தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தின் பேரில்!

இந்த மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்து நாதர் நீங்கலாக எல்லா இருதயங்களிலும் மேன்மை உள்ளதுமாய் இருக்கின்றது.

எல்லாம் வல்ல சர்வேசுரன் படைத்த இருதயங்களில் திவ்விய இயேசுவின் திரு இருதயத்துக்கு இரண்டாவதாக மரியாயின் மாசற்ற இருதயமானது மேன்மையுள்ளதும் எவ்வித வணக்க, ஸ்தோத்திரத்துக்கும் தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது. திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் இந்த மேன்மையான இருதயத்தைப் படைக்கவும் உன்னத வரங்களாலும் விலையேறப்பெற்ற வரப்பிரசாதங்களினாலும் பூரண நிறைவுடன் அலங்கரிக்கவும் விரும்பினதினால் பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய அளவில்லாத வல்லபத்தைக் கொண்டு அந்த பரிசுத்த கன்னிகை தமக்கு தகுதியுள்ள குமாரத்தியாய் இருக்கிறதினால் அன்னைக்கு வணக்கம் அமைதி கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொடுத்தார். சுதனாகிய சர்வேசுரன் இந்த பரிசுத்த கன்னிகையின் திருவயிற்றில் ஒர் தகுதியான இருப்பிடத்தில் இருப்பதுபோல வாசம் பண்ணச் சித்தமாயிருந்ததால் தம்முடைய தாயாவதற்கு தகுதியான இருதயத்தைக் கொடுத்தார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் இந்த கன்னிகை தமக்கு மிகவும் பிரியமுள்ளவர்களா யிருக்கிறபடியால் அன்னைக்கு தேவ சிநேக அக்கினியினால் எரிகிற இருதயத்தைக் கொடுத்தார். இது இப்படியிருக்க இந்த திருஇருதயத்தில் கூடி இருக்கிற மேன்மையான சாங்கோபாங்கத்தை எந்த மனிதராலும் சொல்லவும் கண்டு பிடிக்கவும் இயலாது. மோட்சத்தில் இந்த மாசற்ற இருதயத்தை வாழ்த்திக் கொண்டாடி வருகிற சம்மனசுகளோடு நாமும் சேர்ந்து இந்தத் திருஇருதயத்தை உருக்கமான பக்தியோடு நேசித்து இந்தத் திரு இருதயத்தின் உன்னத மேன்மையை மோட்சத்தில் பார்த்துக் கொண்டாட முயலுவோம்.

பரிசுத்தம் உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது பரிசுத்தம் உள்ளதாக இருக்கிறது. எல்லா சுகிர்த புண்ணியங்களுடைய அதிசயத்துக்குரிய மாதிரிகையான இயேசுகிறிஸ்துநாதருடைய இருதயத்தின் உத்தம சாயலான இந்தத் திருஇருதயம் தேவ சிநேகத்தின் வேகமான அக்கினியால் பற்றியெரிந்து பக்தி சுவாலகர்களைக் காட்டிலும் சர்வேசுரனை அதிகமாய் நேசித்து மேலான கிரிகையினால் சர்வேசுரனுக்கு செலுத்தின மகிமையைக் காட்டிலும் அதிகமான தோத்திர மகிமை உண்டாயிற்று என்பது உறுதியான சத்தியம். தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இஷ்டப்பிரசாதத்தின் பொக்கிஷமே, சாங்கோபாங்கத்தின் சாயலே, எல்லா புண்ணியங்களின் இருப்பிடமே, நீர் எனக்கு எப்பொழுதும் மாதிரிகையாய் இருப்பீர் நான் உம்மிடத்தில் வந்து மனத்தாழ்ச்சியையும், கற்பையும், சாந்தகுணத்தையும், பொறுமையையும், உலக வெறுப்பையும், இயேசுகிறிஸ்துநாதருடைய சிநேகத்தையும் பெற்றுக்கொள்வேன்.

சிநேகிக்கத்தக்க தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்துநாதருடைய திருஇருதயம் நீங்கலாகத் தமது நிகரில்லாத சுகிர்த குணங்களினாலும் பொறுமை தயையினாலும் நமது மட்டில் வைத்த அன்பினாலும் நமது அன்புக்கும் நன்றியறிந்த மனதுக்கும் மிகவும் பாத்திரமுள்ளதாகும். அந்தத் திருத்தாயார் நமது அவசரங்களில் சிந்தையுள்ளவர்களாய் நாம் அடைந்துவரும் சகல துயரங்களிலும் நமக்கு ஆதரவும் தஞ்சமும் தேற்றரவுமாகத் தம்முடைய இருதயத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். நாம் அன்னையுடைய சிநேகத்துக்கு பிரதி சிநேகத்தை செலுத்தி பணிவிடையில் பிரமாணிக்கமாய் நடந்து அதிசயமான புண்ணிங்களைச் சுறுசுறுப்போடு கண்டுபாவித்து நம்முடைய நன்றியறிந்த பட்சத்தை அன்னைக்கு காண்பிக்கக்கடவோம்.

செபம்.

தேவமாதாவின் மாசற்ற திவ்ய இருதயமே! தேவசிநேகத்தின் இருப்பிடமே, தயாளத்தின் சமுத்திரமே, சமாதானத்தின் சிம்மாசனமே, மிகவும் சிநேகிக்கப்படத்தக்க இருதயமே, ஆராதனைக்குரிய ஏக திரித்துவத்துக்கு உகந்த தேவாலயமே, சம்மனசுகளாலும் மனிதர்களாலும் வணங்கப்பட தகுதிவாய்ந்த இருதயமே, எல்லாப் புண்ணியங்களுடைய மாதிரிகையே, இயேசுகிறிஸ்துநாதர் இருதயத்துக்கு ஒத்திருக்கும் சாயலே, எங்களுடைய அன்புள்ள தாயாருடைய திருஇருதயமே, எங்களுடைய துன்பங்களை உணர்ந்து எங்களுக்காக மிகுந்த கஸ்தி அவமானப் பாடுகளை அனுபவித்த திரு இருதயமே! சகல மனுமக்கள் இருதயங்களாலும் நன்றியறிந்த மனதோடும் உறுதியான நம்பிக்கையோடும் சிநேகிக்கப்படுவதற்கு பேறுபெற்ற திருஇருதயமே! நீசப்பாவியாயிருக்கிற அடியேன் உமக்கு செலுத்துகிற வணக்கத்துக்கு இரங்கி அடியேனுடைய மன்றாட்டுக்களைக் கேட்டு என்னுடைய அற்ப வேண்டுதலை ஏற்றுக்கொண்டு சகல மனிதருடையவும் இருதயங்களை உமது திருமைந்தன் பக்கமாய் திருப்பி உம்மிடத்தில் இடைவிடாமல் பற்றியெரிகிற தேவ சிநேக அக்கினி எங்களிடத்திலே எரியும்படி செய்தருளும். எங்களுடைய அவசரங்களிலே எங்களுக்கு உதவியாயிரும். துயரங்களில் தேற்றரவாயிரும். சோதனைகளில் திடனாயிரும். ஆபத்துக்களில் தஞ்சமாயிரும். மரணவேளையில் ஆதரவாயிரும், நித்திய ஜீவியத்தில் எங்களுக்கு பாக்கியமாயிரும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இயேசுகிறிஸ்து நாதருடைய திரு இருதயத்தின் உத்தமமான சாயலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருபத்தி ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயச் சபையில் பெயர் எழுதி வைக்கிறது.

புதுமை!

சகல மனிதருக்கும் பகைவனாக பசாசு அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய அநேக உபாயங்களைப் பண்ணப் பிரயாசைப்படுகிறது மன்றி அவர்கள் பாவத்தில் விழுந்த பின்பும், தாங்கள் செய்த பாவங்களுக்காக அதிக கூச்சத்தை உண்டாக்க அதைக் குருவிடத்தில் வெளிப்படுத்தாதவாறு தடை செய்யும்.

ஓர் மனிதன் நெடுநாள் புண்ணிய வழியில் நடந்து ஓர் நாள் பசாசினுடைய கொடிய சோதனையில் அகப்பட்டு பாவத்தைக் கட்டிக்கொண்டான். உடனே அதிக வருத்தமடைந்து பாவத்தினுடைய கொடூரத்தைக் கண்டு அதிகமாய் பயப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்ற நினைவு தேவ ஏவுதலினால் அவன் மனதிலே வந்தாலும் தான் கொண்ட கூச்சத்தினால் இந்த பாவத்தை எப்படி வெளிப்படுத்துவேனென்று கலங்கிப் பின்வாங்கினான். அப்படி பின் வாங்கினாலும் தான் செய்த குற்றத்தை நினைத்து அதிக மனவருத்தம் அடைந்து சாப்பிடவும் நித்திரை செய்யவும் முடியாத நிலையிலிருந்தான். அப்பொழுது அந்த தொந்தரவெல்லாம் நீங்கும் பொருட்டு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ஆற்றுக்குச் சென்றான். ஆற்றை அடைந்ததும் தனக்கு நித்திய நரக வேதனை நிச்சயம் கிடைக்குமெனப் பயந்து திரளான கண்ணீரை விட்டு ஆண்டவரைப் பார்த்து, என் பாவத்தைப் பொறுக்க வேண்டுமென்று மன்றாடின போதிலும் பாவசங்கீர்த்தனம் செய்ய தைரியமின்றி தத்தளித்து, அநேக கோவில்களை வேண்டுதலாக சந்தித்து அநேக செபங்களைப்பண்ணி தர்மங்களைச் செய்து தன் மனவருத்தம் தீரும்படியாய்த் திரிந்தாலும் எத்தகைய பயனும் ஏற்படவில்லை. ஓர்நாள் இரவில் தான் படும் மனக்கஷ்டத்தின் காரணமாக அதிக வருத்தப்பட்டு எப்படியும் பாவசங்கீர்த்தனம் செய்தே தீர்வேனென்று நினைத்து அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு அருகிலே சேர்ந்ததும் கூச்சத்தினால் பின்வாங்கி பாவசங்கீர்த்தனம் செய்யாமல் வந்து விட்டான். வேறொரு நாள் கோவிலுக்கு வந்து அதிகமான கூச்சத்தால் தடுக்கப்பட்டு ஒருபோதும் அந்த பாவத்தை சொல்லமாட்டேனென்று பின்வாங்கித் தன் வீட்டுக்குத் திரும்புமுன்னே தேவமாதாவுக்கு தன் நிர்ப்பாக்கியத்தைச் சொல்ல வேண்டுமென்று இந்தப் பரம நாயகியின் திருப்பாதத்தண்டையில் விழுந்து அன்னை தன் பேரில் இரங்கித் தன்னை கைவிடாதபடிக்கு மன்றாடினான். எவ்வித கிருபையும் உடைத்தான தேவமாதா இந்த நிர்ப்பாக்கியமான பாவியின் பேரில் இரங்கி அவன் படும் பயங்கரமான கூச்சத்தை நீக்கி விட்டாள். திருக்கன்னிகையின் பாதத்தில் அவன் விழுந்தவுடனே புது மனிதனாகி எழுந்து தைரியத்தோடு குருவானவரிடத்தில் போய்த் திரளான கண்ணீர் சிந்தி தான் செய்த பாவமெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் வெளிப்படுத்தினான். அப்போது அவன் மனதில் வந்த சந்தோஷமும் அமைதியும் எவராலும் எடுத்துரைக்க இயலாத அரிய காரியமாயிருந்தது.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய தேவமாதாவின் மாசற்ற இருதயத்தை மன்றாடக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26
தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!

தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.

தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எழுந்தருளி போனது விசுவாச சத்தியமென்று 1950-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அர்ச். பாப்பானவர் வரையறுத்துக் கூறினார்.

தேவமாதா இவ்வுலகத்தை விட்டு மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகிறபொழுது ஒன்பது விலாச சபைகளின் சம்மனசுகள் எல்லோரும் முத்திப்பேறுப்பெற்ற மோட்சவாசிகள் அனைவரும் தங்கள் இராக்கினிக்கு எதிர்கொண்டு வந்து இன்பமான பாட்டுக்களை பாடி பிரபலமான கொண்டாட்டம் செய்தார்கள். மோட்ச இராச்சியத்தின் எப்பக்கத்திலும் பரமநாயகி ஜெயசீலியாக வருகையில் ஓர் விசேஷ சோதிப் பிரகாசம் துலங்குவது போன்றிருந்தது. திவ்விய இயேசுவே தமது திருத்தாயாருக்கு எதிராக வந்து மிகுந்த அன்பு பட்சத்துடன் மோட்ச மகிமையான இராச்சியத்துக்குள் பிரவேசிக்க செய்தார். பிதாவாகிய சர்வேசுரன் அன்னையை தமது பிரிய குமாரத்தியாக ஏற்றுக்கொண்டு தம்முடைய ஏக குமாரரான உலக மீட்பரின் வலதுப் பக்கத்தில் அன்னைக்கு ஸ்தாபித்திருந்த சிம்மாசனத்தில் உட்காரச் செய்து அன்னையுடைய திருச்சிரசில் நித்திய ஆனந்தத்தின் முடியை சூட்டி பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாக ஸ்தாபித்து அன்னையுடைய திருக்கையில் தமது அளவில்லாத பொக்கிஷங்களைக் கொடுத்து தேவமாதாவாகவும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளாகவும், புத்தியுள்ள சகலரும் அன்னையை வணங்கி ஸ்துதித்து கொண்டாட வேண்டுமென கற்பித்தார். நாம் எல்லாரும் மோட்சவாசிகளுக்கு ஆனந்தமான அந்த வேளையில் அவர்கள் தேவமாதாவைக் குறித்து அனுபவித்த அகமகிழ்ச்சியை கொண்டு அந்த பரமநாயகியை அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடக்கடவோம். நமது அன்னையிடத்தில் எப்பொழுது சேருவோமோ என்ற ஆசை மிகுதியால் நம்மை மீட்க வேண்டுமென மன்றாடுவோம்.

தேவமாதா மோட்சத்தில் அடைந்த மகிமை.

தேவமாதா மோட்ச இராட்சியத்தில் அடைந்த உன்னத மகத்துவத்தை சிறிது ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரம் நாயகி உலக மீட்பருடைய மெய்யான தாயுமாய் எல்லா வரப்பிரசாதங்களினாலும் பூரணமாக அலங்கரிக்கப் பட்டவர்களுமாய் வாழ்ந்த 70 வருஷமளவும் உத்தம சுகிர்த புண்ணியங்கள் அனைத்தையும் செய்து தமது திருக்குமாரனுக்கு பக்தியுடன் பணிவிடை புரிந்து, புண்ணியவான்களை எல்லாரையும்விட உன்னத சாங்கோபாங்கத்தை அடைந்திருந்தார்கள். மோட்சத்தில் அடைந்த மகத்துவம் இவைகள் எல்லாவற்றிற்கும் ஏற்றவாறு விளங்குகிறது. அப்படியே எல்லா மோட்சவாசிகளுக்கும் மேலானவர்களும் தூதர் அதிதூதர் முதலிய சம்மனசுகளுக்கும் உயர்ந்தவளுமானார்கள். அன்னைக்கு மேல் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் மாத்திரம் மேற்பட்டவராயிருக்கிறார். நாம் அந்தப் பரமநாயகி பாத கமலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நம்மால் முடிந்த அளவு மகத்துவத்துக்கு தகுதியான தோத்திரமும் ஸ்துதியும் வாழ்த்துதலும் செலுத்தக்கடவோம்.

தேவமாதாவுக்கு மோட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லபம்.

தேவமாதா இந்த மேன்மையான உன்னதத்தை பெற்று எல்லா தோத்திரத்துக்கும் ஸ்துதிக்கும் உரிமையுள்ளவர்களாய்க் குறையற்ற ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்தாலும் இவ்வுலகில் துன்பப்பட்டு உழலும் தமது அன்புப் பிள்ளைகளான நம்மை மறக்கிறவர்களல்ல! அவர்கள் திருச்சபைக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாதுகாவலும் தாயாரும் இராக்கினியுமாய் இருக்கிறதுமன்றி புண்ணியவாளர் நன்னெறியில் நடக்குமாறும், பாவிகள் பாவத்தைவிட்டு புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க துணியுமாறும் எல்லாருக்கும் அடைக்கலமும் ஆதரவுமாயிருக்கிறார்கள். இடைவிடாது நமக்காக தமது திருமைந்தனிடத்தில் மனுப்பேசி தம்மை மன்றாடுகிறவர்களுக்கும் விலையேறப் பெற்ற வரங்களையும் விசேஷ உபகாரங்களையும் அளிக்கிறார்கள். நாமும் இந்த அன்புள்ள தாயின்மீது தகுதியான மரியாதையும், உறுதியான நம்பிக்கையும், உண்மையான அன்பும் வைத்து வணங்கவும் நேசிக்கவும் சேவிக்கவும் கடவோம். நமது வாழ்நாளெல்லாம் நம்மைக் காப்பாற்றி நாம் சாகிற வேளையில் நம்மை மோட்ச இராச்சியத்தில் சேர்க்க அன்னையை மன்றாடுவோம்.

செபம்.

இயேசுகிறிஸ்துநாதருடைய பரிசுத்த தாயாரே! நீர் இந்தக் கண்ணீர் கணவாயை விடுவதற்கு சமயமாயிற்று. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறதற்கு நாங்கள் பேறுபெற்றவர்களல்ல. அதிக பாக்கியமும் அதிக யோக்கியமும் உள்ள இடமான மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகக்கடவீர். என் அன்புள்ள தாயே! நித்தியத்தின் மகிமையான முடியைத் தரித்துக்கொள்ள எழுந்தருளும். நீர் மகிமை நிறைந்த புண்ணியங்களால் பேறு பெற்ற சம்பாவனையை கைக் கொள்ள எழுந்தருளும். உமக்கு ஸ்தாபிக்கப்பட்ட சிம்மாசனத்தில் இராக்கினியாக உட்கார்ந்தருளும். ஆனால் உம்முடைய நீசப் பிள்ளைகளான எங்களை விடுகிறபோது எங்களுடைய பக்தியுள்ள உணர்ச்சிகளுக்கிரங்கி நீர் எங்களுக்கு எப்பொழுதும் அடைக்கலமும் அன்னையுமாய் இருப்பீராக. எங்களுக்கு ஓர் அடையாளமும் உறுதிப்பாடும் தந்தருள மன்றாடுகிறோம். எங்களைப் பெற்ற தாயைப்பார்க்கிலும் அதிக அன்பான தாயே! இரக்கமுள்ள மரியாயே! உம்முடைய பரிசுத்த திருஇருதயத்தை எங்களுக்கு கொடுத்தருளும். இந்தப் பரிசுத்த இருதயமானது தாய் தந்தையற்ற பிள்ளைகளைப்போல் இந்த நிர்ப்பாக்கிய கணவாயில் துன்புறும் எங்களுக்கு உதவியும் ஆதரவும் தஞ்சமுமாயிருக்கும் நாங்கள் பாவ வெள்ளத்தில் அமிழ்ந்திப் போகாதபடிக்கு தற்காக்கும் பேழையைப்போல் இருக்கிற உமது திரு இருதயத்தின் ஆதரவில் ஒடிவந்து நாங்கள் உமது உதவியை அடைந்து மோட்சத்தில் சேருமளவும் புயல்களுக்கு அஞ்சாத நிலை பெறுவோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த தாயாரே, எங்களை பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.

இருபத்தி ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய கோவில்களில் ஞான புஸ்தகங்கள் உண்டோ, இல்லையோ என்று பார்க்கிறது. இல்லாதிருந்தால் அவைகளை வாங்கிக் கொடுக்கிறது.

புதுமை!

1228-ஆம் ஆண்டில் ஓர் குருவானவர் தேவமாதாவைக் குறித்து திருப்பலி செய்யும்பொழுது அந்த ஊரில் இருந்த பதிதர் எல்லாரும் கூட்டமாய் கோவிலுக்குள் வந்து பூசை செய்த குருவைப் பிடித்து அவருடைய நாக்கை அறுத்தார்கள். அந்த பாதகத்தை செய்தவர்கள் போனபின் குருவானவர் ஒரு மடத்துக்கு போய் அங்கு இருக்கும் சன்னியாசிகளால் மிகுந்த சிநேகத்தோடும், மரியாதையோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்தக் குருவானவருக்கு தேவமாதாவை ஸ்துதிக்கவும் திருப்பலி செய்யவும் இனி முடியாதென்று வருத்தமுற்று மனதால் தினமும் அன்னையை மனதிலே வேண்டிக்கொண்டு மூன்று இராஜாக்கள் திருநாளில் தேவமாதாவின் பேரில் அதிக பக்தி வைத்து அன்னையின் கோவிலுக்கு வந்து ஆண்டவளே! நான் உம்மைக் குறித்து திருப்பலி செய்ததினால் உமக்குப் பகையாளிகளாய் இருக்கிற எதிரிகளாகிய பதிதர் என் நாக்கை அறுத்தார்களே; நீர் எனக்கு நலமானதொரு நாக்கு கொடுக்க முடியும் என்ற புதுமை உம்மால் முடியுமென்று நம்பிக்கையாய் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு மன்றாடிய பொழுது தேவமாதா அவருக்குத் தம்மை காண்பித்து, நீ நமக்காக உன் நாக்கை இழந்ததினால் நாம் இப்பொழுது உனக்கு வேறு நலமானதொரு நாக்கு கொடுத்தோம் என்று சொல்லியவுடனே, அந்தக் குருவானவர் பலத்த சத்தத்தோடு அருள்நிறை மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு கோவிலிலிருந்த சன்னியாசிகள் அருகில் வந்து அற்புதமாய் நாக்கை அடைந்த புதுமையைக் கண்டு வெகுநேரம் தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினார்கள்.

இரண்டாவது!

1793 ஆம் ஆண்டில் ஒரு துஷ்டப் பெண் தான் பெற்ற குழந்தையைக் கொன்று பிரேதத்தை தெரு வீதியில் இருக்கும் குப்பை மேட்டில் அடக்கம் பண்ணினாள். அப்பொழுது ஓர் மனிதன் வேட்டைக்குப் போகிற பொழுது அவனுடைய நாயானது அந்த குப்பையை காலால் பறித்துப் பிரேதத்தை வெளிப்படுத்தினதினால் அநேகர் அந்த பிரேதத்தை பார்க்க வந்தார்கள். சிலர் அதை எடுத்து அடக்கம் பண்ணப் போகையில் ஓர் பெண் இந்தப் பிள்ளை சிலவேளை ஞானஸ்நானம் இல்லாமல் இறந்திருக்கும் என்று அதற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி தேவமாதாவை வேண்டிக்கொள்ளுவோம் என்றாள். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய நானூறு பேர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அதற்குச் சம்மதித்து, அருகில் இருக்கும் தேவமாதாவின் கோவிலுக்கு வந்து அங்கு இருக்கும் சந்நியாசிகளையும் வேண்டிக்கொள்ளச் சொல்லி தாங்களும் வேண்டிக் கொண்டார்கள்.

அப்படி வேண்டிக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தை சத்தமிட்டு உயிர்த்த புதுமையை அவர்கள் கண்டு கோவில் மணி அடித்து தெதேயும் என்ற கீர்த்தனையை சர்வேசுரனுக்குத் தோத்திரமாகப் பாடி, அந்தக் குழந்தைக்கு மரியாள் என்னும் பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அக்குழந்தை ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு பால் குடித்து விட்டு மூன்று மணி நேரம் உயிருடனிருந்து பின்னர் இறந்தது. அந்தப் பிரேதத்தை மிகுந்த ஆரவாரத்தோடு அடக்கம் செய்தார்கள்.

கிறிஸ்தவர்களே ! எவ்வித அற்புதங்களையும் புதுமைகளையும் செய்விக்க வல்லபமுள்ள மோட்ச இராக்கினியை நம்பி உங்களுக்கு வேண்டியதெல்லாம் அன்னையிடத்தில் கேளுங்கள். ( தினமும் குடும்ப ஜெபமாலை சொல்வோம்)

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25
தேவமாதா உயிர்த்ததின் பேரில்!

தேவமாதாவின் திருச்சரீரமானது கல்லறையில் அழியாதிருக்கும் வரம் பெற்றது.

ஜென்மப் பாவத்தினின்றும் தேவமாதாவின் திரு ஆத்துமத்தை நோக்கி மீட்ட சர்வேசுரன் அன்னையின் பரிசுத்த சரீரம் கல்லறையில் அழியாதிருக்க திருவுளங்கொண்டார். நீதியுள்ள கர்த்தர், ஆதி மனிதனை நோக்கி, நீ மண்ணாயிருக்கிறாய், திரும்ப மண்ணாய்ப் போவாயென்று பெரிய சாபத்தையிட்டு மனிதராகப் பிறந்தவர்களின் சரீரம் அழிந்து போக வேண்டுமெனத் தீர்மானித்தார். ஆனால் பரிசுத்த கன்னிகை அந்தப் பொதுவான கட்டளைக்கு உட்படாதபடி கிருபை செய்திருக்கிறார். சாகுமளவும் ஓர் அற்ப மாசில்லாமல் பரிசுத்தமுள்ளவராய் இருந்ததாலும் அன்னையுடைய திரு உதரமானது அவதரித்த இரட்சகருடைய இருப்பிடமாகித் தெய்வீகத்தினுடைய தேவாலயமும் இஷ்டப்பிரசாதத்தினுடைய சுகிர்த பீடமுமாய் இருந்ததாலும் அன்னைக்கு இந்த அழியா வரத்தை கொடுக்க திருவுளங் கொண்டார். நீங்களும் பரிசுத்த திவ்விய நற்கருணை வழியாக அவதரித்த கர்த்தரை வாங்குகிறீர்களே! கர்த்தர் உங்களிடத்தில் வந்து உங்களோடுகூட அமிர்தமான விதமாய் ஐக்கியப்பட்டு உங்கள் சரீரத்தை தூய்மைப்படுத்த நித்திய ஆனந்தத்துக்கு அச்சாரங் கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரால் தூய்மைப்படுத்தப்பட உங்களுடைய சரீரத்தை எவ்வித தீய பாவத்தினாலும் களங்கப்படுத்தாதபடிக்கு மிகுந்த எச்சரிக்கையோடு நடக்கக்கடவீர்களாக.

அந்தப் பரம நாயகி இறந்தபின் உயிர்க்க வரம் பெற்றது.

மனிதர் எல்லாரும் உலக முடிவில் உயிர்ப்பார்கள். ஆனால் பரமநாயகி மனுமக்களுக்கு ஜீவியமும் உத்தானமுமாயிருக்கிற இயேசுநாதரைப் பெற்று, அவருடைய முன்மாதிரிகையைப் பின் சென்று, ஆத்தும இரட்சணிய அலுவலில் அவருடன் ஒத்துழைத்தபடியால், அன்னை இறந்த மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்தெழுந்தருளும் வரம் பெற்றார். அன்னையுடன் திருச்சரீரத்தோடு ஒன்றாகி பாக்கியமும் மகிமையும் கொடுத்ததாம். இந்தத் திருச்சரீரமானது கல்லறையினின்று எழுந்து சூரியனைப் பார்க்க அதிக ஜோதியோடும் சந்திரனைப் பார்க்க அதிக குளிர்ந்த பிரகாசத்தோடும் இலகு, சூட்சம், அழகு, சாகாமை என்னும் இந்நான்கு வாரங்களை அடைந்து துலங்குகிறதாம். ஓர் கஸ்தியும் படாமல் என்றென்றும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் வாழ்ந்திருப்பார்கள். நாம் நம்முடைய திருத்தாயாருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தைக் கண்டு அன்னையை வாழ்த்திப் புகழக் கடவோமாக. நடுத்தீர்க்கிற நாளில் நாமும் உயிர்ப்போமென்பது சத்தியம். ஆனால் நாம் உயிர்த்து மோட்சத்துக்குப் போவோமோ அல்லது நரகத்துக்குப் போவோமோ தெரியாது. அது நமது நடக்கைக்குத் தகுந்தது போலிருக்கும்.

தேவமாதாவின் உத்தானமானது நாம் அன்னை பேரில் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கின்றது.

தேவமாதாவின் மகிமை நிறை ஆரோபணம் நமக்குச் சந்தோஷமும் நம்பிக்கையும் வருவிக்கின்றது. தமது சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளி அதில் நிகரில்லாத மகிமையை அடைந்து இன்னமும் நம்முடைய தாயாருமாய் அடைக்கலமுமாய் ஆதரவுமாய்ப் பாதுகாவலுமாயிருக்கவும் அன்னையை அழைக்கப்படவும் சித்தமானார்கள். நாம் அனுபவிக்கிற தீமைகளிலும் இக்கட்டுகளிலும் சும்மா இருக்கிறதெப்படி? இதோ அவைகளினின்று நம்மை மீட்க நமது நேச அன்னை காத்திருக்கிறார்கள். அன்னையிடத்தில் அபய சத்தமிட்டு நம்பிக்கையோடு மன்றாடுவோமாகில் அன்னை நமக்கு வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் அடைந்து கொடுப்பார்களென்பது திண்ணம்

செபம்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியான திவ்விய கன்னிகையே, உமது திருஆத்துமம் உமது பரிசுத்த சரீரத்தோடு சேர்ந்து உயிர்க்கிறபோது நீர் அடைந்த மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தைப்பற்றி உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டாடுகிறோம். ஓ! தாயாரே, புயல் அடிக்காத துறைமுகமான மோட்சத்தில் சேர்ந்து சர்வேசுரனுடைய சிம்மாசனத்தருகில் இருக்கிறீர். ஆனால் எவ்வித காற்றினாலும் புயலினாலும் எழுப்பப்பட்ட சமுத்திரமான இந்த நிர்ப்பாக்கிய உலகில் உழைத்து வருத்தப்படுகிற உம்முடைய பிள்ளையாகிய எங்களைக் கைவிடுவீரோ? அதில்லையே, நீர் எங்களுக்காகச் சர்வேசுரனிடத்தில் மனுப்பேசும்படியாய் உருக்கத்தோடு மன்றாடுகிறோம். ஓ! தாயாரே, எங்களைக் கிருபைக் கண் கொண்டு பார்த்து எங்களுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கி நாங்கள் அனுபவிக்கிற தீமைகளை நீக்கி ஈடேற்றத்தை அடைவதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களைப் பெறச் செய்விரென்று நம்பிக்கையாய் இருக்கிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தாயாரே, உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் இருக்கிறது பேரின்ப பாக்கியம்.

இருபத்திஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இன்னமும் சில பிறமதத்தவர்களோடு நல்ல புத்தி சொல்லுகிறது.

புதுமை!

அர்ச். சிமோன் ஸ்தோக் என்பவர் தேவமாதாவை உத்தம மேரையாய் வணங்க ஆசையுள்ளவராய்த் தினமும் அன்னையைப் பார்த்து, நாம் உம்மை வணங்கும் விதம் எப்படியென்று எனக்கு அறியப் பண்ணியருள வேண்டுமென மன்றாடிக்கொண்டு வந்தார். தேவமாதா அவருடைய ஆசையைக் கண்டு அவர் தமது சுரூபத்துக்கு முன் வேண்டிக்கொள்ளுகிற நேரத்தில் அவருக்குத் தம்மைக் காண்பித்து அவருக்கு உத்தரியத்தைக் கொடுத்துச் சொன்னதாவது: நீ நமக்கு ஏற்றவிதமாய் ஸ்துதிக்க வேண்டுமானால் இந்த உத்தரியத்தையும் அணிந்து மற்றவர்களும் இதைத் அணிக்கும்படி தூண்டுவாயாக. அதை விசுவாசத்தோடு அணிவிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்நாளில் நம்முடைய உதவியைப் பெற்று, அத்தோடு சாகிறவர்கள் நரகத்துக்குத் தப்பி கரையேறுவார்களென்று திருவுளம் பற்றினார்கள். இந்தப் புதுமை பிரசித்தமான பின்பு, தேவமாதா அந்த உத்தரியத்தைக் கையளித்ததினாலும் புனித பாப்புமார்கள் அதைத் தரிக்கிறவர்களுக்கு அநேக பலன்களைக் கொடுத்ததினாலும், அரசர்கள் முதல் எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் உத்தரிய சபையில் சேர்ந்தார்கள்.

அந்த சபையில் சேர்ந்த ஓர் சேவகனிடத்தில் நடந்த புதுமையானது: பிரெஞ்சு நாட்டு அரசராகிய பதின்மூன்றாம் ஞானப்பிரகாசியார் என்பவர் மொப்பெலியர் என்னும் நகரை முற்றுகையிட்டு அதைப் பிடிக்கப் பிரயாசைப்படுகையில் உத்தரியத்தை தரித்துக்கொண்டிருந்த ஓர் போர்ச் சேவகன் எதிரிகளோடு போராடும்பொழுது துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு அவன் நெஞ்சிலே உத்தரியம் இருக்கிற இடத்தில் பாய்ந்ததும் மேலாடையை ஊடுருவிச் சென்றாலும் சரீரத்துக்குள் புகாமல் உத்தரியத்தில் பட்டவுடனே நசுங்கிப்போய்க் கீழே விழுந்தது. அரசர் அந்த செய்தியை அறிந்து அந்த போர்ச் சேவகனை வரவழைத்து அவனிடத்தில் நடந்த புதுமையை நிச்சயித்து உத்தரியம் தரிக்கிறவர்களுக்கு தேவமாதா எவ்வளவு உதவியாய் இருக்கிறார்களென்று மகிழ்ச்சியுற்று அவரும் அநேகரும் உத்தரியத்தை அணிந்தார்கள்.

இரண்டாவது!

பிளோரென்ஸ் என்ற நகரில் வெறிபிடித்த ஓர் சிங்கம் தான் இருக்கும் கூண்டை விட்டு வெளிச்சென்று நகரில் எங்கும் வந்து கர்ச்சித்து அனைவருக்கும் பயத்தை உண்டாக்கி தெருவீதிகளில் திரிந்தது. பின்னர் தேவமாதாவின் கோவில் அருகே நின்றது. அதைப்பிடிக்க ஒருவரும் வெளியே வராமலிருக்கும்பொழுது ஒரு பெண் தேவமாதாவின் பெயர் சொல்லி அந்த சிங்கத்தை பிடிக்கத் துணிந்து அதன் அருகே வந்து தான் அணிந்திருந்த உத்தரியத்தை எடுத்து சிங்கத்தின் கழுத்திலே போட்டு ஓர் ஆட்டுக்குட்டியைப்போல அதை இழுத்து கூட்டிக்கொண்டு போனாள். ஜனங்கள் அதைக்கண்டு தேவமாதாவின் கோவிலுக்கு வந்து பரலோக இராக்கினியைத் தோத்திரம் செய்தார்கள்.

மூன்றாவது!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இயேசுசபை குருக்களில் ஒருவராகிய ஞானப்பிரகாசியார் என்னும் குருவானவர் எழுதி வைத்த புதுமையானது: ஒரு ஊரில் ஓர் பிற சமய மனிதன் மீது பசாசின் ஆவேசம் ஏறி அவனை உபத்திரவப்படுத்தி அவனைத் துஷ்ட பைத்தியக்காரனாக்கி எல்லாருக்கும் பயத்தை உண்டாக்கியது. அவன் ஊரில் சுற்றித் திரியும் பொழுது மற்றவர்கள் தங்கள் வீட்டு கதவுகளை அடைத்து ஒருவரும் வெளியே செல்லாமல் ஒளிந்திருப்பார்கள். அவர்கள் பிற மதத்தவர்களாய் இருந்தபோதிலும் குருவிடத்தில் வந்து அந்த மனிதன் மேல் மனமிரங்கும்படி மன்றாடினார்கள். குறிப்பிடம் படிக்கும் ஓர் சிறுவன் குருவிடத்தில் மன்றாடுகிறதை அறிந்து நானே அந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன் உத்தரியத்தை, அந்த பைத்தியக்காரனின் கழுத்தில் போட்டு ஒரு காத வழி தூரம் அவனை கூட்டிக்கொண்டு வந்து பிற மதத்தவர் அனைவரும் வியக்கத்தக்க விதமாக குருவினிடத்தில் விட்டான்.

மேற்சொன்ன ஊரில் நடந்த இப்புதுமைக்கு அடுத்த, சம்பவமானது மாசில்லாமல் உற்பவித்த தேவமாதா கோவிலிலிருக்கும் சுரூபம் அதன் பாதத்தில் ஓர் பாம்பை மிதித்திருக்கும் பாவனையாய், செய்திருந்தது. இயேசு சுவாமி பிறந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் எல்லாரும் அங்கே, வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, ஓர் நல்ல பாம்பு கோவிலில் உட்புகுந்து நடுவில் நகர்ந்து வந்து ஓர் பெண் குழந்தையின் மேல் ஏறியதினால் அவள் அதைக்கண்டு அபயமிட்டு கையால் பிடித்து சனங்கள் மத்தியில் எறிந்துவிட்டாள். எல்லோரும் பயந்து தேவமாதாவை வேண்டிக்கொண்டதினால் பாம்பு ஒருவருக்கும் தீமை செய்யாது வெளியே சென்றுவிட்டது. அன்று பல மதத்தவர்களும் ஓர் சத்திரத்தில் படுத்திருக்கும் பொழுது புகுந்த அந்த பாம்பினால் ஏழுபேர் கடிக்கப்பட்டு இறந்தார்கள்.

தேவமாதாவின் வெற்றிக்கொடியின் கீழ் பசாசுடன் போராடுகிற நீங்கள் அனைவரும் பரிசுத்த கன்னிகையின் அடையாளமான உத்தரியத்தை தரித்து கொள்வீராகில் அநேக நன்மைகளை அடைவீர்கள்.