருநாளுக்கு முந்தின நாள் அதிக அவஸ்தையாகி அவஸ்தைப் பூசுதலை பெற்றுத் திவ்விய நற்கருணை வாங்கித் தேவமாதாவின் திருப்பெயரை மிகுந்த பக்தியோடு உச்சரித்து சொல்லொணா மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்கியிருந்தார். நடுச்சாமத்தில் கூட நின்றவர்கள் அவஸ்தை ஆயத்தம் சொல்லும்போது எண்ணிக்கையில்லாத கன்னிகையோடு மோட்ச இராக்கினி அவரிடத்தில் வந்து, மோட்ச பாக்கியத்திற்குரிய மகிழ்ச்சியை மனதில் உண்டாக்கி அவர் மோட்சத்தில் தம்முடைய திருநாளைத் தம்மோடே கூடக் கொண்டாட வரவேண்டுமென்று சொல்லி, அவரை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவர் சாகிறபொழுது அவருக்கு வயது 18.

கிறிஸ்தவர்களே நீங்களும் மரண வேளையில் பசாசின் தந்திரங்களில் அகப்படாது பாக்கியமான மரணத்தை அடைய விரும்பக் கடவீர்கள். இந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும்படியாக ஓயாது அன்னையின் அனுக்கிரகத்தைக் கேளுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 23

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 23
தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவியின் பேரில்!

அவர்களுக்குத் தூண்டுதலாய் இருந்தது.

சர்வ ஆராதனைக்குரிய உலக இரட்சகர் இவ்வுலகை விட்டு வெற்றி வீரராய் மோட்சத்துக்கு எழுந்தருளியபோது தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைக்கு ஓர் தூண்டுதலாகவும், ஆலோசகராகவும் இருக்கவும் பூர்வீக கிறிஸ்தவர்கள் கொண்ட சந்தேகங்களைத் தீர்க்க ஞான ஒளியாய் இருக்கவும் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு போதனையாயிருக்கவும் தமது நேச அன்னையை இவ்வுலகில் நிலைநிறுத்த திருவுளங்கொண்டார்.

அக்காலத்திலிருந்த விசுவாசிகள் தங்களுடைய ஆண்டவளைப் போலவும் போதகியைப் போலவும், எண்ணி அன்னையிடத்தில் ஆலோசனைக் கேட்க வருவார்கள். அப்பொழுது அந்த திவ்விய நாயகி அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவித்து அறியாமையை நீக்கித் தம்மிடமுள்ள அறிவு விவேகத்தின் ஞானச் செல்வங்களை மகா அன்போடு அவர்களுக்குத் தந்தருள்வார்கள். நீங்கள் படுகிற சந்தேகங்களில் உறுதியான நம்பிக்கையோடு தேவ மாதாவினிடத்தில் ஓடிவந்து, உங்கள் புத்திக்குப் பிரகாசம் கொடுத்து உங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடுவீர்களாகில் உங்களுக்கு வேண்டிய ஞானப் பிரகாசங்களையும் வரப்பிரசாதங்களையும் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

அவர்களுக்கு மாதிரிகையாய் இருந்தது.

மனத்தாழ்ச்சி, ஒடுக்கம், தேவபக்தி, பிறர் சிநேகம் இவை முதலான சுகிர்த புண்ணியங்களையெல்லாம் மகாப்பிரகாசத்தோடு தேவமாதாவினிடத்தில் துலங்கிக் கொண்டிருந்தன. இந்தப் பரம நாயகியின் வாழ்வெல்லாம் பரிசுத்தத்தின் உத்தம மாதிரிகையாக இருந்தது, எவ் வயதும், எவ் வந்தஸ்து முள்ள கிறிஸ்தவர்களையும் புண்ணிய வழியில் தீவிரமாய் நடக்கச் செய்தது. பூர்வீக விசுவாசிகள் அன்னையிடத்தில் உன்னத சாங்கோபாங்கமாக இருக்கிறதைக்கண்டு அதிசயப்பட்டுத் தங்களால் இயன்ற மட்டும் அவர்களைப் பின்செல்லப் பிரயாசைப்பட்டார்கள். நீங்கள் அந்தத் தேவதாயாருடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்து அன்னையின் உத்தம மாதிரிகையைப் பின் சென்று நடக்கக்கடவீர்களாக. அன்னையுடைய நடக்கையையும் உணர்ச்சிகளையும் இடைவிடாது தியானித்து ஆராய்ந்து பார்ப்பீர்களாகில், சர்வேசுரனுக்குத் தக்க பிரமாணிக்கத்தோடு ஊழியம் பண்ணவும், புறத்தியாருக்குச் செய்ய வேண்டிய உதவி செய்யலாம். கற்பை நேசிக்கவும், பரிசுத்தமாய் வாழவும் அவசியமான வழி வகைகளை அறிந்துகொள்ளுவீர்கள். அப்படி எல்லாவற்றையும் பார்க்கச் சர்வேசுரனை அதிகமாய்ச் சிநேகித்து, உங்களுடைய சரீரத்தைப் பகைத்து, மனத்தாழ்ச்சியும் அடக்க ஒடுக்கமும் தேவ பக்தியும் உங்கள் கடமைகளைச் செலுத்துவதில் பிரமாணிக்கமும் உள்ளவர்களாய் இருக்க தேவமாதாவினிடமிருந்து கற்றுக் கொள்வீர்களாக.

அவர்களுக்கு அடைக்கலமாய் இருந்தது.

தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமாயிருந்தார்கள். அவர்கள் தாங்கள் அடைந்த கஸ்திகளிலும் திருச்சபைக்கு உண்டான துன்பங்களிலும் தங்களுக்கு அவசரமான காரியங்களிலும் தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி ஓடிவருவார்கள். அன்னை தங்கள் பேரில் மிகவும் பிரியமுள்ளவர்களாயும் தம்முடைய திருக்குமாரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவர்களாயும் இருக்கிறதை அறிந்து கெட்டியான நம்பிக்கையுடன் அன்னையின் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நீங்களும் இந்த நியாயங்களை கண்டுனுர்ந்து தேவமாதாவின் பேரில் தளராத நம்பிக்கைக் கொள்ளக்கடவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் இலெளகீக இக்கட்டுகளிலும் உங்களுக்கு தேவையான ஞானக் காரியங்களிலும் உங்களுடைய திருத்தாயாரை நோக்கி அபயமிட்டு மன்றாடுங்கள். அந்தப் பூர்வீக கிறிஸ்தவர்கள் செய்ததைப்போல் பக்தியோடு மன்றாடுவீர்களாகில், உங்களுடைய மன்றாட்டுக்களுக்கு இரங்குவாளென்பது நிச்சயம். சில சமயங்களில் நீங்கள் கேட்கிற காரியங்களை அடையாதிருந்ததினால் நீங்கள் பக்தியுடன் வேண்டிக்கொள்ளாமல் இருந்ததினால்தான் அவைகளை அடையவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

செபம்.

பரிசுத்த மரியாயே! என் தஞ்சமே! எத்தனையோ பாவத்தைக் கட்டிக்கொண்டு பசாசுக்கு அடிமையாகி நித்திய நரகத்திற்குப் போவதற்குப் பாத்திரவானானேன்! நீர் என் பாவக்கட்டுகளை அவிழ்த்து என் எதிரிகளின் கையில் நின்று என்னை மீட்டீர். ஆனால் கெட்ட பசாசு என்னைக் கொடுக்க இடைவிடாது எனக்குச் சோதனை கொடுப்பதினால் அதற்குத் திரும்பி அடிமையாய்ப் போவேன் என்று மிகவும் பயப்படுகிறேன். பரிசுத்த கன்னிகையே! எனக்கு ஆதரவாயிரும். தஞ்சமாயிரும், உமது உதவியுடன் என் எதிரிகளை வெல்லுவேன் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு வரும் தந்திர சோதனைகளிலும், விசேஷமாய் என் மரணவேளையில் பசாசு என்னுடன் தொடுக்கும் கடின யுத்தத்திலும் நான் உம்மை மறந்து போகாமல் உமது அடைக்கலத்தை உறுதியான விசுவாச நம்பிக்கையுடன் தேடும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். அப்பொழுது இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருநாமத்தையும், உம்முடைய இன்பமான திருப்பெயரையும், ஜெபமாலையை பக்தியோடு சொல்லி இஷ்டப் பிரசாதத்தோடு நான் மரிக்கும்படிக்கு கிருபை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கன்னிகைகளுக்குள் உத்தம கன்னிகையே! நான் என் பாவங்களை வெறுத்து எப்பொழுதும் உம்மை நோக்கி சிந்திக்கும்படியாக உதவி செய்தருளும்.

இருபத்தி மூன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஏழைக்கு, உணவளிக்கிறது.

புதுமை!

புனித சிலுவை அருளப்பர் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவராய் நடந்து பலமுறை அன்னையுடைய உதவியைப் பெற்றுக்கொண்டார். விசேஷமாய் அவருக்கு வந்த மரண ஆபத்திலிருந்து தேவமாதாவின் உதவியால் அற்புதமாய்த் தப்பித்துக்கொண்டார். பதிமூன்று வயதில் அவர் சில பிணியாளருக்கு சேவை செய்ய பல இடங்களுக்குச் செல்லும்பொழுது ஆழமான ஓர் கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டார். அருகில் நின்ற சிலர் தண்ணீர் நிறைந்த கிணற்றில் அவர் விழுந்ததைக் கண்டு அவர் இறந்திருப்பாரென்று நிச்சயித்து கிணற்று ஓரத்திலிருந்து அழுது கூப்பிட்டார்கள். அதில் விழுந்த அருளப்பரோ வென்றால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுமொழியாக நீங்கள் அழ வேண்டாம், எனக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. எனக்கு ஓர் கயிற்றை விட்டால் உடனே ஏறி வருவேன் என்றார். அவர் சொல்லிய படியே அவர்கள் போட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு எத்தகைய ஆபத்துமின்றி மேலே ஏறினார். அவரைக் கண்ட சனங்கள் ஆழத்திலே விழுந்தும் ஆபத்து இல்லாமல் ஏறினதெப்படியென்று கேட்க அவர் அவர்களை நோக்கி : நான் விழுந்த கணத்தில் செளந்தரியமுள்ள ஓர் இராக்கினி தமது ஆடையை விரித்து அதில் என்னைத் தாங்கினார்கள். மற்றும் நான் தண்ணீரில் அமிழ்ந்திப்போகாதபடிக்கு நீங்கள் கயிறு போடும் வரையில் என்னைத் தமது கையால் தூக்கிக்கொண்டார்கள் என்றார். இந்தப் புதுமையைக் கேட்டவர்கள் மிகவும் அதிசயப்பட்டு தேவ மாதாவுக்குத் தோத்திரம் பண்ணினார்கள். புனித சிலுவை அருளப்பர் தம்மைக் காப்பாற்றின தேவமாதாவின் பேரில் நாளுக்குநாள் அதிக பக்தி வைத்து அன்னையுடைய திருநாட்களையும் அவைகளில் விசேஷமாய் அன்னை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாளையும் மிகுந்த விசுவாசத்தோடு கொண்டாடி மற்றவர்களும் நம்பிக்கையாய் இருக்கும் படிக்கு வெகு பிரயாசையோடு பிரசங்கித்து கடைசியில் தேவமாதாவின் உதவியினால் நல்ல மரணம் அடைந்து புனிதராய் விளங்கினார்.

இரண்டாவது

சோமாஸ் என்கிற சந்நியாசிகளுடைய சபையை உண்டாக்கின புனித ஏரோணிமூஸ் என்பவர் ஒரு பட்டணத்துக்கு அதிபதியாயிருந்து ஆளுகிறபொழுது, பகைவர்கள் பெரிய படையோடு வந்து அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்டுப் பிடித்தார்கள். இவரும் அவர்கள் கையில் அகப்பட்டு அடிமையாய்ச் சிறையில் தள்ளப்பட்டார். இதிலிருக்கும்பொழுது தேவமாதாவை வேண்டிக்கொண்டு, தான் அந்த அடிமைத்தனத்தை விட்டு நீங்கி விடுதலை அடைந்தவுடன் தேவமாதாவின் கோயிலுக்குப்போய் வேண்டுதல் செலுத்துவேன் என வார்த்தைப்பாடு கொடுத்தார். அவர் அப்படி வேண்டிக்கொண்டவுடனே தேவமாதா அவருக்குக் காட்சியில் காண்பித்து அவர் கையிலும் காலிலுமிருந்த விலங்குகளை ஒடித்து சிறைச்சாலையின் திறவுகோலை அவர் கையில் கொடுத்து மறைந்து போனார்கள். அவர் கதவைத் திறந்து வெளியே வந்து பகைவர்களைக் கண்டதினால் பயந்து போனார், திரும்ப வேண்டிக்கொண்டார். அன்னையும் திரும்பி வந்து, அவர் கையைப் பிடித்து பகைவர்கள் அவரைக் காணாத படி அவர்கள் நடுவிலேயே அவரைக் கூட்டிக் கொண்டுபோய் அவருக்கு குறித்த ஊரில் விட்டு விட்டார்கள். அவர் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று தன்னோடு கொண்டு வந்த விலங்கை, தேவமாதா செய்த புதுமையின் ஞாபகமாக வைத்து புண்ணிய சாங்கோபாங்கத்தில் நிலை கொண்டு புனிதராக மரித்தார்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் படும் இன்னல்களில் தேவமாதாவை நம்பி அன்னையிடம் பக்தியோடு வேண்டிக் கொள்ளுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 22

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 22
இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியம்!

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே விரும்பிக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது நாம் அனைவரும் தேவமாதாவுடனும் இயேசுநாதருடைய சீடர்களுடனும் ஒலிவேத் மலைக்கு நினைவினால் சென்று அதில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அனைத்துலகிற்கும் ஆண்டவராயிருக்கிற பரம இராஜாவாகிய இயேசுநாதர் தம்முடைய திருத் தாயாருக்கும், பிரியமான சீஷர்களுக்கும் சுகிர்த புத்திமதிகளைச் சொல்லி அவர்களை ஆசீர்வதித்துத் தமது மட்டற்ற வல்லபத்தைக் கொண்டு நிகரில்லாத மகிமைப் பிரதாபத்தோடு மோட்சத்துக்கு ஜெயசீலராய் எழுந்தருளிப் போகிறார். அச்சமயத்தில் தேவமாதா அடைந்த மகிழ்ச்சிப் பெருக்கையும் தம் மைந்தனோடு கூடப் போக வேண்டுமென்று அவர்களுக்கிருந்த அளவுகடந்த ஆசையையும் எவரும் சொல்லுந்தரமன்று. அந்த நாள் துவக்கி தமது திருமரணம் வரையிலும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எப்பொழுது வந்தடைவேனோவென்றும் எனது திரு மைந்தனை எப்பொழுது மீண்டும் காண்பேனோவென்றும் விரும்பிக் கொண்டிருந்தார்கள். நாமும் பரிசுத்த தேவதாயைப்போல் இவ்வுலகை பரதேசமா எண்ணி இதனுடைய சம்பத்துக்களையும் செல்வ பாக்கியங்களையும் வெறுத்து, நம்முடைய மெய்யான இராச்சியமான வான்வீட்டை நாடி விரும்பி நித்திய கிரீட முடிகளை அடைய நம்மாலான பிரயாசைப்படக் கடவோம்.

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே நாடிக் கொண்டிருந்தார்கள்.

தேவமாதா தம்முடைய திருக்குமாரன் மோட்சத்துக்கு எழுந்தருளி போனதைப் பார்த்த பின்னர் மோட்சத்தை மட்டுமே நாடிக் கொண்டிருந்தார்கள். அன்னையின் நினைவு விருப்பம் உணர்ச்சியாகவும் அதன்மீது வைத்திருந்தார்கள். இப்பூமியையும் அதனுடைய பற்பல பொருள்களையும் ஒரு சிறிதும் விரும்பாமல் தாம் புண்ணியத்தில் அதிகரிக்க வேண்டுமென்றும், தாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட வேண்டுமென்றுள்ள தமது திருமைந்தனுடன் ஐக்கியமாகப் போக வேண்டுமென்றும், கவலையாயிருந்தார்கள். நாமோவென்றால் நம்முடைய திருத்தாயார் நமக்குக் காண்பித்த நல்ல மாதிரிக்கைகளின்படி பின்பற்றாமல், நம்முடைய மெய்யான வீடாகிய மோட்சத்தை நோக்காமல் அழிந்து போகும் இந்தப் பூமியில் அருவருப்பான புழுக்களைப்போல் தவழ்ந்து திரிந்து நிலையற்ற செல்வத்தை அக்கறையோடு தேடி முடிவில்லாத மோட்ச பேரின்ப செல்வ பாக்கியத்தை அடைவதற்கு சிறிதேனும் முயலாதிருக்கிறோம். இதைப்போல் மதியீனம் இவ்வுலகில் வேறு ஏதாவது உண்டா?

தேவமாதா மோட்சத்தைக் குறித்து மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பரம நாயகி அப்போஸ்தலர்கள் மற்றும் விசுவாசிகள் இவர்களுடன் இருக்கும்பொழுது மோட்சத்துக்குப் போக வேண்டுமென்ற நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் படுகிற கஸ்திகளில் அவர்களைத் தேற்றி ஆறுதல் கூறி வந்தார்கள். மோட்சமானது அவர்களுடைய உடைமையும் சொந்த இராச்சியமும் இளைப்பாறும் இடமாயிருக்கிறதாகச் சொல்லி, அவர்கள் துவக்கின வேலைகளிலும் அனுபவித்த துயரங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்கள். மோட்சத்துக்கு போவதற்கென்றே நாமும் பிறந்திருக்கிறோம். அப்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் சேரும் பொருட்டு நமக்கு வேண்டிய உதவிகளை நல்க இயேசுக்கிறிஸ்துநாதரும் தேவமாதாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் மோட்சத்தை அடைய ஒன்றும் செய்யாமலும் கஷ்டப்படாமலும் உலக பற்றுதல்களைக் கொண்டிருப்போமானால் நிச்சயம் நாம் ஒருநாளும் ஈடேற்றத்தை அடைய மாட்டோம்.

செபம்.

பரிசுத்த கன்னிகையே! இவ்வுலகத்தில் பட வேண்டிய பாடுகளும் கஸ்தியும் வருத்தமும் கொஞ்சக் காலத்திற்காக இருந்த போதிலும் அவை பேரின்ப வீட்டில் அமர்வற்ற நித்திய ஆனந்தமும் மட்டற்ற மகிமையும் எங்களுக்குப் பெறுவிக்குமென்பது குன்றாத சத்தியமாம். ஆகையால் எங்கள் தாயே! உங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ந்து மிகுதியான சந்தோஷத்தை அனுபவிக்கின்றது. இத்துன்பம் நிறைந்த ஜீவியகாலம் எப்பொழுது முடியுமோவென ஆவலுடன் காத்திருக்கிறோம். உமது அண்டையில் சேர்ந்து சகல மோட்சவாசிகளுடன் உம்மை வாழ்த்திப் புகழ்ந்து, அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? எங்கள் தாயே! பாவம் அறியாத இடமும், புயலடிக்காத துறைமுகமும், இருள்படாத பிரகாசமும், மரணமில்லாத ஜீவியமுமான மோட்சத்தில் நாங்கள் சேருமளவும் எங்களைக் கைவிடாமல் மகா அன்போடு நடப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

எங்கள் தாயே! நாங்கள் சாகிற வேளையில் எங்கள் ஆத்துமம் மோட்ச பேரின்பத்தை அடைய கிருபை செய்தருளும்.

இருபத்தி இரண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது:

ஞானவாசகப்(வேதாகமம்) புத்தகத்தை வாசித்து சிந்திக்கிறது.

புதுமை!

பெரிய அல்பேர்த் என்பவர் சிறு வயதிலிருந்தே தேவமாதாவின் மீது அதிகப் பக்தியுள்ளவராயிருந்தார். தேவதாயைக் குறித்துத் தினமும் பற்பல செபங்களை வேண்டிக்கொள்வதுமின்றி 16-ம் வயதில் புனித சாமிநாதர் சபை உடையை தரித்துக்கொண்டு அந்தச் சபையில் உட்பட்டுக் கல்வி சாஸ்திர மடத்துக்குப் படிக்கப் போனார். அதில் இருக்கும்பொழுது மற்ற பிள்ளைகள் நல்ல படிப்புள்ளவர்களாய் இருக்கிறதைக்கண்டு, கல்வி சாஸ்திரத்துக்குத் தகுதியான புத்தி தமக்கு இல்லாததினால் மிகவும் மனம் தளர்ந்து அதைப் பொறுக்க முடியாதவராய் ஒருநாள் பசாசு சொன்ன தூர்ப் புத்தியால் மடத்தைவிட்டு வீட்டுக்கு போக தீர்மானித்து இருந்தார். அவ்வாறு செல்ல ஆசையாய் இருக்கும்பொழுது தேவமாதா அவர்மேல் இரங்கி, அவருக்கு ஒரு காட்சியைக் காண்பித்தார்கள். இரவிலே நித்திரை செய்யும் பொழுது அவர் ஓர் ஏணியை எடுத்து மடத்து சுவரின் மேல் சாற்றி அதில் ஏறினதாகவும், அப்பொழுது ஓர் இராக்கினி அவரை கீழே தள்ளினதாகவும் அவர் திரும்பி ஏறின்பிறகு அந்த இராக்கினி ஏன் இந்த மடத்தை விட்டுச் செல்ல எண்ணி இருக்கிறாயென அவரைக் கேட்க, அதற்கு அவர், எவ்வளவு முயற்சித்தும் கல்வி சாஸ்திரங்களைப் படிக்க என்னால் கூடவில்லை. ஆனதினாலே இனி முயற்சித்துப் பயனில்லை என்று தப்பி ஓட வழிபார்க்கிறேன் என்றார். நீ தைரியமாயிருந்து கவனமாய்ப் படித்தால் தேவமாதாவின் உதவியினால் ஓர் பெரிய சாஸ்திரியாக ஆவாய். அந்த சாஸ்திரமெல்லாம் முயற்சியினால் அல்ல, பரமநாயகியின் இரக்கத்தினால்தான் வந்ததென்று அறிந்துகொள், நீ இனிமேல் மற்றவர்களுக்கு வெகு முதன்மை கல்வி புகட்டியபின் கடைசி காலத்தில் உன்னுடைய கல்வி சாஸ்திரமெல்லாம் திடீரென உன்னை விட்டு நீங்கிப்போகும் என்றதாகவும் கண்டார். அவர் அந்தக் காட்சியைக் கண்டு ஆறுதல் அடைந்து வெகு பிரயாசையோடு படித்து தர்க்க சாஸ்திரத்திலேயும் தேவ சாஸ்திரத்திலேயும் மற்ற சாஸ்திரங்களிலேயும் மிகவும் தேர்ந்த நிபுணராகி அநேக புஸ்தகங்களை எழுதினார். ஆனால் பல வருஷங்களுக்குப்பிறகு அவர் மரிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் கொலோனியா என்ற பட்டணத்தில் திரளான சனங்களுக்கு படிப்பித்துக் கொடுக்கும் பொழுது முன் அவர் படித்த கல்வி சாஸ்திரங்களை முழுதும் திடீரென மறந்துபோய் ஒன்றும் அறியாதவரைப் போல் ஆகி விட்டார். அப்பொழுது தேவமாதா அவருக்கு சிறுவயதில் காண்பித்த காட்சியை நினைத்து அதை மக்களுக்கு வெளிப்படுத்தி மடத்துக்குச் சென்று செபத்திலும் தியானத்திலும் மூன்று வருஷமளவாக நிலைபெற்று பாக்கியமான மரணத்தை அடைந்தார். இப்போது அவர் புனித அல்பெர்த்து என்ற வேத சாஸ்திரியாய் விளங்குகிறார்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நமது பரிசுத்த வேதத்தின் மெய்யான அறிவு வரும் படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தைக் கேட்டுக்கொள்வீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 21

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 21
இயேசுகிறிஸ்து நாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்!

தேவமாதா தமது திருமைந்தன் உயிர்த்ததைக்கண்டு அடைந்த பேரானந்தம்.

நம்முடைய ஆத்துமங்களுக்கு இரட்சகரான இயேசுக் கிறிஸ்துநாதர் நரகக் கொடுமையையும் சாவினுடைய கொடூரத்தையும் வென்று கல்லறையைவிட்டு அளவில்லாத பிரதாபத்தோடு வெற்றி வீரராக உயிர்த்து எழுந்தார். அவ்வேளையில் தம்முடைய திருமாதாவை மறக்காமல் அன்னைக்குத் தாம் அடைந்த மகிமையோடு காணப்பட்டார் என்பது பக்தியுள்ள சத்தியமாம். இயேசுக்கிறிஸ்துநாதர் சொல்லொணா கஸ்தி அவமானப்பாடுகளை அனுபவிக்கும் பொழுது அந்தப் பரம நாயகி அவரை விடாமல் மனோவாக்குக் கெட்டாத துக்க சாகரத்தில் அமிழ்ந்திருந்தார்கள். தமது திருச் சரீரத்தில் அனுபவித்த வருத்தம் அனைத்தையும் அன்னை தம்முடைய இருதயத்தில் அனுபவித்தார்கள். ஆகையால் உயிர்த்து எழுந்த இயேசுக்கிறிஸ்துநாதர் அடைந்த கஸ்தி துன்பங்களுக்குத் தகுதியான ஆனந்த சந்தோஷத்தை அளிக்க வேண்டுமென்று எண்ணி அன்னைக்குத் தம்மைக் காண்பிக்கச் சித்தமானார். அவ்வாறே சர்வ நீதியுள்ள தயாபர சர்வேசுரன் தாம் மனிதருக்கு வழங்குகிற ஞான நன்மைகளை அவர்கள் தம்மைப்பற்றி அனுபவித்த வருத்தங்களுக்குத் தகுதியானபடி வழங்குகிறார். ஆகையால் உலக மீட்பரை முழு மனதோடு நேசித்து அவர் அடைந்த துன்பங்களுக்கு இரங்கி அவருடைய திருச்சிலுவையை சுமக்கிறது போல் அவரைப் பின்பற்றிக் கல்வாரி மட்டும் பின் செல்வோமானால் அவர் பொழிகிற ஞான சந்தோஷத்துக்கும் கொடுக்கிற உன்னத மகிமைக்கும் பங்குபற்றுபவர்களாக இருப்போம்.

தேவமாதா தம்முடைய திருமைந்தன் மட்டற்ற மகிமை பெற்றதைக் கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுக்கிறிஸ்துநாதர் மட்டற்ற மகிமையோடு உயிர்த்ததைக்கண்டு தேவமாதா அடைந்த சொல்லிலடங்காத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரமநாயகி தமது திருமைந்தன், சூரியனை மங்கச் செய்யும் பிரகாசத்தை அடைந்த அட்சம், சூட்சம், இலகு, பிரகாசம் என்ற மகிமை வரங்களைப் பெற்றதைக் கண்டு, தாம் முன்னர் அடைந்த வியாகுல வேதனைகளுக்குப் பதிலாக மட்டற்ற மகிழ்ச்சியால் பூரிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய திரு உடலில் வெற்றி அடையாளங்களைப் போல் இருக்கிற திருக்காயங்களை முத்தமிட்டார்கள். மோட்சவாசிகள் பேரின்ப வீட்டில் உணருகிற இன்ப சந்தோஷத்தை அனுபவித்தார்கள். அநித்திய உலகில் இருந்தபோதிலும் அவர்கள் மேலான இராச்சியத்திற்குரிய மனோவாக்குக் கெட்டாத பேரின்பத்தை, நுகர்ந்தார்கள். நமது ஒப்பற்ற அன்னை சொல்லொணா ஆனந்தத்தை அனுபவிக்கிறதைப்பற்றி வாழ்த்தி, நம்மை இவ்வுலக பாக்கியங்களை வெறுக்கச் செய்து தாம் அடைந்த மோட்ச ஆனந்தத்தை நாமும் அடையும்படி கிருபை செய்ய வேண்டுமென மன்றாடுவோமாக.

தேவமாதா தமது திருமைந்தனிடத்தில், அவரை விட்டுவிட்ட சீஷர்கள் திரும்பிச் சேருவதைக்கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுநாதர் உயிர்த்ததற்குப் பின்னர் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் அவரிடத்தில் திரும்பி வந்து சேருகிறதைக் கண்டு, தேவமாதா எவராலும் கண்டு பிடிக்கக்கூடாத சந்தோஷத்தை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் அர்ச். அருளப்பர் நீங்கலாகப் பயந்து ஓடிப்போய்த் தங்களுடைய மேய்ப்பன் சாகிற வேளையில் ஆட்டுக்குட்டிகள் சிதறிப் போகிறது போல் சிதறி இருந்தார்கள். இயேசுக் கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்ததின் பின் அவர்கள் மன உறுதி அடைந்து புது மனிதராகித் தங்களது மேய்ப்பனிடத்தில் வந்து சேர்ந்தார்கள். நாமும் அடிக்கடி பாவங்கட்டிக் கொண்டு பசாசுக்கு அடிமையாகி இயேசுக் கிறிஸ்துநாதரை மறுதலித்து விட்டு நமது திருத்தாயாருக்கு மிகுந்த கஸ்தி வருவித்தோம். எப்பொழுதும் மிகுந்த அன்போடும் ஆண்டவரை நேசித்துவரும் பரம நாயகிக்கு சந்தோஷம் வருவிப்போமாக. பரிசுத்த கன்னிகையே, எங்களுடைய பலவீனத்தால் ஒன்றும் கூடாமையால் எங்களைக் கைதூக்கி நாங்கள் பாவத்தில் ஒருக்காலும் வீழாதபடிக்குக் கிருபை செய்தருளும்.

செபம்

எவ்வித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராஜாவைத் தொடர்ந்து பிதா பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும், நல்ல உபகாரியாகவும் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்குள்ளே ஆண்டவளாய் நின்று அவர்களைப் பார்க்க அதிக சந்தோஷமும் பாக்கியமும் அனுபவித்தீரே. நீசப் பாவியாகிய நானும் அவர்களோடு உம்மை மோட்ச இராக்கினியாக வாழ்த்தி, உமது திருமைந்தன் உயிர்த்ததினால் சந்தோஷப்படுகிறேன். நான் மீட்புப் பெறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும் என்று பிரார்த்திக்கிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த கன்னிகையே! இயேசுநாதருக்குப்பின் நீரே என் உறுதியான நம்பிக்கையாயிருக்கிறீர்.

இருபத்தி ஒன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஆலயத்திற்கு கொஞ்சம் எண்ணெய்யாவது ஓர் மெழுகு திரியாவது கொடுக்கிறது.

புதுமை!

முற்காலத்தில் லீயோ இசோரியா என்னும் அரசன் அப்பொழுது வாழ்ந்து வந்த பதிதர்களுக்கு உதவி செய்து, தானும் பதிதனாகி, தேவமாதா முதலான அர்ச்சியஷ்டவர்களுடைய அர்சியஷ்ட பண்டங்களையும் சுரூபங்களையும் வணங்க வேண்டாமெனப் பணித்து கிறிஸ்தவர்களுக்கு அநேக விதங்களில் இன்னல் விளைவித்து வந்தான். அப்பொழுது புனித தமாஸென் அருளப்பர், கலிப் என்ற அரசரின் அமைச்சராக தமாஸென் பட்டணத்தை ஆண்டு கொண்டிருந்தார். அவர் பதிதான சிங்கம் என்ற அரசரை எதிர்த்து நின்று அவன் இராச்சியத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பற்பல நிரூபங்கள் எழுதி அவர்களைச் சத்திய வேதத்திலும் விசுவாசத்திலும் திடப்படுத்தினார். சிங்கம் என்ற அரசன் இதை அறிந்து அவர்மீது பகை வைத்து அவரைக் கெடுக்க வேண்டுமென்ற ஆசையினால் ஒரு கபடமான தந்திரம் செய்தான். பொய்யான ஓர் கடிதம் எழுதி அதில் சிங்கமென்ற அரசர் தமாஸென் பட்டணத்துக்கு படையோடு வந்தால், தான் அந்த பட்டணத்தை அவருக்குக் கையளிப்பேனென்று எழுதி வைத்த, அந்தக் கடிதம் தமாஸென் அருளப்பர் தனக்கு அனுப்பினாரென்று பொய் சொல்லி அந்தக் கடிதத்தைக் கலிப் என்னும் அரசருக்கு அனுப்பினான். அரசர் அந்தக் கடிதத்தை வாசித்து இது நன்மை என்று ஏற்று தன் அமைச்சரால் தமாஸென் அருளப்பரை வரவழைத்து அவருக்கு அதை காண்பித்தான். அவர் தம் கையெப்பம் வைத்திருக்கிறதையும், தம் எழுத்துப் போலிருக்கிறதையும் கண்டு இது என் மீது உண்டான கபடமென்றும், நான் அத்தகைய காகிதத்தை ஒருக்காலும் எழுதவில்லையென்றும் எவ்வளவோ அவரிடத்தில் எடுத்துச் சொல்லியும் அவர் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரைக் கோபித்து அவருடைய வலது கையை அறுக்கக் கட்டளையிட்டான். அறுக்கப்பட்ட கையை, தெரு வீதியில் அவர் செய்த குற்றம் எல்லாரும் அறியும் வண்ணம் கழுமரத்தில் கட்டிவைக்கச் சொன்னான். அப்படியே செய்தார்கள். புனித தமாஸென் அருளப்பர் ஒரு கை இல்லாதவராக தமது வீட்டுக்கு சென்று அரசரின் கோபம் அமர்ந்தபிறகு அன்று மாலை மீண்டும் அரசரிடம் அறுக்கப்பட்ட கையை திரும்பத் தமக்கு கொடுக்க வேண்டுமென கெஞ்சி மன்றாடினார். அரசரானவர் இராசன் எழுதின காகிதம் கள்ளக் காகிதமென்று அறிந்து சந்தேகப்பட்டு, புனித தமாஸென் அருளப்பர்மீது மனமிரங்கி அறுக்கப்பட்ட கையை அவருக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான். அவர் அதை வாங்கித் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் மன்றாடினதாவது: என் ஆண்டவளே! உம்முடைய சுரூபங்களை வணங்காமல் இருக்கக்கூடாதென்று நான் எழுதினதினால் என் கை அறுக்கப்பட்டதே, அந்த, வணக்கம் உமக்கு ஏற்கும் வணக்கமென்றும் என் பேரில் எழுதின காகிதம் பொய்யான காகிதமென்றும் எல்லாரும் அறியும்படிக்கு என் கையை ஒட்ட வைப்பீரானால், அதைக்கொண்டு இனிமேல் உம்முடைய வணக்க ஸ்தோத்திரத்துக்காக எழுதுவேனென்று மன்றாடினார். அப்படியே மன்றாடின பிறகு தேவமாதாவை நம்பி தமது கைப்பட்டையில் துண்டிக்கப்பட்டக் கரத்தைக் கோர்த்து வைக்கவே அற்புதமாக இரண்டும் முன்னிருந்தாற்போல் ஒட்டிக் கொண்டன. அந்தப் புதுமை உடனே ஊர் முழுதும் பரம்ப அரசர் அதைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து அவருடைய கையை அறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதுமல்லாமல், என்னிடம் எதைக் கேட்பீரோ அதெல்லாம் கொடுப்பேன் என்று சொன்னான். அவரோவென்றால் எனக்கு வேறொன்றும் வேண்டாம். அமைச்சர் உத்தியோகத்தை விடுவதற்கு உத்தரவு கொடுத்தால் போதும் என்றார். அந்த உத்தரவைப் பெற்றபின் சாகும் வரையிலும் தேவமாதாவின் பேரில் நன்றியறிந்தவராய், மிகுந்த பக்தி வைத்ததினால் நல்ல மரணத்தை அடைந்து புனிதராய் கொண்டாடப்படுகிறார். சாகும்வரையில் அவரிடத்தில் தேவமாதா செய்த புதுமையின் அடையாளமாக அவருடைய கை ஒட்டின இடத்தைச் சுற்றிச் சிவப்பான ஓர் தழும்பு இருந்தது.

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர! சகோதரிகளே இடைவிடாமல் தேவமாதாவினுடைய திருப்படங்களையும். சுரூபங்களையும் நீங்கள் வாங்குவதுமின்றி அவைகளை உங்களால் இயன்ற அளவு மற்றவர்களும் வணங்கு

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 20

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 20
தேவமாதாவின் கடைசி வியாகுலங்களின் பேரில்!

கன்னி மாமரி பட்ட வியாகுலங்கள் எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

இயேசுநாதர் தம்மை பலியாகத் திவ்விய பிதாவுக்கு ஒப்பு கொடுக்கும் காலம் வந்துற்றபொழுது தம்முடைய தாயாகிய கன்னிமரியாயிடத்தில் வந்து, நான் மனிதரை மீட்கும் பொருட்டு சாகப்போகிறேன் என்று சொல்லி உத்தரவு கேட்டுப் போனார். தேவமாதாவோவெனில், கொடிய யூதர் தமது திருமைந்தனை கொல்லுவார்களென்று மகா துக்கத்தோடு இருந்து மறுநாள் அவரை இன்னும் ஒருமுறை காண வேண்டுமென்று வெளியிலே புறப்பட்டு போனார்கள். அப்பொழுது தமது மாசில்லாத குமாரன் துஷ்ட மனிதனைப் போல பின் கட்டு முறையாக கட்டப்பட்டு எருசலேம் பட்டணத்தின் தெரு வீதிகளில் இழுக்கப்பட்டதையும் அவர் பேரில் சொல்லப்பட்ட பொய்சாட்சிகளையும் அவருடைய திருச்சரீரம் ஐயாயிரம் அடிபட்டு இரத்தத்தினால் வேறுபட்டிருக்கிறதையும் கொடியவனான பிலாத்து என்பவன் அநியாயமாக தீர்ப்பை சொன்னபிறகு இயேசுநாதர் சிலுவையை சுமந்து கபால மலைக்கு போகிறபொழுது சுமத்தப்பட்ட சிலுவையின் பாரத்தை தாங்காது சோர்ந்து களைத்து தரையில் விழுந்ததையும், மலையில் சேர்ந்து இரண்டு கள்ளருக்கு நடுவில் சிலுவையில் அறையுண்டு மூன்று மணி நேரம் அவஸ்தையாயிருந்து பாவிகளுக்காக கடின மரணத்தை அடைந்ததையும் கண்டு தேவமாதா அனுபவித்த வியாகுலப் பெருக்கமானது வேத சாட்சிகள் எல்லோரும் பட்ட கொடூரமான வேதனைகளை விட ஆயிரமடங்கு கொடூரமாயிருந்தது. அப்பேர்ப்பட்ட வியாகுலமானது மனிதர் செய்த பாவங்களினால் உண்டானதென்பது நிச்சயம். ஆகையால் பாவத்தின்பேரில் மெய்யான மனஸ்தாபத்தை உங்கள் மனதில் வருவிக்க வேண்டுமென மன்றாடுவீர்களாக.

அவற்றின் முகாந்தரம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

தேவமாதா அவ்வளவு வியாகுலம் அனுபவித்ததற்கு முகாந்தரம் என்னவென்றால் மகா கொடிய பாடுகள் பட்ட தமது குமாரனாகிய இயேசுநாதருடன் வேதனை அனுபவிக்கும் படியாகவும் அன்னைக்கு மோட்ச இராச்சியத்தில் அதிக பாக்கியம் கிடைக்கும் படியாகவும் அன்னையை பார்க்கும்பொழுது மனிதர் தங்களுக்கு ஏற்படும் துன்பமனைத்தையும் பொறுமையோடு அனுபவிக்கும் படியாகவும் இம்மூன்று முகாந்தரங்களினால் சர்வேசுரன் தேவமாதாவுக்கு அதிக வியாகுலத்தை அளிக்க திருவுளம் கொண்டார். ஆகையால் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் மரிக்கும் வரையிலும் சொற்ப குற்ற முதலாய் கட்டிக்கொள்ளாத தேவமாதா வியாகுல சாகரத்தில் அமிழ்ந்திருக்கையில் நீசப்பாவிகளான மனிதர் மட்டும் ஏதாவது துன்பப்படும்போது குறைபடுவானேன்? தனது சிலுவையை சுமந்து என்னை பின் செல்லுகிறவன் மோட்சம் அடைவானென்று இயேசுநாதர் திருவுளம் பற்றினார். தனது சிலுவையாகிய துன்பம், நோவு முதலான நிர்ப்பந்தங்களை பொறுமையில்லாமல் அனுபவிக்கிறவன் மோட்சத்தை அடைவது அரிது என அறிந்து பொறுமை என்னும் புண்ணியத்தை தர வியாகுலமாதாவை பார்த்து மன்றாடுவோமாக.

அவற்றை எப்படி அனுபவித்தார்கள் என்றும் ஆராய்ந்து பார்க்கிறது.

சிலுவை அடியில் நிற்கும் வியாகுலமாதாவிடம் விளங்கின புண்ணியங்களை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். வேதசாட்சிகளின் இராக்கினியான கன்னிமரியாயே சிலுவையில் அறையுண்டு மரண அவஸ்தைப்படுகிற இயேசுநாதரோடு கூட இருக்கிற பொழுது அவர் மாசில்லாதவரென்றும், அவர் பெயரில் இட்ட தீர்வை அநியாயமான தீர்வை என்றும், அவரைக் கொல்லுகிற யூதர்கள் பெரிய பாதகம் கட்டிக் கொள்கிறார்களென்றும் அறிந்திருந்தாலும் அப்பேர்ப்பட்ட அநியாயத்தின் பேரில் முறைப்படாமல் தேவசித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமது பிராணனை பார்க்க அதிக உருக்கமாய்த் தாம் சிநேகித்த தமது நேசக்குமாரனை மனிதர் இரட்சணியத்துக்காக தேவ நீதிக்கு ஒப்புக்கொடுத்தார்கள். அவ்வேளையில் கன்னிமரியாள் அனுபவித்த வியாகுல பெருக்கம் எவ்வளவென்று கேட்டால், அந்த வியாகுலத்தை உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சர்வேசுரன் கொஞ்சங் கொடுக்க சித்தமானால் எல்லாரும் சாவதற்கு போதுமென்று வேதபாரகர் எழுதி வைத்திருந்தார்கள். ஆகையால் உங்கள் ஆத்துமத்துக்காக அப்பேர்ப்பட்ட வியாகுலத்தை அதிசயமான பொறுமையோடு அனுபவித்தவர்களுமாய் மனிதர்பேரில் வைத்த அளவுகடந்த பாசத்தினால் உங்களுக்காக தமது குமாரனைப் பலியாக ஒப்புக்கொடுத்தவர்களுமாய் இருக்கிற தேவமாதாவின் பேரில் முழு நம்பிக்கையாயிருந்து பாவத்தால் இனி துன்பம் வருவிக்காமல் புண்ணியத்தை செய்து உகந்த பிள்ளைகளாகக் கடவீர்களாக.

செபம்.

வியாகுலமாதாவே! சிலுவையிலிருந்து இயேசுநாதர் அருளப்பரைக் காட்டி இதோ உம்முடைய மகனென்று சொன்னபொழுது கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உமக்கு பிள்ளைகளாக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்யான சத்தியமாகையால் நீர் எனக்கு தாயாராயிருக்கிறீரென்று நிச்சயிக்கிறேன். ஆனால் இன்றுவரையில் நான் உம்முடைய பிள்ளை என்பதற்கு தக்க பிரகாரமாய் நடவாமல் என் பாவத்தினால் உமக்கு அநேகம் விசை துன்பம் வருவித்தேன். இனி நான் பசாசின் தந்திரத்தில் அகப்படாதபடிக்கு என் பேரில் இரங்கி என்னைக் காப்பாற்றி உம்மோடு கூட மோட்ச இராச்சியத்துக்கு கூட்டிக் கொண்டு போகவேண்டுமென்று மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தயாளமுள்ள தாயாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இருபதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :

தேவமாதாவைக் குறித்து ஒரு திருப்பலி செய்விக்கிறது. அல்லது திருப்பலி காண்கிறது.

புதுமை!

முதலாவது :

விதவையாக இருந்த ஓர் சீமாட்டி தான் பெற்ற மகனை அதிகம் நேசித்து வந்தாள். அந்தப் பையன் ஒருநாள் தெருவீதியில் போகும் பொழுது ஓர் துஷ்ட மனிதன் அவனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்று போட்டான். பின்னர் அக்கொலைபாதகன் சேவகர் தன்னை பிடிக்க வருவார்களென பயந்து ஓர் வீட்டில் புகுந்து ஒளிந்து கொண்டான். அந்த வீடு மேற்சொல்லிய சீமாட்டியின் வீடாக இருந்தாலும் அந்த மனிதன் உள்ளே இருந்தது அவளுக்கு தெரியாது போயிற்று. சிறிது நேரத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட மகனை அவளிடத்தில் கொண்டு வந்தபோது அவள் தன் மகனெனக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்து அவனைக் கொன்ற துஷ்டன் தன் வீட்டில் இருக்கிறதையும் அறிந்து முதலில் இவனை சேவகருக்குக் காட்ட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் தேவமாதா தம்முடைய திருமைந்தனை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளித்ததையும், சிலுவை அடியிலிருக்கும் பொழுது அன்னை அடைந்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும் நினைத்து வியாகுலமாதாவைப் பார்த்து அந்த துஷ்ட கொலை பாதகனுக்கு முழுமனதோடு மன்னிப்பு அளித்ததுமன்றி பணத்தையும், வஸ்திரங்களையும் அளித்து அவனைப் பிடிக்க வந்தவர்கள் கையினின்றும் அவன் தப்பிச் செல்ல ஓர் குதிரையையும் அவனுக்கு தயார் செய்து கொடுத்தாள். அப்பேர்பட்ட நற்கிரிகையை செய்தபிறகு அன்று இரவில் மரித்த தன் மகனுடைய ஆத்துமம் அவளுக்கு தோன்றி சொன்னதாவது: நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷம் இருக்க பாத்திரமாயிருந்தேன். ஆனால் நீங்கள் அந்த துஷ்ட மனிதனுக்கு வியாகுலமாதாவைக் குறித்து செய்த உபகாரத்துக்கு சம்பாவனையாக தேவமாதா இன்றுதானே என்னை மோட்சத்துக்கு கூட்டிச் சென்றார்கள் என்றான்.

ஆம் கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே பிறர் உங்களை புறம் கூறினால் அவர்களுக்காக ஜெபியுங்கள் பிறர் உங்களை காயப்படுத்தும் போது அவர்களை மன்னியுங்கள் ஏனென்றால் அடுத்த நொடிப்பொழுது கூட நமக்கு நிச்சயம் இல்லை இந்த உலகில் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம் – ஆமென்

இரண்டாவது :

ஓர் பிரபுவின் மகன் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் மெய்யான வேதத்தை அனுசரியாமல் பசாசுக்கு ஊழியம் செய்து பாவச்சேற்றில் இருபது வருஷமாக உழன்று வந்தான். அவன் சாகிற வேளையில் இயேசுநாதர் அவன் மேல் மனமிரங்கி அப்பொழுது வாழ்ந்து வந்த புனித விறிசித்தம்மாளுக்கு தம்மை காண்பித்து ஓர் குருவானவரை அந்த மனிதனிடத்தில் போகும்படிக்கு சொல்ல கற்பித்தார். குருவானவர் வியாதிக்காரனிடத்தில் வந்து அவனைப் பாவசங்கீர்த்தனம் செய்யச் சொன்னார். அதற்கு அவன் சம்மதியாமல் குருவானவர் சொன்னதை மறுதலித்து அவரைப் போகச் சொன்னான். மூன்று விசை அப்படி நடந்தது. கடைசியில் இயேசுநாதர் விறிசித்தம்மாளுக்கு காண்பித்த காட்சியை குருவானவர் வியாதிக்காரனுக்கு வெளிப்படுத்தி அவன் மனந்திரும்பினால் சர்வேசுரன் பொறுப்பாரெனச் சொன்னார். வியாதிக்காரன் அந்த செய்தியைக் கேட்டு வியந்து அழுது, நான் இருபது வருஷ காலம் பசாசுக்கு ஊழியஞ் செய்தேனே; எண்ணிக்கையில்லாத பாவங்களைச் செய்த பிறகு கரையேறுவது எப்படி என்றான். குருவானவர் நீ செய்த பாவங்களை வெறுத்து மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டால் சர்வேசுரன் பொறுப்பார் என்பதற்குச் சந்தேகமில்லையென்று சொல்ல, அப்பொழுது அந்த பிரபுவின் மகன் அதைக்கேட்டு ஆறுதல் அடைந்து குருவானவரைப் பார்த்து, சுவாமி நான் அவநம்பிக்கையாயிருந்து, நான் செய்த பாவம் எண்ணிக்கையில்லாததினால் நரகத்துக்கு தப்பி மோட்சத்தை அடைய முடியாதென்று இருந்தேன். ஆனால் நான் இப்பொழுது உத்தம மனஸ்தாபப்படுகிறதினால் சர்வேசுரன் பொறுப்பாரென்று முழுதும் நம்பியிருக்கிறேன்.

ஆகையால் இப்பொழுதே பாவசங்கீர்த்தனம் செய்ய ஆசையாய் இருக்கிறேனென்று சொல்லி அன்றுதானே நன்முறை பாவசங்கீர்த்தனம் செய்து மறுநாள் நன்மை வாங்கி மிகுந்த சந்தோஷத்துடனே மரித்தான். அவன் இறந்த பிறகு இயேசுநாதர் புனித விறிசித்தம்மாளுக்கு தோன்றி: அந்தப் பாவியானவன் பாவச் சேற்றில் உழன்றபோது வியாகுல மாதாவை அடிக்கடி நினைத்து வேண்டிக்கொண்டதால், தேவமாதாவின் வேண்டுதலைக் குறித்து நாம் அவனை நரகத்தில் தள்ளாமல் அவன் உத்தரிக்கிற ஸ்தலத்தில் சிறிது நேரம் இருந்து, பிறகு மோட்சத்துக்கு அழைத்துக்கொள்வோம் என்று சொன்னார்.

மூன்றாவது :

வாலிபன் ஒருவன் வியாகுலமாதாவின் மீது பக்திவைத்து சுரூபத்துக்கு முன்பாக தினமும் வேண்டிக்கொண்டு வந்தான். அந்த சுரூபத்தின் நெஞ்சில் தேவமாதாவின் ஏழு வியாகுலங்களைக் குறித்து ஏழு வாள்கள் இருந்தன. அவன் ஒரு இரவில் பசாசின் தந்திரத்தால் ஒரு சாவான பாவத்தை கட்டிக்கொண்டான். விடியற்காலையில் வியாகுல மாதா சுரூபத்துக்கு முன் வழக்கம்போல தான் குறித்த செபங்களை முடிக்க வருகையில் தேவமாதாவின் நெஞ்சிலே ஏழு வாள்களோடு எட்டாம் வாள் ஒன்று இருக்கிறதைக் கண்டான். அந்த அதிசயத்தை கண்டு யோசித்து கொண்டிருக்கும் பொழுது நீ இந்த இரவில் செய்த பாவமே தேவமாதாவின் எட்டாம் வாளாயிருக்கிறதென்ற சத்தத்தை அவன் கேட்டு அஞ்சி தன் பாவத்தால் தேவமாதாவுக்கு கஸ்தி வருவித்ததையும் சர்வேசுரனுக்கும், கோபம் வருவித்ததையும் நினைத்து மனஸ்தாபப்பட்டு கண்ணீர் விட்டு அழுது உடனே பாவசங்கீர்த்தனம் செய்தபின் சுரூபத்தின் முன்பாக திரும்பி வந்து அதில் முன் போல் ஏழு வாள்களைக் கண்டு தேவமாதாவின் இரக்கத்தால்தான் பாவம் பொறுக்கப்பட்டதென அறிந்து மகிழ்ச்சியுற்றான் பாவத்தில் மீண்டும் விழாது நல்லவன் ஆனான்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கு கிருபையுள்ள தாயாராயிருக்கிற தேவமாதாவின் வியாகுலங்களை நினைத்திரங்கி உங்களுடைய பாவங்களால் அவளுக்கு கஸ்தியை உண்டாக்காதீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 19

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 19
தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களின் பேரில்!

சேசுநாதர் படாத பாடுபட்டு மரிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப்பட்டது.

தேவமாதா தமது குமாரனுக்குச் சம்பவிக்கப் போகும் அனைத்தையும் தூரதிருஷ்டியினால் முன் அறிந்திருந்தார்கள். ஆனதால் அவருடைய திருமுகத்தைப் பார்க்கும்பொழுது அந்தத் திருமுகம் இரத்தத்தினாலும் அசுத்தமான உமிழ்நீரினாலும் அவலட்சணமாகுமென்றும் அவருடைய திருக் கைகளைப் பார்க்கும்பொழுது அவைகள் இரும்பாணிகளினால் ஊடுருவப்படுமென்றும் அவருடைய திருச்சரீரம் காயம்பட்டுச் சிலுவையில் அறையப்படுமென்றும் அறிந்திருந்தார்கள். மீண்டும் தேவாலயத்துக்குப்போய் அதில் வேத முறைமையின்படி சர்வேசுரனுக்கு யாதோர் பலியை ஒப்புக்கொடுக்கிறதை பார்க்கும்போது, தம்முடைய குமாரனாகிய சேசுநாதர் தமது இரத்தமெல்லாம் சிந்தி மனிதர்களை மீட்க பிதாவாகிய சர்வேசுரனுக்குத் தம்மை ஒப்புக் கொடுப்பாரென்றும் நினைத்துக் கொண்டு வருவார்கள். இந்த வர்த்தமானங்கள் எல்லாம் தேவமாதா முன்னறிந்து மனதில் இடைவிடாமல் தியானித்ததினால் அன்னை சொல்லொண்ணா மனோ வியாகுலம் அனுபவித்தார்கள். ஆனால் நரகத்தினின்று நம்முடைய ஆத்துமங்களை மீட்பதற்கு இவையெல்லாம் வேண்டியிருப்பதால் தேவமாதா பட்ட கிலேசம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொறுமையோடு அனுபவித்து ஒருபோதும் முறைப்படாமல் இருந்தார்கள். அன்னை நமக்காக பட்ட கிலேசமானது வீணாகாதபடிக்கும் நமது ஆத்துமம் கெட்டுபோகாதபடிக்கும் அன்னையை நோக்கி வேண்டிக்கொள்ளுவோமாக.

சேசுநாதர் வேதம் போதிக்கிற வேளையில் மிகுந்த துன்பத்துயரங்கள் அனுபவிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

தேவமாதா வியாகுலம் அனுபவித்ததற்கு இரண்டாம் முகாந்தரம் என்னவென்றால் தமது குமாரனாகிய சேசுநாதர் படுகிற வருத்தங்களையும் எளிமைத்தனத்தையும் அவருடைய விரோதிகள் அவர் போரில் வைத்த வர்மம் காய்மகாரத்தையும் அவருக்கு வருவித்த நிந்தை அவமானங்களையும், அவர் மீது சொன்ன அபாண்டம், பொய்சாட்சி முதலான துன்பங்களையும் கண்டு தேவமாதாவின் ஆத்துமத்தில் அதிக கஸ்தியுண்டானதுமல்லாமல், அதெல்லாவற்றையும் தமக்கு செய்தாற்போல் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆனால் இவை தேவ சித்தத்தின்படியே நடக்கிறதென்றும், இயேசுநாதர் அந்த துன்பங்களுக்கு மனப்பூர்வமாய் உட்படுகிறாரென்றும் அறிந்து, தேவ சித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமக்கு வந்த துன்பத்தை வெகு பொறுமையோடு சகித்து வந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் நமக்கு துன்பம் சலிப்பு வருத்தம் நோவு வியாதி வேதனை முதலியன வரும் வேளைகளில் அவையெல்லாம் சர்வேசுரனுடைய உத்தரவின்படியே சம்பவிக்குமென்று நினைத்து பொறுமையோடு சகித்து முறைப்படாது இருக்கக்கடவோம்.

அநேகம் பாவிகளுக்கும் அவர் பட்ட பாடுகள் வீணாகப் போகுமென்றும் தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

ஆனால் தேவமாதா மீளாத் துன்பங்கள் அனுபவித்ததற்கு விசேஷமான முகாந்தரமானது: சர்வேசுரன் அனுப்பின மீட்பரை மனிதர்கள் அறியாமல் அவருடைய திவ்விய போதனை முதலான உபகாரங்களை நிந்தித்து வருகிறதையும், தங்களை மீட்க வந்த இயேசுநாதருக்கு அவர்கள் காண்பித்து, நன்றிகெட்ட தனத்தையும். செய்த கொடூரத்தையும் கண்டு தேவமாதா பிரலாபித்து அதிக கஸ்திபட்டதுமன்றி தமது தேவக்குமாரனின் திருப்பாடுகள் பாவிகளில் அநேகருக்கு வீணாய்ப்போகும் என்றும், தமது சனங்களாகிய யூதர்கள் மூர்க்கத்தினாலும் பாதகங்களினாலும் சர்வேசுரனுடைய கோபத்தை தங்கள் பேரில் வருவித்து கொண்டு மெய்யான வேதத்தை இழந்து, சபிக்கப்பட்டு தள்ளப்படுவார்களென்றும், மோட்ச வழியை புறக்கணித்து கண்களை மூடிக்கொண்டு ஞானகுருடராய் திரிவார்களென்றும் தேவமாதா கண்டு சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்தார்கள்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவம் செய்யும்போது இயேசுநாதர் பட்ட பாடுகள் உங்கள் மட்டில் வீணாய் போவதற்கு பாவமானது காரணமானதினால் தேவமாதாவுக்கு மறுபடியும் கஸ்தி வருவிக்கிறீர்கள். ஆதலால் யூதர்களுக்கு இடப்பட்ட ஆக்கினையை சர்வேசுரன் உங்களுக்கும் இடுவாரென்று பயப்பட்டு அவருடைய கோபத்தை அமர்த்த வேண்டுமென்று தேவமாதாவை மன்றாடுவீர்களாக.

செபம்

இயேசுநாதருடைய பரிசுத்த தாயாரே ! ஆண்டவர் எனக்கு செய்தருளிய எண்ணிறந்த, உபகாரங்களையும் நான் அவருக்கு காண்பித்த நன்றிகெட்டதனத்தையும் நினைக்கும்போது கொடூரமான தீர்வைக்குள்ளாவேனென்று பயப்படுகிறேன். ஆனால் பாவிகளுக்கு அடைக்கலமாகச் சர்வேசுரன் உம்மை வைத்திருக்கிறாரென்று நினைவுகூர்ந்து எனக்காக வேண்டிக்கொள்ளுவீரென்றும் நான் உமது திருக்குமாரனிடத்தில் கணக்கு சொல்லப்போகிற நாளில் எனக்காக மனுப்பேசுவீரென்றும் நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆகையால் முன் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்து இனிமேல் நான் அந்த பாவங்களை செய்யாதிருக்க எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பத்தொன்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:

சர்வேசுரன் உங்களுக்கு செய்த எண்ணிக்கையில்லாத உபகாரங்களை நினைத்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

கப்பல் ஒன்று கடலில் ஓடுகிற பொழுது லொரேத்தோ என்ற தேவமாதாவின் அற்புதமான கோவிலிருக்கிற அண்டைக்கு வந்தது. மறுநாளில் மாதாவின் திருநாட்களில் ஒன்று கொண்டாடப்படும் என்று அறிந்து, அந்த கப்பலிலே இருந்த சனங்கள் எல்லாரும் அந்த கோவிலுக்குச் சென்று திருப்பலி காணவேண்டுமென ஆசையுடன் இருந்தனர். இதற்கு எல்லாரும் சம்மதித்தார்கள். கப்பல் ஓட்டுகிற ஒருவன் மாத்திரம், சனங்களெல்லாரும் கப்பலைவிட்டு அப்புறம் போனால் தன் கப்பலுக்கு ஆபத்து வருமென்று சம்மதியாமல் இருந்தான். அப்படி இருக்கையில், கப்பல் ஓட்டுகிற அந்தோனி என்ற பெயருடைய ஒருவன், நீங்கள் எல்லாரும் கோவிலுக்கு சென்று திருப்பலி காணலாம். நான் தேவமாதாவின் உதவியைக் கேட்டு கப்பலுக்கு ஆபத்து வராதபடிக்கு காவலாய் இருப்பேனென்று உறுதியாகச் சொல்லி எல்லோரும் தேவமாதாவின் பேரில் நம்பிக்கையாய் இருக்கச் செய்தான். ஆகையால் அதிகாலையில் எல்லாரும் புறப்பட்டுபோன சிறிது நேரத்துக்கெல்லாம், கப்பலில் தனியாக இருந்த அந்தோனி தூரத்தில் ஓர் பெரிய கப்பல் வருகிறதைக் கண்டான். அது அருகில் வந்த பிற்பாடு அதில் பகைவர்களான பிறமதத்தினர், தான் இருக்கிற கப்பலை பிடிக்க வருகிறதை அறிந்து கலங்கினான். ஆனால் தேவமாதாவை உறுதியான விசுவாசத்தோடு நம்பி எல்லாரும் திருப்பலி காணப் போனதை அன்னை ஞாபகப்படுத்தி, ஒரு கோடாலியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கப்பலின் ஓரத்தில் ஓர் மூலையில் மறைந்து நின்றான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒருவன் வந்து அந்தோனி ஒளிந்து கொண்டிருந்த கப்பலை ஓர் கையால் பிடித்து அதனுள் ஏற முயன்றான். அந்தோனி அதை அறிந்து எழுந்திருந்து கோடாலியால் அவனுடைய கையை வெட்டிப் போட்டுவிட்டு திரும்பவும் ஒளிந்து கொண்டான். கை வெட்டப்பட்டவனோவென்றால் அபயமிட்டு, இதோ இதில் அநேகர் கபடமாய் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். நாம் இந்தக் கப்பலில் போனால் எல்லோரும் கொல்லப்படுவோமென்று உரத்த சத்தமாய் சொல்லி மற்றவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணினான். ஆகையால் கடற்கொள்ளைக்காரர்கள் இந்த கப்பலை பிடிக்காமல் அதைவிட்டு ஓடிப்போனார்கள். சிறிது நேரத்திற்குப்பிறகு அந்தோனி தலையை உயர்த்தியபோது அவர்கள் தூரத்தில் ஓடுகிறதைக் கண்டு முழந்தாளிட்டு தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினான். மற்றவர்கள் திருப்பலி கண்டு வருகையில் அந்த கப்பல் ஓடுகிறதைக்கண்டு, ஐயோ! எங்கள் கப்பலுக்கு ஒருவேளை ஆபத்து வந்ததோ வென சந்தேகப்பட்டனர். ஆனால் அந்தோனி அவர்களிடம் வெட்டப்பட்ட கையையும் கோடாலியையும் அவர்களுக்காட்டி நடந்தவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். இதைக் கேட்ட எல்லோரும் தேவமாதாவின் பிரார்த்தனையைச் சொல்லி கிறிஸ்தவர்களின் சகாயமாகிய அந்த பரம நாயகிக்கு நன்றி செலுத்தினார்கள்.

கொடிய புயல் உள்ள இவ்வுலக சமுத்திரத்தில் பயணம் செய்யும் கிறிஸ்தவர்களே! புயல் அடிக்காத துறையாகிய மோட்ச இராச்சியம் சேர வேண்டுமானால் விடியற்காலத்து நட்சத்திரமாகிற பரம நாயகியான பரிசுத்த கன்னிகையை எப்போதும் நம்பிக்கையுடன் மன்றாடுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 18

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின் பேரில்!

கன்னிமரியாள் தமது மைந்தனைப் பார்த்த பொழுது அடைந்த சந்தோஷம்.

மிகுந்த நேசமுள்ள கன்னிமரியாள் அளவில்லாத அன்புக்குரிய தமது மைந்தனாகிய இயேசுவைப் பார்த்த பொழுது ஆத்துமமானது மிகுதியான சந்தோஷத்தால் நிரப்பப்பட்டது. எல்லா மனிதரிலும் செளந்தரியமுள்ளவராய் இருக்கிற இயேசுநாதரிடத்தில் சகல இஷ்டப்பிரசாதங்களும், ஞானத்திரவியங்களும், தேவ இலட்சணங்களும், அடங்கியிருக்கிறதென்றும், அவர் உலகத்தை இரட்சிக்கிறதற்கு அனுப்பப்பட்டவரென்றும், எண்ணிக்கையில்லாத ஆத்துமங்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்றும், அவர் மெய்யான சர்வேசுரனாகையால் மனுக்குலத்தார் எல்லோரும் அவரை ஆராதிப்பார்களென்றும் கன்னிமரியாள் அறிந்து, மகிமையை அவர் அடைந்ததினால் சொல்லிலடங்காத மகிழ்ச்சி வணக்கத்துடன் அவருக்கு ஊழியம் செய்து வந்தார்கள். இவ்வாறு நாமும் திவ்விய நன்மை வாங்கும் பொழுது தேவமாதாவின் திருமைந்தனாகிய இயேசுநாதர் நமது அத்துமத்தில் வருகிறாரென்பது நிச்சயமாகையால், மிகுந்த பக்தி வணக்கத்தோடும் சிநேகத்தோடும் அவரை உட்கொள்ளக்கடவோம்.

அவரோடு பேசினபொழுது அடைந்த சந்தோஷம்.

கன்னிமரியாள் தமது திருக்குமாரனோடு சல்லாபித்த பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். வேதத்துக்கடுத்த சத்தியங்கள் திருச்சபையில் ஸ்தாபிக்கப்படும் ஒழுங்குகள், அதில் நடக்கப்போகும் அதிசயமான வர்த்தமானங்கள், வேதசாட்சிகள் தங்கள் பிராணனைக் கொடுக்கப்போகும் அதிசயத் துணிவு, உலக முடிவு பரியந்தம் எண்ணிக்கையில்லாத மகாத்துமாக்கள் செய்யும் புண்ணியங்கள் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் இயேசுநாதர் தமது அன்னைக்கு வெளிப்படுத்தினார். கன்னிமரியாயோ அவருடைய வார்த்தைகளை மிகுந்த வணக்கத்தோடு கேட்டு, அவர் திருவுளம் பற்றினவைகளை எல்லாம் இடைவிடாது தியானித்து மிகவும் மகிழ்ந்தார்கள். வேதத்திலுண்டான சத்தியங்களைக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி தியானித்தால் ஞான சந்தோஷத்தை அடைவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் அழிந்துபோகிற உலக காரியங்களின் மேல் கவலை வைத்து அழிவில்லாத வேத காரியங்களின் மட்டில் அசட்டையாக இருந்தால் பிரயோசனமென்ன? அழிந்து போகிற சரீரத்துக்காக வெகு பிரயாசைப்பட்டு முடிவில்லாத நித்திய வாழ்விற்கு வழியாயிருக்கிற வேதத்தை அறியாதிருந்தால் பலனேது? ஆகையால் வேத ஒழுங்கின்படி நடக்கும்படிக்கும், வேதகாரியங்களைப் பக்தியோடு தியானித்து அறியவும், அவைகளை உறுதியாய் விசுவசிக்கவும், வேண்டிய உதவிகளைத் தேவதாயாரிடம் கேட்கக்கடவீர்களாக.

அவர் தம்முடைய வேதம் போதிக்கிறதைக் கேட்ட பொழுது அடைந்த சந்தோஷம்.

இயேசுநாதர் வேதத்தைப் போதிக்கும் பொழுது கன்னிமரியாள் சந்தோஷமடைந்து தமது குமாரன் எண்ணிலடங்காத அற்புதங்களைச் செய்கிறதையும், அவரைப் பின் செல்லத் திரளான சனங்கள் வருகிறதையும் ஆரோக்கியத்தை அடைவதற்காக அவரை பிணியாளர் தேடுகிறதையும், எங்கும் உள்ள மனிதர் அவருக்கு புகழ்ச்சி, நமஸ்காரம், ஆராதனை செய்கிறதையும், தேவமாதா கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அன்றியும் இயேசுநாதருடைய சீஷர்களும், அவருடைய திருவாக்கியங்களை அதிசயத்தோடு கேட்டவர்களும், அவரால் பிணி தீர்க்கப்பட்டவர்களும், ஏன் உயிர் பெற்றவர்களும் தேவ மாதாவிடத்தில் வந்து வணங்கி அப்பேர்ப்பட்ட குமாரனைப் பெற்றதினால் தோத்திரம் சொல்லி, பேறுபெற்றவர்களென்றும், ஆசீர்வதிக்கப் பட்டவர்களென்றும், புகழ்ந்து வருகையில் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும்! நாமும் கன்னிமரியாயிக்கு மகிழ்ச்சி வருவிக்க வேண்டுமென்ற ஆசையோடு நமக்காகப் பெற்ற குமாரனைக் குறித்து அன்னைக்குத் தகுதியான மங்கள வார்த்தையைச் சொல்லக்கடவோம்.

செபம்.

என் திவ்விய தாயாரே! என் பேரில் மிகுந்த அன்புவைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்! நான் உமக்கு சந்தோஷம் வருவிக்கத் தக்கதாக இன்றுவரையில் எதிலும் பிரயாசைப்பட்டவனல்ல. ஆகையால் உமது திருமைந்தனாகிய இயேசுநாதர் வெளிப்படுத்தின வேத சத்தியங்களை இனியேனும் அறிந்து விசுவசிக்கவும், அதன்படி நடக்கவும் ஆசையாயிருக்கிறேன். இயேசுநாதரிடத்தில் நீர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து என் ஆசை நிறைவேறும்படி என்பேரில் தயவாயிருந்து எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதினெட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய காவலான சம்மனசையும் அவரால் உங்களுக்கு வந்த உபகாரங்களையும் நினைத்து அவருக்குத் தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

மகா பேர்பெற்ற சில்வெய்ரா கோன்சலேஸ் என்னும் இயேசுசபைக் குருவானவர் ஆப்பிரிக்காவிலுள்ள மோனோமோத்தப்பா என்னும் நாட்டுக்கு மெய்யான வேதத்தைப் பிரசங்கிக்கப் போன பொழுது தம்மோடு தேவமாதாவின் ஓர் படத்தை எடுத்துச் சென்றார். அவ்விடத்தில் சேர்ந்த தம் அரசரின் பிரதானிகளில் ஒருவன் அவரைக் காண வந்தபோது அவர் அறையில் இருந்த படத்தைக் கண்டு, இது உயிருள்ள உருவமோ, உயிரில்லாத உருவமோ என கண்டுகொள்ள முடியாததால் அரசரிடத்தில் வந்து, அந்தக் குருவானவரிடத்தில் நான் அழகுள்ள ஒரு பெரிய இராக்கினியைக் கண்டேன் என்று சொன்னான். அரசர் அந்த இராக்கினியைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தோடு குருவானவரிடத்தில் ஆளனுப்பி, ஆண்டவரே! நீர் நம்மண்டைக்கு உம்முடன் இருக்கும் இராக்கினியைக் கூட்டிக் கொண்டு வர வேண்டுமென்று மன்றாடினார். குருவானவர், மன்னரின் வேண்டுகோளின்படி அவரண்டையில் வந்து தேவமாதாவின் படமல்லாமல் தம்மோடு வேறு இராக்கினியில்லாமையால் அதை எடுத்து மன்னருக்கு காண்பித்தார். மன்னர் அப்படத்தைக் கண்டு அளவிள்ளாத ஆனந்தங்கொண்டு தம்முடைய அறையில் மிகுந்த அலங்காரத்தோடு வைக்கச் சொன்னார்.

அன்று இரவில் தேவதாய் மிகுந்த பிரகாசத்தோடு அந்தப் படத்தின் வடிகரூபமாய் அவரது நித்திரையில் தம்மைக் காண்பித்து அவரிடம் பேசினார்கள். ஆனால் அரசரால் இவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்போல் ஐந்து நாள் இரவிலும் சம்பவித்ததைக் கண்ட அரசர் குருவானவரிடத்தில் வந்து அந்த இராக்கினி என்னோடு அறியாத மொழியில் பேசுகிறதினால் நான் கஸ்திபடுகிறேன், அதை அறியும்படி என்ன செய்யலாமென்று கேட்டதற்கு குருவானவர் பதில் மொழியாக: அந்தப் பரம இராக்கினி பேசுகிற மொழி பரலோக மொழியானதால், அதை அறிய வேண்டுமானால் ஞானஸ்நானம் பெற்று மெய்யான வேதத்தை அனுசரித்தால் அறியலாமென்று சொன்னார். அதைக் கேட்ட அரசர் அந்த மொழியை அறிய ஆசையுள்ளவராய் இருந்ததால் ஞானஸ்நானத்திற்கு சம்மதித்து செபங்களும், வேதப் பிரமாணங்களும் படித்த பிறகு, அவரும் அவருடைய தாயாரும் பிரதானிகள் அநேகரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்பொழுது தேவமாதா பேசுகிற மொழியை அறிந்து தாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு அந்தப் பரம இராக்கினி தெரிந்து கொண்ட வழி இதுதான் என்று நிச்சயித்து அன்னைக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி அது முதல் மெய்யான வேதத்தில் பிரமாணிக்கமாயிருந்தார்.

கிறிஸ்தவர்களே! உங்கள் மனதில் பரிசுத்தாவியாகிய சர்வேசுரன் கொடுக்கிற ஞான ஏவுதல்களை நீங்கள் கேட்கும்படியாக தேவ மாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 17

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 17
திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததின் பேரில்!

திருக்குடும்பத்தில் தரித்திரத்தின் நேசம்!

திருக்குடும்பமாகிய சேசுநாதரும், தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் உலக சம்பத்துக்களை விரும்பாமல், சர்வேசுரனை மாத்திரமே விரும்பித் தரித்திரத்தையும், தரித்திரத்துக்கடுத்த இக்கட்டுகளையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆகிலும் உலக செல்வங்களைப் பயன்படுத்தாமல் ஞான நன்மைகளை மட்டும் தேடிச் சகல புண்ணியங்களையும் செய்து கொண்டு வந்ததினால், மற்றக் குடும்பங்களைவிட அத்திருக் குடும்பமானது பேரின்ப பாக்கியமுள்ளதுமாய்ச் சர்வேசுரனுக்கு உகந்ததுமாய்ச் சம்மனசுக்களால் வணங்கப்படுவதற்குப் பாத்திரமானதுமாக இருந்தது. ஆதலால் இந்த உலகில் சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், புண்ணியமும், சம்பத்து முதலான உலக நன்மைகளால் மெய்யான பாக்கியம் வரமாட்டாதென்று அறியக்கடவீர்களாக.

உலக மகிமையின் வெறுப்பு!

பிறந்த நாள் முதற்கொண்டு சேசுநாதர் அற்புதங்களைச் செய்யும் வல்லபமுள்ளவராய் இருந்த போதிலும், அற்புதங்களைச் செய்யத் தாம் குறித்த காலம் இன்னும் வராததினால், நமக்குத் தாழ்ச்சியென்னும் புண்ணியத்தைக் காண்பிக்கிறதற்காகத் தமது வல்லமையை மறைத்துக்கொண்டு, உலக கீர்த்தியை வெறுத்து, வெளிச் செல்லாமல் மனிதர்களுக்கு அறியாதவர் போல் இருந்தார். திவ்விய சேசு தமது திருமாதாவுடன் வளர்ப்புத் தந்தையாகிய அர்ச். சூசையப்பருடனும் தங்கியிருந்து முப்பது வயது வரையில் அவர்கள் சொற்கேட்டு அவர்களுக்கு உதவியாக அவர்களோடுகூட வேலை செய்து, அவர்கள் வருத்தப்படும் சமயத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, பணிவான குணமுள்ள மகன் தன்னைப் பெற்ற தாய் தந்தையர்க்கு கீழ்ப்படிவதுபோல் இருவருக்கும் கீழ்ப்படிந்து வந்தார். கன்னிமாமரியும் அர்ச். சூசையப்பருமோவென்றால், மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான சேசுநாதர் தங்களுக்கு மிகுந்த தாழ்ச்சியோடு கீழ்ப்படிவதைக்கண்டு எவ்வளவு அதிசயப்பட்டார்களென்று எடுத்துரைக்க முடியாது. சகல உலகங்களுக்கும் ஆண்டவரான சேசுநாதர் தம்மால் உண்டாக்கப்பட்ட இரண்டு சிருஷ்டிகளின் சொற்கேட்டு அதிசயத்துக்குரிய தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்தாரென்று நினைத்து நீங்களும் அவருக்குப் பதிலாகச் சர்வேசுரனால் வைக்கப்பட்ட பெரியோர்களுக்குக் கீழ்ப்படியக்கடவீர்களாக.

பிறர் சிநேகம் ஆகிய இம் மூன்று புண்ணிய மாதிரிகையும் காணப்பட்டது.

சேசுநாதர், கன்னிமரியாள், அரச்.சூசையப்பர் இம்மூவரும் இருந்த வீட்டில் சமாதானமும், பக்தியும், சிநேகமும் எந்த அளவில் சிறந்திருந்ததென்று யாரால் சொல்லக்கூடும்? அதில் முப்பது ஆண்டளவாக நடந்த புதுமைக்கடுத்த சம்பவங்களை சுலபமாக வெளிப்படுத்த முடியாது. இந்தத் திருக்குடும்பத்தில் சண்டை கோபம் மனஸ்தாபம் முதலான துர்க்குணங்களாவது மரியாதைக் குறைச்சல், ஆசாரக்க குறைச்சல், சிநேகம் பக்தி அன்பு குறைச்சலாவது காணப்பட்டதில்லை. மூவரும் எப்போதும் மலர்ந்த முகத்தோடும், அன்போடும் சந்தோஷத்தோடும் பேசிப் புழங்கி வந்தபடியால் அடுத்த வீட்டுக்காரர் இத்திருக்குடும்பத்தின் வீட்டில் பரலோகத்துக்குச் சரியான பாக்கியம் விளங்குகிறதை அறிந்து, தாங்கள் மனக்கிலேசப்படும் வேளையில் அத்திருக் குடும்பத்தினிடத்தில் வந்து சேரும், அர்ச். சூசையப்பர் கன்னிமாமரியாயைக் கண்டு அவர்களிடம் மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் அடைந்தார்கள்.

நீங்கள் கிறிஸ்தவர்களானதால் திருக்குடும்பத்தில் நடந்தது போலவே, சண்டை கோபம் வர்மம் முதலான துர்க்குணங்களை அடக்கித் தகாத வார்த்தைகளை விலக்கி, உங்கள் பொறுமையினால் சமாதானம், பிறர் சிநேகம், ஞானசந்தோஷம் இவை முதலான புண்ணியங்களை விளைவிக்கும்படிக்குப் பிரயாசைப்படக்கடவீர்கள்.

செபம்

என் இரட்சகருடைய தாயாரே! உமது திருக்குமாரனாகிய சேசுநாதரைப் பார்க்கும்பொழுதெல்லாம் நீர் அடைந்த சந்தோஷத்தைக் குறித்து நான் இந்த உலகில் நல்ல ஒழுக்கத்துடன் நடக்கும்படிக்கு எனக்கு உதவிசெய்தருளும். பகை, கோபம் முதலான துர்க்குணங்களை என் ஆத்துமத்தில் நுழையவிடாமலும் எவ்விடத்திலும் எக்காலத்திலும் எவருக்காகிலும் மனஸ்தாபம் வருவியாமலும், எல்லாரோடும் சமாதானமாயிருந்து, நான் கஸ்திப்படும் வேளையில் அதைப் பொறுமையோடு அனுபவித்துச் சமாதானமுள்ளவர்களுக்குச் சர்வேசுரனால் கொடுக்கப்படுகிற சம்பாவனை எனக்கும் கிடைக்கும்படிக்கு மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

உம்மிடத்தில் பிறந்து எங்களை மீட்க வந்த சேசுநாதர் வழியாக எங்களுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ள அருள் புரிவாராக.

பதினேழாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தங்களுடைய உறவின் முறையாரில் யாரேனும் கிறிஸ்துவை அறிந்து மனந்திரும்ப வேண்டிய வழிகளை ஆராய்கிறது.

புதுமை!

ஓர் கள்ளன் கொள்ளையிடுவதற்காக காட்டில் திரியும்பொழுது ஓர் பெண்ணைக் கண்டான். அவளைப் பிடித்து அவளிடத்திலிருந்த பொருளை பிடுங்கப் போகும் பொழுது அந்தப் பெண் அவனை நோக்கி, நீ எனக்கு ஒரு தீமையும் செய்யாதபடிக்கு தேவமாதாவைப் பார்த்து மன்றாடுகிறேன் என்றாள். அதற்கு அவன், நீ தேவமாதாவின் பேர் சொல்லி என்னை மன்றாடினதினால் நான் உனக்கு ஒரு தீமையும் செய்யமாட்டேனென்று சொன்னதும் தவிர, அவளோடு துணையாக போய் வழிகாட்டிக் கொடுத்துக் காட்டுக்கு அப்பால் சரியான இடத்தில் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அந்த இராத்திரியில் அவன் நித்திரை செய்யும் பொழுது தேவமாதா அவனுக்குத் தோன்றி, நீ நம்மைக் குறித்து அந்தப் பெண்ணுக்குச் செய்த உபகாரத்துக்கு நாம் தகுந்த சமயத்தில் உனக்கு உபகாரம் செய்வோம் என்றாள். ஆனால் அந்தக் கள்ளன் தேவமாதா தனக்கு இப்படிச் சொல்லியிருந்தாலும், தான் செய்கிற களவு தொழிலை விடாமல் பன்முறை கொள்ளையிட்ட பிறகு, சேவகர் கையில் அகப்பட்டான்.

தீர்ப்பிடப்பட்டு அவனைத் தூக்கிலிடுவதற்கு முந்தின இரவில் தேவமாதா அவனுடைய நித்திரையில் திரும்பக் காண்பித்து நீ நம்மை அறிந்திருக்கிறாயோவென்று கேட்டதற்கு அவன் ஆமாம், நான் முன்னே உம்மைக் கண்டேனென்று நினைக்கிறேன் என்றான். அப்போது தேவமாதா அவனுக்குச் சொன்னதாவது: நாம் உபகாரம் செய்வோமென்று சொன்னோமே, அதை, இப்போது அறிவாய். நாளைக்கு நீ மரிப்பாயானால் நீ செய்த பாவத்தின் பேரில் நாம் எனக்கு அடைந்து கொடுக்கப்போகிற உத்தம மனஸ்தாப மிகுதியினால் நீ மரித்தவுடன் மோட்சமடைவாய் என்றாள் அன்னை. அந்தக் கள்ளன் விழித்து தான் செய்த பாவத்தை நினைத்து வெகுவாய் அழுத பிறகு, ஒரு குருவானவரிடத்தில், தேவமாதா தனக்கு காண்பித்த காட்சியைச் சொல்லி, அதை வெளிப்படுத்தும் படிக்கு கேட்டதுமன்றிப் பாவசங்கீர்த்தனம் பண்ணினான். அவன் தூக்கில் போடப்பட்டவுடன் மிக்க மகிழ்ச்சியோடும் மலர்ந்த முகத்தோடும் மரித்தான். இதைக்கண்ட அனைவரும் பாவ மன்னிப்பு பெற்று மோட்சத்தை அடைந்தார்கள் என்று அறிந்துகொண்டார்கள்.

மீளவும் ஒரு கள்ளன் மலையில் திரியும் பொழுது ஒரு குருவானவரைக் கண்டான். அவருக்கு எதிராக வந்தபோது, குருவானவர் அவனை நோக்கி, இந்தக் கெட்ட வேலையைச் செய்யாதே. இந்த துர்வழியில் நடந்தால் நரகத்தில் விழுவாய் என்றார். அதற்கு கள்ளன், நரகத்தில் விழுவேன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அந்த வேலை எனக்குப் பழகிப் போய்விட்டபடியால் அதை விட்டுவிட என்னால் கூடாதென்றான். மீண்டும் குருவானவர் அவனைப் பார்த்து நீர் தேவமாதாவைக் குறித்து சனிக்கிழமை தோறும் ஒருசந்தி பிடித்து அன்றைய தினம் ஒரு தீமைப்பும் செய்யாது போனால், தேவமாதாவின் இரக்கத்தால் உன் துர்வழக்கத்தை வென்று நரகத்துக்குப் போவதினின்றும் தப்புவாய் என்றார். குருவானவர் சொன்னபடியே செய்வேன் என்று கள்ளன் பிரதிக்கினை செய்து, வழக்கத்தை முற்றிலும் விட்டு நல்ல கிறிஸ்தவனாக மாறினான், என்றாலும் பழைய குற்றங்களுக்காக சேவகர் கையில் அகப்பட்டான்.

அவன் தீர்வையிடப்பட்டு சிறையில் இருக்கும் பொழுது அவன் அதிக வயதுள்ளவனாயிருந்தபடியால் அவனைத் தூக்கிலிடக்கூடாதென்று சனங்கள் சொல்லுகையில், அவன் தான் செய்த பாவங்களையெல்லாம் எல்லாருக்கு முன்பாக வெளிப்படுத்தி வெகு உத்தம மனஸ்தாபத்துடனே அறியாமல் செய்தேன் என்று சொல்லி அவைகளுக்குத் தக்க மரண ஆக்கினை இடவேண்டுமென மன்றாடினான். ஆகையால் அவனைத் தூக்கிலிட்டு அவனுடைய பிரேதத்தைக் குழியில் புதைத்த பிறகு அந்த இடத்தில் சில புதுமைகள் நடந்ததினால் தேவமாதாவின் இரக்கத்தினால் அவன் மோட்சம் அடைந்தானென்று நம்பி சனிக்கிழமைதோறும் ஒருசந்தி பிடித்து வந்தார்கள்.

இதிலிருந்து நீங்கள் தேவதாயைக் குறித்துச் செய்யும் செபம், அனுசரித்த தபம் ஒருக்காலும் வீண்போகாதென்று அறியக்கடவீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 16

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 16
தேவமாதா சுத்திகரத்தின் பேரில்!

கீழ்ப்படிதல்!

பிள்ளையைப் பெற்ற சில பெண்களும் சுத்திகரம் பண்ணவேண்டுமென்ற வேதகற்பனையை தேவமாதா அனுசரிக்கிற வேளையில் கீழ்ப்படிதல் என்ற புண்ணியத்தின் சுகிர்த மாதிரிகளை அனைவருக்கும் காட்டினார்கள். சர்வேசுரனுடைய திருமாதாவும் சகல கன்னியர்களிலும் பரிசுத்த கன்னிகையுமாகி, மற்ற பெண்களைப்போல், தமது குமாரனைப் பெறாமல் பரிசுத்தாவியின் கிருபையால் அற்புதமாக பெற்றது சத்தியமானதால், அவர்கள் சுத்திகரம் செய்ய கடமையும் தேவையும் இல்லாதிருந்தது. ஆகிலும் வேதத்தில் கற்பித்திருந்த சடங்குகளெல்லாவற்றையும் ஒன்றும் தவறாமல் நிறைவேற்றி, சர்வேசுரன் கட்டளையிட்ட படியே தமது கடமைக்குமேல் அதிகமாய்ச் செய்தார்கள். நீங்களோவெனில், உங்கள் கடமையைச் செய்யாமல் சர்வேசுரன் கற்பித்ததை புறக்கணித்து, கீழ்ப்படிய வேண்டிய சமயத்தில் கட்டாயத்தோடும் கீழ்ப்படிகிறதினால், ஞானப் பிரயோசனம் அடையாதிருக்கிறீர்கள். ஆனால் தேவமாதா கீழ்ப்படிந்த விதத்தை மனதில் எண்ணி அன்னையைப் பின்பற்றி பிரியமான புண்ணியத்தை அனுசரிக்கக்கடவீர்கள்.

தாழ்ச்சி!

தேவமாதா காட்டின தாழ்ச்சியாவது: கன்னிமாமரியாள் தாம் பரிசுத்த கன்னிகையும் தேவமாதாவும் என்று காண்பியாமல், சகல வணக்கத்துக்கும் பாத்திரமாயிருந்தாலும் மற்றப் பெண்களைப்போல் சுத்திகரம் செய்ய தம்மைத் தாழ்த்திக்கொண்டார்கள். மேலும் தமது வறுமையைக் காண்பிக்கச் சம்மதித்து தாம் அரச வம்சத்தில் பிறந்தவர்களுமாய், பரலோக பூலோக இராக்கினியுமாயிருந்தாலும், எளிய மக்கள் வழக்கமாய் கோவிலுக்குக் கொடுக்கிற காணிக்கையைத் தாமும் கொடுத்து, உலக மகிமையைத் தேடாமல், தமக்குக் கீர்த்தி வருவிக்கக்கூடிய அனைத்தையும் விலக்கினார்கள். மனிதரோவெனில் பாவிகளாயிருந்தாலும் உலக கீர்த்தியைப் பெற ஆவலுடன் நாடி தாங்கள் குற்றமில்லாதவர்களும் புண்ணியவான்களுமென்று பிறரால் எண்ணப்படுவதற்குப் பிரயாசைப்பட்டு தாழ்ச்சியுள்ள கிரிகை எல்லாவற்றையும் அருவருத்து மகிமை பெருமைகளை அடைந்து தங்களைப் பெரியவர்களாக எண்ணி, மற்றவர்களை மேற்கொள்ள ஆசைப்படுகிறார்கள், அத்தகைய ஆங்காரமுள்ள மனிதர் தாழ்ச்சியுள்ள தேவமாதாவுக்கு உகந்த பிள்ளைகளாய் இருப்பதெங்ஙனம்?

பிறர் சிநேகம் ஆகிய இம்மூன்று புண்ணியங்களும் தேவமாதாவிடத்தில் விளங்கின.

தேவமாதா காண்பித்த பிறர் சிநேகமாவது: பரிசுத்த கன்னிமாமரியாள் சுத்திகரம் செய்த பின்னர், தமது திரு மைந்தனான இயேசுநாதரைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தார்கள். அப்படிக் காணிக்கையாகக் கொடுத்ததினால் மனிதர் பேரில் தமக்கு உண்டான அளவுகடந்த அன்பை காண்பித்தார்கள். இயேசுநாதர் சிலுவையில் மரணித்து தமது இரத்தமெல்லாம் சிந்தினால்தான் மனிதர்கள் மீட்கப்படுவார்கள் என்ற தேவ ஆலோசனையைக் கன்னிமரியாள் அறிந்து, அந்த ஏற்பாட்டுக்கு முழுவதும் சம்மதித்து, மனிதர்மேல் இரக்கப்பட்டு அவர்களை மீட்க வேண்டுமென்ற மிகுந்த ஆசையோடு தேவ சித்தத்துக்கும் தேவ நீதிக்கும் தமது மைந்தனை பலியாக ஈந்தார்கள். அத்தகைய பலியைக் கொடுக்கும் வேளையில் தேவமாதா மனிதர் மட்டில் காண்பித்த சிநேகம் எவ்வளவென்று ஒருவராலும் சொல்ல முடியாது. இத்தகைய நேசத்தை நமக்குக் காட்டின தாயை சிநேகியாமல் இருக்கலாமோ? இத்தகைய நேசம் கொண்ட மாதாவின் மட்டில் சிநேகமில்லாதவன், நன்றி கெட்டவனும் துஷ்டனும் ஆவான்.

செபம்.

மிகவும் இரக்கமுள்ள கன்னிமரியாயே, உம்மை மகா அன்புக்குப் பாத்திரமான மாதா என்னும் பெயரால் கிறிஸ்தவர்கள் கூப்பிடுகிறதை நான் கேட்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியுறுகிறேன். எங்கும், எல்லா மனிதராலும் நேசிக்கப்படத்தக்க மாதாவே! இராஜாதி இராஜாவாகிய சர்வேசுரன் உமக்குண்டான சவுந்தரியத்தையும் நற்குணங்களையும் அளவில்லாத விதமாய் நேசிக்கும் பொழுது எண்ணப்படாத உபகாரங்களை எனக்குச் செய்த தாயை நான் சிநேகியாதிருப்பேனோ? அப்படியல்ல, மற்றவர்களைவிட அதிகமாய் உம்மை சிநேகிக்க, என்னால் கூடாததால், கஸ்திப்பட்டு நான் உமக்கு கொடுக்கிற என் இருதயத்தையும் உமது சித்தத்தின்படியே நடந்து, அதில் தாழ்ச்சி, கீழ்ப்படிதல் பிறர் சிநேகம் என்ற இம்மூன்று புண்ணியங்களையும் விளைவிக்க வேண்டுமென்று மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

நேசத்துக்குரிய தாயாரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதினாறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

பிற மதத்தவரிடம் வேதத்தைப்பற்றி பேசுகிறது.

புதுமை

ஐரோப்பா தேசத்தில் கர்கசோன் என்ற பட்டணத்தில் புனித சாமிநாதர் பிரசங்கித்துக்கொண்டு வரும்பொழுது ஒரு மனிதனை அவரிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அந்த மனிதன் தேவமாதாவைக் குறித்து நூற்றைம்பத்து மூன்று மணிச் செபம் ஆகாதென்று சொன்னதின் காரணதால், பிசாசானது அவன்மேல் ஆவேசம் கொண்டது. பசாசானது அவன்மேல் ஆவேசம் கொண்டதை அறிந்து தாம் நாற்றைம்பத்து மூன்றுமணிச் செபத்தைக் குறித்துப் பிரசங்கித்ததெல்லாம் மெய்யோ பொய்யோ என்று சர்வேசுரன் பெயரால் சொல்லக் கற்பித்தார். அப்போது அந்தப் பசாசு அந்த மனிதன் வாயினால் ரத்தத்தத்தோடு சொன்னதாவது: சூழ நிற்கிற கிறிஸ்தவர்களே! நான் சொல்லப் போகிறதைக் கேளுங்கள். எனக்குக் கொடிய விரோதியாக இருக்கும் சாமிநாதர் தேவமாதாவின் பேரிலும் நூற்றைம்பத்து மூன்று மணிச் செபத்தின் பேரிலும் பிரசங்கித்த யாவும் சரிதான். அதனன்றியும் கன்னி மரியாயை வணங்குகிறவர்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் செய்ய என்னால் முடியாது. அவர்களுக்குள் மோட்சமடைய அபாத்திரவான்களாக இருந்தாலும் தேவமாதாவை வேண்டிக்கொண்டு கரையேறுவார்கள். அவள் பேரில் பக்தி வைத்து நூற்றைம்பத்து மூன்று மணிச் செபம் வழக்கமாய்ச் செய்கிறவர்கள் எல்லோரும் சாகிற வேளையில் தேவமாதாவின் உதவியால் உத்தம மனஸ்தாபப்பட்டு மோட்சம் சேருவார்களென்று சொல்ல சர்வேசுரன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். பசாசானது அப்படிச் சொன்னதைக் கேட்டு, கூட நின்றவர்கள் எல்லாரும் பிரமித்து, அவர்களும், புனித சாமிநாதரும் அந்தப் பசாசை அந்த மனிதனிடத்தினின்று ஓட்டும்படிக்கு நூற்றைம்பத்து மூன்று மணிச் செபத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் வேண்டிக் கொள்ளுகையில் அந்த மனிதனிடத்தில், அனேகம் பசாசுகள் இருந்ததினால் ஒவ்வொரு அருள்நிறை செபத்திலும் ஒவ்வொரு பசாசு நெருப்புத்தணல் ரூபமாய் ஓடிப்போனது. செபம் முடிந்தவுடன் அந்த மனிதன் சௌக்கியமாய் இருந்தான். அக்காலத்தில் இருந்த பதிதரில் அநேகம் பேர் அந்தப் புதுமையைக் கண்டு மனந்திரும்பினார்கள்.

கிறிஸ்தவர்களே, பசாசு உங்களுக்கு எந்த விதத்திலும் தீமை விளைவிக்காதபடிக்கு தேவமாதாவின் அடைக்கலத்தை எப்போதும் தேடக்கடவீர்கள்

தேவமாதாவின் வணக்கமாதம் மே 15

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 15
கர்த்தர் பிறப்பு!

கர்த்தர் பிறப்புக்கு அடுத்த விசேஷங்கள்.

பெத்லகேம் ஊரில் இருக்கும் அந்த எளிய கொட்டிலில் பிரவேசித்து அதில் நடக்கிற சம்பவங்களை பக்தியுடன் உற்று நோக்குவோம். அவ்விடத்தில் பரமநாயகி பிரவேசித்து சர்வேசுரன் மீது மட்டற்ற அன்பினாலும், தம்முடைய குமாரனை பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசையாலும் நிறைந்தவர்களாய் ஓர் அற்பக் கஸ்தி வருத்தப்படாமலும், தம்முடைய கன்னி மகிமை கெடாமலும், பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராஜாவான உலக மீட்பரை பெற்றார்கள். நாம் அந்தத் திருப்பாலன் முன்பாகத் தெண்டனிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து அவரை நம்மை படைத்தவராகவும், இரட்சகராகவும், பரம கர்த்தராகவும், மெய்யான தேவனாகவும் வணங்கி ஆராதிக்கக்கடவோம். ஆனால் அவருக்கு நம்முடைய விசுவாசம், பக்தி, சிநேகம், நன்றியறிந்த மனதின் உணர்ச்சிகளைச் செலுத்தின பின்பு அவருடைய திருத்தாயாரை நோக்கி அன்னைக்குக் கிடைத்த பாக்கியத்தைக் குறித்து கொண்டாடி மீட்பரின் தாயாராக வாழ்த்தி அன்னையிடம் நமது நம்பிக்கையை வைக்கக் கடவோம்.

கர்த்தர் பிறப்பின் சரித்திரம்.

அப்பொழுது அந்தப் பரம நாயகியின் உள்ளத்தைப் பூரிப்பித்த மகிழ்ச்சியும், பக்தியும், தேவவணக்கமும், எவராலும் சொல்லுந்தரமன்று, தம்முடைய திருமடியில் அத்திருப்பாலனை முதல் முறையாக வைத்து அவரைத் தம்முடைய கர்த்தராகப் பணிந்து வணங்கி தம்முடைய குமாரனாக மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இரட்சகருடைய தரித்திரத்தைப் பாருங்கள். விண்ணுலகையும் அதை அலங்கரிக்கும் எண்ணிறந்த விண்மீன்களையும் உண்டாக்கியவர் தமக்கு ஓர் அற்ப வீடு முதலாய் இல்லாதிருக்கிறார். அரசர்களும் அரச பரம்பரையினரும் உயர்ந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது, அரசர்க்கெல்லாம் அரசராகிய இயேசுபாலன் வைக்கோலின் மீது படுத்திருக்கிறார். பொன், வைர, முத்துக்களை விளைவிக்கிறவர் கிழிசலான வஸ்திரங்களால் மூடப்பட்டிருக்கிறார். எந்நேரமும் விண்ணுலகில் எண்ணிக்கையில்லாத சம்மனசுக்கள் அவர் ஏவலுக்கு காத்துக்கொண்டிருந்த போதிலும் அவர் மிருகங்கள் நடுவில் பிறக்க திருவுளம் கொண்டார். நீங்கள் தங்களின் மீட்பர் அப்படியே எளிமையாய்ப் பிறந்ததைக் கண்டு உலக வாழ்வைப் புறக்கணித்துத் தள்ளாமல் இருக்கக்கூடுமோ? இப்பொழுது, இந்தத் திருப்பாலகன் உங்களை நோக்கி, மனத்தரித்திரர் பாக்கியவான்கள் என்று அறிவிப்பதைக் கவனியுங்கள்.

அப்பொழுது தேவமாதா, அர்ச்.சூசையப்பர் இவர்களிடம் உண்டான உணர்வுகள்.

தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் இயேசுக்கிறிஸ்துநாதர் பிறந்த மாட்டுக் கொட்டிலினருகில் தியானம் செய்கிறதைப் பார்க்கக்கடவோம். பூலோக செல்வ பாக்கியங்களை எல்லாம் சிறிதும் நினையாமல் அவதரித்த உலக மீட்பருடைய சுகிர்த குணங்களை அவர்கள் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மோட்ச பாக்கியத்துக்கு நிகரான பாக்கியத்தை அடைந்து, சர்வேசுரன் வழங்கிய மேன்மையான வரங்களைக் கண்டு அவருக்கு மிகுந்த பக்தியோடு ஸ்தோத்திரம் சொல்லி தங்களை அவருக்கு நேச வாஞ்சையுடன், ஒப்புக் கொடுக்கின்றனர். மீளவும் அந்த எளிமைக் கோலத்தில் இறங்க திருவுளம் கொண்ட தேவ பாலனைக் கண்டு, அவர் காண்பித்த நன்மாதிரிகளை தங்களிடத்தில் பதியச் செய்து அதன்படி நடக்கின்றனர். ஓ! மரியாயே, அர்ச். சூசையப்பரே, நீங்கள் அச்சமயத்தில் கொண்டுள்ள உணர்ச்சிகளை நானும் எப்படியாகிலும் உணரும்படிக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்.

செபம்.

என் ஆத்துமமே, சம்மனசுகளுக்கும் மனுமக்களுக்கும் மேலாக விளங்கும் தேவ திருப்பாலனைப் பார். இதோ உலகத்துக்கு இராக்கினி, எல்லா மக்களிலும் அதிக அழகு சோபனமுள்ள பாலனாக ஆராதனைக்குரிய இயேசுநாதரைத் தமது திருமடியில் வைத்து மிகுந்த பட்சத்துடன் அணைத்துக் கொள்கிறார்கள். எல்லாவித ஆனந்தமும் நிறைந்த தாயாரே! நான் உம்முடைய திருவடியில் என்னுடைய மீட்பரை காணுகின்ற பொழுது பயம் நீங்கி அவரையும் உம்மையும் மகா உருக்கத்துடன் சிநேகிக்கிறேன். பரிசுத்தர் எனக்காகச் சிறு பிள்ளையாய்ப் பிறந்து மாட்டுக் கொட்டிலில் இருக்கும் பொழுது என்னைத் தண்டிப்பாரென்று நான் பயப்படக்கூடுமோ? அவர் என் பாவங்களை நிவிர்த்திப்பதற்கு எத்தகைய துன்ப வாதனைகள் அனுபவிக்கும்பொழுது என்னைப் புறக்கணித்துத் தள்ளுவாரோ? நான் அவரை முழுமனதோடு அணைத்துக் கொண்டு நேசிப்பேனாகில் மீட்புப் பெறுவேன் என்பது குன்றாத சத்தியம். ஆனால் அவருடைய இஷ்டப்பிரசாதத்தை நான் இழந்து போகாதபடிக்கு உலகம், பசாசு சரீரம் என்ற மூன்று சத்துருக்களையும் நான் ஜெயிக்கும் பொருட்டு உதவி செய்தருளும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

நல்ல உபகாரியே, உமது பேரில் என் நம்பிக்கை எல்லாம் வைத்திருக்கிறேன்.

பதினைந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

ஒவ்வொருவருடைய ஞானஸ்நானத்தின் வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கிறது.

புதுமை!

போர்ச் சேவகன் ஒருவன் தேவமாதா அடைந்த சந்தோஷங்களையும் வியாகுலங்களையும் குறித்து ஏழு பரலோக செபமும், ஏழு அருள் நிறை செபமும் சிறு வயது முதல் ஒவ்வொரு நாளும் தவறாது வேண்டி வந்தான். ஒருநாளில் செபம் வேண்டிக்கொள்ளாமல் நித்திரை செய்தான். திரும்ப விழித்து வழக்கமான செபம் அன்று செய்யவில்லை என நினைத்தால், உடனே எழுந்திருந்து முழந்தாளிட்டு பின்பு செபங்களை வேண்டிக்கொள்வான். படையிலிருக்கும் பொழுது ஒருநாள் போருக்குப் போய் முதல் வரிசையில் இருந்ததால் பகைவர்களை எதிர்த்துப் போராடும் முன்னே தனக்குச் சாவு வருமென்று நினைத்து ஆத்தும சோதனை செய்தான். செய்தவிடத்தில் தேவமாதாவைக் குறித்து வழக்கமாய்ச் செய்கிற செபம் இன்றைக்குச் செய்யவில்லை எனக் கண்டான். சண்டை செய்யும் நாளில் தேவமாதாவை வேண்டிக் கொள்ளாமலிருக்கக் கூடாதென்று எண்ணி, கூடயிருந்த சேவகர் தான் வேண்டிக் கொள்ளுகிறதைப் பார்த்து ஒரு வேளை பரிகாசம் செய்வார்களோ என்று அவன் நினைத்தாலும் அதை ஒரு பொருட்டாய் எண்ணாமல், செபம் செய்யத் தொடங்கினான். அப்போது அருகில் நின்ற சேவகர் இவன் வேண்டிக்கொள்ளுகிறதைக் கண்டு நகைத்துப் பரிகாசம் செய்தார்கள். அவனோவென்றால், பக்தி கவனம் குறையாமல் தொடங்கின செபத்தை முடித்தவுடன், எதிரிகள் துப்பாக்கியால் சுட்டார்கள். அப்போது தேவமாதாவை வேண்டிக்கொள்கிறதினால் பயன் உண்டென்று அறிந்தான்.

அவனைப் பரிகாசம் செய்த சேவகர் அனைவரும் சுடப்பட்டுக் கீழே விழுந்துவிட்டனர். அவன் ஒருவனே காயப்படாமல் நின்றான். அவர்கள் செத்துக் கிடக்கிறதைக் கண்டு தேவ நீதியின் ஆக்கினை இதுவே என்று உணர்ந்து தன்னைக் காப்பாற்றின தேவமாதாவிற்கு நன்றியறிந்த மனதோடு தோத்திரம் செய்தான். பின்னர் அந்த சேவகன் வேறு இடங்களில் சண்டை செய்யும்பொழுதும் யாதொன்றுக்கும் பயப்படாமல் இருப்பான். தன் வீட்டுக்குப் போக உத்தரவு பெற்றதாலும் தேவமாதா தனக்குச் செய்த உபகாரங்களையும் தான் வைத்த பக்தியையும் எங்கும் பரப்பி தான் சாகும் வரையிலும் உத்தம கிறிஸ்தவனாக சீவித்தான்.

கிறிஸ்தவர்களே! நீங்களும் தேவமாதாவின்மீது கொண்ட பக்தியில் பின் வாங்காமல் அன்னைக்கு வழக்கமாய்ச் செய்கிற செபங்களை ஒருநாளாவது குறைக்கக்கூடாது.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 14

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 14
தேவமாதாவும், அர்ச்சியசிஷ்ட சூசையப்பரும் நசரேத்திலிருந்து பெத்லகேமுக்குச் செய்த பயணம்!

தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அரசன் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிதல்.

சர்வேசுரனுடைய ஆலோசனை வேறு, மனிதனுடைய ஆலோசனை வேறு! பரம கர்த்தர் செய்து காட்டுகிற முயற்சிகளுக்கும் உலகத்திலுள்ள பெரியவர்கள் நடத்துகிற நியாயங்களுக்கும் வேற்றுமை இருக்கின்றது. அகுஸ்துஸ் அரசன் தன்னுடைய மகிமையையும் பெருமையையும் பாராட்டுவதற்கு தனது இராச்சியத்திலிருந்த சகல பிரஜைகளுடைய கணக்கை எழுத வேண்டுமெனக் கட்டளையிட்டான். ஆனால் சர்வேசுரன் இந்த அரசன் கட்டளை மூலமாக உலக மீட்பர் பெத்லகேம் என்னும் ஊரில் பிறப்பாரென்று தீர்க்கதரிசிகள் சொன்னவைகள் அனைத்தும் நிறைவேறும்படி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துகிறார். தேவமாதாவும் அர்ச். சூசையப்பரும் இந்த அரசன் கொடுத்த கட்டளை சர்வேசுரனின் சித்தம் என்று எண்ணி அவருடைய இரகசியமான திருவுளத்தை வணங்கி, அவர் தங்களைக் காப்பாற்றுவாரென்று நம்பி, தூரப் பயணத்தின் வருத்தங்களுக்கு அஞ்சாமல் தாமதமின்றி உடனே பெத்லகேம் ஊருக்குப் போகப் புறப்படுகிறார்கள். உங்கள் பெரியோர்கள் கற்பிக்கும் யாவற்றிலும் சர்வேசுரனின் சித்தத்தை தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் கண்ட வண்ணமே நீங்களும் கண்டுகொள்வீர்களாகில் மனக் கீழ்ப்படிதலானது மிகவும் இன்பகரமாயிருக்கும்.

தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் இப்பயணத்தில் அனுசரித்த புண்ணியங்கள்.

தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் செய்த பயணத்தை நாமும் பின்பற்றி அவர்கள் இப்பயணத்தில் காண்பித்த சுகிர்த புண்ணியங்களை சிந்திப்போம். அவர்கள் ஆண்டவருடைய திருவுளத்தை நிறைவேற்ற சுறுசுறுப்புடன் நடக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்ட தூரப் பயணத்தினாலும், தங்களுடைய எளிமையினாலும் கரடு முரடான வழிகளிலும், கால மாறுதலினாலும் வந்த வருத்தம் எல்லாவற்றையும் பொறுமையுடனும் மகிழ்ச்சியுடனும் சகித்துக் கொண்டார்கள். கெட்டுப்போன உலகத்தை மீட்க வரப்போகும் இரட்சகர் கொஞ்ச நேரத்துக்குள்ளே பிறப்பாரென்று தேவ சிநேகத்தினால் எரிகிற மனதோடு நினைத்துத் தியானித்துக் கொண்டிருந்தார்கள். நாம் தகுந்த சமயங்களில் தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் காண்பித்த நல்ல மாதிரிகைகளை பின்பற்றி நாம் செய்கிறதையும், நடக்கிறதையும், பேசுகிறதையும், செபத்தினாலும், பொறுமையினாலும், தேவசித்தத்துக்கு அமைதலினாலும் சீர்படுத்தக் கடவோம்.

பெத்லகேம் ஊரில் தேவமாதாவும், அர்ச். சூசையப்பரும் அடைந்த நிந்தை அவமானம்.

இந்த வருத்தமுள்ள பயணத்துக்குப் பின்பு இவர்கள் பெத்லகேம் என்னும் ஊரை அடைந்து அதில் யாவராலும் புறக்கணிக்கப்பட்டு தங்குவதற்கு இடமின்றி தனிமையில் மிருகங்களுக்குக் கொட்டிலாயிருக்கும் ஓர் கற்பாறையின் குகையில் இறங்கினார்கள். இதோ சகல உலகங்களுக்கும் இராக்கினியினுடைய அரண்மனை! பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தவரும், வான மண்டலங்களில் சூரியனை மங்கச் செய்யும் ஒளியோடு வாழுகிற கர்த்தாவுமாய் இருக்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் இதில் பிறக்க திருவுளங் கொண்டார். அவதரித்த தேவனே, நீர் பிறக்கிற வேளையிலேயே கஷ்டப்பட்ட மனிதானீர். நீர் உம்முடைய திருத்தாயுடனும், வளர்ப்புத் தந்தையுடனும் பட்ட புறக்கணிப்பையும் அவமானத்தையும் தரித்திரத்தையும், கஸ்திகளையும் நான் கண்டு எனக்கு வரும் நிர்ப்பாக்கியத்திலும், துயரத்திலும் பொறுமையின்றி முறைப்படுவானேன்? ஓ! அரச்.மரியாயே ஓ! அரச்.சூசையப்பரே, எனக்கு இப்பூவுலகில் ஏற்படும் தீமைகளில் நான் பொறுமையாயிருக்கும்படி எனக்குக் கிருபை செய்தருள வேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன்.

செபம்.

ஓ! பரிசுத்த மரியாயே, பரிசுத்த தாயாரே, உம்முடைய பிதாவிடத்தில் இயேசுக்கிறிஸ்துநாதர் மத்தியஸ்தராய் எனக்காக மனுப்பேசுகிறாரென்றும், நீரே உம்முடைய திருக்குமாரனிடத்தில் நல்ல உபகாரியாய் எனக்காக மன்றாடுகிறீரென்றும் நினைத்து உறுதியான நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். இன்று முதல் நான் சாகுமளவும் உம்மையும், உம்முடைய திருக்குமாரனையும் இடைவிடாமல் வேண்டிக்கொள்ளுவேன். நான் இந்நாள் மட்டும் செபம் செய்வதில் மிகவும் அசட்டையுள்ளவனாக இருந்தேன். இதனால் என் ஆத்துமமானது மிகவும் பலவீனப்பட்டு இருக்கிறது. என்னுடைய ஆதரவே, எனக்கு மிகவும் அவசியமாயிருக்கிற தேவ வரமாகிய செபத் தியான சுகிர்த வரத்தை எனக்குப் பெறுவித்தருளும். நான் இடைவிடாமல் பக்தியுடனும் வணக்கத்துடனும் விசுவாச நம்பிக்கையுடனும் செபம் செய்ய எனக்கு கிருபை செய்தருள வேண்டுமென்று மன்றாடுகிறேன். நான் உம்மை இடைவிடாமல் பக்தியோடு வேண்டிக்கொள்வேனாகில் ஒருக்காலும் கெட்டுப்போக மாட்டேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவே! உம்முடைய தயாபமுள்ள திருக் கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.

பதிநான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உத்தரிய சபையிலே பிரவேசிக்கிறது. பிரவேசித்திருந்தால் அதனுடைய ஒழுங்குகளை அனுசரிக்கிறீர்களாவென பார்க்கிறது.

புதுமை!

புனித கிரகோரியுஸ் என்ற பாப்பானவர் திருச்சபையை ஆளும் பொழுது உரோமாபுரியில் கொள்ளை நோய் எங்கும் பரவியது. ஒவ்வொரு நாளும் தும்முகிற பொழுதும், கொட்டாவி விடுகிறபொழுதும் மக்களில் அநேகர் திடீரென நோய்கண்டு ஆயத்தமும் பாவ சங்கீர்த்தனமும் இல்லாமல் அவலமாய் மடிந்தார்கள். பாப்பானவர் இதைக்கண்டு பொதுவான செபங்களைச் செய்யவும், வேண்டுதல் பண்ணவும் கட்டளையிட்டிருந்தாலும், கொள்ளை நோய் நீங்காமல் அநேகரை மடியும்படி செய்தது. பட்டணத்து மக்கள் எல்லாரும் பயந்து கலங்கும் பொழுது தேவமாதாவின் இரக்கத்தை அடையும் பொருட்டு அப்பட்டணத்தில் இருக்கும் குருக்கள் எல்லாரும் சுவிசேஷகரான புனித லூக்காஸ் என்பவர் வரைந்த பரிசுத்த கன்னிகையின் திருப்படத்தை மாஜோரென்னும் தேவமாதா கோவிலுக்கு இருவர் இருவராக வரிசைக் கிரமத்தோடும் ஆரவாரத்தோடும் மிகுந்த பக்தி வணக்கத்தோடும் பவனியாக கொண்டு செல்லப்பட வேண்டுமென பாப்பானவர் கட்டளையிட்டார். அப்பொழுது தேவமாதா அப்பட்டணத்தை இரக்கமாய்ப் பார்த்து ஒரு புதுமை செய்தார்கள்.

அது எவ்வாறெனில், தேவமாதாவின் படத்தைக் கொண்டு சென்ற குருக்கள் எந்தெந்தத் தெருவிலே நடந்து சென்றார்களோ, அந்தந்தத் தெருவில் கொள்ளை நோய் நீங்கியதும் தவிர அப்பொழுது ஆதிரியான் என்னும் கோபுரத்தில் ஓர் சம்மனசானவர் மனித உருவுடன் தோன்றி இரத்தத்தில் துவைக்கப்பட்ட ஆடைகளை அறையிலே வைக்கிறதை ஜனங்கள் எல்லோரும் கண்டதுமன்றி, சம்மனசுகள் இப்போது திருச்சபையில் வழங்குகிற ரெஜினா சோலி என்கிற செபத்தை பாடுகிறதைக் கேட்டு சந்தோஷப்பட்டனர். அன்று முதல் கொள்ளை நோய் நீங்கிப் போனதால் மேற் சொல்லிய செபத்தை பாப்பானவர் ஏற்றுக்கொண்டு, அதன் கடைசியில், எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற செபத்தைக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் சொல்லக் கட்டளையிட்டார்.

கிறிஸ்தவர்களே, உங்களுக்கு வருகிற வியாதிகளில் பசாசின் உதவியைக் கேளாமல், பரமநாயகியின் உதவியைக் கேட்கக்கடவீர்கள்

தேவமாதாவின் வணக்கமாதம் மே 13

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 13
தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருக்கிறார்கள்!

மிகுந்த ஆவலுடன் மீட்பர் பிறக்க வேண்டுமென்று காத்திருக்கிறார்கள்.

உலக மீட்பர் எப்பொழுது வருவாரோ என 4000 ஆண்டுகளாக பிதாப் பிதாக்களும், தீர்க்கத்தரிசிகளும் புண்ணியவான்கள் எல்லோரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தது போல அவர்களுக்கு இராக்கினியாகிய தேவமாதாவும் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள். தமது திருமைந்தன் ஜோதியுள்ள சூரியனைப்போல பாவ இருளை நீக்கிச் சுகிர்த புண்ணியங்களை விளைவிக்க வரவேண்டுமென ஆசித்திருந்தார்கள். நீங்களும், தினந்தோறும் சர்வேசுரனைப் பார்த்து, உமது இராச்சியம் வருகவென்று சொல்லுகிறீர்களே! ஆனால் இந்த மன்றாட்டைத் தக்க பக்தியோடும் மிகுந்த ஆசையோடும் கேட்கிறீர்களோ? உங்களிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் இந்தப் பரம இராச்சியம் வரவேண்டுமென அதிக ஆசையோடு விரும்பக்கடவீர்கள்.

அதற்கு தம்மை ஆயத்தப்படுத்துகிறார்கள்.

தேவமாதா எல்லாவித புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாய் இருந்தபோதிலும் தமது திரு மைந்தன் சீக்கிரத்தில் பிறப்பார் என்று அறிந்து அதிக சுறுசுறுப்புடன் அந்தப் புண்ணியங்களெல்லாம் தம்மிடத்தில் பெருகச் செய்தார்கள். அதனால் தம்மிடத்தில் தேவ மகிமை துலங்கவும், தேவ வல்லமை காணப்படவும், மனோவாக்குக் கெட்டாத முயற்சியை அடையவும் பேறுபெற்றவர்களாய் இருந்தார்கள். நாமும் சாங்கோபாங்கத்தை அடைய வேண்டும் என்று ஆசையுள்ளவர்களாய் இருப்போமாகில், புண்ணிய நெறியில் சலிப்பில்லாமலும் அசட்டை இல்லாமலும் நாளுக்கு நாள் அதிக சுறுசுறுப்போடு தீவிரித்து நடக்கக்கடவோம். நாம் நம்மைத் தேவ ஊழியத்துக்கு முழுமையும் அர்ப்பணிப்போமானால் சர்வேசுரன் நமக்கு அளவு கடந்த நன்மை உபகாரங்களைக் கொடுப்பார் என்பது குன்றாத சத்தியம்.

தமது திரு உதரத்தில் இருக்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் தமக்குக்கொடுத்த நன்மைகளால் பூரிக்கப்படுகிறார்கள்.

தேவமாதா ஒன்பது மாதம் மட்டும் தம்முடைய திருமைந்தனை தமது உதரத்தில் தரித்து அற்ப வருத்தம் இல்லாமலும் கஸ்தி இல்லாமலும் அவர் பிறப்பிற்காகக் காத்திருந்ததுடன் மிகுந்த பாக்கியமுள்ள சந்தோஷத்தையும் அடைந்திருந்தார்கள். நெருப்பைத் தன்னருகில் வைத்திருப்பவன் உஷ்ணமடைகிறது போலவும், பரிமள தைலத்தை தன் கையில் கொண்டிருப்பவன் அதன் மணத்தை நுகருவது போலவும், பொக்கிஷங்களைப் பெற்றிருக்கிறவன் திரவியங்களை அடைந்திருப்பது போலவும், தேவமாதா தேவ சிநேகமானவருமாய்த் தேவ பரிமளமுமாய், தெய்வீகத்தின் திரவியங்கள் எல்லாம் உடையவருமாய் இருக்கிற தமது திரு மைந்தனை ஒன்பது மாதமளவும் தமது திருஉதரத்தில் தரித்திருக்கும் பொழுது எவ்வளவு ஞான நன்மைகளை அடைந்தார்களென்று சொல்லவும் வேண்டுமோ? திவ்விய நற்கருணை ஸ்தாபித்திருக்கிற கோவில்களில் வாசம் செய்கிற இயேசுக்கிறிஸ்துநாதர் நம்மிடத்தில் திவ்விய நற்கருணை வழியாக அடிக்கடி வரும்போது ஞான நன்மைகளை நாம் அடையாமல் போவோமா? தேவமாதாவின் பக்தி நமக்கிருந்தால் நாம் இந்த ஞான நன்மைகளை அடைவோம் என்பது நிச்சயம்.

செபம்.

மீட்பரின் மகிமைநிறை அன்னையே! எங்களுக்கு அன்னையாகவும், அடைக்கலமாகவும், ஆதரவாகவும் இருக்க சித்தமானீரே. நீர் மீட்பருடைய அன்னையாக இருப்பதால் அவர் உமது மன்றாட்டைப் புறக்கணிக்கமாட்டார். நீர் எங்களின் அன்னையாய் இருப்பதால் எங்களிடம் மிகுந்த தயையும் பட்சமும் வைத்திருக்கிறீர். அதிசயத்துக்குரிய மாதாவே! ஏக சர்வேசுரனை அதிக பக்தியோடு சேவிக்கும் பொருட்டு தங்களை முழுதும் அர்ப்பணிக்கிறவர்கள் எவர்களோ அவர்கள் அத்தியந்த பாக்கியவான்களாம். தான் செய்த பாவங்களை வெறுத்து இஷ்டப்பிரசாதத்தை அடையும்படிக்கு உம்முடைய அடைக்கலத்தில் ஓடிவருகிற பாவி எவனோ, அவனும் பாக்கியவானாம் பரிசுத்த கன்னிகையே உம்முடைய தயாளத்தினால் ஏவப்பட்டு உமது அண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து நான் செய்த குற்றங்களுக்கு மனஸ்தாபப்பட்டு பிரலாபத்தோடு அழுகிறேன். என் நிர்ப்பாக்கியமான ஆத்துமத்தின் பேரில் இரக்கமாயிரும். என் பாவங்களுடைய கட்டுகளை அவிழ்த்தருளும். என்னுடைய துர்க்குணங்களையும் ஆசாபாசங்களையும் அடக்கியருளும். நான் உம்மோடு கூட சர்வேசுரன் அண்டையில் எப்பொழுதும் வாழ்ந்திருக்க எனக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்தருளும் தாயே.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பதிமூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவைக் குறித்து ஐம்பத்து மூன்றுமணி செபம் சொல்கிறது.

புதுமை!

இவ்வுலகில் மனிதருக்கு ஏற்படும் தீமைகளில் பாவம் செய்ய நம்மை தூண்டிவிடும் பசாசின் தந்திரங்கள் அதிக தீமையாக இருப்பதால் பக்தி விசுவாசமுள்ளவன் இவைகளுக்கு விசேஷமாய் பயப்படுவான். ஆனால், இவைகளுக்கு இடங்கொடாது தேவ மாதாவினுடைய விசேஷ அடைக்கலத்தைத் தேடுகிறது மிகவும் உத்தமமான வழி. தமது சாந்த குணத்தினாலும், பொறுமையினாலும் மகா பேர்பெற்ற சலேசியுஸ் என்னும் அர்ச். பிரான்சீஸ்கு இளைஞராக இருக்கும் பொழுது பாரீஸ் நகர் இயேசு சபை மடத்தில் படித்துக்கொண்டிருந்தார்.

அப்பொழுது சர்வேசுரன் தம்மைக் கைவிட்டாரென்றும் தாம் மோட்சத்துக்குச் சென்று கடவுளை காணமாட்டோமென்றும் பசாசின் தந்திரத்தினால் எந்நேரமும் நினைத்து மிகவும் வாதைப்பட்டார். அவருடைய மனதில் ஞான இருள் சூழ்ந்து வரவே, அவருடைய இருதயத்தில் அதிக கவலை தோன்ற அவர் உள்ளத்தில் கொடிய சந்தேகங்கள் உண்டாகி அவ நம்பிக்கையென்ற பாவத்தில் விழ இருந்தார். அப்பொழுது ஞானக்காரியங்களின் மீது பிரியப்படாமலும், தாம் செய்கிற செபங்களினாலும், வாசிக்கிற நல்ல புத்தகங்களினாலும் ஓர் நல்ல உணர்வை முதலாய் அதனை நினைக்காமல் இருந்தார். அப்பொழுது பசாசானது, நீ என்ன செய்தாலும், ‘என்ன பிரயாசைப்பட்டாலும் நரகத்துக்கே போவாய் என்ற சந்தேகத்தை அவர் மனதில் ஸ்திரமாய் இருக்கச் செய்தது. அவரோவென்றால் சர்வேசுரனை நேசித்து அவரை மோட்சத்தில் நேரில் கண்டு கொள்வேன் என்றும் அவரிடத்தில் பாக்கியமுள்ளவனாக இருப்பேன் என்ற உறுதியான நம்பிக்கையோடு, எப்பொழுதும் இருந்தார்.

ஆனால் நரகத்தில் தள்ளப்பட்டால் எப்பொழுதும் சர்வேசுரனைப் பகைக்க வேண்டுமே என்ற நினைவினால் அதிக கஸ்தியை அடைந்தார். இரவு பகலாக அழுது புலம்பி அபயமிட்டு சாப்பிடாமலும் சரியாக நித்திரை செய்யாமலும் இருந்தார். கொஞ்ச காலத்துக்குள் இந்த துன்பத்தினால் அவருக்குக் கடின வியாதியுற்று மரணத் தறுவாயிலிருந்தார். அவ்விடத்திலிருந்த குருவானவர் அவர் அப்படி மெலிந்து போனதையும் அதிக வருத்தப்படுகிறதையும் கண்டு, அதற்கு காரணம் என்ன என்று விசாரித்தாலும், பிரான்சீஸ்கு நான் நரகத்துக்கு நியமிக்கப்பட்டவனாய் இருக்கிறேன் என்ற நினைவை வெட்கத்தினால் சொல்ல முடியாது தவித்தார். அப்படி ஒரு மாதம் அளவாக இந்தக் கொடிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். கடைசியில் அளவில்லாத கிருபையுள்ள சர்வேசுரன் தமது திருத்தாயைக் கொண்டு இந்த கடும் சோதனையில் நின்று அவரை மீட்கத் திருவுளங்கொண்டார்.

அது எவ்வாறெனில், அவர் முன்பு தேவமாதாவின் பரிசுத்த கன்னிமையைக் குறித்து வீரத்தனாய் இருப்பேன் என ஓர் கோவிலில் தேவமாதாவின் பீடத்தண்டையில் வார்த்தைப்பாடு கொடுத்திருந்தார். மேற்சொல்லிய நினைவினால் கொடிய வருத்தப்படும் பொழுது, தாம் முன் தேவமாதாவை நினைத்து வேண்டிக்கொள்ளும்படி உள்ளே நுழைந்தார். அக்கோவிலில் பிரவேசித்தவுடனே தேவமாதாவின் பீடத்தண்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்ணீர்விட்டு அழுது அன்னையை நோக்கி, என் தாயே என் பேரில் இரக்கமாயிரும், நான் என்றென்றும் நரகத்தில் தள்ளப்பட்டு சர்வேசுரனை தூஷித்து பகைக்க நியமிக்கப்படுவதற்கு பாத்திரமுள்ளவனா யிருக்கிறேன். சற்றாகிலும் என் ஆயுள் காலமெல்லாம் அவரை நேசிக்கும்படியாக நீர் கிருபை செய்தருளுமென்று திரளான கண்ணீர் சிந்தி, புனித பெர்நந்து இயற்றிய மிகவும் இரக்கமுள்ள தாயே என்ற செபத்தை சொன்னார். இந்தச் செபம் முடிந்தவுடனே அந்த பசாசுதந்திரமெல்லாம் மறைய அமைதியான சந்தோஷமும் மாறாத பாக்கியமும் அவர் மனதில் உண்டாயிற்று. இந்த ஞான சந்தோஷம் தேவமாதாவின் அனுக்கிரகத்தால் அவருக்கு எப்படி உண்டானதோ அப்படியே அப்பரம நாயகியின் உதவியினால் அச்சந்தோஷம் அவரை விட்டு நீங்கவில்லை.

நீங்களும் கிறிஸ்தவர்களே, இவ்வுலகில் அனுபவிக்கும் சோதனை தந்திரங்களில் தளராத நம்பிக்கையோடு, புனித பெர்நர்து இயற்றிய செபத்தை பக்தியுடன் சொல்லி தேவமாதாவினுடைய விசேஷ உதவியைக் கேளுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 12

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 12
தேவமாதா எலிசபெத்தம்மாளைச் சந்தித்தபோது இயேசுக்கிறிஸ்துநாதரால் செய்யப்பட்ட அற்புதங்களின் பேரில்!

தமது திருத்தாயைக் குறித்து செய்யப்பட்டவைகள்.

உலக மீட்பர் தமது நேச அன்னையின் வழியாக சென்மப்பாவத்தின் அடிமைத்தனத்தினின்றும் அர்ச். அருளப்பரை மீட்டு அவரைச் சுகிர்த அற்புதங்களாலும் நன்மைகளாலும் நிரப்பினார். இப்படியே தம்முடைய திருத்தாயைக் கொண்டு, தாம் இவ்வுலகிற்கு கொடுக்கப்போகிற மீட்பினுடைய முந்தின பலனை அளிக்க திருவுளங் கொண்டார். அந்தப் பரமநாயகி மனிதர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களுக்குத் தம்முடைய மன்றாட்டினால் தேவ வரப்பிரசாதங்களைப் பங்கிடும் வேலையை ஆரம்பித்தார்கள். சேசுக்கிறிஸ்துநாதர் தமது திருத்தாயாரை பாவிகளுக்கு அடைக்கலமும், புண்ணியவான்களுக்கு தாபரமும், எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் தஞ்சமும் தேவ நன்மைகளெல்லாம் வருவிக்கிறவளுமாக நமக்கு பிரசித்தமாய்க் காண்பிக்கிறார். இத்தகைய கிருபாகரியின் மேல் உறுதியான நம்பிக்கை வைக்காமல் இருக்கக்கூடுமோ?

அர்ச். ஸ்நாபக அருளப்பரைக் குறித்து நிகழ்ந்தவைகள்.

உலக மீட்பர் அர்ச்.ஸ்நாபக அருளப்பரிடம் சென்மப் பாவத்தின் தோஷத்தை நீக்கி, அவருக்கு விசேஷமான வரங்களை அளித்து அவருடைய மனதில் பரிசுத்த ஆவியின் ஒளியை உதிக்கும்படி செய்து, அவருடைய இருதயத்தில் தேவ சிநேக அக்கினியை எரியப்பண்ணி, அவருடைய ஆத்துமத்தை மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தினால் பூர்ப்பித்தார். அப்போது அந்த புனிதர் தம்முடைய தாயாரின் உதரத்திலிருந்து தேவமாதாவினுடைய சத்தத்தைக் கேட்டுச் சர்வேசுரனை அறிந்து, வணங்கி அவர் அண்டையில் சந்தோஷமாகக் குதித்தார். நாமும் தக்க ஆயத்தத்தோடு திவ்விய நற்கருணையை வாங்கி, பரிசுத்தாவியாகிய சர்வேசுரனுடைய ஏவுதலுக்கு இணங்கி நடப்போமானால் ஆண்டவர் நம்மை வரப்பிரசாதங்களால் நிரப்பி, நம்மிடத்தில் திவ்விய ஒளியையும் தேவ சிநேக அக்கினியையும் இருக்கச் செய்து, எவ்வித புண்ணியங்களையும் செய்வதற்குத் துணிவும் தைரியமும் அளிப்பார். நாம் திவ்விய நற்கருணையை வாங்கின பின்பு இந்தச் சுகிர்த உணர்ச்சிகளை அடையாமல், புண்ணியத்தைச் செய்ய சுறுசுறுப்பில்லாதவர்களாய் இருப்போமானால், இது நம்முடைய தவறு என்றெண்ணி நாம் திவ்விய நற்கருணையைத்தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடக்கடவோம்.

அர்ச். அருளப்பருடைய தாய் தந்தைக்கு நிகழ்ந்தனைகள்.

சேசுக்கிறிஸ்துநாதர் மகாத்துமாக்களான அர்ச். சக்கரியாசுக்கும் அர்ச். எலிசபெத்தம்மாளுக்கும் அளித்த நன்மைகளை சிந்தித்துப் பார்க்ககடவோம். அந்தப் பரம இரட்சகர் அவர்களைச் சந்தித்து அவர்களுடைய வீட்டில் வாசம் செய்ய சித்தமாகித் தமது நேச அன்னை காட்டின மனத்தாழ்ச்சியையும் மனக்கீழ்ப்படிதலையும் தேவ பக்தியையும் பிறர் சிநேகத்தின் சுகிர்த மாதிரிகைகளையும் அவர்கள் கண்களுக்கு முன்பாக வைக்கத் திருவுளங்கொண்டார். சேசுக் கிறிஸ்துநாதருடைய திருத்தாயாருடன் வாசம் செய்கிற குடும்பங்களும் சபைகளும் மிகுந்த பாக்கியமுள்ளவைகளே, அவர்களோடுகூட எல்லா வித நன்மைகளும் வருமென்பது சாத்தியமே. அவர்களுக்கு சேசுக்கிறிஸ்துநாதர் தேவகிருபை தந்து ஞான சந்தோஷத்தைப் பொழிந்து சுகிர்த குணத்தை வருவித்து ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் கொடுக்கிறார். நீங்கள் பாவத்தினால் சேசுகிறிஸ்துநாதரையும் அவரது அன்னையையும் உங்களிடமிருந்து அகற்றாமல், உங்களுடைய ஞான சுறுசுறுப்பினாலும், மாறாத புண்ணிய சாங்கோபாங்க நடத்தையினாலும், வற்றாத தேவ பக்தியினாலும், உங்களுடைய இதயத்தில் அவர்களுக்கு இருப்பிடத்தை அமைத்துக் கொடுங்கள்.

செபம்.

எனது திவ்விய தாயே! எனது நல்ல உபகாரியே ஆண்டவருடைய அன்னையாக இருக்க பாத்திரமானவர்களே, நான் அநேக கனமான பாவங்களைக் கட்டிக் கொண்டதால் உமது அருகில் வர அற்பமும் பேறு பெற்றவன்(ள)ல்ல, ஆகிலும் நீர் என்னைப் புறக்கணித்துத் தள்ளினாலும், நான் உமது கிருபையை உறுதியாக நம்பி உம்மிடத்தில் அபயமிட்டு ஒரு நாளாகிலும் உம்மை மன்றாடாமல் போகிறதில்லை. நீர் கரை காணாத தயை சமுத்திரமாய் இருக்க நான் உம்மிடத்தில் தேவசகாயத்தை அடையாதிருந்தால் யாருடைய அடைக்கலத்தில் ஓடுவேன்? அன்புள்ள தாயே! சர்வேசுரன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கைக்குப்பிறகு எல்லா நம்பிக்கையையும் உம்மிடத்தில் வைக்கிறேன். உம்முடைய ஆதரவை மன்றாடி உம்முடைய அடைக்கலத்தில் சேருவேனாகில் பேரின்ப இராச்சியத்தில் உம்முடைய உதவியைக் கொண்டு மீட்புப் பெற்று மோட்சவாசிகளுடன் நான் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

எங்களுடைய ஆண்டவளே, எங்களுடைய உபகாரியே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனிடத்தில் வேண்டிக்கொள்ளும்.

பனிரெண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

பரிசுத்த கன்னிகையான தேவமாதாவின் பேரில் சொல்லப்படுகிற தூஷணங்களுக்குப் பரிகாரமாக செபங்கள் சொல்லுகிறது.

புதுமை!

1604-ஆம் ஆண்டில் ஒரு பெரிய பட்டணத்தில் இரண்டு வாலிபர்கள் சாஸ்திரங்களை படித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தங்களிடமுள்ள துர்க்குணத்தினால் அதிகமாய்ப் படியாமல் கெட்ட வழியில் நடந்து அநேக பாவங்களைக் கட்டிக்கொண்டார்கள். இருவரும் ஓர் இரவில் ஒன்றாகச் சாப்பிட்டபின் ரிக்கார்துஸ் என்னும் அவர்களில் ஒருவன் தன் தோழனை விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தான். படுக்கப்போகும் நேரத்தில் தான் வழக்கமாய்த் தேவமாதாவைக் குறித்துச் சொல்லுகிற அருள்நிறை செபத்தை செபிக்க மறந்துபோனதை நினைத்து அதிக களைப்பாய் இருந்தாலும் உடனே முழங்காலில் இருந்து எப்பொழுதும் சொல்வது போல சொல்லி நித்திரைக்குச் சென்றான். நித்திரை செய்யும்பொழுது நடுநிசியில் கதவைப் பலமாகத் தட்டும் சப்தம் கேட்டு உடனே விழித்து கதவு தானாக திறப்பதையும், அவலட்சண முகத்தோடும் பயங்கரமான ரூபத்தோடும் தன் கெட்ட தோழன் உள்ளே வருகிறதைக் கண்டான். அதைக்கண்டு அவன் பயப்படும் பொழுது, இந்தப் பூதம் அவனை நோக்கி ரிக்கார்துஸ் என்னை அறிவாயோ? என்றது. அதற்கு ரிக்கார்துஸ் நீயா? ஆனால் எவ்வளவு மாறிப்போய்ப் பசாசைப்போல் இருக்கிறாய்? என்றான். அதற்குப் பூதமானது, அதிக நிர்ப்பாக்கியமான நான் உன்னோடு கூடியிருந்த இடத்தை விட்டுப் பிரிந்த பொழுது ஓர் பசாசு எனக்கு எதிராக வந்து என்னைக் கொன்று விட்டது. இப்பொழுது என் பிரேதம் தெரு வீதியில் கிடக்கிறது. என் ஆத்துமாவோ நரக பாதாளத்தில் புதைந்து இருக்கின்றது. எனக்கு ஏற்பட்ட தீமைக்கு நிகரான தீமை உனக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நீ படுக்கப்போகும் நேரத்தில் பரிசுத்த கன்னிகையை நோக்கி வேண்டிக்கொண்டதால் அன்னை உன்னைக் காப்பாற்றினாள். நான் சொல்வதைக் கேட்டு நீர் நல்லவனாக மாறினால் பாக்கியம் உள்ளவன் ஆவாய் என்று தன் வஸ்திரங்களைக் கிழித்துத் தன்னைச் சுடும் நெருப்பையும், தன்னைக் கடிக்கும் பாம்புகளையும் அவனுக்குக் காண்பித்து மறைந்தான்.

ரிக்கார்துஸ் இதைக்கண்டு பயந்து தன் மார்பில் பிழைதட்டி சாஷ்டாங்கமாக விழுந்து, தன்னை காப்பாற்றிய பரம தாய்க்கு நன்றி அறிந்த மனதோடு ஸ்தோத்திரம் சொல்லி, தான் எவ்வாறு நல்லவனாகக் கூடும் என்று நினைத்து சிந்திக்கும் பொழுது, புனித பிரான்சிஸ்கு சபை மடத்தில் நடுநிசி செபத்துக்கு மணி அடிக்கிறதைக் கேட்டான். உடனே புறப்பட்டு அம்மடத்துக்குப் போய் சந்நியாசியாக தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மன்றாடினான். ஆனால் அந்த சந்நியாசிகள் இவனுடைய துர் நடத்தைகளை அறிந்திருந்ததால் இவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பொழுது, இவன் தனக்கு நிகழ்ந்தவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். உடனே இரு சந்நியாசிகள் இவன் சொன்னது மெய்யோ, பொய்யோ என்று அறிவதற்கு, வெளியே புறப்பட்டு, ரிக்கார்துஸ் தோழனுடைய பிரேதத்தைத் தேடிப்போனார்கள். குறித்த இடத்தில் கரியைப் போல் கறுப்பாய் இருக்கிற அந்தப் பிரேதத்தைக் கண்டார்கள். அதன்பின் ரிக்கார்துஸ் அச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடின தபசு செய்து சுகிர்த புண்ணியங்களையும் அனுசரித்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பிற சமயத்தாருக்கு திருமறையைப் போதிக்க அனுப்பப்பட்டார். இறுதியாக ஜப்பான் தேசத்துக்குச் சென்று அங்கு வேதசாட்சியாக மரித்தார்.

இவைகளையெல்லாம் கேட்கும் சகோதரர்களே, தேவ மாதாவை நோக்கி நீங்கள் வழக்கமாய்ச் சொல்லுகிற செபங்களை ஒருநாளும் தப்பாமல் சொல்லக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 11

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 11
தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்திக்கிறார்!

அச்சமயத்தில் தேவமாதாவிடம் விளங்கின மூன்று பிரதான புண்ணியங்கள்!

அதிசயத்துக்குரிய தேவ சுறுசுறுப்பு!

எவ்வித பாக்கியமும் பெற்ற திருக்கன்னிகை தம்முடைய திரு உதரத்தில் அவதரித்த இரட்சகரைத் தரித்தவுடனே அவர் பூலோகத்தில் எளியச் செய்ய வருகிற தேவ அக்கினியால் ஏவப்பட்டவர்களாய் உடனே மலைநாட்டுக்குத் தம்முடைய சுற்றத்தினாராகிய எலிசபெத்தம்மாளிடத்தில் தீவிரித்துப் போனார்கள். அந்த அதிசயத்துக்குரிய தேவ கன்னிகை தம்முடைய திரு இருதயத்தில் எரிகிற தேவ சிநேகத்தின் ஆவலைக் கொண்டு எவ்வளவு சுறுசுறுப்புடன் அதற்குச் சம்மதித்தார்கள் என்று தியானிப்போம். தூர பயணத்தை மேற் கொண்டாலும் வழிப் பயணம் வருத்தமும் ஆபத்தும் உள்ளதாய் இருந்தாலும், அன்னை பின்வாங்காமல் அதிக வேகத்தோடு சர்வேசுரன் சித்தத்தின்படியே இரட்சகருக்கு அர்ச். அருளப்பருடைய திருத்தாயாரைச் சந்திக்கத் தீவிரித்துப் போனார்கள். தேவ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவனுடைய அடையாளம் இதுதான். அவன் தேவகிருபையின் ஏவுதலுக்கு அமைந்து ஞான சந்தோஷத்துடன் ஆண்டவருக்கு ஊழியம் செய்து தேவ நீதியின் உன்னதமான வழியில் முழு மூச்சுடன் நடந்து வருவான். தேவ ஊழியத்தில் அசட்டை உள்ளவனோவென்றால் புண்ணிய நெறியில் உறுதியாக நடவாமல் வருத்தத்தோடும் கஸ்தியோடும் தேவ ஊழியத்துக்கு அடுத்தவைகளை நிறைவேற்றுவான். இப்போது நீங்கள் தேவ ஊழியத்தில் சுறுசுறுப்புள்ளவர்களோ அல்லது அசட்டையுள்ளவர்களோ என்று பாருங்கள். அந்த ஞான அசட்டைத்தனமானது எவ்வித தீமைகளுக்கும் இடங்கொடுக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை.

மிகுந்த மனத்தாழ்ச்சி!

இந்தப் பரம கன்னிகை தேவமாதாவாயிருக்கிறதினால் சகல உலகங்களுக்கும் இராக்கினியாய் எல்லா மனிதருடையவும் வான தூதர்களுடைய வணக்கத்துக்கும் ஊழியத்துக்கும் உரியவர்களாய் இருந்தார். ஆயினும் அன்னை அர்ச். எலிசபெத்தம்மாளைச் சந்தித்து அவர்களுக்கு தம் உதவிகளை வழங்க அதிசயத்துக்குரிய மனத் தாழ்ச்சியுடன் பணிவிடை செய்ய தானே முன் வந்தார்கள். அன்னை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருந்த போதிலும் எல்லா பெண்களிலும் மேலான அந்தஸ்தை அடைந்திருந்த போதிலும் எவருக்கும் கீழாக தம்மைத் தாழ்த்துகிறார்கள். இந்தப் பரம நாயகியின் நடத்தைக்கும், நம்முடைய நடத்தைக்கும் எவ்வளவு பாதூர வித்தியாசம்! அன்னையுடைய மனத்தாழ்ச்சிக்கும் நம்முடைய ஆங்கார அகந்தைக்கும் எவ்வளவு வித்தியாச வேற்றுமை எண்ணிக்கைக்குள் அடங்காத சுகிர்த நன்மைகளைப் பெற்று எல்லா சிருஷ்டிகளிலும் உயர்ந்தவர்களாய் இருந்தபோதிலும் தம்மைப் பெருமையாய் எண்ணாமல் எல்லாருக்கும் முன்பாக தம்மை தாழ்த்த விரும்புகிறார்கள். எவ்வித பாவ அசுத்தங்களாலும் நிறைந்த நாமோவென்றால் அகந்தையான பெருமையைக் கொண்டு எல்லாருக்கும் முன்பாக மகிமையுடன் விளங்கவும் வாழ்த்தப்படவும் விரும்புகிறோம்.

சுயநலமற்ற பிறர் சினேகம்!

தேவமாதா அரச். எலிசபெத்தம்மாளிடத்தில் தங்கின பொழுது செய்த புண்ணியங்களையும் காண்பித்த சுகிர்த மாதிரிகைகளையும் சொல்லுந்தரமன்று, மிகுந்த அன்போடும் சுறுசுறுப்போடும் அர்ச். எலிசபெத்தம்மாளை வணங்கி, அன்னைக்குரிய சகல உதவிகளையும் செய்து கொண்டு வந்தார்கள். நாமும் அந்த தேவ இராக்கினியைக் கண்டு பாவித்து உண்மையான அன்புடன் மற்றவர்களுடைய அவசரங்களில் உதவவும், உதவி செய்யவும், மிகுந்த அன்போடு அனைவரையும் சிநேகிக்கவும், முயற்சியுள்ள பிரியத்துடனே நிர்ப்பாக்கியருக்குத் தக்க உதவி செய்யவும், பின்வாங்காத சிநேகத்துடன் இடைவிடாமல் புறத்தியாரைக் காக்கவும், ஞான கருத்துடனே புறத்தியாரிடத்தில் சர்வேசுரனை நோக்கவும் கடவோம்.

செபம்.

பரிசுத்த கன்னிகையே! நீர் உம்முடைய சுற்றத்தினராகிய அர்ச். எலிசபெத்தம்மாளைச் சந்திக்கும்போது அன்னை உம்முடைய வார்த்தை என் காதிலே விழுந்தவுடனே என் வயிற்றிலிருக்கிற என் பிள்ளை மகிழ்ச்சியினால் துள்ளினதென்று அகமகிழ்ந்து உச்சரித்தார்கள். ஓ! என் தாயே, உமது திருவாக்கியத்தைக் கேட்பேனென்று உறுதியாய் நம்புகிறேன். ஆனால் அந்த அதிஷ்டம் எனக்கு அனுகூலமாகட்டும். இந்தக் கண்ணீர் கணவாயிலே உமது திருப்பெயரை உச்சரிக்கும் பொழுது என் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியினால் உருகிப் போகக்கடவது. மரியாயே என்னும் திருநாமமே, என் இருதயத்தில் எப்போதும் வாசம் செய்யும், என் வாக்கில் எப்போதும் வாரும், என் சந்தோஷமாயிரும், என் ஆதரவாயிரும், என் பாக்கியமாயிரும், மரியாயே என்னும் திருநாமமே, உம்முடைய அடைக்கலத்தில் ஒருவனாகிலும் அவநம்பிக்கையாய் இருக்கமாட்டான்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தேவமாதாவே, மெய்யான சர்வேசுரனான சேசுக்கிறிஸ்துநாதர் பேரில் என்னுடைய இருதயம் தேவசிநேகத்தால் பற்றி எரியச் செய்தருளும்.

பதினொன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தங்களுக்குள்ளே பகை வர்மமாயிருக்கிறவர்களைச் சமாதானப்படுத்துகிறது.

புதுமை!

எத்தேசத்தின் ஜனங்களும் அப்பட்டமானத்தின் குடிகளும், எவ்வூரின் பிரஜைகளும் பழங்காலம் தொட்டு பரிசுத்த கன்னிகையின் மேல் பக்தியாயிருந்து தங்களுடைய நாடுகளில் திருத்தலங்களையும், தங்களுடைய பட்டணங்களில் பிரமாண்டமான கோவில்களையும், தங்களுடைய கோவில்களில் அழகான பீடங்களையும் அமைத்து இந்தப் பரமநாயகியை மகிமைப்படுத்துவதை நாம் அறிவோம். ஆனால் தேவமாதாவின் மீது வைத்த பக்தி விசுவாசத்தில் இத்தாலிய தேசத்தார் தலைசிறந்து விளங்குகின்றனர். திருச்சபைக்குத் தலையும் அஸ்திவாரமுமாய் இருக்கிற உரோமாபுரியில் இத்தகைய பக்தி விசுவாசம் மிகுதியாய் விளங்குகிறதைக் காண்போம். அதுவும் அதிசயமல்ல; எல்லா வீடுகளிலும் தேவமாதா படமும், எல்லா தெரு வீதிகளிலும் தேவமாதாவின் சுரூபங்களும் அலங்காரமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறதுமன்றி அப்பட்டணத்தில் மாத்திரம் பரம நாயகியின் பெயரால் 46 கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த 46 கோவில்களிலும் ஆண்டுதோறும் பிரபல்யமான திருநாள் கொண்டாடப்படும். ஆனால் அந்தக் கோவில்களுக்குள்ளே அதிகம் பேர்பெற்ற கோவில் மரியா மாஜோரென்னும் தேவமாதா கோவிலாம் இந்தக் கோவில் ஸ்தாபித்த விதம் வருமாறு :

உயர்ந்த குலத்தவரான பத்திரிசியுஸ் என்னும் அருளப்பரும் அவரது மனைவியும் தங்களுக்கு பிள்ளைகள் இல்லாததினால் தங்களுடைய செல்வங்களையெல்லாம் தேவமாதாவுக்குச் சுதந்தரமாக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள் இடைவிடாது தேவநாயகியை நோக்கி எந்த தருமத்துக்கு இந்த சொத்துக்களை செலவழிக்க வேண்டுமென்று தெரிவிக்கும்படியாக அன்னையை மன்றாடினார்கள். பரிசுத்த கன்னிகை அவர்களுடைய மன்றாட்டுக்கிரங்கி கோடை காலத்தில் ஓர் இரவில் பட்டணத்திலுள்ள ஒரு சின்ன மலையில் உறைந்த பனி அற்புதமாய் பெய்ய செய்தாள். அதே இரவில் அருளப்பருக்கும், அவருடைய அருமைப் பத்தினியாருக்கும், உலத்தில் பன்னினாவிற்கு இந்த பாப்பானவருக்கும் தோன்றி, எஸ்கூலினுஸ் என்னும் மலையில் உறைந்த பனியால் மூடப்பட்டிருக்கும் இடத்தில் நமது பெயரால் ஓர் கோவில் கட்ட வேண்டும் என்றாள். காலையில் பாப்பானவர் எண்ணிக்கையில்லாத ஜனங்களோடும் திரளான குருக்களோடும் குறித்த இடத்துக்கு வந்து அற்புதமாக உறைந்திருந்த அந்த பனிக்கட்டியைப் பார்த்து, இடத்தில் தானே கோவில் கட்ட ஆரம்பித்தார்கள். இவ்விதமாய் இவ்விரண்டு புண்ணியவாளர்களின் சொத்தைக் கொண்டு மிகுந்த அலங்காரமான சிறப்போடு கோவில் கட்டப்பட்டது.

இந்தக் கோவிலில் நம் கர்த்தரான இயேசுக்கிறிஸ்துநாதர் பிறந்த திருக்கொட்டில் மகா பூச்சியமாய் வைக்கப்பட்டிருக்கின்றது. கர்த்தர் பிறந்த திருநாளுக்குப் பின்வரும் நாட்களில் அனைத்துலகிலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், இயேசுக்கிறிஸ்துநாதருடைய அளவிறந்த சிநேகத்தையும் அளவறுக்கப்படாத மனத்தாழ்ச்சியையும் நினைத்து, அத்திருக் கொட்டிலை வணங்க வருவார்கள்.

அக்கோவிலில்தான், சுவிசேஷகரான புனித லூக்காஸ் என்பவர் சித்திர வேலையாய் செய்த தேவமாதாவின் படம் பூச்சியமாய் வைக்கப்பட்டிருக்கின்றது. அதையும் ஏராளமான ஜனங்கள் பார்க்கப் போவார்கள். அத்திருப்படத்தில், பரிசுத்த கன்னிகையின் முகமானது அழகுள்ளதுமாய், தயையுள்ளதுமாய், அடக்கவொடுக்கமுள்ளதுமாய், சாந்தகுணமுள்ளதுமாய், பிரதாபமுள்ளதுமாய் விளங்குகின்றது. அவளுடைய மடியில் இயேசுக்கிறிஸ்துநாதருடைய சாயலைக் காட்டுகிற சுரூபம் ஒன்று அதிசயத்துக்குரிய அழகுள்ளதாய்த் துலங்குகின்றது. அதன் இடது கையில் ஓர் புத்தகம் வைத்துக்கொண்டு வலது கை ஆசீர்வதிக்கிறது போல் தீட்டி இருக்கின்றது. தேவபாலன் தமது திருக்கண்களைத் தம்முடைய தாயின்மீது திருப்பியிருக்கின்ற பாவனையில் அமைந்திருக்கின்றது. ஆகையால் இந்தத் திருப்படத்தைப் பார்க்கிறவர்கள் தங்கள் மனதில் தேவசிநேக அக்கினி அதிகரிக்கிறதாக உணர்கிறார்கள்.

கிறிஸ்தவர்களே! தேவமாதாவினுடைய திருப்படத்தை உங்களிடத்தில் பக்தியாய் வைத்து அடிக்கடி பார்க்கக் கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 10

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 10
வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையின் பேரில்!

கபிரியேல் என்னும் வானதூதர் தேவமாதாவை வாழ்த்தினார்

அன்னை அடைந்த தேவ வரங்களைப் பற்றி வாழ்த்தினார்:

வானதூதர் தேவ இராக்கினியான அன்னை அடைந்த வரங்களைப்பற்றி வாழ்த்தும்படியாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க என்றார். இந்த வார்த்தைகளைக் கொண்டு வானதூதர் அர்ச். தமத்திரித்துவத்தின் தூதுவராகப் பரிசுத்த கன்னிகைக்கு மங்களவார்த்தை சொல்லி அன்னைக்குச் சகல சுவிசேஷங்களிலும் மேலான சுவிசேஷத்தையும், சகல வர்த்தமானங்களிலும் உன்னத வர்த்தமானாகிய ஆண்டவருடைய மனித அவதாரத்தையும் அறிவித்தார்.

அன்னையுடைய திருநாமத்தை அதிக வணக்கத்தின் பொருட்டு உச்சரிக்க மனதில்லாதவராய், பிரியத்த்தத்தினாலே பூரணமானவளே என்று சொல்லி, அந்த வார்த்தையில் அன்னையுடைய மகத்துவத்தைக் காண்பித்தார். அது எவ்வாறெனில், அதிசயத்துக்குரிய அந்தத் திவ்விய கன்னிகை தம்முடைய மனதிலும் இருதயத்திலும் உணர்விலும் வார்த்தைகளிலும் கிரிகைகளிலும் எவ்வித தேவ வரங்களாலும் நிறைந்தவர்களாகி, மேலான விதமாக இஷ்டப்பிரசாதத்தினால் அலங்கரிக்கப்பட்டவர்களாய், அனுக்கிரகப் பிரசாதங்களையும் சுபாவத்துக்கு மேலான புண்ணியங்களையும் இஸ்பிரீத்து சாந்துவினுடைய வரங்களையும் பெற்றவர்களாய், சகலமான சம்மனசுகளையும் மோட்சவாசிகளையும் விட பிரியதத்தத்தினாலே பூரணமானவர்களாய் இருந்தார்கள். நாமும் வானதூதரோடு நம்முடைய ஆண்டவளை வாழ்த்தி, அன்னைக்கு அளிக்கப்பட்ட திவ்விய நன்மைகளைக் கொண்டாடக் கடவோம். நிர்ப்பாக்கியர்களாயிருக்கிற நமது பேரில் இரக்கமாகித் தன்வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் தேவநன்மைகளில் நமக்கு தேவையான வரம் கொடுக்க வேண்டுமென்று மன்றாடக்கடவோம்.

அன்னை சர்வேசுரனுடன் அடைந்த ஞான ஐக்கியத்தைப் பற்றி வாழ்த்தினார்:

வானதூதர் பரம இராக்கினியை நோக்கி கர்த்தர் உம்மிடத்திலே என்று சொல்லி அன்னை அடைந்த தேவ ஒன்றிப்பின் முகாந்தரமாக அன்னையை வாழ்த்தினார். கர்த்தர் மற்ற புண்ணியாத்மாக்களிடத்தில் தம்முடைய இஷ்டப் பிரசாதத்தினாலும் தேவ கிருபையினாலும், சகலமான சிருஷ்டிகளிலே தம்முடைய செய்கைகளினாலும், ஆளுகையினாலும் இருக்கிற வண்ணமே, தேவ கன்னிகையினிடத்தில் வாசம் பண்ணினதுமல்லாமல், விசேஷ அன்பினாலும் மேலான ஒன்றிப்பினாலும் தமக்குப் பிரியமான இருப்பிடத்தை ஸ்தாபித்திருக்கிறார்.

அப்போது அந்த தேவ ஐக்கியம் அதிகரிக்கும்படியாகவும், தேவசிநேகம் பெருகும் படியாகவும் அன்னையுடைய இருதயமானது உன்னதத்திலே மிகுந்த மகிமையோடு ஆளுகின்ற ஆண்டவருடைய மெய்யான தேவாலயமாயிற்று. அன்னையிடத்தில் மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனுமான உலக மீட்பர் ஒன்பது மாதமட்டும் தங்கியிருந்தார்.

நீங்களும் தேவமாதாவுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப்போல பாக்கியம் அடையலாம். நீங்கள் இஷ்டப்பிரசாதத்துடன் இருக்கும் பொழுது சர்வஜீவ தயாபர சர்வேசுரன் உங்களிடத்தில் வாசம் செய்து உங்களை மிகவும் நேசிக்கிறார். ஆனால் சாவான பாவத்தில் விழுவீர்களாகில், சர்வேசுரன் உங்களை கைவிட, பசாசுக்கு அடிமையாகப் போவீர்கள். அத்தகைய தீமைக்கு நிகரான தீமை வேறு ஒன்றுமில்லை. நீங்கள் அதில் விழாதபடிக்கு தேவமாதா உங்களை காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ளுங்கள்.

சகல சிருஷ்டிகளை விட அன்னை அடைந்த மேன்மை பற்றி தேவமாதாவை வானதூதர் வாழ்த்தினர்.

வானதூதர் தேவகன்னிகையை நோக்கி பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவளும் நீரே என்று சொல்லி, அன்னையடைந்த உன்னத மேன்மையைக் குறித்து அன்னைச் சகல ஜீவ ஜந்துக்களின் பேரால் வாழ்த்துகிறார்.

மெய்யாகவே பரிசுத்தமான கன்னிகையே! எவ்வித சிருஷ்டிகளையும் விட அதிக தேவ அருளையும் கிருபையையும் அடைந்திருக்கிறீர். மலர்களுக்குள் வெண்மையான ஒளியோடு விளங்குகிற லீலியென்னும் மலரைப் போல, பாவத்தினால் அழுக்குப்பட்ட மக்களுக்குள் நீர் தூய்மையுடன் விளங்குகிறீர். முழுமையும் பரிசுத்தமுள்ளவர்களாய் எவ்வித புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டவர்களாய் துலங்குகிறீர்.

ஆதி தாயான ஏவாள் என்பவள் மக்கள் மீது சகல தீமைகளையும் உண்டாக்கினாள். தேவ ஆசீர்வாதங்களைப் பொழியச் செய்தீர். ஆதலால் என்றென்றைக்கும் சம்மனசுகளும், சகல மோட்சவாசிகளும், சகல ஜீவஜந்துக்களும், உம்மை வாழ்த்திப் புகழ்ந்து கொண்டாடுவார்கள். என் திவ்விய அன்னையே! அடியேன் அபாத்திரவானாயிருந்த போதிலும் உம்முடைய ஊழியர்களோடு உம்முடைய மகத்துவத்தை வாழ்த்தி, நீர் அடைந்த தேவ வரங்களை என் வாழ்நாளெல்லாம் பாடி துதித்து உம்மை வான் வீட்டில் புகழ்ந்து நேசித்து துதிப்பேனென்று நம்பிக்கையாய் இருக்கிறேன்.

செபம்.

என் ஆண்டவளே! மீட்பரின் தாயாரே! சகல பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! கன்னிகைக்குள் பரிசுத்த கன்னிகையே! சிருஷ்டிகளுக்குள் மேலானவர்களே! உம்மை மனிதர் எல்லாம் எப்போதும் வாழ்த்தி வருவார்கள். நான் அவர்களோடு உம்முடைய மகிமையை துதித்து உம்முடைய மகத்துவத்தை, சகலருக்கும் அறிவிப்பேன். நான் உம்மை என்னால் ஆனமட்டும் வணங்கி நேசித்து உம்மை எல்லாரும் சிநேகிக்கும்படி செய்யப் பிரயாசைப்படுவேன். மனுமக்கள் எல்லோரும் உமதருகில் வந்து உமக்குத் தக்க, வணக்கத்தைக் காண்பித்து, ஏக மீட்பரான உமது திருமைந்தனை நேசித்து, அவருக்கு ஊழியம் பண்ண வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன். இந்த பாக்கியம் உம்முடைய கிருபையினால் எனக்குக் கிடைக்கும்படியாக உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

அருள் நிறைந்த மரியாயே வாழ்க!

பத்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

உங்கள் ஊரிலிருக்கிற கோவிலையாவது சிலுவையையாவது நன்றாய் இருக்கும்படிக்கு ஏற்பாடு செய்கிறது.

புதுமை!

இஸ்பானிய தேசத்தின் அதிக செழிப்புள்ள நாடுகளெல்லாம் மகமதியருடைய கொடிய ஆளுகையில் இருந்தபோது எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதல்லாமல் அவர்களில் அநேகர் தங்களுக்கு இழைக்கும் துன்பங்களை சகியாது தங்களிடம் சொல்லப்படும் துர்ப்புத்திகளைக் கேட்டுத் தங்களுடைய பரிசுத்த வேதத்தை மறுத்துவிட்டார்கள். எவ்வித இன்னல்களிலும் ஆதரவாயிருக்கிற மோட்ச இராக்கினியான அன்னை அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களை நீக்கவும் கெட்டுப்போகிற அந்த அடிமைகளை மீட்கவும் திருவுளங்கொண்டார்கள்.

அது எவ்வாறெனில், மிகுந்த செல்வந்தரும் மகா பக்தி விசுவாசமுள்ளவருமான நோலாஸ்கோ இராயப்பர் என்னும் ஒருவர் இருந்தார். நீண்ட நாட்களாக இந்த நிர்ப்பாக்கிய கிறிஸ்தவர்களுக்கு எப்படி உதவி செய்யக்கூடும் என ஆலோசித்து வந்தார். ஒருநாள் அவர் அதிக பக்தியோடு தேவ சிம்மாசனத்தருகில் தம்முடைய வேண்டுதல்களை ஒப்புக்கொடுக்கும்போது மகா பிரகாசத்தோடும், நிகரில்லாத மகிமையோடும் பரிசுத்த கன்னிகை அவருக்குத் தம்மைக் காண்பித்து நீ நம்முடைய பேரால் மகமதியரின் அடிமைத்தனத்திலிருந்து நிர்ப்பாக்கிய கிறிஸ்தவர்களை மீட்கும்படியாக சந்நியாசிகளுடைய ஓர் சபையை ஸ்தாபிப்பாயேயாகில் நம்முடைய குமாரனுக்கு மிகவும் பிரியமான காரியமாக இருக்கும் என்றார்கள்.

அதே இரவில் தேவமாதா அரகோனியா நாட்டின் அரசரான யாகப்பருக்கும் பென்னாப்போர் என்னும் ரே மொந்துக்கும் தோன்றி மேற்சொன்ன சபையை ஸ்தாபிக்கிறதற்கு அவர்கள் இருவரும் உதவி செய்ய வேண்டுமென்று கற்பித்தார்கள். இதன்படி தேவமாதாவின் பேரால் அடிமைத்தனத்தினின்றும் கிறிஸ்தவர்களை மீட்கும்படியாக ஓர் சபையானது ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையின் சந்நியாசிகள் மூன்று பெரிய வார்த்தைப்பாடுகள் கொடுத்ததுமல்லாமல் கிறிஸ்தவர்களை வேறுவகையில் மீட்க முடியா விட்டால் நாங்கள் அவர்களுக்குப் பதிலாய் அடிமையாக அவமானத்தில் நிற்போம்: சபையானது தேவமாதாவின் கிருபையினாலும் சர்வேசுரனுடைய ஆசீராலும் அநேக நாடுகளில் பரம்பினதுமின்றி அதன்மூலம் எண்ணிக்கைக்குள் அடங்காத ஜனங்கள் தாங்கள் அகப்படுகிற கொடிய அடிமைத்தனத்திலிருந்தும் மீட்கப்பட்டு தங்களுடைய வீடுகளுக்கு சந்தோஷமாய் அனுப்பப்பட்டார்கள். இந்த சந்நியாசிகளுக்கும் அநேகர் அடிமைகளை மீட்க வேண்டிய பணம் இல்லாதிருக்கும் பொழுது, கன்னிமரியாயின் பெயரைச் சொல்லித் தங்களைத்தானே அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார்கள்.

கிறிஸ்தவர்களே, பசாசின் கொடிய அடிமைத்தனத்தில் வருத்தப்படும் நிர்ப்பாக்கிய பாவிகளின் மட்டில் நீங்கள் இரக்கமாயிருந்து அவர்களுக்காகத் தேவ உதவியை மன்றாடி, அவர்கள் தங்கள்
அக்கிரமத்தை கைவிடுமாறு அவர்களுக்கு உதவி புரிவீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 9

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 09
கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களின் பேரில்!

இந்தத் தேவ இரகசியம் நிறைவேறுமுன்னர் தேவமாதா செய்த நற்கிரிகைகள்

சகல பாக்கியம் நிறைந்தவர்களும் பரம நாயகியுமான கன்னிகை தனது இளம் வயதில் தன்னை சர்வேசுரனுக்கு அர்ப்பணித்து சுகிர்த புண்ணியங்களின்படி அனுசரித்து வந்தார்கள். சர்வேசுரன் அன்னையை நாளுக்கு நாள் புண்ணிய வழியில் அதிகரிக்கிறதைக் கண்டு மகிழ்ச்சியுற்று தம்முடைய திருக்குமாரனுக்கு ஏற்ற தாயாவதற்கு மென்மேலும் அன்னைக்கு தேவ வரங்களை அளித்துக்கொண்டு வந்தார். அந்தப் பரமநாயகி உலக இரட்சகர் இந்த உலகில் வருங்காலம் கிட்டினதென்று அறிந்து எத்தகைய மகிழ்ச்சி அடைந்தார்களென்று எவராலும் சொல்ல முடியாது. அந்த இன்ப சாகரமான சரித்திரத்தில் சர்வ ஜீவ தயாபார சர்வேசுரனுக்கு முடிவில்லாத தோத்திரம் வருமென்றும், நீண்டநாள் பசாசின் அடிமைத்தனத்திலிருந்த மனிதர் மீட்கப்படுவார்கள் என்றும் அறிந்து, வரப்போகிற பரம இரகசியம் எப்போது நிறைவேறுமோ என்று தமது செபத்திலேயும், தியானத்திலேயும் மிகுந்த ஆசையுடன் சிந்தித்து வந்தார்கள். நாமும் தேவமாதா தம்முடைய பரிசுத்த உதரத்தில் தரித்த தேவனைத் தேவநற்கருணை வழியாக உட்கொள்ளுகிறோம். ஆனால் அன்னை செய்ததுபோல் எவ்வித புண்ணியங்களானாலும் நம்முடைய இருதயத்தைச் சர்வேசுரனுக்குத் தக்க சிம்மாசனமாக இருக்கும்படி அலங்கரித்து வருகிறோமோ? இல்லையே! தமது செபத் தியானம் முதலிய நற்கிரிகைகளில் தேவமாதா நமக்குக் காண்பித்த தேவபக்தியும், சிநேகமும் நம்பிக்கையும் நம்மிடத்தில் விளங்குகிறதோ? அதுவும் இல்லையே. தேவ நற்கருணை வாங்குகிறதில் முதலாய்த் தேவ சிநேக அக்கினியின்றி கல் நெஞ்சராய் இருக்கிறோம்.

சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன போது அவர்கள் காண்பித்த சுகிர்த மாதிரிகை.

வானதூதர் மங்களவார்த்தை சொன்ன பொழுது தேவமாதா காண்பித்த சுகிர்த புண்ணியங்களை தியானிக்கிறது. மிகுந்த கற்புடையவர்களாய் இருந்ததால் மனிதவுருவாய் காண்பித்த வானதூதரைப் பார்த்து அன்னை அஞ்சினார்கள். குன்றாத விசுவாசமுள்ளவர்களாய் இருந்ததால் தனக்கு அறிவித்த தேவ இரகசியத்தை உறுதியாக நம்பி மகா மனத்தாழ்ச்சியுள்ளவர்களாய் தான் ஆண்டவருடைய அடிமையென்று சொன்னார்கள். குறையற்ற கீழ்ப்படிதலுள்ளவர்களாய் இருந்ததால் தேவ கட்டளையென்று அறிந்தவுடன், இதோ, ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றார்கள். நாமும் தேவதாயின் சுகிர்த மாதிரிகையைக்கண்டு பாவிக்கக்கடவோம். அப்போது விசேஷமாய் நம்முடைய தேவதாயாருக்குப் பிரியமுள்ளவர்களாய் அன்னையுடைய அடைக்கலத்தை அடைவதற்குப் பாத்திரவான்களாய் இருப்போம்.

இந்தத் தேவ இரகசியம் நிறைவேறிய பின்னர் தேவதாய் அனுசரித்த புண்ணியங்கள்.

அந்தப் பரம இரகசியம் நிறைவேறவே, பரிசுத்தாவியின் அற்புதக் கிருபையால் கர்த்தர் அன்னையின் திரு உதரத்தில் அவதாரம் பண்ணின சமயத்தில் திருக் கன்னிகையின் மனதிலிருந்த உணர்ச்சிகளைப் பக்தியுடன் தியானிக்கக்கடவோம். தன்னுடைய குமாரன் அண்டையில் தன்னைத் தாழ்த்தி அவரை மிகுந்த வணக்கத்துடன் ஆராதித்து அவரைத் தன்னுடைய தேவனாகவும் மகனாகவும் நேசித்துத் தன்னை அவருக்கு முழுமையும் ஒப்புக் கொடுத்தார்கள். நாமும் திவ்விய நற்கருணையை வாங்கும்போதும், வாங்கின பின்பும், தேவமாதா நமக்குக் காண்பித்த சுகிர்த மாதிரிகையை அனுசரித்து வருமோமாகில் நமக்கு எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டமாகும்! அவ்வாறு தகுந்த விதமாக திவ்விய நற்கருணையை வாங்குவோமாகில் பரிசுத்தவான்களாய் சீவிப்போம்.

செபம்.

சேசுக்கிறிஸ்துவின் இனிய அன்னையே! ஆண்டவருடைய வார்த்தையானது உமது திரு உதரத்தில் அவதாரம் எடுக்கும் பொழுது நீர் கொண்டிருந்த சுகிர்த உணர்ச்சிகள் சொல்ல முடியாது. சகல நன்மையும் நிறைந்த சர்வேசுரன் உமது திருமைந்தனானார் என்பதை பார்த்து அவரை எவ்வளவான ஆசை பக்தி சிநேகத்துடன் அரவணைத்தீர்! அவரோவென்றால் உமது திருஇருதயம் எவ்வித சுகிர்த புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததினால் அதில் பிரியமாய் வாசம் பண்ணிக் கொண்டிருந்தார். என் பரிசுத்த அன்னையே! நான் என் அன்புக்குரிய சேசுவை என் இருதயத்தில் அடிக்கடி வாங்கினாலும் உமக்கும் எனக்கும் எவ்வளவு தூரம் வித்தியாசம்! என் இதயம் எவ்வித துர்க்குணமும் நிறைந்தது. அப்படியிருக்க அந்தப் பரிசுத்தமான சர்வேசுரன் என்னிடத்தில் வருகிறதெப்படி? மாசற்ற கன்னிகையே! உம்முடைய திருக்குமாரனை நினைத்து உம்மை மன்றாடுகிறேன். நான் திவ்விய நற்கருணையைத் தக்க ஆயத்தத்தோடு வாங்கும்படியாகச் செய்தருளும். என்னுடைய இருதயம் உமது திருக்குமாரனுக்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கும்படிக்கு அதில் தேவ சிநேகமும், மனத்தாழ்ச்சியும், பரிசுத்த கற்பும், திவ்விய பக்தியும் உம்மிடத்தில் இருந்ததுபோல் விளங்கச் செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! மரியாயே! தயையுள்ள கன்னிகையே, கிருபாகரியே, கருணாகரியே, அருணோதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

ஒன்பதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஒவ்வொருவரும் தன்னைச் சர்வேசுரனுக்கும் தேவ மாதாவுக்கும் முழுதும் ஒப்புக்கொடுக்கிறது.

புதுமை!

தமது திரு மைந்தனின் சத்திய வேதமானது அஞ்ஞான இருள் படர்ந்த தேசங்களில் பிரவேசிக்கவும், பரம்பவும் விசேஷ உதவி தேவமாதா செய்கிறாள் என்பதற்குச் சந்தேகமில்லை. நிரூபிக்கும் புதுமையாவது :

அமெரிக்க தேசங்களில் வடபுறங்களில் எண்ணிக்கை இல்லாத பிறசமயத்தார் தங்களின் தேவர்களை விட்டுவிட்டு மனந்திரும்பி சத்திய வேதத்தில் உட்பட்டார்கள். இவ்வாறு மனந்திரும்பினவர்களுக்குள்ளே தியாகோ என்னும் ஒரு பக்தியுள்ளவன் இருந்தான். அவனுக்கு செல்வமில்லாதிருந்த போதிலும் தான் இருக்கும் அந்த நிலையிலும் மகிழ்ச்சியுடன் சர்வேசுரனுக்குத் தோத்திரம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தான். தேவமாதாவின் பேரில் தான் வைத்த பக்தியினால் சனிக்கிழமை தோறும் ஒரு காத தூரமான மெக்சிக்கோ நகருக்குச் சென்று பூசை காண்பான்.

அந்நகருக்குச் செல்லும் பாதை நடுவில் ஓர் சிறு மலை இருந்தது. இந்த மலையின் மேல் பிற சமயத்தார் பழங்காலந்தொட்டு தாகி எனும் ஓர் தேவதைக்கு பிரபல்யமான ஆராதனை செய்து வந்தபடியால் இந்த மலை மகா பெயர் பெற்றதாம். ஆனால் தேவமாதா இந்த இடத்திலேயே தனக்கும் ஓர் கோவிலைக் கட்டுவிக்கவும், தன்னுடைய இரக்கத்தின் வல்லமையைக் காண்பிக்கவும் திருவுளங் கொண்டாள்.

எவ்வாறெனில் 1531-ஆம் ஆண்டில், சனிக்கிழமை தியாகோ என்பவன் தன் வழக்கப்படியே மெக்சிக்கோ நகருக்கு திருப்பலி காண அதிகாலையில் சென்று மேற்சொல்லிய சிறு மலையருகில் சேர்ந்தவுடனே இனிய குரலோசை அவன் காதில் விழவே, அது என்னவென திரும்பிப் பார்த்தான். அப்பொழுது மிகுந்த தொனியுள்ள ஒரு சிறு மேகத்தையும் அதைச் சூழ மகா பிரகாசம் பொருந்தின் ஒரு பச்சை வில்லையும் கண்டான். இந்த மகிமையான பாவனையை மகா சந்தோஷத்துடன் அவன் பார்க்கும் பொழுது, மேகத்தினின்று யாரோ தன்னை அழைக்கிறதாகக் கேட்டு மலைமீதேறி, ஓர் உன்னத அரியணையில் மிகுந்த அழகு சோபனமுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருக்கிறதைக் கண்டான்.

அன்னையுடைய திருமுகமானது சூரியனுக்கு ஒப்பாய் இருந்ததையும், அன்னையுடைய திருஉடைகளிலிருந்து புறப்படுகிற ஒளியின் கதிர் சுற்றிலும் இருக்கிற கற்பாறைகளின் மேல் பட்டு அவைகள் இரத்தினங்களைப்போல் ஒளிரச் செய்து கொண்டிருந்ததையும் கண்ட தியாகோ என்பவன் பிரமித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தான். அப்பொழுது அரியனையில் வீற்றிருந்த கன்னிகை அவனை நோக்கி, மிகுந்த பட்சத்துடன் நீ எங்கே போகிறாய் என்று கேட்க, நான் பரிசுத்த கன்னிகையைக் குறித்துப் பூசை காணப் போகிறேன் என்றான்.

அதற்கு ஆண்டவள், உன்னுடைய பக்தியும் மனத்தாழ்ச்சியும் நமக்கு மிகவும் பிரியமாயிருக்கின்றன. நாம் மெய்யான கடவுளின் தாயானதால் இவ்விடத்தில் நம்மைக் குறித்து ஓர் கோவில் கட்ட வேண்டும். இவ்விடத்தில் நம்முடைய விசேஷமான வரங்களை அளித்து உனக்கும் உன் நாட்டினருக்கும் மற்ற பக்தியுள்ள விசுவாசிகளுக்கும் அன்புள்ள தாயைப்போல நாம் இருப்போம். நீ கண்டதையும் கேட்டதையும் ஆயரிடத்தில் போய் நாம் சொன்னதாகச் சொல் என்றாள்.

தியாகோ என்பவன் எளிய மனிதனாக இருந்த போதிலும் ஆயரிடத்தில் போய் தான் கண்டதெல்லாம் அவருக்கு அறிவித்தான். ஆயரோவென்றால் அதைக்கேட்டு சந்தேகப்படாதிருந்த போதிலும், தேவசித்தத்தின் ஓர் அடையாளம் தமக்கு வேண்டுமென்று சொல்லி, ஒன்றும் செய்யாதிருந்தார். தியாகோ என்பவன் தன் ஊருக்குத் திரும்பிப் போகையில், அந்த சிறு மலையின் முன் சொன்னபடியே பரிசுத்த கன்னிகையை மறுபடியும் கண்டான். அவன் ஆயர் சொன்னதை அன்னைக்கு அறிவித்தபோது நல்லது அந்த அடையாளத்தை கொடுப்போம் என்றாள்.

இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு தியாகோ என்பவன் மலை அருகில் வந்தபோது தேவமாதா அவனுக்குத் தன்னைக் காண்பித்து அன்பான வார்த்தைகள் சொல்லி நீ இந்த சிறு மலையிலேயிருந்து சில மலர்களைப் பறித்துக்கொண்டு வாவென்றாள்.

அப்போது மலர்கள் பூக்கிற காலமில்லாதிருந்தாலும், அவன் தேவ நாயகியின் வார்த்தையை நம்பி மலை மீது ஏறிச் சென்று அவ்விடத்தில் சிறந்த மணமுள்ள மலர்கள் இருந்ததைக்கண்டு அவைகளுள் நல்லவைகளையும் பறித்துக்கொண்டு மீண்டும் தேவமாதாவிடம் வந்தான். அன்னை இம்மலர்களை வாங்கிக் கட்டி அவனுக்கு மீண்டும் அளித்து, நீ இவைகளை ஆயரிடம் கொண்டு போ என்றாள். இம்மலர்களை தான் அணிந்திருந்த நெடுஞ் சட்டைக்குள் மறைத்து ஆயரிடம் சென்றான்.

ஆயருடைய பணிவிடைக்காரர் மலர்களின் மணத்தை முகர்ந்து தியாகோ என்பவனுடைய சட்டையைத் திறந்து மகா அதிசயமாய் சட்டைக்குள் உன்னத வேலையாகச் செய்யப்பட்ட மலர்களைக் கண்டார்கள். ஆயர் அருகில் வந்தவுடன் தியாகோ மலர்களைக் கொடுக்கச் சட்டையைத் திறந்தான். அப்போது அவனுடையவும் ஆயருடையவும் கூட இருக்கிறவர்களுடையவும் கண்ணுக்கு இந்த சட்டையினுடைய பக்கத்தில் மிகவும் அழகாய் எழுதப்பட்ட தேவமாதாவின் ஓர் படம் இருக்கிறதாகத் தோன்றியது. உடனே ஆயரும் மற்றவர்களும் பிரமித்துச் சாஷ்டாங்கமாய் விழுந்து அந்த அற்புதமான படத்தை ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். பின்னும் எழுந்திருந்து ஆயர் தியோகோவின் சட்டையைக் கழற்றி அதில் எழுதப்பட்டிருந்த படத்தை தம்முடைய அரண்மனையில் இருக்கும் கோவிலில் ஸ்தாபிக்கவே அத்திருப்படத்தை வணங்க அநேகர் திரண்டு வந்தார்கள்.

மறுநாள் ஆயர் திரளான ஜனங்களோடு தேவமாதா தம்மைக் காண்பித்த சிறு மலையைப் பார்க்கச் சென்றார். அவர் தேவமாதாவின் பாதம் படிந்த இடத்தைக் காண்பிக்க வேண்டுமென தியாகோவுக்குச் சொல்லும்போது, தியாகோ பயத்தினால் அதைக் காண்பிக்கக் கூடாதவனாய் இருக்கையில் பூமியினின்று அற்புதமாய் ஓர் நீரூற்று புறப்பட்டது. அந்த ஊற்று இந்நாள் மட்டும் இருக்கின்றது. ஆயர் அந்த அற்புதங்களால் தேவசித்தத்தை அறிந்து அந்தப் புனித ஸ்தலத்திலேயே ஓர் கோவிலைக் கட்டி அதில் இந்தச் சட்டையில் பதியப்பட்ட படத்தைப் பூச்சியமாய் வைத்தார். அந்தக் கோவில் சிறிதாக இருந்ததினால் சில ஆண்டுகளுக்குப்பின் பத்து இலட்ச ரூபாய் செலவில் ஓர் பிரமாண்டமான கோவிலைக் கட்டினார்கள். இந்தக் கோவிலுக்கு பெயரும் கீர்த்தியும் உலகில் எங்கும் உண்டாயிற்று.

இந்தச் சரிதையை கேட்கிற கிறிஸ்தவர்களே, தேவமாதாவின் வல்லபமும் அன்பும் தயாளமும் எவ்வளவென்று ஆராய்ந்து பார்த்து அன்னையின் அடைக்கலத்தைக் குன்றாத நம்பிக்கையோடு அண்டி வரக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 8

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 08
கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் புனித கன்னிமரியாயின் மகிமையை விளக்குகிறது

 1. இந்தப் பரம இரகசியத்தில், பரிசுத்த கன்னி மாமரி உலகத்துக்கெல்லாம் இராக்கினியாக நியமிக்கப்பட்டார்கள்.
  சுதனாகிய சர்வேசுரன் கன்னிமரியாயின் உதரத்தில் மனித உருவை எடுத்து அன்னைக்கு மெய்யான மைந்தனானார். அன்னையுடைய மைந்தன் அரசர்க்கெல்லாம் அரசருமாய் சகலருக்கும் ஆண்டவருமாய் அளவில்லாத மகிமைப் பிரதாபம் உடையவருமாய் இருந்தாலும், அவர் மற்றப் பிள்ளைகளைப் போல் தமது தாயாராகிய கன்னிமாமரியாயிக்குக் கீழ்ப்படிந்ததினால் அந்தப் பரிசுத்த கன்னிகை ஆண்டவருக்கு ஆண்டவளுமாய் எல்லோருக்கும் இராக்கினியுமாய் எண்ணரிய மகிமை பெற்றவராக இருக்கிறார்கள் என்று சொல்ல அவசியமில்லை. ஆகையால் அதிசயத்துக்குரிய தேவமாதா உயர்ந்த அரியணையில் இருக்கிறதையும் சம்மனசுகள் மாத்திரமல்ல, மோட்ச அரசராகிய சேசுநாதர் முதலாய் அவர்கள் விருப்பத்திற்கு இசைந்து நடப்பதைக் குறித்து மகிழ்ச்சியுற்று அன்னைக்கு கீழ்ப்படிந்த குமாரனை ஆராதித்துத் தேவமாதாவுக்குக் கொடுக்கப்பட்ட மகிமையைப்பற்றித் தோத்திரம் சொல்லுவோமாக.
 2. சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட பரம இரகசியம்.
  கன்னிமாமரியாள் தமது திரு உதரத்தில் சுதனாகிய, சர்வேசுரனைக் கர்ப்பந்தரித்த வேளையில் உலக செல்வங்களை அடையாமல், சகல ஞான செல்வங்களையும் சம்பூரணமாய் பெற்றுக் கொண்டார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. இதில் அறிய வேண்டியதாவது இந்தப் பரிசுத்த கன்னிகையானவர்கள் சர்வேசுரனுடைய தாயாவதற்கு முன்னே சகல வரப்பிரசாதங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், ஞான செல்வமாகிய இந்த வரப்பிரசாதங்கள் அன்னைக்கு சொந்தப் பொருள் என்று எண்ணாமல் சர்வேசுரனுக்குச் சொந்த நன்மை என்று சொல்ல வேண்டியிருந்தது. அன்னை தேவதாயார் ஆன பின்னர் சகல ஞான செல்வங்களையும் உடையவருமாய் சர்வ வரப்பிரசாதங்களுக்குக் காரணமுமாய் இருக்கிற சுதனாகிய சர்வேசுரன் அன்னையின் மைந்தனாதலால் அவர் கொண்டிருக்கிற ஞான நன்மைகளையெல்லாம் பங்கிடும் மத்தியஸ்தியாக விளங்குகின்றார்கள் அன்னை. அப்படி இருக்க, கன்னிமாமரியாள் மோட்ச நன்மைகளை நமக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்கள் என்பது பற்றி நம்பிக்கையோடு நமக்குத் தேவையான வரப்பிரசாதங்களை மிகுந்த தாழ்ச்சியுடன் அன்னையிடம் கேட்போமாக.
 3. சர்வேசுரனுடைய தாயாக உயர்த்தப்பட்ட பரம இரகசியம்.
  சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து உற்பவித்த நேரத்தில் கன்னிமாமரியாள் மற்ற மனிதர்களைப்போல் ஆண்டவருக்கு அடிமையாய் இருந்தாலும் தமது தேவதாய் தத்துவத்தில் தன்னைச் சுதந்திரத்தினால் சகல மோட்சவளால் வணங்கப்படவுள்ளார். அப்படிப்பட்ட தன்மை எவ்வளவு மேன்மையாய் இருக்கிறதென்று சொல்ல வேண்டுமானால் சர்வேசுரன் அன்றி வேறொருவராலும் சொல்ல முடியாது. சம்மனசுகள் முதலாய் அன்னையைக் குறித்து சதாகாலமும் பிரசங்கம் செய்து அன்னையுடைய உன்னத தன்மையை சொல்லிக் காட்டுவதற்கு துடிதுடித்தாலும் தகுந்த விதமாய் அன்னையைக் கொண்டாடவும் புகழவும் சக்தியற்றவர்களாய் இருப்பார்கள். இப்பேர்ப்பட்ட மகிமையும் வல்லபமுள்ள பரம தேவதாயை நாமும் நம்மால் கூடினமட்டும் ஸ்துதிப்போமானால் அன்னை நமக்குத் தேவையான உதவிகளைக் கொடுக்கத் தவறமாட்டார்களென நம்பிக்கையாய் இருக்கக்கடவோம்.
  செபம்
  பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே! சகல வரப்பிரசாதங்களுக்கும் காரணமாயிருக்கிற சேசுநாதரை நீர் பெற்றதினால் சகல ஞான செல்வங்களும் உடையவர்களாகி அவைகளை மனிதருக்குக் கொடுக்க உமக்கு வல்லபமும் மனதும் இருக்கிறதைப்பற்றி நான் மகிழ்ச்சியுற்று ஆறுதலடைகிறேன். ஆகையினால் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமக்கு ஒப்புக்கொடுத்து தேவரீர் என் எளிமைத்தனத்தைப் பார்த்து இரங்கி என் ஜீவிய காலத்திலும் மரண வேளையிலும் எனக்கு வேண்டிய அனுக்கிரகங்களைக் கொடுக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன்.
  அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  சேசுக்கிறிஸ்துநாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக. தேவதாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
  எட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  முடிந்தால் ஓர் எளியவருக்கு துணி கொடுக்கிறது. முடியாவிட்டால் ஆறுதலாவது சொல்லுகிறது.
  பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

தேவமாதாவின் வணக்கமாதம் மே 7

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 07
சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதின் பேரில்

 1. இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரனுடைய நேசம் விளங்குகிறது.
  சர்வேசுரன் உலகத்தை மீட்பதற்காக நமக்குச் சரிசமானமாய் இருக்கிற தம்முடைய ஏக குமாரன் மனித அவதாரம் எடுக்க சித்தமாகி கன்னிமரியாயிடத்தில் ஓர் சம்மனசை அனுப்பித் தமது சித்தத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கன்னிகை தமக்குச் சொன்ன மங்கள் வார்த்தைகளை மிகுந்த தாழ்ச்சியோடு கேட்டு தேவசித்தத்துக்கு உட்பட்டுச் சுதனாகிய சர்வேசுரனைத் தமது திரு உதரத்தில் பிள்ளையாகத் தரித்தார்கள் என்பது சத்தியம். இந்தப் பரம இரகசியத்தில் சர்வேசுரன் தமது அளவில்லாத நேசமும், மிகுதியான தயாளமும், அளவறுக்கப்படாத ஞானமும் விளங்கச் செய்தார். ஆகையால் பாவ விமோசனம் செய்வதற்குச் சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்து தமது இரத்தமெல்லாம் சிந்த வேண்டியதிருந்ததால் பாவமானது சகல பொல்லாப்பு களிலும் மிகப்பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்று அறியக்கடவோம். அத்துடன் நமது மீட்பருக்கு தாயாக சர்வேசுரன் கன்னிமரியாயைத் தெரிந்து கொண்டதினால் அவருடைய தயாளத்துக்காக தோத்திரம் சொல்லி தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன வானதூதருடன் சேர்ந்து அன்னையை நாம் வணங்குவோமாக.
 2. தேவ சுதனுடைய மனத்தாழ்ச்சி விளங்குகிறது.
  தேவமாதாவின் திரு உதரத்தில் மனித அவதாரம் எடுத்த சுதனாகிய சர்வேசுரன் நம்மை மிகவும் தாழ்த்திக்கொண்டார். எப்படியெனில் நோவுக்கும் சாவுக்கும் எட்டாதவருமாய்ச் சர்வத்துக்கும் வல்லவருமாய் அளவில்லாதவருமாய் இருக்கிறவர் மனித அவதாரத்தின் வழியாக சாவு நோவு வேதனை முதலான நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு பாவத்தினால் தமது பிதாவாகிய சர்வேசுரனுக்கு வந்த அவமானங்களைப் பரிகரிக்க வேண்டுமென்று தம்மை அளவின்றித் தாழ்த்திக் கொண்டார். தாழ்ச்சியாகிற புண்ணியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக அளவின்றித் தம்மை தாழ்த்திக்கொண்ட சர்வேசுரன் சமூகத்தில் நீசப்புழுவாகிய மனிதன் அகங்காரங்கொள்ளுகிறது எவ்வளவு அநியாயமும் அக்கிரமுமாயிருக்கிறது. ஆனால் தாழ்ச்சியில்லாதவன் கரையேறக் கூடாது என்பதினால் மிகவும் அவசியமான இந்தப் – புண்ணியத்தை உங்கள் ஆத்துமத்தில் விளைவிக்க வேண்டுமென்று தேவமாதாவையும் அவர்களுடைய திரு மைந்தனையும் நோக்கி மன்றாடுவீர்களாக.
 3. தேவமாதா பெற்ற மகிமை விளங்குகிறது.
  இந்தப் பரம இரகசியத்தில் கன்னி மாமரியாள் அடைந்த உன்னத மகிமையைப்பற்றி தியானிப்போம். சுதனாகிய சர்வேசுரன் அவர்களிடத்தில் மனிதவதாரம் எடுத்த வேளையில் அந்தப் பரிசுத்த கன்னிகை ஒருக்காலும் கன்னி மகிமை கெடாமல் சர்வேசுரனுடைய மெய்யான தாயாகி மனிதர்களுக்கும் சகல சம்மனசுகளுக்கும் மேலானார்கள். சர்வேசுரன் அளவில்லாத வல்லமையுள்ளவராய் இருந்தாலும், இந்த மேன்மையைவிட அதிகமான மேன்மை வேறு எவருக்கும் அவரால் கொடுக்க முடியாது. வேதபாரகர் சொல்லியுள்ளபடி சர்வேசுரன் இந்த உலகத்தைக் காட்டிலும் மேன்மையான வேறு உலகை உண்டு பண்ணலாம். ஆனால் தேவமாதாவைப் பார்க்க அதிக உத்தமமான மாதாவை உண்டு பண்ண முடியாது. ஆகையால் அத்தகைய மேலான மகிமையைப் பெற்ற கன்னிமாமரியாள் திருப்பாதம் பற்றி அவர்களை உற்சாகத்தோடு வணங்கி அன்னையின் அடைக்கலத்தை தேடிச் செல்வோமாக.
  செபம்
  சர்வேசுரன் மேன்மையான மகிமைப் பிரதாபத்துக்குத் தெரிந்து கொண்ட நிகரில்லாத பரிசுத்த கன்னிகையே! பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியே, தாழ்ச்சியுள்ள மாமரியே! என் அகங்கார கர்வத்தோடு உமது அண்டையில் நிற்க வெட்கப்பட்டு நான் உம்மிடத்தில் பேச அஞ்சி நடுங்குகிறேன். ஆகிலும் பாவியாயிருந்தாலும் வானதூதரோடு உமக்கு மங்கள வார்த்தை சொல்ல ஆசையா யிருக்கிறேன். ஆகையால் அருள் நிறைந்த மரியாயே வாழ்க! நீர் பூரணமாய் அடைந்த இஷ்டப் பிரசாதத்தில், ஏதாகிலும் எனக்குக் கொடுத்தருளும். சர்வேசுரன் உம்மிடத்தில் இருக்கிறாரே அவர் என்னிடத்தில் இருக்கவும் நான் அவருடன் மோட்சத்தில் வீற்றிருக்கவும் எனக்கு தயை செய்தருளும்.
  அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே, வாழ்க.
  ஏழாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  ஒவ்வொருவரும் தான் பாவசங்கீர்த்தனம் எப்போது செய்ததென்றும், தன் குடும்பத்திலுள்ளவர்கள் எப்போது செய்தார்களென்றும் விசாரிக்கிறது.
  பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

தேவமாதாவின் வணக்கமாதம் மே 06

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 06
தேவாலயத்தில் தேவமாதாவின் ஜீவியம்
1-வது பரிசுத்த கன்னிகை சர்வேசுரனை நாடி நடந்து கொண்டிருந்தார்கள்.
எவ்வித ஆசீர்வாதத்தினாலும் வரங்களினாலும் நிறைந்திருந்த தேவதாய் மறைந்த ஜீவியம் ஜீவிப்பதற்காக தேவாலயத்துக்குச் செல்லும்பொழுது நாமும் அவர்களுடன் கூடச் சென்று அவ்விடத்தில் அவர்களுடைய சுகிர்த நடவடிக்கைகளை காண்போம். தேவாலயம் தேவ ஊழியத்துக்கு மாத்திரம் குறிக்கப்பட்டிருக்கிறதை அவர்கள் நினைத்து அவ்விடத்திலிருக்கும் வரையிலும் சர்வேசுரனை மாத்திரமே நாடி அவரை சகல புண்ணியங்களாலும் பிரியப்படுத்த வேண்டுமென்று கவலையாயிருந்தார்கள். காலையில் உதிக்கிற சூரியனானது மென்மேலும் அதிக ஒளியுடன் விளங்குகிறது போல் நம்முடைய ஆண்டவள் புண்ணியத்தினாலும் சாங்கோபாங்கத்தினாலும் நாளுக்கு நாள் அதிகமதிகமாய் விளங்கித் துலங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடத்தில் தேவ சிநேகமும் மனத்தாழ்ச்சியும் சாந்த குணமும் தபசும் அடக்கவொடுக்கம் முதலான சுகிர்த புண்ணியங்களும் அதிக சோபையுடன் விளங்கிக்கொண்டிருந்தன.
நாமும் அந்தச் சுகிர்த மாதிரிகையைப் பின்பற்றி நம்மால் முடிந்த அளவுக்கு பிரயாசைப்பட்டு நம்முடைய ஆத்துமங்களைப் புனிதப்படுத்துவதற்கு முயற்சிப்போம். எல்லோரும் தேவமாதாவைப்போல் ஓர் விசேஷமான வார்த்தைப்பாட்டைக் கொடுத்து தங்களைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்கிறது அவசரமல்ல. இத்தகைய பாக்கியம் தெரிந்து கொள்ளப்பட்ட சிலருக்கு மட்டுமே கிடைக்கின்றது. அவர்கள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூவாசைகளையும் வெறுத்துத் தங்களை சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஆனால் நாம் எந்த அந்தஸ்திலிருந்தாலும் தேவ கற்பனைக்கு ஏற்றவாறு நடக்கவும், தபம், தருமம் செய்யவும் மீட்பு பெறுவதற்குரிய நற்கிரிகைகளைச் செய்யவும் கடமைப்பட்டிருக்கிறோம். இந்நாள் மட்டும் அந்தக் கடனை தகுந்த அளவில் செலுத்தி வந்தோமோ இல்லையோவென சிந்தித்துப் பார்ப்போமாக.
2-வது சர்வேசுரனை மாத்திரமே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
தேவமாதா, தேவாலயத்தில் மறைந்து தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருந்ததுபோல நடந்து சர்வேசுரனை இடைவிடாமல் நினைத்து அவரை அதிகமாக நேசித்து வந்தார்கள். அப்போது அர்ச். அமிர்தநாதர் தேவமாதாவைப் பற்றி கூறுவதுபோல, தேவ சத்தியங்களை அதிக பக்தியோடு தியானித்து அவசரங்களில் மாத்திரம் பேசுவார்கள். தன் இருதயத்தில் பற்றி எரிகிற தேவசிநேக அக்கினியால் ஒடுக்கம் நல்லதென்று எண்ணி செபத்தில் சர்வேசுரனோடு பிணைக்கப்படுவதை மாத்திரம் பெரிதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் சர்வேசுரனை மாத்திரம் நாடி இடைவிடாமல் அவருடைய சமூகத்தில் நடக்கக்கடவோம். அவரை அடிக்கடி நினைத்து நாம் செய்கிறது எல்லாம் அவருக்கு பிரியமாய் இருக்கும் கருத்தோடு செய்யக்கடவோம்.

 1. சர்வேசுரனுக்காக மாத்திரமே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
  தேவமாதா சர்வேசுரனுக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நொடியாகிலும் வீணாக செலவழிக்காமல் எப்போதும் செபிக்கிறதும் கைவேலைகளைச் செய்கிறதும் ஞான புத்தகங்களை வாசிக்கிறதும் இன்னும் அநேக சுகிர்த புண்ணியங்களை நிறைவேற்றுவதுமே அவர்களுடைய அலுவலாயிருந்தது. சர்வேசுரனிடத்தில் திரளான தேவ வரங்களை அடைந்து, அபூர்வமான நன்மாதிரிகையும் பரிசுத்தமான புண்ணியங்களையும் தம்முடைய நடத்தையால் நன்கு காண்பித்து வந்தார்கள். அவர்களுடைய தேவசிநேகம் மட்டில்லாததுமாய், தாழ்ச்சி கரைகாணாததுமாய் மாசில்லாததுமாய், தேவபக்தியானது குறைவில்லாததுமாய் இருந்ததுமன்றி மாமரியன்னையுடைய சுகிர்த நடத்தை பிறருக்கு ஓர் கண்ணாடி போல் விளங்கினதாம். நாம் இந்த அதிசயத்துக்குரிய திருக்கன்னிகையின் நன்மாதிரிகையைப் பின்பற்றுவோம். அவர்களுடைய நல்ல வழியைப் பின்பற்றி நடக்கிறது நமக்கு நன்மையும் அவசியமுமாய் இருக்கின்றது.
  செபம்:
  திவ்விய கன்னிகையே! என் இரட்சகருடைய தாயாவதற்கும், பாவிகளுக்கு அடைக்கலமாவதற்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தாயாரே, என்பேரில் இரக்கமாயிரும். பாவியாகிய நான் உம்முடைய தஞ்சமாக ஓடிவந்து உமது பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுகிறேன். நான் உம்முடைய கிருபையை அடைவதற்குப் பேறு பெற்றவனா(ளா)யிராத போதிலும், உம்மை நம்பிக்கையோடு மன்றாடுகிறவர்களை ஒருக்காலும் நீர் புறக்கணிப்பதில்லை என அறிந்து நான் உம்மைக் கெட்டியான நம்பிக்கையோடு இரந்து மன்றாடுகிறேன். ஆகையால், சகல மோட்சவாசிகளின் இராக்கினியே, என் ஈடேற்றத்தை அலட்சியம் செய்து எண்ணிக்கையில்லாத பாவங்களைக் கட்டிக்கொண்ட பாவியாகிய எனக்கு உதவி செய்தருளும். நீர் சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ளவர்களாய் அவரிடத்திலே எவ்வித நன்மையையும் பெறுவதற்கு பேறு பெற்றவர்களாய் இருக்கிறதினால் எனக்கு மகா தயை செய்து எனக்காகச் சர்வேசுரனிடத்தில் மன்றாடி நான் பாவ வழியை விட்டு விலகி சுறுசுறுப்போடு மீட்புப் பெறும்படியாக கிருபை செய்தருளும்.
  அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  நான் உம்மை ஸ்துதிக்கவும், என் சத்துருக்களை வெல்லவும் உதவி செய்தருளும் தாயே.
  ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  பிற சமயத்தினர் சிலரிடம் வேதத்தைப்பற்றி பேசி அவர்களுக்கு சத்தியத்தைச் தெளிவிக்கிறது.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 05

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 05
தேவமாதா தம்மைக் காணிக்கையாக சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்ததின் பேரில்

 1. பரிசுத்த கன்னிமாமரியாள் சிறு வயதில் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
  தேவமாதா செய்ததானது சுகிர்த பக்தி முயற்சிகளால் நிறைந்திருக்கிறது மல்லாமல், சகல புண்ணியங்களுக்கும் மாதிரிகையாகவும் இருக்கிறது. அவர்கள் குழந்தையாயிருக்கும்போது, இதோ! அதிசயமான வர்த்தமானம் அவர்களிடத்தில் நடந்தது. அதென்ன வென்றால், மூன்று வயதில் அவர்கள் சர்வேசுரனுடைய தேவாலயத்துக்குச் சென்று தேவ ஊழியம் செய்வதற்குத் தன்னை கொடுக்கப்போகிற வார்த்தைப்பாட்டையும் வேண்டிய வருத்தத்தையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் தன்னை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற காரணத்தினால் தேவபக்தியினாலும் தூண்டப்பட்டு தாமதப்படாமல் தடங்கல் எல்லாவற்றையும் நீக்கி தான் நினைத்ததை நிறைவேற்றத் துளார்ந்தார்கள். அப்படியே மூன்று வயதில் தேவமாதா தன்னைச் சர்வேசுர ணுக்கும் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கத் துணிந்ததைப் பார்க்கும்பொழுது, தேவ கற்பனைகளை அனுசரிக்கிறதில் உங்களுக்குள் சோம்பலும் தேவ சித்தத்தின்படி நடக்கிறதில் நீங்கள் செய்யும் தாமதமும் சர்வேசுரனுக்கு எவ்வளவு அருவருப்பாயிருக்குமென்று அறிந்து, ஆண்டவருக்கு உங்களை ஒப்புக்கொடுக்கிறதற்கு நேரிடும் சகல விக்கினங்களையும் தவிர்க்கும்படியாக விவேகமுள்ள கன்னிமாமரியாயைப் பார்த்து வேண்டிக் கொள்வீர்களாக.
 2. முழுவதும் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
  தேவமாதா பாலவயதில் சர்வேசுரனுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிற சமயத்தில் முழுதும் உத்தம விதமாய் ஒப்புக்கொடுத்துத் தன்னிடத்தில் உள்ள அனைத்தையும் தானம் செய்து தனது சரீரத்தையும் ஆத்துமத்தையும் சர்வேசுரனுக்குக் கையளித்தார்கள். ஆயினும் அவர்களுக்குண்டானவைகள் எல்லாவற்றையும் அளிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் ஓர் மனதைக் கொண்டிருப்பதால் அதைக் கொடுக்கிற வேளையில் அவர்கள் அனுபவித்த சந்தோஷமும் பக்திப் பற்றுதலுள்ள உணர்ச்சியும் இவ்வளவென்று சொல்லவும் கருதவும் முடியாது. நீங்கள் அதை நினைக்கிற பொழுது ஓர் காரியம் அறிய வேண்டியது அவசியம். ஒருவன் சர்வேசுரனுக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறதில் அரைகுறையாய்க் கொடுத்தால் அவருக்கு அவ்வளவு பிரியப்படாமல் இருக்கிறதும் தவிர, தனக்கு வரக்கூடிய ஞானப் பலனையும் குறைத்துக் கொள்வான். சர்வேசுரன் நமது இருதயத்தின் முழு சிநேகத்துக்கும் உரியவராக இருக்கிறதினால் நமது முழு இருதயத்தையும் முழு சிநேகத்தையும் அவருக்குக் கொடுக்க வேண்டும்.
 3. தேவமாதா தம்மை ஒப்புக்கொடுத்தார்கள்.
  தன்னை எப்பொழுதும் சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தார்கள். அதெப்படியென்றால் : மனிதரிடத்தில் காணப்படுகிற நிலையற்ற தன்மையும் சமயத்துக்கு சமயம் ஏற்படும் மாறுங்குணமும் கன்னிமரியாயிடத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை. அவர்கள் நன்னெறியில் நடக்கத் தொடங்கின நாள் முதற் கொண்டு ஒரு போதும் பின் வாங்காமல் நாளுக்கு நாள் ஞான சுறுசுறுப்போடும் பக்திப் பற்றுதலோடும் பிரமாணிக்கத்தோடும் நடக்கப் பிரயாசைப்பட்டார்கள். மனிதரோவெனில் தேவமாதா காட்டின புண்ணிய மாதிரிகையைக் கண்டு பாவியாகாமல், நன்னெறியில் ஒரு நாள் நடந்து மறு நாள் விட்டுவிட்டு, பாவம் செய்யமாட்டோமென்று அன்று பண்ணின் பிரதிக்கினையை அன்றுதானே மறந்து, தினந்தினம் சர்வேசுரனுக்குத் துரோகிகளாய் நடப்பது அவர்களுக்கு வழக்கமாயிருந்தது.
  இத்தகைய வழக்கம் சர்வேசுரனுக்கு ஏற்காதென்று நீங்கள் நிச்சயித்து அவருக்குச் செய்த துரோகங்களை வெறுத்து உறுதியான பிரதிக்கினை செய்து புண்ணிய வழியில் கெட்டியான மனதோடு நடக்கப் பிரயாசைப் படுவீர்களாக.
  செபம்.
  பரிசுத்த கன்னிமாமரியாயே, மூன்று வயதில் தேவாலயத்துக்குச் சென்று சர்வேசுரனுக்கு உம்மை ஒப்புக்கொடுத்தீரே. நான் உம்மைச் சிநேகித்து உமக்கு ஊழியம் செய்வதற்கு என்னை உமக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்ற ஆசையை ஏற்றுக்கொள்ளும். திவ்விய கன்னிகையே! சர்வேசுரனுக்குப்பிறகு உம்மையன்றி எனக்கு வேறு தஞ்சமும் அடைக்கலமும் நம்பிக்கையுமில்லை என அறிந்து இன்று முதல் எப்பொழுதும் என் தாயாகவும், என்னை இரட்சிக்கிறவர்களாகவும் நான் உம்மை தெரிந்து கொண்டு என்னை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். என் மனது, புத்தி, நினைவு; கிரிகை, ஜீவியம் முதலானவைகளையும் என்னிடத்திலுள்ள யாவையும் உமக்குக் கையளிக்கிறேன். நீர் இராக்கினியாக இருந்து என் ஆத்துமத்தை நடத்தியருளும்.
  அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  உம்முடைய தயாபமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்
  ஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  இன்றைக்கு ஒருசந்தியாயிருக்கிறது.
  தொடர்ந்து இனைந்திருங்கள்

தேவமாதாவின் வணக்கமாதம் மே 04

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 04
தேவமாதாவின் திருநாமத்தின் பேரில்

 1. தேவமாதாவின் நாமம் சுகிர்த நாமம்
  தேவமாதா கொண்டிருக்கிற மாமரியாள் என்ற நாமத்தைவிட அன்னையுடைய மேன்மையையும் மகிமையையும் அறிகிறதற்குத் தகுதியான வேறோர் நாமமே இல்லை. இந்தத் திருநாமத்துக்கு சமுத்திரத்தின் நட்சத்திரம் என்பது பொருள். ஆகையால் பெருங்காற்று அடிக்கிற சமுத்திரமாகிய இந்த “உலகில் வாழுகிறவர்களுக்கு ஒளிவீசுகிற நட்சத்திரம் போலவும் சுடரான தீபம் போலவும் கன்னிமாமரியாள் எல்லோருக்கும் மோட்ச வழியைக் காட்டி அவர்கள் யாவருக்கும் துணையாக விளங்குகிறார்கள். அர்ச். பெர்நர்து என்பவர் எழுதியதாவது : புயலுள்ள கடலாகிய இந்த உலகத்தில் சஞ்சரிக்கிற நிர்ப்பாக்கியமான மனிதனே, நீ வழிதப்பி அமிழ்ந்திப் போகாமல் கரையேற நட்சத்திரமாகிய கன்னிமாமரியாயைப் பார்த்து வேண்டிக்கொள்ளுவாயாக. தந்திரமுள்ள, மோகமுள்ள வேளைகளிலேயும் தேவன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆங்காரம், கோபம், மோகம், காய்மகாரம் முதலான துர்க்குணங்கள் உன் ஆத்துமத்தில் கிளம்பி நீ பாவத்தில் விழப்போகிற வேளையில் நட்சத்திரமாகிய அன்னையைப் பார்த்து வேண்டிக் கொள்ளுவாயாக. ஆபத்துக்களிலும் நிர்ப்பாக்கியங்களிலும் நிர்ப்பந்தங்களிலும் எவ்வித துன்ப துரிதங்களிலும் மரியாயை நினைத்து வேண்டிக்கொள்ளுவாயாக. அந்தத் திருநாமமானது உன் நெஞ்சிலும் உன் வாயிலும் என்றும் இருக்கக்கடவதாக. அன்னையைப் பின் சென்றால் வழி தப்பிப்போகாமலும், வேண்டிக்கொண்டால் நம்பிக்கையைக் கைவிடாமலும், தாங்கப்பட்டால் விழாமலும் கரையேறி மோட்ச வீடு சேருவாய்.
 2. தேவமாதாவின் நாமம் மகிமையுள்ள நாமம்.
  அன்னை மாமரியாள் என்ற திருநாமத்து நாயகி, ஆண்டவள், இராக்கினி என மற்றொரு பொருளும் உண்டு. பரிசுத்த கன்னிகை தனக்குண்டான மேன்மையாலும், தான் உரிமையாய்ப் பெற்ற சுதந்திரத்தாலும் உலகத்துக்கெல்லாம் இராக்கினியாகவும் சம்மனசுக்களுக்கெல்லாம் ஆண்டவளாகவும் மனிதர்களுக்கெல்லாம் தாயாராகவும் நியமிக்கப்பட்டார்கள். இதுபற்றியே ஜனங்களெல்லாரும் மகிமைப் பிரதாபமுள்ள இப்பெயரால் அன்னையைக் கூப்பிடுகிறார்கள். “திவ்விய கன்னிமரியாயே! உமது திருநாமத்தில் அடங்கி இருக்கிற பொருளின்படியே பரலோகத்தில் நீர் மகிமையுடன் வீற்றிருந்து பசாசுகளுக்குப் பயமுண்டாக்கி பூலோகத்திலே வணங்கப் பெறுவீராக. சர்வேசுரனல்லாத எல்லாவற்றையும் விசேஷமாய் எங்கள் மனதுகளையும் நீர் இராக்கினியாக இருந்து நடத்தி, நாங்கள் படுகிற துன்பங்களில் ஆதரவுமாய் பலவீனத்திலே வல்லமையுமாய், அந்தகாரத்திலே ஞான ஒளியுமாய், மரண நேரத்தில் ஞான நம்பிக்கையுமாய் இருப்பீராக!”
 3. தேவமாதாவின் நாமம் வணக்கத்துக்குரிய நாமம்.
  அர்ச். பிரான்சீஸ்கு என்பவர் பரிசுத்த கன்னிமாமரியாயை நோக்கிச் சொன்னதாவது: உமது திருக்குமாரனுடைய ஆராதனைக்குரிய சேசுநாதர் என்ற நாமத்துக்குப் பிறகு, நீர் கொண்டிருக்கிற மாமரியாள் என்கிற நாமத்தை அல்லாமல், மனிதர்களுக்கு வரப்பிரசாதத்தையும் நம்பிக்கையையும் இன்பமான சந்தோஷத்தையும் அதிகமாக வருவிக்கிறதற்குத் தகுதியான நாமம் வேறொன்றும் இல்லை. அர்ச். பொனவெந்தூர் என்பவர், திவ்விய கன்னிமரியாயே, உமது திருநாமத்தை வணங்கி சிநேகிக்கிறவன், பாக்கியமுள்ளவனாய் ஆறுதல் அடைந்து நற்கிரிகைகள் செய்து வருவான் என்றார். அந்த மேன்மையான நாமத்தை சொல்லுகிறவனுக்கு ஆறுதல் வராமல் இருக்காது ஆறுதல் வராமல் இருக்காது. அந்தத் திருநாமத்தைக்கேட்டு பசாசு நடுநடுங்கி ஓடிப்போக, சோதனையெல்லாம் நம்மைவிட்டு அகன்று விடும். சோதனை வேளையில் பரிசுத்த கன்னிமாமரியை வேண்டிக் கொள்ளாததினால் பாவத்தில் விழுந்தீர்கள் என்பதை அறிந்து, அத்தகைய தினம் இனியும் உங்களுக்கு நேரா வண்ணம் சோதனை நேரத்தில் தேவமாதாவின் உதவியைக் கேளுங்கள். உங்கள் எதிரியைத் துரத்தி உங்களைக் காப்பாற்றுவார்களென நம்பிக்கையுடன் இருங்கள்.
  செபம்.
  மிகவும் நேசத்துக்குரிய பரிசுத்த கன்னிகையே! உம்முடைய திருநாமத்தை உச்சரிக்கும்பொழுதெல்லாம் நெஞ்சிலே யாவருக்கும் உமது பேரில் பக்தி உண்டாகிறதும் அல்லாமல் உம்மை நினைக்கிறவர்கள் எல்லோரும் அதிகமதிகமாய் உம்மைச் சிநேகிக்கத் துணிகிறார்கள். ஆண்டவளே, என் பலவீனத்தை நீக்கி எனக்குத் திடனளித்து, இந்தக் கண்ணீர்க் கணவாயில் எனக்கு வேண்டிய உதவிகளை நல்கியருளும். நீர் பிரத்தியட்சமாய்ச் சர்வேசுரனைத் தரிசித்து அவர் அருகில் நீர் இருப்பதனால், எங்களுக்காக வேண்டிக்கொள்ள உம்மைவிடத் தகுதியானவர்கள் இல்லை . எங்கள் இராக்கினியே நீர் உமது திருமைந்தனிடம் கேட்கும் எல்லாம் அவசியம் கொடுக்கப்படும். ஆகையினால் நீர் எமக்காக மனுப்பேசியருளும். நாங்கள் இவ்வுலகில் உமது திருமைந்தனாகிய சேசுநாதரை முழுமனதோடு நேசித்து மறுவுலகில் என்றும் அவரைச் சிநேகிக்க எங்களுக்கு விசேஷ உதவியை அடைந்து கொடுத்தருளும்.
  அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  மரியாயே வாழ்க, ஆண்டவளே வாழ்க, சமுத்திரத்தின் நட்சத்திரமே வாழ்க.
  நான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  கல்லறை உள்ள இடத்தில் போய் உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறது

தேவமாதாவின் வணக்கமாதம் மே 03

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 03
தேவமாதா பிறந்ததின் பேரில்

 1. தேவமாதா பிறந்த நாளில் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிற்று.
  பரிசுத்த கன்னிமாமரியாள் குழந்தையாய்ப் பிறந்த நேரத்தில், மற்றப் பெண்களைவிட அன்னை மேற்பட்டவர்களானதினால், திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா சுதன், பரிசுத்த ஆவியானவர் அன்னையை மிகுந்த அன்போடு நேசித்தார்கள். பிதாவாகிய சர்வேசுரன் தமது மிகுதியான அன்புக்குரிய குமாரத்தியாகவும், சுதனாகிய சர்வேசுரன் தாம் மனித அவதாரம் பண்ணும் தேவதாயாராகவும், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தமது இஷ்டப்பிரசாதத்துக்குப் பாத்திரமான தேவாலயமாகவும் கிருபைக் கண்கொண்டு அன்னையை நோக்கினார்கள்.
  சம்மனசுக்களோவெனில், பிறந்திருக்கும் பரிசுத்த குழந்தை தங்களுக்கு இராக்கினியாய் இருப்பார்களென்று சந்தோஷப்பட்டு, அன்னை பிறந்த நேரத்தில் அன்னைக்குக் கீழ்ப்படிதலான மேரையாய் அன்னையை ஸ்துதித்து நமஸ்கரிக்கவும் பாராட்டவும் திரளாய் வந்தார்கள். நாமோவென்றால் சர்வேசுரன் இந்தக் குழந்தையின் மேல் வைத்த நேசத்தை வணக்கத்தோடு அனுசரித்து பிறந்த வேளையில் அன்னைக்குக் கையளிக்கப்பட்ட வரப்பிரசாத மிகுதியைக் கண்டு சம்மனசுக்களோடுகூட சந்தோஷித்து இன்று முதல் மரண பரியந்தம் அன்னையின் அடைக்கலத்தில் இருக்க வேண்டுமென மன்றாடக் கடவோம்.
 2. தேவமாதா பிறந்த நாளில் பூலோகத்தில் நம்பிக்கை உண்டாயிற்று.
  சர்வேசுரன் ஆதி மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியின் படியே மனிதர்களை மீட்க ஒரு இரட்சகர் வருவாரென்று 4000 ஆண்டுகளாக மக்களெல்லாரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். பாவத்தினாலே பசாசின் கொடூர அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்த நிர்ப்பாக்கியமான மனிதர்களை இரட்சிக்கிற நேரம் நெருங்கிய பொழுது, பூமியில் பிரகாசத்தையும் செழிப்பையும் பொழிகிற சூரியன் உதிக்கிறதற்கு முன்னர் உதயகாலம் வருகிறது போல பாவத்தின் இருளை நீக்கிச் சகல உயிர்களுக்கும் ஞான ஒளி வீசுகிற நீதியின் சூரியனாகிய சேசுநாதர் பிறக்கிறதற்கு முன்னர் விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய அன்னை கன்னிமாமரியாள் பிறந்தார்கள். நேசத்துக்குரிய தேவமாதா பிறந்த நாளை நினைத்து நம் ஆண்டவளுக்கான வணக்கத்தையும் நம்முடைய தாயாருக்கான அன்பையும் காண்பித்து அவர்களுடைய உதவியையும் ஆதரவையும் மன்றாடுவோமாக.
 3. தேவமாதா பிறந்த நாளில் நரகத்தில் பயம் உண்டாயிற்று.
  பசாசின் தலையை நசுக்க முன்னர் குறிக்கப்பட்ட கன்னிகை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து இந்த நாளில் பிறந்திருக்கிறார்கள். பிறந்த தேவமாதாவுக்குக் கிடைத்த இஷ்டப் பிரசாதங்களையும் வரங்களையும் பசாசு அறிந்திருந்தால் அதற்கு எவ்வளவு காய்மகாரம் உண்டாகியிருக்கும். மனுமக்களின் எதிரியான பசாசு தான் அடைந்த நிர்ப்பாக்கியத்தில் மனிதரை அமிழ்த்தித் தனக்கு அடிமையாக்கி அவர்கள் நரகத்தில் விழும்படிக்கு வெகு பிரயாசைப் படுகின்றது. ஆனால் மனிதரை இரட்சிக்க வருகிற சேசுக்கிறிஸ்து நாதரின் நேச அன்னை இந்த பசாசின் தலையை நசுக்கியிருக்கிறதினால் அதற்கு மகா பலவீனம் வந்தது சரியே. ஆகவே நாமெல்லாரும் பலவீனப்பட்ட பசாசுக்குப் பயப்படாமல், சோதனை வேளையில் அதை நாம் வெல்லும்படியாக மகா பரிசுத்த கன்னிகையிடம் மிகுந்த நம்பிக்கையோடு வேண்டிக்கொள்வோம்.
  செபம்
  நேசத்துக்குரியவர்களாய்ப் பிறந்த கன்னிமரியாயே வாழ்க! நீதி சூரியனுக்கு முன் உதிக்கிற விடியற்காலத்து நட்சத்திரமே வாழ்க, நீர் பிறந்த நேரத்தில் உம்முடைய திருப்பாதத்தைத் தாள் பணிந்து வணக்கத்தோடு உம்மை ஸ்துதித்து என்னை முழுவதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். எங்களுக்குப் பூரண ஞானபாக்கியத்தைக் கொடுக்கப் பிறந்தவர்கள் நீரே : துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவும் பலவீனர்களுக்கு வல்லமையும், பாவிகளுக்கு அடைக்கலமும் சகல நிர்ப்பாக்கியர்களுக்குத் தஞ்சமும் நீரே. சர்வேசுரன் என் பாவங்களின் பாரத்தைப் போக்கி, என் ஆத்துமத்தின் ஞான அந்தகாரத்தை நீக்கி, என் துர்க்குணங்களையெல்லாம் சீர்ப்படுத்தி, என் சத்துருக்கள் கையில் நின்று என்னை இரட்சிக்கும்படிக்கு நீர் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அப்போது உம்முடைய ஆதரவை அடைந்து தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு இந்த உலகில் நல்வழியில் நடந்து மோட்ச இராட்சியத்தில் சேருவேன் என நம்பிக்கையாய் இருக்கிறேன்.
  புனித பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  பிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க! இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.
  மூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  தேவமாதாவைக் குறித்து ஓர் பிணியாளனைச் சந்தித்து ஆறுதல் சொல்லுகிறது.

தேவமாதாவின் வணக்கமாதம் மே 02

தேவமாதாவின் வணக்கமாதம்
மே 02
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையின் பேரில்

 1. தேவதாய் பிறந்த வேளையில் அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம் எவ்வளவு முக்கியமானது என்று ஆராய்ந்து பார்க்கிறது.
  சர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களெல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த வரமே. மற்ற மனிதர்களோடு கூடப் பிறக்கிற ஜென்மப் பாவத்தை அன்னையிடத்திலே நீக்கி அந்த மகத்தான தன்மையை அன்னைக்கு மாத்திரம் வழங்கினார்.
  பரிசுத்த கன்னிமாமரியாள் தேவதாயாராவதற்கு நியமிக்கப்பட்டதாலும், சர்வேசுரன் அன்னை போரில் தமது பிரியத்தை வைத்திருந்ததாலும், நரக பாதாளத்தின் பாம்பாகிய பசாசின் தலையை நசுக்குகிறவர்களானதாலும் ஓர் நொடியாயினும் பசாசுக்கு அடிமையாயிருக்கவும் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கவும் கூடவில்லை. அத்தகைய பொல்லாப்பு தேவ நீதிக்கும் தெய்வீக பரிசுத்தத்தனத்துக்கும் பொருந்தாது. ஆகையால் பரிசுத்த கன்னிமாமரியாள் உற்பவித்த முதல் நொடி துவக்கி எப்போதும் மாசில்லாதவர்களென்றும், அன்னையுடைய திரு ஆத்துமம் சகல வரப்பிரசாதங்களினாலும் புண்ணியங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததென்றும், தெய்வீகத்துக்குத் தேவாலயமாகிய அன்னை உள்ளத்தில் அற்பப் பாவ முதலாய்ப் பிரவேசித்ததில்லையென்றும் திருச்சபையில் வழங்கி வரும் சத்தியம் நமக்குத் தெளிவிக்கின்றது. ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்தது, விசுவாச சத்தியமென்று பரிசுத்த பிதா ஒன்பதாம் பத்திநாதர் 1854-ஆம் ஆண்டு வரையறுத்துக் கூறினார். இதுவே தேவமாதாவின் பிரதானமான மகிமை. நாமும் இந்த மேலான மகிமையை மதித்து ஸ்துதித்து அப்படியே மரண, பரியந்தம் விசுவசிப்போமென்று உறுதியான பிரதிக்கினை செய்வோமாக.
 2. அன்னை அந்த வரப்பிரசாதத்தை எவ்வளவு அருமையாய் மதித்தார்கள் என்று ஆராய்ந்து பார்க்கிறது.
  பரிசுத்த கன்னிமாமரியாள் சர்வேசுரனுடைய மாதாவானபடியால், மனிதர்களுக்கும் சம்மனசுகளுக்கும் இராக்கினியும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளுமாய் இருக்கிறது நியாயமே. ஆனால் தேவதாய் என்னும் இந்த உன்னதமான மகிமையைவிடப் பாவமில்லாமல் உற்பவித்து எப்போதும் மாசில்லாமலிருக்கிறதே அன்னைக்குப் பிரியமாயிருந்தது. ஏனெனில் இதனால் சர்வேசுரனுக்கு உகந்தவர்களாய் இருக்கிறபடியினால், முன் சொல்லப்பட்ட இரண்டு மகிமையில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சர்வேசுரன் கட்டளையிட்டால், விவேகமுள்ள அந்தக் கன்னிகையானவர்கள் தேவதாயாக இருக்கிறதைவிட ஜென்மப் பாவமில்லாமல் இருக்கிறதே மேல் என எண்ணி இதையே தெரிந்து கொள்வார்களென வேதபாரகர் உறுதியாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒரு நொடியாகிலும் அற்பப் பாவத்தோடிருக்கிறதும் அதனால் சர்வேசுரனுடைய கோபத்துக்குப் பாத்திரமாயிருக்கிறதும் பெரிய நிர்ப்பாக்கியத்துடன் தனக்கு எந்த நன்மை வந்தாலும் எவ்வித சந்தோஷமும் இல்லையென்று நினைப்பார்கள்.
  மனிதர் அப்படி நினைப்பார்களோ? ஐயையோ? பாவத்தில் விழுந்து அதில் அநேக நாள் அநேக மாதம் கிடந்து, உத்தம மனஸ்தாபப்படாமலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமலும் இருக்கிறார்கள். ஆனால் தேவமாதா நினைத்தது போலவே சகல பொல்லாப்புக்களையும்விட பாவமானது பெரிய பொல்லாப்பாய் இருக்கிறதென்றும் அதற்கு மாத்திரமே பயப்பட வேண்டுமென்றும் அறிந்து உலகத்துக்கடுத்த புத்தி சாமர்த்திய முதலான நன்மைகளைவிட இஷ்டப்பிரசாதம், புண்ணியம், பரிசுத்தத்தனம் முதலான ஆத்தும நன்மைகள் மேலானவை என்று கண்டுணருவோமாக.
 3. அந்த வரப்பிரசாதத்தைக் காப்பாற்றுகிறதற்காக அன்னை பட்ட பிரயாசை எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.
  பரிசுத்த கன்னிமாமரியாள் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து பாவத்துக்குச் சார்புள்ள குணமில்லாமல், இஷ்டப்பிரசாதத்தில் நிலைபெற்றவர்களாயிருந்தாலும், பாவத்தில் விழாதபடிக்குச் சர்வேசுரன், அன்னைக்கு உதவி செய்திருந்தாலும், பாவத்துக்குப் பயந்து ஐம்பொறிகளை அடக்கி மிகுந்த விவேகத்துடனே நடந்தார்கள். சோம்பலை நீக்கித் தனது அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாய் நிறைவேற்றி சரீரத்தை ஒறுத்துத் தபசு செய்து நாள்தோறும் அதிகம் அதிகமாய்ச் சுகிர்த புண்ணியங்களைச் செய்யப் பிரயாசைப்படுவார்கள்; நாமோவெனில் இஷ்டப்பிரசாதத்தில் நிலைகொள்ளாமல், ஜென்மப் பாவத்தோடும் துர்க்குணத்தோடும் பிறந்திருப்பதினாலும், பாவத்துக்கு மனச்சார்புள்ளவர்களாய் இருப்பதினாலும், புண்ணியத்தைச் செய்யாமல் அநேக பாவங்களில் விழுந்தவர்களாய் இருப்பதினாலும் தேவமாதா நமக்குக் காண்பிக்கிற சுகிர்தமாதிரிகையைப் பின்பற்றாது அசமந்தமாயிருக்கிறோம். ஆகையால் அன்னையை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக்கொள்வோமாக.
  செபம்
  கல்வாரி நாதருடைய மாதாவே! ஆதிமனிதன் பாவம் செய்த பிறகு பாம்பினுடைய தலையை நசுக்க சர்வேசுரனால் குறிக்கப்பட்டவர்கள் நீரே, பசாசின் கபட தந்திரத்தில் ஒருக்காலும் அகப்படாமல் பசாசை செயித்தவர்கள் நீரே, பசாசானது உமது திருப்பாதத்தின் கீழிருக்கிறதைக் கண்டு நான் சந்தோஷப்படுகிறேன். மிகுந்த இரக்கமுள்ள கன்னி மாமரியாயே, என் மாற்றானாகிய பசாசு எனக்குச் செய்த தந்திரங்களை பாரும். உம்முடைய உதவியைக் கேட்டு உம்மை பக்தியோடு வேண்டிக் கொண்டிருந்தால் பசாசு என் ஆத்துமத்தில் இத்தனை கேடுகளை வருவித்திருக்க மாட்டாது. இனிமேல் எனக்கு வருகிற தந்திரங்களில் தாழ்ச்சியான நம்பிக்கையோடு உம்மை மன்றாடுவேன்.
  நேசத்துக்குரிய தாயாரே ! வல்லபம் பொருந்திய கன்னிகையே என் துர்க்குணங்களை அடக்கி என் சத்துருக்களை ஜெயிக்கும்படியாகவும் நீர் என்பேரில் இரங்கி எனக்கு இந்த உலகத்தில் உதவி செய்து மோட்ச இராச்சியத்தில் உம்மோடுகூட எனக்கு இடம் கிடைக்கும்படியாகவும் மன்றாடுவீரென்று நம்பிக்கையாய் இருக்கிறேன்.
  புனித பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
  மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
  ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.
  இப்படி மூன்றுமுறை சொல்லவும் -1,பர. 3,அருள். திரி.
  இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :
  உம்முடைய மாசில்லாத கன்னிமையையும் ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையையும் பார்த்து பரிசுத்த கன்னிமரியாயே, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் சுத்தப்படுத்தியருளும்.
  இரண்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :
  தேவமாதாவைக் குறித்து ஓர் ஏழைக்கு தருமம் கொடுக்கிறது

தேவமாதாவின் வணக்கமாதம் மே 01

தேவமாதா சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டதின் பேரில்

1. தேவமாதா சர்வேசுரனால் மேலான பதவிக்கு நியமிக்கப்பட்டவராகும்.

சர்வேசுரன் ஆதியில் தமது திருக்குமாரன், மனிதவதாரமெடுத்து உலகத்தை இரட்சிப்பாரென்று தீர்மானித்து, அந்தத் திருக் குமாரனுக்குத் தாயாராக இருக்கும்படிக்கு மற்றப் பெண்களைத் தெரிந்து கொள்ளாமல் பரிசுத்த கன்னிமாமரியாயைத் தெரிந்து கொண்டார். பரலோகத்தில் சம்மனசுக்களும் பூலோகத்தில் மனிதர்களும் பெற்றுக்கொண்ட மகிமையும் பிரதாபமும் அவர்களுடைய மகிமைக்கும் பிரதாபத்துக்கு முன் ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. சர்வேசுரனுடைய திருக்குமாரனுக்குத் தாயாரானதிலேயும், உண்டாக்கப்பட்ட சகல வஸ்துக்களுக்குள்ளே மேலானவருமாய் சம்மனசுக்களுடைய நவ விலாச சபைக்கு இராக்கினியானவருமாய்க் கிறிஸ்தவர்களுக்குத் தாயாருமாய் மனிதர்களுக்காக மனுப்பேசுகிறவருமாய் இருக்கிறதினாலேயும் மாமரி அன்னைக்கு அனந்த பிரதாபமுண்டு. சிநேகத்துக்குரிய தம்முடைய தாயாராகிய பரிசுத்த கன்னிமாமரி அடைந்த மேன்மையும் அன்னை பாவிகளுக்காக வேண்டி சர்வேசுரனிடத்தில் அப்படிப்பட்ட அபிமானத்தை அடைந்திருக்கிறார்கள் என்கிறதையும் பற்றி சர்வேசுரனுக்குத் தோத்திரம் சொல்லி அந்த இராக்கினி பாதத்தில் விழுந்து அன்னைக்கு மேன்மைக்குரிய வணக்கத்தையும் செய்வோமாக.

2. தேவமாதா சர்வேசுரனால் பூரண பரிசுத்தத்தனத்துக்கு நியமிக்கப்பட்டவராகும்.

தேவகுமாரனுக்குத் தாயாரானவரும் பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவரும் தெய்வீகத்துக்குத் தேவாலயமுமாகிய பரிசுத்த கன்னிமாமரியாள் எவ்வளவோ புண்ணியம் உள்ளவர் என்று சொல்லவும் கருதவும் முடியாது. அன்னையிடத்திலே ஓர் அற்பப் பாவமும், அற்பக்குறையும் காணப்படுகிறதில்லை. அன்னையில் சகல புண்ணியங்களும் சகல சுகிர்தங்களும் விளங்குகிறதுமல்லாமல் தேவமாதா ஆத்துமத்தை அலங்கரிக்கிற வரங்களுக்கும் எண்ணிக்கையில்லை. சர்வேசுரனால் சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்களைவிட அன்னை அதிகமாய் பெற்று தேவ இஷ்டப் பிரசாதத்தினால் பூரணமாய் அலங்கரிக்கப்பட்டு தேவ உதவிகளைக் கொண்டு எண்ணப்படாத பேறுபலன்களை அடைந்து, பூர்வீகத்திலும் வருங்காலத்திலும் எப்போதும் சிருஷ்டிகளுள் நிகரில்லாதவராய் இருக்கின்றார்கள். நாமோவெனில் சர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களில் கொஞ்சமாகிலும் நமக்கு அவர் கொடுக்க வேண்டுமென்று மன்றாடி நாம் பரிசுத்தராகும்படிக்கு பரிசுத்த கன்னிமாமரி அன்னை காட்டின் புண்ணிய மாதிரிகைகளைக்கூடிய மட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோம்.

3. தேவமாதா சர்வேசுரனால் உயர்ந்த மகிமைக்கு நியமிக்கப்பட்டவராகும்.

சிருஷ்டிக்கப்பட்ட வஸ்து மோட்சத்தில் எவ்வளவு உயர்ந்த மகிமையை அடையக்கூடுமோ அவ்வளவு உயர்ந்த மகிமையை பரிசுத்த கன்னிமாமரி அடைந்திருக்கிறார்கள். மோட்ச இராச்சியத்தில் தமது திருக்குமாரனாகிய சேசுநாதர் வலது பாரிசத்தில் புனிதர்களுக்கும் சகல சம்மனசுக்களுக்கும் மேலாய் உன்னத சிம்மாசனத்தில் அமர்ந்து, அதிமிக பிரதாபமுள்ள இராக்கினியாக தேவமாதா விளங்குகிறதைச் சகல மோட்சவாசிகளும் காண்பார்கள். சர்வேசுரனைத் தவிர மற்ற அனைவரும் அந்த ஆண்டவளுக்குக் கீழிருந்து, மோட்சவாசிகள் எல்லோரும் ஊழியுள்ள காலம் மாமரி அன்னையை வணங்கி, சகலரும், நரகத்திலுள்ள பாவாத்துமாக்கள் முதலாய் அன்னையுடைய திருநாமத்தைக் கேட்டுச் சங்கை மேரையாய்த் தெண்டனிடுவார்கள். இவ்வளவு உன்னத மகிமையை அடைந்த நமது தாய்க்கு ஸ்தோத்திரம் சொல்லி அன்னையின் அடைக்கலமான ஆதரவுக்குப் பாத்திரவான்களாகும்படி நாம் பிரயாசைப்பட வேண்டியது நியாயமாகாது? மோட்ச இராக்கினி தமது திருக்குமாரனிடத்தில் ஒரு விசையாகிலும் நமக்காக மன்றாடினால் எவ்வளவோ சகாயங்களை அடைவோம். நாம் அன்னையைத் தாழ்ச்சியோடு வணங்கி, உண்மையான பட்சம் வைத்து, நம்பிக்கையோடும் சுறுசுறுப்போடும் வேண்டிக்கொண்டால் நமக்காக மன்றாடுவார் என்பதற்குச் சந்தேகமில்லை.

செபம்

சேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன். ஆகிலும் வேதபாரகர் எழுதியிருக்கிறபடி உமது பேரில் வைத்த நேசமான பக்தியானது மோட்சம் சேருவதற்கு நிச்சயத்துக்கு அடுத்த அடையாளமாய் இருக்கிறதினால் ஆறுதலடைந்து தேறி சந்தோஷப்படுகிறேன். என் நல்ல தாயாரே! நான் உம்மைச் சிநேகித்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைத்து கூடின மட்டும் எவ்விதத்திலும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். உமது பேரில் நம்பிக்கை வைத்து, சாகும் வரையிலும் உம்மை சிநேகித்து, உமக்கு ஊழியம் செய்தால் நான் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டு, உம்முடைய உதவியினால் பேரின்ப பாக்கியத்தை அனுபவிப்பேன் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஆனால் என் பலவீனமும் என் உறுதியின்மையும் உமக்கு தெரிந்திருக்கின்றதே. என் ஆத்துமத்தில் நீர் மூட்டின் பக்தி ஒருக்காலும் குறையாமல் மரணமட்டும் நிலைக்கொண்டு நான் இடைவிடாமல் உம்மை வணங்கி சிநேகித்து மன்றாடி மோட்சத்தை அடைந்து உம்மோடுகூட சதாகாலமும், நானிருக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

புதுமை

புனிதர்கள் இவ்வுலகிலிருக்கும்பொழுது தேவமாதாவை மிகுந்த பக்தியோடு வணங்கினதுமல்லாமல், இந்த பரம நாயகியின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையும் வணக்கமும் எங்கும் பரம்பச் செய்தார்கள். இதில் சில புனிதர்களைப்பற்றி மாத்திரம் இங்கு விவரிப்போம்;புனித ஞானப்பிரகாசியார் இராஜா தேவமாதாவின் அனுக்கிரகத்தினாலே பிறந்ததுமன்றி இந்தப் பரமநாயகியான இராக்கினியின் விசேஷ உதவியினால், சகல புண்ணியங்களையும் அனுசரித்து, தர்மக்கிரிகைகளைச் செய்து, பிரபல்யமான காரியங்களை நடத்தி, தான் சாகும் வரையிலும் சாவான பாவமின்றி சீவித்தார். அவர் பெரிய இராஜாவாயிருந்தாலும் தேவமாதாவுக்கு குறிக்கப்பட்ட சனிக்கிழமைதோறும் தமது அரண்மனையில் அநேக ஏழைகளை அழைத்து, அவர்கள் பாதங்களைக் கழுவித் துடைத்துச் சாப்பிட உட்காரச் சொல்லி அவர்களுக்குத் தாமே பரிமாறுவார். பிறகு அவர்களுக்கு தானம் கொடுத்துச் சந்தோஷமாய் அனுப்புவார். தேவமாதாவின் பேரில் வைத்த சிநேகத்தின் முகாந்தரமாகத் தாம் ஓர் சனிக்கிழமை சாக வேண்டுமென விரும்பின் அந்நாளிலே மிகுந்த சந்தோஷத்துடன் பாக்கியமாக மரித்தார்.புனித சவேரியார் தம் வாழ்நாள் எல்லாம் அதிக நேசத்துடன் தேவமாதாவை கொண்டாடி வந்தார். சத்திய வேதத்தை எங்கும் பிரபல்யப்படுத்த தாம் பட்ட அளவுகடந்த பிரயாசை வருத்தங்கள் மத்தியில் எப்போதும் பரிசுத்த கன்னிகையை நம்பி மாதாவினுடைய அனுக்கிரகத்தைத் தேடி வந்ததுமல்லாமல், தாம் மனந்திருப்பின ஜனங்கள் யாவரும் மாதாவின் பேரில் பக்தியாயிருக்கும்படி அவர்களைத் தூண்டுவார். கடைசியாக அவர் சாகும் வேளையில் அதிக பக்தியுடன் அன்னையை மன்றாடி அடிக்கடி அன்னையை நோக்கி, “நீர் எனக்குத் தாயாராயிருக்க வேண்டுமென உம்மை மன்றாடுகிறேன்” என்பார்.புனித தெரேசம்மாள் தனது சிறு வயதிலேயே தன்னைத் தேவமாதாவுக்கு முழுவதும் ஒப்புக்கொடுத்தார். தன்னுடைய சிநேகத்தை பரம் ஆண்டவளுக்குக் காண்பிக்கும் வகையில் தனது வீட்டில் ஓர் சிறு கோவிலைக் கட்டி அதில் பரிசுத்த கன்னிகையின் படத்தை ஸ்தாபித்து அதை அடிக்கடி சந்தித்து மலர்களையும் மற்றும் காணிக்கைகளையும் வைத்து மிகுந்த பக்தியுடன் செபிப்பார்.அவர்கள் தன் பன்னிரண்டாம் வயதில் தன்னைப் பெற்ற தாயை இழந்து போக நேரிட்டதால், உடனே தேவமாதா அண்டையில் வந்து அப்பரம இராக்கினியைத் தனக்குத் தாயாராகத் தெரிந்து கொண்டார். தேவமாதா அவர்களை மகளாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு எண்ணிறந்த வரங்களை அளித்து, மிகுந்த தயாளத்தோடு அன்னை காப்பாற்றிக் கொண்டு வந்தார்கள்.மிகவும் இரக்கமுள்ள தாயே

ஜெபம்…..

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது : பரிசுத்த கன்னிகையே! என் தாயே, என் ஆண்டவளே, என்னை வழி நடத்தியருளும்.

முதல் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவின் பீடத்துக்கு சில புஷ்பங்களைச் சாற்றுகிறது.

Holy week 2020 in Kottar Diocese

Amidst the covid 19 epidemic outburst Holy week and Easter festival have celebrated through live sessions in most of the Parishes in Kottar diocese.

Important parishes in Kottar diocese take the Holy service in digital media via YouTube and Facebook.
Churches like Punnai Nagar parish telecasted via Zoom.

Maravankudieruppu Parishioners from Kottar Diocese watch on different TV channels

Kottar bishop celebrated this service in the Bishop house Church and live telecasted in local tv.

Easter Sunday was celebrated earlier 7 pm rather than 11 pm.

Palm Sunday in Maravankudieruppu

Pascal Proclamation in Latin and Tamil

தமிழில்இலத்தீனில்
வானகத் தூதர் அணி மகிழ்வதாக

 

இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக

மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக

எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக.

இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று

இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக

முடிவில்லா மன்னரது பேரொளியால்

உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த

இருளனைத்தும் ஒழிந்ததென உணர்வதாக.

திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று

அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக.

இறைமக்கள் அனைவரது பேரொலியால்

இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக.

எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச்

சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதரர் சகோதரிகளே,

உங்களை வேண்டுகிறேன்:

என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே.

தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள்

சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே

திருவிளக்கின் பேரொளியை என்மேல் வீசி

இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக.

முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில்: உம்மோடு இருப்பாராக.

முன்: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.

பதில்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

முன்: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றிகூறுவோம்.

பதில்: அது தகுதியும் நீதியுமானதே.

கண்ணுக்குப் புலப்படாத இறைவனாகிய எல்லாம் வல்ல தந்தையையும்,

அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும்

இதயப் பற்றுதலோடு வாயாரப் பாடிப் புகழ்வது

மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும்.

கிறிஸ்துவே ஆதாமினால் வந்த கடனை

நமது பெயரால் என்றும் வாழும் தந்தைக்குச் செலுத்தி,

பாவத்துக்குரிய கடன்சீட்டை தம் திருஇரத்தத்தால் அழிந்துவிட்டார்.

ஏனெனில், பாஸ்கா விழா இதுவே.

இதில், மெய்யான செம்மறியாகிய கிறிஸ்து கொலையுண்டார்.

இவரது இரத்தத்தால் விசுவாசிகளின் கதவுநிலைகள் அர்ச்சிக்கப்படுகின்றன.

முற்காலத்தில், நம் முன்னோரான இஸ்ராயேல் மக்களை

எகிப்திலிருந்து விடுவித்து அவர்கள் பாதம் நனையாமல்

செங்கடலைக் கடக்கச் செய்தது இந்த இரவிலேதான்.

நெருப்புத் தூணின் வெளிச்சத்தால்

பாவத்தின் இருளை அகற்றிய இரவும் இதுவே.

பூவுலகெங்கும் இன்று கிறிஸ்துவில் விசுவாசங்கொண்டவர்களை

உலகின் தீய வழியிலிருந்தும் பாவ இருளிலிருந்தும் பிரித்து,

அருள்வாழ்வில் மீண்டும் சேர்த்துத் தூயவராக்கியதும் இந்த இரவிலேதான்.

சாவின் தளைகளைத் தகர்த்தெறிந்து,

கிறிஸ்து பாதாளத்திலிருந்து வெற்றி வீரராய் எழுந்ததும் இந்த இரவிலேதான்.

இத்தகைய மீட்பின் பயனை யாம் பெறாவிடில்

பிறந்ததால் எப்பயனும் இல்லையே.

நீர் எம்மீது தயைகூர்ந்து காட்டிய இரக்கம் எத்துணை வியப்புக்குரியது!

அடிமையை மீட்குமாறு மகனையே கையளித்த அளவில்லா அன்புப்பெருக்கே!

ஓ ஆதாமின் பாவமே!

உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!

இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்

பாக்கியமான குற்றமே!

ஓ மெய்யாகவே பேறுபெற்ற இரவே!

பாதாளத்திலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த காலமும் நேரமும் அறிய

நீ மட்டுமே பேறுபெற்றாய்!

இரவு பகல்போல் ஒளிபெறும்,

நான் மகிழ்வுற இரவும் ஒளிதரும் என எழுதியுள்ளது இந்த இரவைக் குறித்தே.

எனவே, புனிதப்படுத்தும் இவ்விரவின் திருநிகழ்ச்சி

அக்கிரமங்களை ஒழிக்கின்றது,

குற்றங்களைக் கழுவிப் போக்குகின்றது,

தவறினோர்க்கு மாசின்மையையும்

துயருற்றோர்க்கு மகிழ்ச்சியையும் அளிக்கின்றது,

பகைமையை விரட்டுகின்றது,

ஆணவத்தை அடக்குகின்றது,

மன ஒற்றுமையை உருவாக்குகின்றது.

ஆகவே, தூய தந்தையே,

இப்புனிதமான இரவில்

நாங்கள் உமது புகழ்ச்சிக்காக அளிக்கும் மாலைப் பலியை ஏற்றருளும்

தேனீக்களின் உழைப்பாலான மெழுகிலிருந்து உருவான இத்திரியைப்

புனித திருச்சபை தன் பணியாளரின் கையால்

பக்திச் சிறப்புடன் உமக்கு ஒப்புக்கொடுத்து மாலைப் பலி செலுத்துகின்றது.

இறைவனின் மகிமைக்காகச் செந்தீயாய்ச் சுடர்விட்டெரியும்

இந்த நெருப்புத் தூணின் பெருமையை அறிந்திருக்கின்றோம்.

இத்தீயிலிருந்து பல விளக்குகளை ஏற்ற,

தன் ஒளியிலிருந்து பங்குகொடுத்தாலும், அது குறைவுபடுவதில்லை.

ஏனெனில், தாய்த்தேனீ தந்த மெழுகு உருகுவதால்

இத் தீ வளர்க்கப்படுகின்றது.

விண்ணுக்குரியவை மண்ணுக்குரியவையோடும்

கடவுளுக்குரியவை மனிதனுக்குரியவையோடும் இணைந்தது

மெய்யாகவே பாக்கியமான இந்த இரவிலேதான்!

ஆகவே ஆண்டவரே, உம்மை வேண்டுகிறோம்.

உமது திருப்பெயரின் மகிமைக்காக அர்ச்சிக்கப்பெற்ற இந்த மெழுகுதிரி,

இவ்விரவின் இருளை ஒழிக்குமாறு,

குறைவுபடாமல் நின்று எரிவதாக.

இது இனிமைதரும் நறுமணமாக ஏற்கப்பட்டு,

விண்ணக விளக்குகளுடன் கலந்துகொள்வதாக.

விடிவெள்ளி எழும்போதும் இது சுடர்விட்டு எரிவதாக.

ஓருபோதும் மறையாத இந்த விடிவெள்ளி

உம் திருமகன் கிறிஸ்துவேதான்.

பாதாளத்திலிருந்து திரும்பி வந்து,

மனித இனத்தின்மீது அமைதியுடன் ஒளிவீசி,

என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்றவர் அவரே.

எல்: ஆமென்

Exsúltet iam angélica turba cælórum:

 

exsúltent divína mystéria:

et pro tanti Regis victória tuba ínsonet salutáris.

Gáudeat et tellus, tantis irradiáta fulgóribus:

et ætérni Regis splendóre illustráta,

tótius orbis se séntiat amisísse calíginem.

Lætétur et mater Ecclésia,

tanti lúminis adornáta fulgóribus:

et magnis populórum vócibus hæc aula resúltet.

[Quaprópter astántes vos, fratres caríssimi,

ad tam miram huius sancti lúminis claritátem,

una mecum, quæso,

Dei omnipoténtis misericórdiam invocáte.

Ut, qui me non meis méritis

intra Levitárum númerum dignátus est aggregáre,

lúminis sui claritátem infúndens,

cérei huius laudem implére perfíciat.

V/ Dóminus vobíscum.

R/ Et cum spíritu tuo.

V/ Sursum corda.

R/ Habémus ad Dóminum.

V/ Grátias agámus Dómino Deo nostro.

R/ Dignum et iustum est.

Vere dignum et iustum est,

invisíbilem Deum Patrem omnipoténtem

Filiúmque eius unigénitum,

Dóminum nostrum Iesum Christum,

toto cordis ac mentis afféctu et vocis ministério personáre.

Qui pro nobis ætérno Patri Adæ débitum solvit,

et véteris piáculi cautiónem pio cruóre detérsit.

Hæc sunt enim festa paschália,

in quibus verus ille Agnus occíditur,

cuius sánguine postes fidélium consecrántur.

Hæc nox est,

in qua primum patres nostros, fílios Israel

edúctos de Ægypto,

Mare Rubrum sicco vestígio transíre fecísti.

Hæc ígitur nox est,

quæ peccatórum ténebras colúmnæ illuminatióne purgávit.

Hæc nox est,

quæ hódie per univérsum mundum in Christo credéntes,

a vítiis sæculi et calígine peccatórum segregátos,

reddit grátiæ, sóciat sanctitáti.

Hæc nox est,

in qua, destrúctis vínculis mortis,

Christus ab ínferis victor ascéndit.

Nihil enim nobis nasci prófuit,

nisi rédimi profuísset.

O mira circa nos tuæ pietátis dignátio!

O inæstimábilis diléctio caritátis:

ut servum redímeres, Fílium tradidísti!

O certe necessárium Adæ peccátum,

quod Christi morte delétum est!

O felix culpa,

quæ talem ac tantum méruit habére Redemptórem!

O vere beáta nox,

quæ sola méruit scire tempus et horam,

in qua Christus ab ínferis resurréxit!

Hæc nox est, de qua scriptum est:

Et nox sicut dies illuminábitur:

et nox illuminátio mea in delíciis meis.

Huius ígitur sanctificátio noctis fugat scélera, culpas lavat:

et reddit innocéntiam lapsis

et mæstis lætítiam.

Fugat ódia, concórdiam parat

et curvat impéria.

O vere beáta nox,

in qua terrénis cæléstia, humánis divína iungúntur!

In huius ígitur noctis grátia, súscipe, sancte Pater,

laudis huius sacrifícium vespertínum,

quod tibi in hac cérei oblatióne solémni,

per ministrórum manus

de opéribus apum, sacrosáncta reddit Ecclésia.

Sed iam colúmnæ huius præcónia nóvimus,

quam in honórem Dei rútilans ignis accéndit.

Qui, lícet sit divísus in partes,

mutuáti tamen lúminis detrimenta non novit.

Alitur enim liquántibus ceris,

quas in substántiam pretiósæ huius lámpadis

apis mater edúxit.¹

Orámus ergo te, Dómine,

ut céreus iste in honórem tui nóminis consecrátus,

ad noctis huius calíginem destruéndam,

indefíciens persevéret.

Et in odórem suavitátis accéptus,

supérnis lumináribus misceátur.

Flammas eius lúcifer matutínus invéniat:

ille, inquam, Lúcifer, qui nescit occásum.

Christus Fílius tuus,

qui, regréssus ab ínferis, humáno géneri serénus illúxit,

et vivit et regnat in sæcula sæculórum.

R/ Amen.

Dec 25 bible reading at Maravankudiruppu 

டிசம்பர் 25 : நற்செய்தி வாசகம்
 இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.  
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14
அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.
தாவீதின் வழிமரபினரான யோசேப்பும் தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய, கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார்.
மரியா கருவுற்றிருந்தார். அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது. மரியா தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
வானதூதர் அவர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்.
உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்று கடவுளைப் புகழ்ந்தது.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

——————————————————

எளிமையான இறைவன்
உரோமைப் பேரரசு காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. முதலாவதாக, எத்தனை வரிகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு இராணுவத்தில் சேர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது.
நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 8 மைல்கள். வழக்கமாக பயணம் செய்வோர் தங்குவதற்கென ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்கு சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது. மரியாவும், யோசேப்பும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்கு கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுளின் குழந்தை பிறக்கிறது. இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்கு கிடைத்த இடம் எளிய இடம்தான். சற்று ஆழமாக சிந்தித்தால், இதுவும் கூட நமக்கு சிறந்த பொருள் தருவதாக அமைகிறது. நமது இறைவன் எளிமையை விரும்புகிற இறைவன். பகட்டையோ, ஆடம்பத்தையோ அல்ல என்பதையே இது காட்டுகிறது. 
இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலோ அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக்காண முற்படுவோம்.

விசுவாசப் பிரமாணம்

விசுவாசப் பிரமாணம்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசுக் கிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து, கன்னிமரியாளிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுச் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்துக்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையையும், புனிதர்களின் சமூக உறவையையும், பாவப்   பொறுத்தலையும், சரீர உத்தானத்தையும், நித்திய சீவியத்தையும், விசுவசிக்கின்றேன். ஆமென்.

எபிரேயர்களின் சிறுவர் குழாம் | Ebiraeyargalin Siruvar Kulam

எபிரேயர்களின் சிறுவர் குழாம் | Ebiraeyargalin Siruvar Kulam

எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக் கிளைகள் பிடித்தவராய்
உன்னதங்களிலே ஓசான்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன
பூவுலகும் அதில் வாழும் குடிகள் யாவரும்
அவர் தம் உடைமையே
ஏனென்றால் கடல்களின் மீது பூவுலகை
நிலை நிறுத்தியவர் அவரே
ஆறுகளின் மீது அதை நிலை நாட்டியவர் அவரே
ஆண்டவர் மலைமீது ஏறிச் செல்லத் தகுந்தவன் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவன் யார்?
மாசற்ற செயலினன் தூய உள்ளத்தினன் பயனற்றதில்
மனத்தைச் செலுத்தாதவன்
தன் அயலானுக்கு எதிராக வஞ்சகமாய் ஆணையிடாதவன்

இவனே ஆண்டவரிடம் ஆசி பெறுவான்
இவனே தன்னைக் காக்கும்
ஆண்டவரின் மீட்பு அடைவான்
இறைவனைத் தேடும் மக்களினம் இதுவே
யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே

வாயில்களே உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்
பழங்காலக் கதவுகளே உயர்ந்து நில்லுங்கள்
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்
போரில் வல்லவரான ஆண்டவரே இவர்

பாப்பரசர் பண்-2

சோபித சுந்தர ரோமை இராயனுக்கே
ஜே ஜே பாடுவோமே
இந்நில மீதினில் நன்மை ரூபனே
எத்திசையும் சத்யம் காக்கும் சுந்தர வீரனே
இறைவன் அருளால் உலகை ஆளும் எங்கள் அதிபனே (2)

பாப்பரசர் பண்(song of pope -1)

ரோமை ராஜ பூபனே நமோ நமோ
திருச்சபையின் தலைவராக செனித்த மாதவா
உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம் (2)
உலக பாசம் ஒழிந்த சற்பிறசாதனே (2)
இறைவன் அருளால் உலகை ஆண்ட மாதவா (2)
உம்மை நாடி தேடி நமஸ்க்கரிக்கின்றோம் (2)

The Second Church

Second Church

The The Second Church  is in the centre of the village. Over 100 people are able to sit and pray. Inside the Church, the statues of Blessed Virgin Mary, (now on St. Nallamana Matha Curia) Infant Jesus and St. Joseph have been placed on the altar. In front of the Church there was a bell, which was not covering the distance. So they purchased a big bell, but the church was not strong enough to hold the bell. So they hang up the bell on the near by a Tamarind tree. Presently the bell is used in our present Church, namely, Thasnavis Matha Church.

From 1820 onwards the Second Church was used as a veranda school. The School was up to second standard and the teaching method was by writing on the sand. When the school namely St. Mary’s Primary School was built and shifted to Main Road in 1908, it was converted as Church. Hence the service from the cemetery Chapel was shifted to the Second Church.

Basically this was used as an Grotto (Kurusady). Mainly this is used for multipurpose of conducting various functions.

1. Prayers and services in the evening

2. Marian Month ( May) was celebrated very grandly.

3.Village CommitteeThe village people assemble once in three years and elected one President and one Treasurer look after the Administration of Village and Church and its affairs till 1984. In 1984 the Village Committee was reconstituted by which one president, one secretary one treasurer and 29 executive committee members were elected by ballot. ‘, Village Committee meetings.

From 1940 the Liturgy of Holy mass was celebrated by Rev.Fr. Richard. When the Holy mass celebration started, then onwards the feast was also celebrated on August. Once in a Month, the Holy mass is celebrated on Sundays at 7.00 A.M. After 1947-51 Rev.Fr.Ambrose celebrated the Holy Mass once in a week. From then marriage and other Sacraments were also held there. (Previously for Marriage and other Sacraments people had to go to St.Antony’s Church, Kurusady). When the population increased the second church was not adequate to conduct services. So they decided to build another church.

The First Church of Maravankudieruppu

First Church

In olden days, there where only few Catholics who lived in small groups and were not able to build a Church. So they built a smallFirst Chapel ‘, chapel called Grottos Kurusady, to fulfill there spiritual needs. Similarly in Maravankudieruppu too they had built a small chapel in cemetery and the chapel was dedicated to Our Lady of Assumption. The said Our Lady Statue was brought from Kamanaickenpatti.

The tomb of Thiru. Swamiyadian Thirupappu Nadar is behind the chapel. Till 1920 Holy mass was not celebrated, but prayers were conducted by a Layman (upathesiar). He was responsible for maintaining the church with the offerings and the excess will go to him as his maintenance. His duty was to light up the oil lamp (alexandrian laurel oil-Punnai Oil) and conduct the prayer service. Lot of miracles happened to the people. Therefore the people suffering from illness used to sleep in night hours in the cemetery chapel for their recovery. As population grew steadily the chapel could not accommodate more peoples. So they decided to build another church which comes under the jurisdiction of Kottar diocese.