Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

Marian Month song | தேவ தாயின் மாதம் இது

தேவ தாயின் மாதம் இது அல்லவோ..! இதை
சிறப்பாய் கொண்டாடிடவே புறப்பட்டு வாரீர் தோழா  — 2

பூவிலுள்ள மானிடர்க்கு தேவசுதன் தந்த அன்னை
புண்ணிய வரங்கள் எல்லாம் கொண்ட அன்னையே  — 2
ஆவலுடன் நாம் எல்லோரும் தேவமரி பாதம் கூடி
ஆனந்த மிகுந்த பல கீதங்களைப் பாடுவோமே   –தேவ தாயின்

தோட்டங்களில் உள்ள பல வாட்டமில்லா புஷ்பங்களை
சோடு சோடாய் சேர்த்து நல்ல மாலை கட்டுவோம்  — 2
கூட்டமாக எல்லாம் சேர்ந்து வீட்டிலுள்ள பேரை சேர்த்து –2
கோயிலுக்கு சாயும் வேளை ஆவலுடன் போவோம் வாரீர் — தேவ தாயின்

ஒவ்வொரு வீட்டார்களெல்லாம் ஒவ்வொரு நாள் சிறப்பிக்க
ஒப்பந்தமே செய்தால் ஒரு தப்புமில்லையே – 2
இவ்விதமே செய்தால் பலன் எவ்வளவோ கூடிவரும் – 2
இந்த மாதம் எல்லோருக்கும் நல்ல வரம் சேர்ந்து வரும் — தேவ தாயின்

திவ்ய தஸ்நேவிஸ் மாதாவுக்கு செபம்

பிதாவாகிய சர்வேசுவரனுடைய குமாரத்தியே !

 சுதனாகிய சர்வேசுவரனுடைய தாயாரே ! 

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுவரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே , சர்வலோகத்துக்கும் ஆண்டவளே , உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்கள் எல்லோரும் உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிராத்திக்கிறோம் . 

தேவமாதாவே ! நீர் சென்மப்பாவமில்லாமல் உற்பவித்தீரே , எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்க செய்தருளும் . மாதாவே உம்மை நம்பினோம் . எங்களை கைவிடாதேயும் . விசேஷமாய் நாங்கள் சாகிற தருவாயில் மோசம் போகாதபடிக்கு , பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அருகில் வரத்துணையாயிரும் . இப்படியாய் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம் . அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பன்னியருளும் தாயாரே ! மாதாவே ! ஆண்டவளே !

 — ஆமென்

NGO colony becomes new parish

NGO colony is the sub station of Maravankudieruppu Punitha Thusnavis matha Church has been elevated as new Parish today

திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவநாள் பக்தி முயற்சி

நவநாள் பக்தி முயற்சி:

திவ்விய தஸ்நேவிஸ் மாதாவிடம்   விசுவாச அறிக்கை

ஓ! இடைவிடா திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, நீர் அருள் நிறைந்தவள். தாராள குணமும் உடையவள். இறைவன் எங்களுக்கு அளிக்கும் வரங்கள் அனைத்தையும் பகிர்ந்தளிப்பவள் நீரே! பாவிகளின் நம்பிக்கை நீரே! அன்புள்ள அன்னையே, உம்மை நோக்கி திரும்பும் எம்மிடம் வாரும். உமது கரங்களில் இரட்சண்யம் உண்டு. நாங்கள் உமது கரங்களில் ஒப்படைக்கப் பட்டிருக்கிறோம். நாங்கள் உமது பிள்ளைகள். அன்பு நிறைந்த அன்னையே எங்களை பாதுகாத்தருளும். ஏனெனில் உமது பாதுகாவலில் இருந்தால் எங்களுக்கு பயமில்லை. கிறிஸ்து நாதரிடமிருந்து எங்களுக்கு பாவ மன்னிப்பை பெற்றுத் தருகிறீர். கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும் நீர் நரகத்தைவிட சக்தி நிறைந்தவளாயிருக்கிறீர். உமது திருக்குமாரனும் எங்கள் சகோதரருமான சேசுக்கிறீஸ்துநாதர் எங்களைத் தீர்வையிட வரும்போது, நீர் எம் அருகில் இருப்பீர் என்று எதிர்பார்க்கிறோம். சோதனை வேளையில் உமது சகாயத்தைத் தேட அசட்டை செய்வதால் எங்கள் ஆத்துமத்தை இழந்து விடுவோமோ என்று பயப்படுகிறோம். ஓ திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பையும், கிறிஸ்துநாதரிடம் அன்பையும், இறுதிவரை நிலைத்திருக்கும் வரத்தையும், என்றும் உமது சகாயத்தை நாடும் மனதையும், உமது திருக்குமாரனிடமிருந்து பெற்றுத்தாரும். 

*ஆமென்*

நவநாள் பக்தி முயற்சி: *

 திவ்விய தஸ்நேவிஸ் மாதா நவநாள் ஜெபம்

*சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும், சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்* 

*(3 முறை)* 

எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! பரலோக பூலோக அரசியே! கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆறுதலே! பாவிகளின் தஞ்சமே, உம்முடைய இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உம்முடைய கருணையை வேண்டி வந்தோம். உம்முடைய திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். தாயே! உலகில் எங்கள் ஆண்டவள் நீரல்லவோ! எங்கள் அன்பான அன்னை நீரல்லவோ! எங்கள் ஆதரவும், எங்கள் சந்தோஷமும்,எங்கள் நம்பிக்கையும் நீரல்லவோ! நீர் எங்களுடைய தாயார் என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை மாதா பாராட்டுவாளோ? உம்மைத் தேடி வந்த நிர்ப்பாக்கியர்களுக்கு உதவியாயிரும். அழுகிற பேர்களை அரவணையும், அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? தஞ்சமென ஓடி வரும் அடியோர் பேரில் தயவாயிரும். தாயே! தயைக் கடலே! தவித்தவருக்குத் தடாகமே! தனித்தவருக்குத் தஞ்சமே! உம்முடைய சந்நிதானம் தேடி வந்தோம். ஆறு காடு கடல்களைக் கடந்து ஓடி வந்தோம், துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளாலே வாடிநொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ அம்மா? அருமையான அம்மா! அடியோருக்கு அன்பான அம்மா! தஸ்நேவிஸ் மரியே அம்மா! எங்கள் குடும்பங்கள் முழுவதையும் இன்று உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். எங்களை ஏற்று ஆசீர்வதித்தருளும் தாயே!. 

*ஆமென்*

நவநாள் பக்தி முயற்சி:

அர்ச்சியசிஷ்ட தஸ்நேவிஸ் மாதாவுக்கு செபம்

பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே! மனிதருக்கு அடைக்கலமே! சர்வலோகத்துக்கும் ஆண்டவளே! உமக்குப் பிள்ளைகளாயிருக்கிற நாங்களெல்லாரும் உமது திருப்பாதத்திலே சாஷ்டாங்கமாக விழுந்து எப்படியாகிலும் எங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறோம். தேவமாதாவே! நீர் ஜென்மப்பாவமில்லாமல் உற்பவித்தீரே, எங்கள் ஆத்துமம் சரீரத்தை விட்டுப் பிரிகிற நேரம் நாங்களும் பாவமில்லாதிருக்கச் செய்தருளும். மாதாவே! உம்மை நம்பினோம் எங்களைக் கைவிடாதேயும். விசேஷமாய், நாங்கள் சாகிற தருவாயில் மோட்சம் போகாதபடி தடுக்கும் பசாசினுடைய தந்திரங்களை எல்லாம் தள்ளி, நாங்கள் உம்முடைய திருக்குமாரன் அண்டைக்கு வரத் துணையாயிரும். இதினிமித்தமாய் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தைக் கேட்டு நிற்கிறோம். அதை அடியோருக்கு இரக்கத்தோடே கட்டளை பண்ணியருளும் தாயாரே! மாதாவே! ஆண்டவளே! ஆமென். ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்தோம். எங்கள்பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். 

*ஆமென்*

*அருள்நிறைந்த... (3 முறை)*

திவ்விய தஸ்நேவிஸ் மாதாவிடம் நவ மன்றாட்டுகள்

முதல் மன்றாட்டு

வானுலகவாசிகள் சிரசிற் புனைகின்ற தூய லீலியை நிகர்த்த திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தெய்வீகத்தின் ஆலயமே! பகலவனின் ஒளிபட பதுங்கியொழிவது பனியின் சுபாவமாயிருக்கிற நீர் எஸகலின் மலைமேல் பனிபெய்யக் கூடாத உஷ்ண காலத்தில் நீர் உறைபனியைப் பெய்து ஆலயங் கட்ட இடத்தையும் அளவையும் காண்பித்து, சூரியனின் வெப்பத்தால் பனி உருகிப் போகாதிருக்கச் செய்து, உமது மகத்துவம் வாய்ந்த வல்லபத்தைக் காண்பித்தீரே. அமலோற்பவியே! தேவன் அடியோர்களின் ஆத்துமத்திலும் தமது வரப்பிரசாதங்களைப் பெய்து, உமது காலால் தலை நொறுங்குண்டு ஓலமிட்டழுது கிடக்கும் பிசாசின் தந்திரங்களால் அவ்வரப்பிரசாதங்கள் சிதறிப்போகாதிருக்க கிருபை பாலித்தருளும். 

*1பர*

*1 அருள்நிறைந்*

*பிதாவுக்கும்*

இரண்டாம் மன்றாட்டு

மகா புதுமைக் களஞ்சியமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! வரப்பிரசாதத்தின் கரை காணாத சமுத்திரமே! ஆகாயத்துலாவும் நட்சத்திரங்களைக் கிரீடமாகச் சூடிய இராக்கினியே! நீர் மலடியாயிருந்த பாக்கியவதியாகிய அர்ச்சியசிஷ்ட அன்னம்மாளின் உதிரத்தில் தெய்வ கிருபையால் நீர் ஜென்ம மாசணுகாது உற்பவித்து, "அமலோற்பவி" யென்றும் நாம அலங்காரத்தினால் சர்வலோகத்திலும் பிரகாசிக்கின்றீரே! மாதாவே, புதுமைக்கிருப்பிடமாகிய நீர் புண்ணியவாட்டியாகிய வந்தியின் வயிற்றில் உற்பவித்ததை யெண்ணுகையில் சர்வேசுரன் உம்மைப் "புதுமைக்கரசி" யென்று காட்டும் பொருட்டாய்ச் செய்த மகா புதுமையென்று எண்ணித் துதிக்கிறோம். நல்ல தாயாரே! சர்ப்ப வடிவங் கொண்ட பேயின் மாய்கைக்குள் அகப்பட்ட ஏவையின் மக்களென்னும் பாவிகளாகிய எங்களிடத்தில், மோட்சப் பேரின்பத்திற்கு இன்றியமையாததான நன்மைகள் உற்பவிக்க கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

மூன்றாம் மன்றாட்டு

புண்ணியவான்கள் ஆசையோடணிந்து கொள்ளும் ஆபரண மலையாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே! தேவலோகாதிபதியாகிய கடவுள், முக்காலத்திலும் கன்னித்துவங்குன்றாத உமது திருவுதரத்தில் அவதாரம் பண்ணும்போது, நீர் அடைந்த ஞான சந்தோஷத்தை எடுத்துச் சொல்ல இலகு, சூட்சுமம், அகஷயம், பிரகாசமென்னும் நான்கு வரங்களால் நிறைந்த வானோர்களாலுங் கூடுமோ! நல்ல தாயாரே! அடியோர்களும் அப்பரலோக நாயகனை நற்கருணை வழியாய் எங்களுடைய இருதயத்திற் கொண்டு, பகையைச் செய்கின்ற பஞ்சேந்திரியங்களை அடக்கிச் சந்தோஷிக்கக் கிருபை பாலித்தருளும்.

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

 நான்காம் மன்றாட்டு

நீண்ட கோலைக் கொண்டு ஆட்டு மந்தைகளை மேய்த்துவந்த தாசர்களாகிய மோயீசன், தாவீது என்பவர்களை, செழிய கோலைத்தாங்கி பூலோகத்தை அரசாளச் செய்த சர்வ வல்லபரின் மகளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! நீர் கற்பமடைந்ததையறியாத வாடாத பூங்கொடி தாங்கிய மாசற்ற உமது மணவாளன் கொண்ட சந்தேகத்தையறிந்து கடவுளை மன்றாடி, கபிரியேலென்னும் வானவரால் அச்சந்தேகத்தை நிவர்த்தி செய்து, மனோதைரியங் கொடுத்தருளினீரே! நல்ல தாயாரே, அடியோர்களும் சத்திய வேதத்தின் பரம இரகசியங்களில் சந்தேகங் கொண்டால், அவைகளைத் தேவ உதவியால் நிவர்த்தி செய்து மனோ தைரியம் அடையக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஐந்தாம் மன்றாட்டு

பசாசுகளை எதிர்த்துத் தாக்கி, அவைகளுடைய அடாத கர்வத்தை அடக்கிப் பாதாளலோகத்திற்கு விரட்டியோட்டுகிறவளாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! கருணையும் நன்மையும் நிறைந்த தூய மேகமே! நீர் சர்வலோக கர்த்தாவை மிருகங்கள் அடையும் குடிலிற்பெற்று, காய்ந்த புல்லணையிற் கிடத்தி, பனியால் வருந்தின மகா வருத்தத்தைத் தாழ்மையோடு பொறுத்திருந்தீரே, நல்ல தாயாரே! அடியோர்களும் சர்வேசுரனின் திருவுளத்திற்கமைந்து இந்த அநித்திய உலகத்தில் வரும் துன்பங்களைத் தாழ்மையோடு அனுசரிக்கக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஆறாம் மன்றாட்டு

வாசனை கமழுந்தேனைச் சொரிகின்ற பசிய நிறங்கொண்ட திரண்ட கனிகளைக் கொடுக்கும் திராட்சைக் கொடியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! எல்லாத் தலைமுறைகளும் பாக்கியவதியெனப் புகழ்ந்து துதிக்கிற ஜெயராக்கினியே! சோதிட சாஸ்திர வல்லவர்களாகிய மூவரசர்கள் ஒன்றுகூடி, நீர் பயந்தருளிய பால சுவாமியையும் உம்மையும் பூலோக மோட்சமாகிய பெத்தலகேமின் சிறு குகையில் தரிசித்து, சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய, இராஜ நமஸ்காரத்தைப் பெற்றருளினீரே! நல்ல தாயாரே! யேசுவின் மந்தையாடுகளாகிய எங்களை, இம்மையில் ஓநாய்களாகிய நஞ்சிலுங்கொடிய பதிதக்கூட்டங்கள் நாசஞ்செய்யாதபடி பாதுகாத்து, மறுமையில் நாங்கள் ஆறு லகஷ்ணராகிற உமது திருக்குமாரனை வாழ்த்தி நமஸ்கரிக்க கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஏழாம் மன்றாட்டு

பெத்லேகமென்னும் திருத்தலத்தில், யாக்கோபு என்பவருக்குக் கடவுளால் காண்பிக்கப்பட்ட மோட்ச ஏணியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! சர்வ வல்லபம் பொருந்திய கடவுளைத் திருவயிற்றில் பத்து மாதந்தாங்கிப் பெற்றெடுத்து, அத்திருக்குழந்தையாகிய எம்மானுவேல் என்னும் உலக இரட்சகரைப் பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தீரே! நல்ல தாயாரே, அடியோர்களும் அழிந்துபோகும் பூலோக செல்வங்களின் மாய்கைகளினால் நாற்றச் சரீரத்தின் தொந்தரைகளினாலும் அலைகழிக்கப்படாது எங்களை முழுவதும் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். களங்கமில்லாத கன்னிகையே! அடியோர்களுக்கு மோட்ச வீட்டில் சிறிது இடம் தருவித்துதவக் கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

 எட்டாம் மன்றாட்டு

சுடர்விட்டெரிந்த தீக்குள்ளிருந்தும் சிறிதும் வேகாமல் ஜொலித்து நின்ற முட்செடியும், சுகந்த பரிமளம் மிகுந்த சந்தன விருட்சங்களால் நிறைந்த நந்தவனமுமாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மகத்துவந் தங்கிய ஜெயசீலியே! நீர் கானா நகரின் மெய்விவாக விருந்தில் உமது திருச்சுதனை வேண்டிச் செய்த மகா புதுமையை சர்வலோகமும் அறியுமன்றோ! மனுக்குலத்தின் பாவத்தை நாசஞ்செய்ய வந்த நாயகி! மரியாயினடைக்கலத்தின் பேரில் நம்பிக்கை வைத்திருக்கும் எல்லாருக்கும் பரலோக கபாடம் திறக்கப்படுமென்று அர்சிசியசிஷ்ட பெனவந்தூர் உரைத்த வாக்கியத்தையெண்ணி, உம்மைத் தேடிவரும் அடியோர்களுடைய அவசர நேரத்திலும், தனித்தீர்வை நாளையிலும் உமது திருக்குமாரனை வேண்டி கிருபை பாலித்தருளும். 

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

ஒன்பதாம் மன்றாட்டு

மேகஞ்சூழ்ந்த எஸ்கலின் மலைத்தேவாலயத்தில் எழுந்தருளிப் பிரகாசிக்கின்ற தேவ நாயகியாகிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே! மாசில்லாத உமது திருமேனியிலாடையாகத் தரித்தருளிய சிவந்த கிரணங்களை வீசுஞ் சூரியனைக் கண்டு மலர்ந்த, வாடாத, குளிர்ந்த தாமரை மலர்களாகிய உமது பாதங்களண்டையில் இதோ அடியோர்கள் வந்து, அப்பாதத் தாமரையானது பொழியும் தேவனாகிய கிருபையை வண்டுகளாகிய நாங்களடையும் பொருட்டாய் தயைசெய்யுமென்று பேரொலியோடு வீழ்ந்து துதிக்கிறோம். அம்மணி, மக்களுடைய அழுகுரலைக் கேட்டு மனமிரங்கி உதவிபுரியாத மாதாவுமுண்டோ! இல்லையே, ஓ! திரியேக கடவுளால் பரலோக இராக்கினியாகக் கிரீடஞ் சூட்டப்பட்ட மாதாவே! உமதடைக்கலத்தைத் தேடி ஓடி வருபவர், எவ்வளவு பெரிய பாவியாயிருந்தபோதிலும், உமது கிருபாகடாட்சம் அவரைப் புறக்கணித்துத் தள்ளினதில்லையெனுஞ் சத்தியத்தை சருவலோகமும் அறியுமே! பனிமயத் தாயே! உம்மைப் பாவிகளின் அடைக்கலமென்று திருச்சபை உரத்துச் சொல்லுவது அபத்தமாமோ! அமலோற்பவ நாயகி, சம்மனசுக்களின் திரள்களுக்கு எல்லாம் மேலாக உமது திருக்குமாரனுடைய பாதத்தடியில், மோட்சராக்கினியாய் மகுடந்தாங்கி வீற்றிருக்கும் நீர், எங்களுக்காக உமது திருக்குமாரனிடத்தில் கேட்கும் வரங்களைக் கொடாமல் மறுத்துத் தடை சொல்லுவாரோ? ஒருபோதும் இல்லை. ஓ! இரட்சணிய இருப்பிடமே! எங்கள் பாவங்களுக்குத் தண்டனையாக இவ்வுலகில் வரும் பஞ்சம், படை, கொள்ளைநோய், பெரவாரிக்காய்ச்சல் முதலிய பயங்கரமான தீமைகளை விலக்கிப் பாதுகாத்து இரட்சியும். ஆ! ஆபத்திற்கபயமே! பசாசின் தந்திரத்தினால் திருச்சபையினின்று விலகிக் கெட்டுப்போன பதிதர், பிரிவினைக்காரர் மனந்திரும்பி மறுபடியும் திருச்சபையிற் சேரத் தயை செய்யும். உலகத்தின் எத்திசையிலும் சத்திய வேதம் பரவச் செய்யும். அன்புள்ள அன்னையே! எங்கள் பேரிலும், திருச்சபையின் பேரிலும் கருணைக் கண் நோக்கியருளும். நல்ல தாயாரே! இந்த மன்றாட்டுகளையெல்லாம் சர்வ வல்லமையுள்ள எங்களாண்டவரான யேசுக்கிறிஸ்து நாதரை வேண்டிக் கிருபை பாலித்தருளும்.

*1பரலோக*

*1 அருள்நிறைந்த*

*பிதாவுக்கும்*

*ஆமென்**பிதாவுக்கும்*