பரிசுத்த ஜெபமாலை பற்றிய சுருக்கமான வரலாறு- Part-4

By Rev.Fr. PANCRAS M. RAJA
Part-4

பாத்திமா காட்சிகளும் பரிசுத்த ஜெபமாலையும்

1917, புனித 10 ஆம் பத்தி நாதர் பாப்பரசர் இறந்து மூன்று வருடங்களுக்குள், மாதா லூசியா, பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா (முறையே பத்து, ஒன்பது மற்றும் ஏழு வயது) ஆகிய மூன்று ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு, போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா கோவா தா இரியாவில், மே 13 தொடங்கி அக்டோபர் 13 வரை முடிவடைந்த ஆறு காட்சிகளில் தோன்றினார்கள். இக்காட்சிகளின் நம்பகத்தன்மையினை நிரூபிக்கும் வகையில் கடைசி காட்சியில் 70,000 பேர் சூரியனில் நிகழ்ந்த புதுமையைக் கண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.

பாத்திமாவில், மாதா அந்த மூன்று குழந்தைகளுக்கும், மனிதர்களின் நன்றிகெட்ட தன்மை மற்றும் ஒழுக்கக் கேடு குறித்து தாம் கொண்டிருந்த ஆழ்ந்த அதிருப்தியை, உலகிற்கு அறிவிக்கும் பணியைக் கொடுத்திருந்தார்கள். அத்துடன் தமது ஆறு காட்சிகளிலும் ஜெபமால சொல்லும்படிக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

மனிதகுலம் அதன் வழிகளைத் திருத்தவில்லை என்றால் உலகிற்கு ஒரு பயங்கரமான தண்டனை வரும், பல நாடுகள் அழிக்கப்படும், ரஷ்யா தனது தப்பறைகளை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் பரிசுத்த தந்தைக்கு நிறைய துன்பங்கள் நேரிடும் என்று மாதா எச்சரித்தார்கள்.

தமது செய்தியில், நமது பரலோகப் பூலோக இராக்கினி, நமக்கு வரும் ஆபத்தைச் சுட்டிக்காட்டுவதோடு, அதை எப்படித் தவிர்ப்பது என்றும் சொல்கிறார்கள். இந்த தண்டனையை தவிர்க்க அவர்கள் தாய்க்குரிய வழி வழிகாட்டுதல்களை வழங்குகிறார்கள்: அவர்கள் நம்மிடம் ஜெபம், தவம், செய்யும்படி, குறிப்பாக பரிசுத்த ஜெபமாலையைச் சொல்லும்படிக் கேட்கிறார்கள்.

தண்டனையின் எச்சரிக்கை மற்றும் அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கொடுத்த பிறகு, ஜெபமாலையின் ஒவ்வொரு தேவ இரகசியத்தின் முடிவிலும் சொல்ல வேண்டிய ஜெபத்தை மாதா நமக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் லூசியாவிடம் சொன்னார்கள்: “நீங்கள் ஜெபமாலை ஜெபிக்கும்போது, ஒவ்வொரு பத்து மணிக்குப் பிறகும் சொல்லுங்கள்:‘ ஓ என் சேசுவே, எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்; எல்லா ஆன்மாக்களையும் விசேஷமாய் யார்யாருக்கு உமது உதவி அதிகம் தேவையோ அவர்களை மோட்சத்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்தருளும்.”

இருபத்தியோராம் நூற்றாண்டின் கொந்தளிப்பான தொடக்கத்தில், வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நெருக்கடிக்கு மத்தியில், பாத்திமாவில் மாதா பேசிய வார்த்தைகளில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கு பிரகாசிக்கிறது, ஏனென்றால் அவர்கள்: “இறுதியாக என் மாசற்ற இதயம் வெற்றி பெறும்.” எனக் கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு ஜெபமாலையின் முடிவிலும்: “பரிசுத்த பாப்பரசருக்காகவும், திருச்சபைக்காகவும் உலக சமாதானத்திற்காகவும் பாவிகள் மனந்திரும்புவதற்காகவும் சேசு, மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரமாகவும் இந்த ஜெபமாலையை ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.” என்று சொல்வோமாக. 

முற்றிற்று

பரிசுத்த ஜெபமாலை பற்றிய சுருக்கமான வரலாறு- Part-3

By Rev.Fr. PANCRAS M. RAJA

Part-3

பரிசுத்த ஜெபமாலையின் பக்த சபைகள்

இந்த பக்தி முயற்சியை அதன் அழகிய பக்தி ஆர்வத்தில் மீண்டும் நிலைநாட்ட மாதா பிரான்ஸ் நாட்டிலுள்ள தீனன் நகர் சுவாமி நாதர் சபை மடத்தில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன் தெ லா ரோச் என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள். 1464 ஆம் ஆண்டில், நமதாண்டவர், மாதா மற்றும் புனித சுவாமி நாதர் ஆகியோரின் காட்சிகளுக்குப் பிறகு, ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன் ஜெபமாலையைப் பற்றி பிரசங்கம் செய்யத் தீர்மானித்து, 1475 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்து அதைச் செய்து வந்தார். இக்கால கட்டத்தில்தான் கொலோன் நகர் சுவாமி நாதர் கன்னியர் மடத்தில் பரிசுத்த ஜெபமாலையின் பக்த சபையானது முதல் முதல் நிறுவப்பட்டது. ஜெபமாலை சொல்பவர்களுக்குரிய தமது வாக்குறுதிகளை இவருக்கும் புனித சுவாமி நாதருக்கும் தான் மாதா வழங்கினார்கள்.

இன்னும் பல்வேறு இடங்களில் ஜெபமாலையின் பக்த சபைகளை நிறுவியதுதான் ஜெபமாலைபற்றி ஏராளமான புத்தகங்களை அச்சிட வழிவகுத்தது. ஐரோப்பா முழுவதும் இப்பக்த சபைகள் விரைவில் பரவின. அருள் நிறைந்த மந்திரங்களைச் சொல்லும்போது தியானிக்க வேண்டிய பதினைந்து தேவ இரகசியங்களின் பட்டியலை ஏற்றுக்கொள்வதற்கு இந்த பக்த சபைகள்தான் முக்கிய காரணமாக இருந்தன. சுவாமி நாதர் சபையைச் சார்ந்தவரான பாப்பரசர் புனித 5 ஆம் பத்தி நாதர்தான் இப்பட்டியலை 1569 ஆம் ஆண்டு தனது ‘கோன்சுயேவேருந்த்’ என்னும் நிரூபத்தின் மூலம் வெளியிட்டார்.

லெப்பாந்தோ ஜெபமாலை சிலுவைப் போர்

அதற்குள், துருக்கியப் பேரரசின் வலிமையால் ஐரோப்பா முழுவதும் பேரழிவிற்கு அச்சுறுத்தப்பட்டது. பாப்பரசர் புனித 5 ஆம் பத்தி நாதர் கிறிஸ்தவ உலகைக் காப்பாற்ற ஒரு சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பல நாடுகளில் கிறிஸ்தவ மக்கள், மறுமலர்ச்சியின் காரணத்தால் மந்தமாக இருந்தார்கள் அல்லது புரோட்டஸ்டாண்டிஸக் கொள்கையால் திருச்சபையின் ஒற்றுமையிலிருந்து விலகிவிட்டார்கள். எனவே பாப்பரசரின் அழைப்பிற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. ஆனால் பாப்பரசரின் மாநிலங்களாகிய மால்டா, ஸ்பெயின், நேயாப்பொலிஸ், சிசிலி, வெனிஸ் மற்றும் ஜெனோவா மாநிலங்களிலிருந்து சுமார் 200 பிரிவுகள் கொண்ட ஒரு கடற்படையை ஏற்பாடு செய்யும் வரை பரிசுத்த தந்தை ஓயவில்லை.

புனித பாப்பரசரால் மகாப் பரிசுத்த கன்னிகையின் பாதுகாப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்தவ கடற்படையானது, ஸ்பெயின் தேசத்தின் அரசர் இரண்டாம் பிலிப்புவின் சகோதரராகிய ஆஸ்திரியாவின் தோன் ஜுவான் தலைமையில் புறப்பட்டது. முஸ்லீம் கடற்படையானது கொரிந்து வளைகுடாவின் குறுகிய நுழைவாயிலுக்குள் இருக்கும் லெப்பாந்தோ துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 50 மைல் தொலைவில் காணப்பட்டது.

அக்டோபர் 7, 1571 அன்று போர் ஆரம்பமானது. கிறிஸ்தவ உலகின் எதிர்காலம் அதன் விளைவையே நம்பியிருந்தது.

நான்கு நீண்ட மணிநேரங்களில், போர் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதின, மஸ்கட் குண்டுகளும் அம்புகளும் எல்லா திசைகளிலும் வீசப்பட்டன, எங்கெல்லாம் எதிரிகளின் கப்பல்களைப் பிடித்துக் கொள்ள முடியுமோ அங்கெல்லாம் வீரர்கள் திரண்டனர்.

முதலில் கிறிஸ்தவர்களுக்கு விஷயங்கள் மோசமாக நடந்தாலும், இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். முஸ்லீம் கடற்படையின் தளபதியான அலி பாஷா கொல்லப்பட்டார் மற்றும் அவரது கொடியானது கைப்பட்டப்பட்டது. முஸ்லிம்கள், தைரியம் இழந்து, ஓடத் தொடங்கினர்.

இந்த போர்முனையானது அஞ்ஞானிகளைக் கொன்றொளிக்கும் சாதனமாக மாறியது. 24,000 முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாகவும் 5,000 பேர் கைதிகளாகப் பிடிக்கப் பட்டதாகவும் கணக்கிடப்பட்டது. கிறிஸ்தவர்கள் 177 கப்பல்களைக் கைப்பற்றி, துருக்கிய போர் கப்பல்களில் அடிமைகளாகப் பிடிக்கப் பட்டிருந்த 15,000 கிறிஸ்தவப் படகோட்டிகளை, விடுவித்தனர்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில், பாப்பரசர் புனித 5 ஆம் பத்திநாதர் கர்தினால்மார்களுடன் ஒரு விசேஷ அலுவலில் ஈடுபட்டிருந்தார். திடீரென்று அவரது வேலையை நிறுத்திவிட்டு, எழுந்து ஜன்னலைத் திறந்து, அவர் வானத்தைப் பார்த்து கூக்குரலிட்டு: “நமது அலுவலை நிறுத்துவோம்; தற்போது நமது பெரிய பணி கிறிஸ்தவ இராணுவத்திற்கு கடவுள் கொடுத்துள்ள வெற்றிக்கு நன்றி சொல்வதாகும்” என்று கூறினார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடலின் புயல்களால் தாமதமான ஒரு கூரியர் செய்திக் கடிதம், லெப்பாந்தோவின் கடற்படை வெற்றிச் செய்தியுடன் ரோம் வந்து சேர்ந்தது. இஸ்லாமிய சக்தியானது ஒரு அதிர்ச்சியூட்டும் வல்லமையால் அடித்தொழிக்கப்பட்டது, அதிலிருந்து அது ஒருபோதும் மீள முடியாது என்று பாப்பரசர் ஆனந்தக் கண்ணீர் விட்டழுதார். அப்போது ரோமாபுரியின் அனைத்து பக்த சபை அமைப்புகளின் உறுப்பினர்களும் ஜெபமாலை ஊர்வலங்களை நடத்திக்கொண்டிருந்தன. அவ்வமயம், இந்த வெற்றிக்காக பரிசுத்த கன்னிகைக்கு நன்றி தெரிவிக்க, புனித 5 ஆம் பத்தி நாதர் புனித கன்னி மரியாயின் பிரார்த்தனையுடன் “கிறிஸ்தவர்களின் சகாயமே” என்னும் வேண்டுதலை இணைத்துக்கொண்டார். மேலும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜெய மாதாவின் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது, பின்னர் இத்திருவிழா பாப்பரசர் 13 ஆம் கிரிகோரியாரால் மிகவும் பரிசுத்த ஜெபமாலை மாதாவின் திருவிழாவாக மாற்றப்பட்டது.

1716 இல் சவோய் இளவரசர் யூஜினால் ஹங்கேரியில் நடந்த பீட்டர்வர்டீன் போரில், துருக்கியர்கள் மீது அடைந்த ஒரு புதிய வெற்றிக்குப் பிறகு, பாப்பரசர் 11 ஆம் கிளெமென்ட் ஜெபமாலை மாதாவின் திருவிழாவை உலகளாவிய அளவிற்கு விரிவுபடுத்தினார். மாபரும் புனிதர் பாப்பரசர் 10 ஆம் பத்தி நாதர் இத்திருவிழாவை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு மாற்றினார்.
……………………தொடரும்..

பரிசுத்த ஜெபமாலை பற்றிய சுருக்கமான வரலாறு- Part-2

By Rev.Fr. PANCRAS M. RAJA

தற்போதைய வடிவத்தில் ஜெபமாலை – மாதாவின் மங்கள வாழ்த்து மாலை

கிபி 1214 இல், ஒரு புனிதமான மற்றும் போற்றத்தக்க பாரம்பரியத்தின் படி, சுவாமிநாதர் சபையின் நிறுவனர் புனித குஸ்மான் சுவாமி நாதருக்கு மகாப்பரிசுத்த கன்னிகை தாமே தோன்றி, இந்த பக்தி முயற்சியை அர்ச்சிக்கும் விதமாக, பிரான்ஸ் நாட்டின் தென் பகுதிய அழித்துக்கொண்டிருந்த அல்பிஜென்சியன் தப்பறையை எதிர்த்துப் போரிடுவதற்கான ஆயுதமாக ஜெபமாலையை அதன் தற்போதைய வடிவத்தில் வழங்கினார்கள்.

மரியாயின் மாபெரும் அப்போஸ்தலரான புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட், அந்த பெரிய நிகழ்வு நடந்த சூழ்நிலைகளைப் பற்றிச் சொல்வதாவது:

“ஆல்பிஜென்சியர் மனந்திரும்புவதற்குத் தடையாய் இருக்கிறது மனிதர்களுடைய பாவங்களின் கனாகனமே என்பதைக் கண்டு, புனித சுவாமி நாதர், துலூஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு காட்டிற்குள் சென்று, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் இடைவிடாமல் ஜெபம் செய்தார். இந்த நேரத்தில், அவர் சர்வ வல்லமையுள்ள சர்வேசுரனின் கோபத்தைத் தணிப்பதற்காக அழுது புலம்புவதையும் கடுமையான தவம் செய்வதையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவர் தனது சாட்டையை எந்த அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தினார் என்றால், அதனால் அவரது சரீரம் கிழித்துச் சிதைக்கப்பட்டது, இறுதியாக அவர் மயங்கி விழுந்தார்.’

“இந்த நேரத்தில் மாதா அவருக்கு மூன்று சம்மனசுக்களுடன் தோன்றிக் கூறினார்கள்: ‘அன்புள்ள சுவாமி நாதரே, உலகத்தைச் சீர்திருத்த பரிசுத்த தமதிரித்துவ தேவன் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த விரும்புகிறார் தெரியுமா? ‘

“ஓ, மாதாவே,” புனித சுவாமி நாதர் பதிலளித்தார், “என்னை விட உங்களுக்கு மிகவே நன்றாகத் தெரியும், ஏனென்றால் உமது சுதன் சேசு கிறிஸ்து நாதருக்கு அடுத்தபடியாக, நீங்களே எப்போதும் எங்கள் இரட்சணியத்தின் முக்கிய கருவியாக இருந்தீர்கள்.’

“பின்னர் மாதா பதிலளித்தார்கள்: “இந்த வகையான போரில், செம்மையாக அடித்து நொறுக்கும் ஆட்டுக்கடா, எப்போதும் புதிய ஏற்பாட்டின் அடித்தளமாக இருக்கும் சம்மனசின் மங்கள வாழ்த்து மாலை என்பதை நீர் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகையால், நீர் இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அடையவும், கடவுளிடம் அவர்களை வெல்லவும் விரும்பினால், என் சங்கீத மாலையைப் பிரசங்கம் செய்யும்.’

“ஆகவே, ஆறுதலடைந்து அவர் எழுந்து, அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் மனந்திரும்புதலிற்காக ஆத்தும தாகத்தால் பற்றி எரிந்தபடி, நேராக மேற்றிராசனக் கோவிலலிற்கு விரைந்தார். அதே நேரத்தில் கண்ணிற்குத் தெரியாத சம்மனசுக்கள் மணிகளை அடித்து மக்களை ஒன்று திரட்டவே, புனித சுவாமி நாதர் பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

பிரசங்கத்தின் ஆரம்பத்தில் ஒரு பயங்கரமான புயல் உண்டானது, பூமி அதிர்ந்தது, சூரியன் இருண்டது, இடியும் மின்னலும் ஏற்பட்டது, அனைவரும் மிகவும் பயந்தனர். ஒரு முக்கிய இடத்தில் அனைவரும் காணும்படியாகத் தோன்றிய ஒரு மாதாவின் படத்தைப் பார்த்து அவர்களின் பயம் மேலும் அதிகரித்தது. மேலும் அவர்கள் மனந்திரும்பத் தவறினால், கடவுளின் பழிவாங்கலை அவர்கள்மேல் விழச் செய்யும் அடையாளமாகவும் தங்கள் வாழ்க்கையைத் திருத்தி கடவுளின் தாயின் பாதுகாப்பைத் தேடும்படியாகவும், மாதா மூன்று முறை தம் கரங்களை பரலோகத்தி நோக்கி உயர்த்துவதைப் பார்த்தார்கள்.

கடைசியாக, புனித சுவாமி நாதரின் வேண்டுதலால் புயல் முடிவுக்கு வந்தது, அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். பரிசுத்த ஜெபமாலையின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அவர் எவ்வளவு தீவிரமாகவும் த்ர்மானமாகவும் விளக்கினார் என்றால், கிட்டத்தட்ட துலூஸ் நகரின் அனைத்து மக்களும் அதை ஏற்றுக்கொண்டு தங்கள் தவறான விசுவாச கொட்பாடுகளைக் கைவிட்டனர்.” (ஜெபமாலையின் ரகசியம், மாண்ட்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ், Bay Shore, NY, 1954, pp 18 – 19)

ஜெபமாலை பிரசங்கிப்பதன் மூலம் பெறப்பட்ட விசுவாசத்தின் இந்த அற்புதமான வெற்றிக்குப் பிறகு, புனித சுவாமி நாதர் போற்றுதற்குரிய இந்த பக்தியைப் பரப்ப புது உற்சாகத்துடன் முயற்சித்தார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு 1221, அவருடைய பிரசங்கத்தின் நினைவு அதைக் கேட்ட கிறிஸ்தவர்களின் மனதிலிருந்து படிப்படியாக மறைந்துவிட்ட படியால், ஜெபமாலை மீதான பக்தி குறைந்தது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜெபமாலை மீதான பக்தி ஏறக்குறைய புதைக்கப்பட்டு மறக்கபட்டுவிட்டது.
……………… தொடரும்……