தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 27
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தின் பேரில்!

இந்த மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்து நாதர் நீங்கலாக எல்லா இருதயங்களிலும் மேன்மை உள்ளதுமாய் இருக்கின்றது.

எல்லாம் வல்ல சர்வேசுரன் படைத்த இருதயங்களில் திவ்விய இயேசுவின் திரு இருதயத்துக்கு இரண்டாவதாக மரியாயின் மாசற்ற இருதயமானது மேன்மையுள்ளதும் எவ்வித வணக்க, ஸ்தோத்திரத்துக்கும் தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது. திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா, சுதன், பரிசுத்த ஆவியானவர் இந்த மேன்மையான இருதயத்தைப் படைக்கவும் உன்னத வரங்களாலும் விலையேறப்பெற்ற வரப்பிரசாதங்களினாலும் பூரண நிறைவுடன் அலங்கரிக்கவும் விரும்பினதினால் பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய அளவில்லாத வல்லபத்தைக் கொண்டு அந்த பரிசுத்த கன்னிகை தமக்கு தகுதியுள்ள குமாரத்தியாய் இருக்கிறதினால் அன்னைக்கு வணக்கம் அமைதி கீழ்ப்படிதலுள்ள இருதயத்தைக் கொடுத்தார். சுதனாகிய சர்வேசுரன் இந்த பரிசுத்த கன்னிகையின் திருவயிற்றில் ஒர் தகுதியான இருப்பிடத்தில் இருப்பதுபோல வாசம் பண்ணச் சித்தமாயிருந்ததால் தம்முடைய தாயாவதற்கு தகுதியான இருதயத்தைக் கொடுத்தார். பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் இந்த கன்னிகை தமக்கு மிகவும் பிரியமுள்ளவர்களா யிருக்கிறபடியால் அன்னைக்கு தேவ சிநேக அக்கினியினால் எரிகிற இருதயத்தைக் கொடுத்தார். இது இப்படியிருக்க இந்த திருஇருதயத்தில் கூடி இருக்கிற மேன்மையான சாங்கோபாங்கத்தை எந்த மனிதராலும் சொல்லவும் கண்டு பிடிக்கவும் இயலாது. மோட்சத்தில் இந்த மாசற்ற இருதயத்தை வாழ்த்திக் கொண்டாடி வருகிற சம்மனசுகளோடு நாமும் சேர்ந்து இந்தத் திருஇருதயத்தை உருக்கமான பக்தியோடு நேசித்து இந்தத் திரு இருதயத்தின் உன்னத மேன்மையை மோட்சத்தில் பார்த்துக் கொண்டாட முயலுவோம்.

பரிசுத்தம் உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது பரிசுத்தம் உள்ளதாக இருக்கிறது. எல்லா சுகிர்த புண்ணியங்களுடைய அதிசயத்துக்குரிய மாதிரிகையான இயேசுகிறிஸ்துநாதருடைய இருதயத்தின் உத்தம சாயலான இந்தத் திருஇருதயம் தேவ சிநேகத்தின் வேகமான அக்கினியால் பற்றியெரிந்து பக்தி சுவாலகர்களைக் காட்டிலும் சர்வேசுரனை அதிகமாய் நேசித்து மேலான கிரிகையினால் சர்வேசுரனுக்கு செலுத்தின மகிமையைக் காட்டிலும் அதிகமான தோத்திர மகிமை உண்டாயிற்று என்பது உறுதியான சத்தியம். தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இஷ்டப்பிரசாதத்தின் பொக்கிஷமே, சாங்கோபாங்கத்தின் சாயலே, எல்லா புண்ணியங்களின் இருப்பிடமே, நீர் எனக்கு எப்பொழுதும் மாதிரிகையாய் இருப்பீர் நான் உம்மிடத்தில் வந்து மனத்தாழ்ச்சியையும், கற்பையும், சாந்தகுணத்தையும், பொறுமையையும், உலக வெறுப்பையும், இயேசுகிறிஸ்துநாதருடைய சிநேகத்தையும் பெற்றுக்கொள்வேன்.

சிநேகிக்கத்தக்க தகுதி உள்ளதுமாய் இருக்கின்றது.

தேவமாதாவின் மாசற்ற இருதயமானது இயேசு கிறிஸ்துநாதருடைய திருஇருதயம் நீங்கலாகத் தமது நிகரில்லாத சுகிர்த குணங்களினாலும் பொறுமை தயையினாலும் நமது மட்டில் வைத்த அன்பினாலும் நமது அன்புக்கும் நன்றியறிந்த மனதுக்கும் மிகவும் பாத்திரமுள்ளதாகும். அந்தத் திருத்தாயார் நமது அவசரங்களில் சிந்தையுள்ளவர்களாய் நாம் அடைந்துவரும் சகல துயரங்களிலும் நமக்கு ஆதரவும் தஞ்சமும் தேற்றரவுமாகத் தம்முடைய இருதயத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். நாம் அன்னையுடைய சிநேகத்துக்கு பிரதி சிநேகத்தை செலுத்தி பணிவிடையில் பிரமாணிக்கமாய் நடந்து அதிசயமான புண்ணிங்களைச் சுறுசுறுப்போடு கண்டுபாவித்து நம்முடைய நன்றியறிந்த பட்சத்தை அன்னைக்கு காண்பிக்கக்கடவோம்.

செபம்.

தேவமாதாவின் மாசற்ற திவ்ய இருதயமே! தேவசிநேகத்தின் இருப்பிடமே, தயாளத்தின் சமுத்திரமே, சமாதானத்தின் சிம்மாசனமே, மிகவும் சிநேகிக்கப்படத்தக்க இருதயமே, ஆராதனைக்குரிய ஏக திரித்துவத்துக்கு உகந்த தேவாலயமே, சம்மனசுகளாலும் மனிதர்களாலும் வணங்கப்பட தகுதிவாய்ந்த இருதயமே, எல்லாப் புண்ணியங்களுடைய மாதிரிகையே, இயேசுகிறிஸ்துநாதர் இருதயத்துக்கு ஒத்திருக்கும் சாயலே, எங்களுடைய அன்புள்ள தாயாருடைய திருஇருதயமே, எங்களுடைய துன்பங்களை உணர்ந்து எங்களுக்காக மிகுந்த கஸ்தி அவமானப் பாடுகளை அனுபவித்த திரு இருதயமே! சகல மனுமக்கள் இருதயங்களாலும் நன்றியறிந்த மனதோடும் உறுதியான நம்பிக்கையோடும் சிநேகிக்கப்படுவதற்கு பேறுபெற்ற திருஇருதயமே! நீசப்பாவியாயிருக்கிற அடியேன் உமக்கு செலுத்துகிற வணக்கத்துக்கு இரங்கி அடியேனுடைய மன்றாட்டுக்களைக் கேட்டு என்னுடைய அற்ப வேண்டுதலை ஏற்றுக்கொண்டு சகல மனிதருடையவும் இருதயங்களை உமது திருமைந்தன் பக்கமாய் திருப்பி உம்மிடத்தில் இடைவிடாமல் பற்றியெரிகிற தேவ சிநேக அக்கினி எங்களிடத்திலே எரியும்படி செய்தருளும். எங்களுடைய அவசரங்களிலே எங்களுக்கு உதவியாயிரும். துயரங்களில் தேற்றரவாயிரும். சோதனைகளில் திடனாயிரும். ஆபத்துக்களில் தஞ்சமாயிரும். மரணவேளையில் ஆதரவாயிரும், நித்திய ஜீவியத்தில் எங்களுக்கு பாக்கியமாயிரும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயமே! இயேசுகிறிஸ்து நாதருடைய திரு இருதயத்தின் உத்தமமான சாயலே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இருபத்தி ஏழாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

தேவமாதாவின் மாசற்ற இருதயச் சபையில் பெயர் எழுதி வைக்கிறது.

புதுமை!

சகல மனிதருக்கும் பகைவனாக பசாசு அவர்களைப் பாவத்தில் விழச் செய்ய அநேக உபாயங்களைப் பண்ணப் பிரயாசைப்படுகிறது மன்றி அவர்கள் பாவத்தில் விழுந்த பின்பும், தாங்கள் செய்த பாவங்களுக்காக அதிக கூச்சத்தை உண்டாக்க அதைக் குருவிடத்தில் வெளிப்படுத்தாதவாறு தடை செய்யும்.

ஓர் மனிதன் நெடுநாள் புண்ணிய வழியில் நடந்து ஓர் நாள் பசாசினுடைய கொடிய சோதனையில் அகப்பட்டு பாவத்தைக் கட்டிக்கொண்டான். உடனே அதிக வருத்தமடைந்து பாவத்தினுடைய கொடூரத்தைக் கண்டு அதிகமாய் பயப்பட்டுப் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமென்ற நினைவு தேவ ஏவுதலினால் அவன் மனதிலே வந்தாலும் தான் கொண்ட கூச்சத்தினால் இந்த பாவத்தை எப்படி வெளிப்படுத்துவேனென்று கலங்கிப் பின்வாங்கினான். அப்படி பின் வாங்கினாலும் தான் செய்த குற்றத்தை நினைத்து அதிக மனவருத்தம் அடைந்து சாப்பிடவும் நித்திரை செய்யவும் முடியாத நிலையிலிருந்தான். அப்பொழுது அந்த தொந்தரவெல்லாம் நீங்கும் பொருட்டு தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் ஆற்றுக்குச் சென்றான். ஆற்றை அடைந்ததும் தனக்கு நித்திய நரக வேதனை நிச்சயம் கிடைக்குமெனப் பயந்து திரளான கண்ணீரை விட்டு ஆண்டவரைப் பார்த்து, என் பாவத்தைப் பொறுக்க வேண்டுமென்று மன்றாடின போதிலும் பாவசங்கீர்த்தனம் செய்ய தைரியமின்றி தத்தளித்து, அநேக கோவில்களை வேண்டுதலாக சந்தித்து அநேக செபங்களைப்பண்ணி தர்மங்களைச் செய்து தன் மனவருத்தம் தீரும்படியாய்த் திரிந்தாலும் எத்தகைய பயனும் ஏற்படவில்லை. ஓர்நாள் இரவில் தான் படும் மனக்கஷ்டத்தின் காரணமாக அதிக வருத்தப்பட்டு எப்படியும் பாவசங்கீர்த்தனம் செய்தே தீர்வேனென்று நினைத்து அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு அருகிலே சேர்ந்ததும் கூச்சத்தினால் பின்வாங்கி பாவசங்கீர்த்தனம் செய்யாமல் வந்து விட்டான். வேறொரு நாள் கோவிலுக்கு வந்து அதிகமான கூச்சத்தால் தடுக்கப்பட்டு ஒருபோதும் அந்த பாவத்தை சொல்லமாட்டேனென்று பின்வாங்கித் தன் வீட்டுக்குத் திரும்புமுன்னே தேவமாதாவுக்கு தன் நிர்ப்பாக்கியத்தைச் சொல்ல வேண்டுமென்று இந்தப் பரம நாயகியின் திருப்பாதத்தண்டையில் விழுந்து அன்னை தன் பேரில் இரங்கித் தன்னை கைவிடாதபடிக்கு மன்றாடினான். எவ்வித கிருபையும் உடைத்தான தேவமாதா இந்த நிர்ப்பாக்கியமான பாவியின் பேரில் இரங்கி அவன் படும் பயங்கரமான கூச்சத்தை நீக்கி விட்டாள். திருக்கன்னிகையின் பாதத்தில் அவன் விழுந்தவுடனே புது மனிதனாகி எழுந்து தைரியத்தோடு குருவானவரிடத்தில் போய்த் திரளான கண்ணீர் சிந்தி தான் செய்த பாவமெல்லாம் ஒன்றும் ஒளிக்காமல் வெளிப்படுத்தினான். அப்போது அவன் மனதில் வந்த சந்தோஷமும் அமைதியும் எவராலும் எடுத்துரைக்க இயலாத அரிய காரியமாயிருந்தது.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்யுமுன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய தேவமாதாவின் மாசற்ற இருதயத்தை மன்றாடக்கடவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 26
தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதின் பேரில்!

தேவமாதா ஜெயசீலியாக மோட்சத்தில் பிரவேசிக்கிறார்கள்.

தேவமாதா ஆத்தும சரீரத்துடன் மோட்சத்திற்கு எழுந்தருளி போனது விசுவாச சத்தியமென்று 1950-ஆம் வருஷம் நவம்பர் மாதம் 1ஆம் தேதி அர்ச். பாப்பானவர் வரையறுத்துக் கூறினார்.

தேவமாதா இவ்வுலகத்தை விட்டு மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகிறபொழுது ஒன்பது விலாச சபைகளின் சம்மனசுகள் எல்லோரும் முத்திப்பேறுப்பெற்ற மோட்சவாசிகள் அனைவரும் தங்கள் இராக்கினிக்கு எதிர்கொண்டு வந்து இன்பமான பாட்டுக்களை பாடி பிரபலமான கொண்டாட்டம் செய்தார்கள். மோட்ச இராச்சியத்தின் எப்பக்கத்திலும் பரமநாயகி ஜெயசீலியாக வருகையில் ஓர் விசேஷ சோதிப் பிரகாசம் துலங்குவது போன்றிருந்தது. திவ்விய இயேசுவே தமது திருத்தாயாருக்கு எதிராக வந்து மிகுந்த அன்பு பட்சத்துடன் மோட்ச மகிமையான இராச்சியத்துக்குள் பிரவேசிக்க செய்தார். பிதாவாகிய சர்வேசுரன் அன்னையை தமது பிரிய குமாரத்தியாக ஏற்றுக்கொண்டு தம்முடைய ஏக குமாரரான உலக மீட்பரின் வலதுப் பக்கத்தில் அன்னைக்கு ஸ்தாபித்திருந்த சிம்மாசனத்தில் உட்காரச் செய்து அன்னையுடைய திருச்சிரசில் நித்திய ஆனந்தத்தின் முடியை சூட்டி பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியாக ஸ்தாபித்து அன்னையுடைய திருக்கையில் தமது அளவில்லாத பொக்கிஷங்களைக் கொடுத்து தேவமாதாவாகவும் சகல உலகங்களுக்கும் ஆண்டவளாகவும், புத்தியுள்ள சகலரும் அன்னையை வணங்கி ஸ்துதித்து கொண்டாட வேண்டுமென கற்பித்தார். நாம் எல்லாரும் மோட்சவாசிகளுக்கு ஆனந்தமான அந்த வேளையில் அவர்கள் தேவமாதாவைக் குறித்து அனுபவித்த அகமகிழ்ச்சியை கொண்டு அந்த பரமநாயகியை அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடக்கடவோம். நமது அன்னையிடத்தில் எப்பொழுது சேருவோமோ என்ற ஆசை மிகுதியால் நம்மை மீட்க வேண்டுமென மன்றாடுவோம்.

தேவமாதா மோட்சத்தில் அடைந்த மகிமை.

தேவமாதா மோட்ச இராட்சியத்தில் அடைந்த உன்னத மகத்துவத்தை சிறிது ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரம் நாயகி உலக மீட்பருடைய மெய்யான தாயுமாய் எல்லா வரப்பிரசாதங்களினாலும் பூரணமாக அலங்கரிக்கப் பட்டவர்களுமாய் வாழ்ந்த 70 வருஷமளவும் உத்தம சுகிர்த புண்ணியங்கள் அனைத்தையும் செய்து தமது திருக்குமாரனுக்கு பக்தியுடன் பணிவிடை புரிந்து, புண்ணியவான்களை எல்லாரையும்விட உன்னத சாங்கோபாங்கத்தை அடைந்திருந்தார்கள். மோட்சத்தில் அடைந்த மகத்துவம் இவைகள் எல்லாவற்றிற்கும் ஏற்றவாறு விளங்குகிறது. அப்படியே எல்லா மோட்சவாசிகளுக்கும் மேலானவர்களும் தூதர் அதிதூதர் முதலிய சம்மனசுகளுக்கும் உயர்ந்தவளுமானார்கள். அன்னைக்கு மேல் சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் மாத்திரம் மேற்பட்டவராயிருக்கிறார். நாம் அந்தப் பரமநாயகி பாத கமலங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நம்மால் முடிந்த அளவு மகத்துவத்துக்கு தகுதியான தோத்திரமும் ஸ்துதியும் வாழ்த்துதலும் செலுத்தக்கடவோம்.

தேவமாதாவுக்கு மோட்சத்தில் கொடுக்கப்பட்ட வல்லபம்.

தேவமாதா இந்த மேன்மையான உன்னதத்தை பெற்று எல்லா தோத்திரத்துக்கும் ஸ்துதிக்கும் உரிமையுள்ளவர்களாய்க் குறையற்ற ஆனந்த சந்தோஷத்தை அனுபவித்தாலும் இவ்வுலகில் துன்பப்பட்டு உழலும் தமது அன்புப் பிள்ளைகளான நம்மை மறக்கிறவர்களல்ல! அவர்கள் திருச்சபைக்கும் சகல விசுவாசிகளுக்கும் பாதுகாவலும் தாயாரும் இராக்கினியுமாய் இருக்கிறதுமன்றி புண்ணியவாளர் நன்னெறியில் நடக்குமாறும், பாவிகள் பாவத்தைவிட்டு புண்ணிய வழியில் உறுதியாய் நடக்க துணியுமாறும் எல்லாருக்கும் அடைக்கலமும் ஆதரவுமாயிருக்கிறார்கள். இடைவிடாது நமக்காக தமது திருமைந்தனிடத்தில் மனுப்பேசி தம்மை மன்றாடுகிறவர்களுக்கும் விலையேறப் பெற்ற வரங்களையும் விசேஷ உபகாரங்களையும் அளிக்கிறார்கள். நாமும் இந்த அன்புள்ள தாயின்மீது தகுதியான மரியாதையும், உறுதியான நம்பிக்கையும், உண்மையான அன்பும் வைத்து வணங்கவும் நேசிக்கவும் சேவிக்கவும் கடவோம். நமது வாழ்நாளெல்லாம் நம்மைக் காப்பாற்றி நாம் சாகிற வேளையில் நம்மை மோட்ச இராச்சியத்தில் சேர்க்க அன்னையை மன்றாடுவோம்.

செபம்.

இயேசுகிறிஸ்துநாதருடைய பரிசுத்த தாயாரே! நீர் இந்தக் கண்ணீர் கணவாயை விடுவதற்கு சமயமாயிற்று. நீர் எங்கள் மத்தியில் இருக்கிறதற்கு நாங்கள் பேறுபெற்றவர்களல்ல. அதிக பாக்கியமும் அதிக யோக்கியமும் உள்ள இடமான மோட்சத்துக்கு எழுந்தருளிப் போகக்கடவீர். என் அன்புள்ள தாயே! நித்தியத்தின் மகிமையான முடியைத் தரித்துக்கொள்ள எழுந்தருளும். நீர் மகிமை நிறைந்த புண்ணியங்களால் பேறு பெற்ற சம்பாவனையை கைக் கொள்ள எழுந்தருளும். உமக்கு ஸ்தாபிக்கப்பட்ட சிம்மாசனத்தில் இராக்கினியாக உட்கார்ந்தருளும். ஆனால் உம்முடைய நீசப் பிள்ளைகளான எங்களை விடுகிறபோது எங்களுடைய பக்தியுள்ள உணர்ச்சிகளுக்கிரங்கி நீர் எங்களுக்கு எப்பொழுதும் அடைக்கலமும் அன்னையுமாய் இருப்பீராக. எங்களுக்கு ஓர் அடையாளமும் உறுதிப்பாடும் தந்தருள மன்றாடுகிறோம். எங்களைப் பெற்ற தாயைப்பார்க்கிலும் அதிக அன்பான தாயே! இரக்கமுள்ள மரியாயே! உம்முடைய பரிசுத்த திருஇருதயத்தை எங்களுக்கு கொடுத்தருளும். இந்தப் பரிசுத்த இருதயமானது தாய் தந்தையற்ற பிள்ளைகளைப்போல் இந்த நிர்ப்பாக்கிய கணவாயில் துன்புறும் எங்களுக்கு உதவியும் ஆதரவும் தஞ்சமுமாயிருக்கும் நாங்கள் பாவ வெள்ளத்தில் அமிழ்ந்திப் போகாதபடிக்கு தற்காக்கும் பேழையைப்போல் இருக்கிற உமது திரு இருதயத்தின் ஆதரவில் ஒடிவந்து நாங்கள் உமது உதவியை அடைந்து மோட்சத்தில் சேருமளவும் புயல்களுக்கு அஞ்சாத நிலை பெறுவோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த தாயாரே, எங்களை பரிசுத்தராக்கி எங்களை மோட்சத்துக்கு போகும் வழியில் நடப்பித்தருளும்.

இருபத்தி ஆறாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய கோவில்களில் ஞான புஸ்தகங்கள் உண்டோ, இல்லையோ என்று பார்க்கிறது. இல்லாதிருந்தால் அவைகளை வாங்கிக் கொடுக்கிறது.

புதுமை!

1228-ஆம் ஆண்டில் ஓர் குருவானவர் தேவமாதாவைக் குறித்து திருப்பலி செய்யும்பொழுது அந்த ஊரில் இருந்த பதிதர் எல்லாரும் கூட்டமாய் கோவிலுக்குள் வந்து பூசை செய்த குருவைப் பிடித்து அவருடைய நாக்கை அறுத்தார்கள். அந்த பாதகத்தை செய்தவர்கள் போனபின் குருவானவர் ஒரு மடத்துக்கு போய் அங்கு இருக்கும் சன்னியாசிகளால் மிகுந்த சிநேகத்தோடும், மரியாதையோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அந்தக் குருவானவருக்கு தேவமாதாவை ஸ்துதிக்கவும் திருப்பலி செய்யவும் இனி முடியாதென்று வருத்தமுற்று மனதால் தினமும் அன்னையை மனதிலே வேண்டிக்கொண்டு மூன்று இராஜாக்கள் திருநாளில் தேவமாதாவின் பேரில் அதிக பக்தி வைத்து அன்னையின் கோவிலுக்கு வந்து ஆண்டவளே! நான் உம்மைக் குறித்து திருப்பலி செய்ததினால் உமக்குப் பகையாளிகளாய் இருக்கிற எதிரிகளாகிய பதிதர் என் நாக்கை அறுத்தார்களே; நீர் எனக்கு நலமானதொரு நாக்கு கொடுக்க முடியும் என்ற புதுமை உம்மால் முடியுமென்று நம்பிக்கையாய் இருக்கிறேன் என்றார். அவர் அவ்வாறு மன்றாடிய பொழுது தேவமாதா அவருக்குத் தம்மை காண்பித்து, நீ நமக்காக உன் நாக்கை இழந்ததினால் நாம் இப்பொழுது உனக்கு வேறு நலமானதொரு நாக்கு கொடுத்தோம் என்று சொல்லியவுடனே, அந்தக் குருவானவர் பலத்த சத்தத்தோடு அருள்நிறை மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு கோவிலிலிருந்த சன்னியாசிகள் அருகில் வந்து அற்புதமாய் நாக்கை அடைந்த புதுமையைக் கண்டு வெகுநேரம் தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினார்கள்.

இரண்டாவது!

1793 ஆம் ஆண்டில் ஒரு துஷ்டப் பெண் தான் பெற்ற குழந்தையைக் கொன்று பிரேதத்தை தெரு வீதியில் இருக்கும் குப்பை மேட்டில் அடக்கம் பண்ணினாள். அப்பொழுது ஓர் மனிதன் வேட்டைக்குப் போகிற பொழுது அவனுடைய நாயானது அந்த குப்பையை காலால் பறித்துப் பிரேதத்தை வெளிப்படுத்தினதினால் அநேகர் அந்த பிரேதத்தை பார்க்க வந்தார்கள். சிலர் அதை எடுத்து அடக்கம் பண்ணப் போகையில் ஓர் பெண் இந்தப் பிள்ளை சிலவேளை ஞானஸ்நானம் இல்லாமல் இறந்திருக்கும் என்று அதற்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி தேவமாதாவை வேண்டிக்கொள்ளுவோம் என்றாள். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஏறக்குறைய நானூறு பேர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாரும் அதற்குச் சம்மதித்து, அருகில் இருக்கும் தேவமாதாவின் கோவிலுக்கு வந்து அங்கு இருக்கும் சந்நியாசிகளையும் வேண்டிக்கொள்ளச் சொல்லி தாங்களும் வேண்டிக் கொண்டார்கள்.

அப்படி வேண்டிக் கொண்டிருக்கையில் அந்தக் குழந்தை சத்தமிட்டு உயிர்த்த புதுமையை அவர்கள் கண்டு கோவில் மணி அடித்து தெதேயும் என்ற கீர்த்தனையை சர்வேசுரனுக்குத் தோத்திரமாகப் பாடி, அந்தக் குழந்தைக்கு மரியாள் என்னும் பெயரிட்டு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். அக்குழந்தை ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு பால் குடித்து விட்டு மூன்று மணி நேரம் உயிருடனிருந்து பின்னர் இறந்தது. அந்தப் பிரேதத்தை மிகுந்த ஆரவாரத்தோடு அடக்கம் செய்தார்கள்.

கிறிஸ்தவர்களே ! எவ்வித அற்புதங்களையும் புதுமைகளையும் செய்விக்க வல்லபமுள்ள மோட்ச இராக்கினியை நம்பி உங்களுக்கு வேண்டியதெல்லாம் அன்னையிடத்தில் கேளுங்கள். ( தினமும் குடும்ப ஜெபமாலை சொல்வோம்)

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 25
தேவமாதா உயிர்த்ததின் பேரில்!

தேவமாதாவின் திருச்சரீரமானது கல்லறையில் அழியாதிருக்கும் வரம் பெற்றது.

ஜென்மப் பாவத்தினின்றும் தேவமாதாவின் திரு ஆத்துமத்தை நோக்கி மீட்ட சர்வேசுரன் அன்னையின் பரிசுத்த சரீரம் கல்லறையில் அழியாதிருக்க திருவுளங்கொண்டார். நீதியுள்ள கர்த்தர், ஆதி மனிதனை நோக்கி, நீ மண்ணாயிருக்கிறாய், திரும்ப மண்ணாய்ப் போவாயென்று பெரிய சாபத்தையிட்டு மனிதராகப் பிறந்தவர்களின் சரீரம் அழிந்து போக வேண்டுமெனத் தீர்மானித்தார். ஆனால் பரிசுத்த கன்னிகை அந்தப் பொதுவான கட்டளைக்கு உட்படாதபடி கிருபை செய்திருக்கிறார். சாகுமளவும் ஓர் அற்ப மாசில்லாமல் பரிசுத்தமுள்ளவராய் இருந்ததாலும் அன்னையுடைய திரு உதரமானது அவதரித்த இரட்சகருடைய இருப்பிடமாகித் தெய்வீகத்தினுடைய தேவாலயமும் இஷ்டப்பிரசாதத்தினுடைய சுகிர்த பீடமுமாய் இருந்ததாலும் அன்னைக்கு இந்த அழியா வரத்தை கொடுக்க திருவுளங் கொண்டார். நீங்களும் பரிசுத்த திவ்விய நற்கருணை வழியாக அவதரித்த கர்த்தரை வாங்குகிறீர்களே! கர்த்தர் உங்களிடத்தில் வந்து உங்களோடுகூட அமிர்தமான விதமாய் ஐக்கியப்பட்டு உங்கள் சரீரத்தை தூய்மைப்படுத்த நித்திய ஆனந்தத்துக்கு அச்சாரங் கொடுக்கிறார். இயேசுக்கிறிஸ்துநாதரால் தூய்மைப்படுத்தப்பட உங்களுடைய சரீரத்தை எவ்வித தீய பாவத்தினாலும் களங்கப்படுத்தாதபடிக்கு மிகுந்த எச்சரிக்கையோடு நடக்கக்கடவீர்களாக.

அந்தப் பரம நாயகி இறந்தபின் உயிர்க்க வரம் பெற்றது.

மனிதர் எல்லாரும் உலக முடிவில் உயிர்ப்பார்கள். ஆனால் பரமநாயகி மனுமக்களுக்கு ஜீவியமும் உத்தானமுமாயிருக்கிற இயேசுநாதரைப் பெற்று, அவருடைய முன்மாதிரிகையைப் பின் சென்று, ஆத்தும இரட்சணிய அலுவலில் அவருடன் ஒத்துழைத்தபடியால், அன்னை இறந்த மூன்றாம் நாள் ஆத்தும சரீரத்தோடு உயிர்த்தெழுந்தருளும் வரம் பெற்றார். அன்னையுடன் திருச்சரீரத்தோடு ஒன்றாகி பாக்கியமும் மகிமையும் கொடுத்ததாம். இந்தத் திருச்சரீரமானது கல்லறையினின்று எழுந்து சூரியனைப் பார்க்க அதிக ஜோதியோடும் சந்திரனைப் பார்க்க அதிக குளிர்ந்த பிரகாசத்தோடும் இலகு, சூட்சம், அழகு, சாகாமை என்னும் இந்நான்கு வாரங்களை அடைந்து துலங்குகிறதாம். ஓர் கஸ்தியும் படாமல் என்றென்றும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் வாழ்ந்திருப்பார்கள். நாம் நம்முடைய திருத்தாயாருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தைக் கண்டு அன்னையை வாழ்த்திப் புகழக் கடவோமாக. நடுத்தீர்க்கிற நாளில் நாமும் உயிர்ப்போமென்பது சத்தியம். ஆனால் நாம் உயிர்த்து மோட்சத்துக்குப் போவோமோ அல்லது நரகத்துக்குப் போவோமோ தெரியாது. அது நமது நடக்கைக்குத் தகுந்தது போலிருக்கும்.

தேவமாதாவின் உத்தானமானது நாம் அன்னை பேரில் வைத்திருக்கும் நம்பிக்கைக்குக் காரணமாக இருக்கின்றது.

தேவமாதாவின் மகிமை நிறை ஆரோபணம் நமக்குச் சந்தோஷமும் நம்பிக்கையும் வருவிக்கின்றது. தமது சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளி அதில் நிகரில்லாத மகிமையை அடைந்து இன்னமும் நம்முடைய தாயாருமாய் அடைக்கலமுமாய் ஆதரவுமாய்ப் பாதுகாவலுமாயிருக்கவும் அன்னையை அழைக்கப்படவும் சித்தமானார்கள். நாம் அனுபவிக்கிற தீமைகளிலும் இக்கட்டுகளிலும் சும்மா இருக்கிறதெப்படி? இதோ அவைகளினின்று நம்மை மீட்க நமது நேச அன்னை காத்திருக்கிறார்கள். அன்னையிடத்தில் அபய சத்தமிட்டு நம்பிக்கையோடு மன்றாடுவோமாகில் அன்னை நமக்கு வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் அடைந்து கொடுப்பார்களென்பது திண்ணம்

செபம்.

பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் இராக்கினியான திவ்விய கன்னிகையே, உமது திருஆத்துமம் உமது பரிசுத்த சரீரத்தோடு சேர்ந்து உயிர்க்கிறபோது நீர் அடைந்த மனோவாக்குக் கெட்டாத சந்தோஷத்தைப்பற்றி உம்மை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டாடுகிறோம். ஓ! தாயாரே, புயல் அடிக்காத துறைமுகமான மோட்சத்தில் சேர்ந்து சர்வேசுரனுடைய சிம்மாசனத்தருகில் இருக்கிறீர். ஆனால் எவ்வித காற்றினாலும் புயலினாலும் எழுப்பப்பட்ட சமுத்திரமான இந்த நிர்ப்பாக்கிய உலகில் உழைத்து வருத்தப்படுகிற உம்முடைய பிள்ளையாகிய எங்களைக் கைவிடுவீரோ? அதில்லையே, நீர் எங்களுக்காகச் சர்வேசுரனிடத்தில் மனுப்பேசும்படியாய் உருக்கத்தோடு மன்றாடுகிறோம். ஓ! தாயாரே, எங்களைக் கிருபைக் கண் கொண்டு பார்த்து எங்களுடைய மன்றாட்டுகளுக்கு இரங்கி நாங்கள் அனுபவிக்கிற தீமைகளை நீக்கி ஈடேற்றத்தை அடைவதற்கு வேண்டிய வரப்பிரசாதங்களைப் பெறச் செய்விரென்று நம்பிக்கையாய் இருக்கிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

ஓ! தாயாரே, உம்முடைய அடைக்கலத்தில் நாங்கள் இருக்கிறது பேரின்ப பாக்கியம்.

இருபத்திஐந்தாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இன்னமும் சில பிறமதத்தவர்களோடு நல்ல புத்தி சொல்லுகிறது.

புதுமை!

அர்ச். சிமோன் ஸ்தோக் என்பவர் தேவமாதாவை உத்தம மேரையாய் வணங்க ஆசையுள்ளவராய்த் தினமும் அன்னையைப் பார்த்து, நாம் உம்மை வணங்கும் விதம் எப்படியென்று எனக்கு அறியப் பண்ணியருள வேண்டுமென மன்றாடிக்கொண்டு வந்தார். தேவமாதா அவருடைய ஆசையைக் கண்டு அவர் தமது சுரூபத்துக்கு முன் வேண்டிக்கொள்ளுகிற நேரத்தில் அவருக்குத் தம்மைக் காண்பித்து அவருக்கு உத்தரியத்தைக் கொடுத்துச் சொன்னதாவது: நீ நமக்கு ஏற்றவிதமாய் ஸ்துதிக்க வேண்டுமானால் இந்த உத்தரியத்தையும் அணிந்து மற்றவர்களும் இதைத் அணிக்கும்படி தூண்டுவாயாக. அதை விசுவாசத்தோடு அணிவிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்நாளில் நம்முடைய உதவியைப் பெற்று, அத்தோடு சாகிறவர்கள் நரகத்துக்குத் தப்பி கரையேறுவார்களென்று திருவுளம் பற்றினார்கள். இந்தப் புதுமை பிரசித்தமான பின்பு, தேவமாதா அந்த உத்தரியத்தைக் கையளித்ததினாலும் புனித பாப்புமார்கள் அதைத் தரிக்கிறவர்களுக்கு அநேக பலன்களைக் கொடுத்ததினாலும், அரசர்கள் முதல் எண்ணிக்கையில்லாத கிறிஸ்தவர்கள் உத்தரிய சபையில் சேர்ந்தார்கள்.

அந்த சபையில் சேர்ந்த ஓர் சேவகனிடத்தில் நடந்த புதுமையானது: பிரெஞ்சு நாட்டு அரசராகிய பதின்மூன்றாம் ஞானப்பிரகாசியார் என்பவர் மொப்பெலியர் என்னும் நகரை முற்றுகையிட்டு அதைப் பிடிக்கப் பிரயாசைப்படுகையில் உத்தரியத்தை தரித்துக்கொண்டிருந்த ஓர் போர்ச் சேவகன் எதிரிகளோடு போராடும்பொழுது துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டு அவன் நெஞ்சிலே உத்தரியம் இருக்கிற இடத்தில் பாய்ந்ததும் மேலாடையை ஊடுருவிச் சென்றாலும் சரீரத்துக்குள் புகாமல் உத்தரியத்தில் பட்டவுடனே நசுங்கிப்போய்க் கீழே விழுந்தது. அரசர் அந்த செய்தியை அறிந்து அந்த போர்ச் சேவகனை வரவழைத்து அவனிடத்தில் நடந்த புதுமையை நிச்சயித்து உத்தரியம் தரிக்கிறவர்களுக்கு தேவமாதா எவ்வளவு உதவியாய் இருக்கிறார்களென்று மகிழ்ச்சியுற்று அவரும் அநேகரும் உத்தரியத்தை அணிந்தார்கள்.

இரண்டாவது!

பிளோரென்ஸ் என்ற நகரில் வெறிபிடித்த ஓர் சிங்கம் தான் இருக்கும் கூண்டை விட்டு வெளிச்சென்று நகரில் எங்கும் வந்து கர்ச்சித்து அனைவருக்கும் பயத்தை உண்டாக்கி தெருவீதிகளில் திரிந்தது. பின்னர் தேவமாதாவின் கோவில் அருகே நின்றது. அதைப்பிடிக்க ஒருவரும் வெளியே வராமலிருக்கும்பொழுது ஒரு பெண் தேவமாதாவின் பெயர் சொல்லி அந்த சிங்கத்தை பிடிக்கத் துணிந்து அதன் அருகே வந்து தான் அணிந்திருந்த உத்தரியத்தை எடுத்து சிங்கத்தின் கழுத்திலே போட்டு ஓர் ஆட்டுக்குட்டியைப்போல அதை இழுத்து கூட்டிக்கொண்டு போனாள். ஜனங்கள் அதைக்கண்டு தேவமாதாவின் கோவிலுக்கு வந்து பரலோக இராக்கினியைத் தோத்திரம் செய்தார்கள்.

மூன்றாவது!

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் இயேசுசபை குருக்களில் ஒருவராகிய ஞானப்பிரகாசியார் என்னும் குருவானவர் எழுதி வைத்த புதுமையானது: ஒரு ஊரில் ஓர் பிற சமய மனிதன் மீது பசாசின் ஆவேசம் ஏறி அவனை உபத்திரவப்படுத்தி அவனைத் துஷ்ட பைத்தியக்காரனாக்கி எல்லாருக்கும் பயத்தை உண்டாக்கியது. அவன் ஊரில் சுற்றித் திரியும் பொழுது மற்றவர்கள் தங்கள் வீட்டு கதவுகளை அடைத்து ஒருவரும் வெளியே செல்லாமல் ஒளிந்திருப்பார்கள். அவர்கள் பிற மதத்தவர்களாய் இருந்தபோதிலும் குருவிடத்தில் வந்து அந்த மனிதன் மேல் மனமிரங்கும்படி மன்றாடினார்கள். குறிப்பிடம் படிக்கும் ஓர் சிறுவன் குருவிடத்தில் மன்றாடுகிறதை அறிந்து நானே அந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்று தன் உத்தரியத்தை, அந்த பைத்தியக்காரனின் கழுத்தில் போட்டு ஒரு காத வழி தூரம் அவனை கூட்டிக்கொண்டு வந்து பிற மதத்தவர் அனைவரும் வியக்கத்தக்க விதமாக குருவினிடத்தில் விட்டான்.

மேற்சொன்ன ஊரில் நடந்த இப்புதுமைக்கு அடுத்த, சம்பவமானது மாசில்லாமல் உற்பவித்த தேவமாதா கோவிலிலிருக்கும் சுரூபம் அதன் பாதத்தில் ஓர் பாம்பை மிதித்திருக்கும் பாவனையாய், செய்திருந்தது. இயேசு சுவாமி பிறந்த திருநாளில் கிறிஸ்தவர்கள் எல்லாரும் அங்கே, வேண்டிக் கொண்டிருக்கும்பொழுது, ஓர் நல்ல பாம்பு கோவிலில் உட்புகுந்து நடுவில் நகர்ந்து வந்து ஓர் பெண் குழந்தையின் மேல் ஏறியதினால் அவள் அதைக்கண்டு அபயமிட்டு கையால் பிடித்து சனங்கள் மத்தியில் எறிந்துவிட்டாள். எல்லோரும் பயந்து தேவமாதாவை வேண்டிக்கொண்டதினால் பாம்பு ஒருவருக்கும் தீமை செய்யாது வெளியே சென்றுவிட்டது. அன்று பல மதத்தவர்களும் ஓர் சத்திரத்தில் படுத்திருக்கும் பொழுது புகுந்த அந்த பாம்பினால் ஏழுபேர் கடிக்கப்பட்டு இறந்தார்கள்.

தேவமாதாவின் வெற்றிக்கொடியின் கீழ் பசாசுடன் போராடுகிற நீங்கள் அனைவரும் பரிசுத்த கன்னிகையின் அடையாளமான உத்தரியத்தை தரித்து கொள்வீராகில் அநேக நன்மைகளை அடைவீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 24

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 24
தேவமாதாவின் திரு மரணத்தின் பேரில்!

தேவமாதா சாவுக்கு உட்படுகிறதற்குக் காரணம்.

சர்வ ஜீவ தயாபர சர்வேசுரன் தேவமாதா ஜென்மப் பாவமில்லாமல் உற்பவிக்க வேண்டுமென திருவுளங்கொண்டிருந்தாலும் பாவத்துக்கு ஆக்கினையாகிய சாவிலே நின்று அவர்களை நீக்கவில்லை. சர்வேசுரன் மனுமக்களை எல்லாரும் சாக வேண்டுமென்று இட்ட தீர்ப்பை எல்லாருக்கும் பொதுவாய் மறுக்கக்கூடாததுமாய் இருக்கிறதாகவும், திருக்குமாரன் சகல ஜீவஜந்துக்களுக்கும் ஜீவிய காரணமாய் இருக்கவும், மரணமடையத் திருவுளமானதைப்பற்றி அன்னை அவருக்கொத்தவர்களாய் இருக்கவும் அவ்வேளையிலே நாம் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு மாதிரிகையாய் இருக்கவும் அன்னை சாகவேண்டுமென்று தீர்மானித்தார். சாக வேண்டுமென்ற தீர்வையானது கடினமும் வருத்தமுமாயிருந்தபோதிலும் இந்தத் தீர்வைக்கு தேவமாதா மிகுந்த மனத்தாழ்ச்சியுடனேயும் அமைதியுள்ள மனதுடனேயும் மாறாத நம்பிக்கையுடனேயும் தமது திருமைந்தனிடத்தில் சேர வேண்டுமென்ற ஆசையுடனேயும் சம்மதிக்கிறார்கள். நாமும் அப்பேர்ப்பட்ட மனத்தாழ்ச்சி, அமைதி, நம்பிக்கை, தேவ சிநேகத்தோடு நமக்கு வரப்போகிற சாவைக் கைக்கொள்வோமாகில் சாவு எவ்வளவோ பாக்கியமுள்ளதாயிருக்கும்!

அன்னை மரித்த மேரை.

வேத சாஸ்திரிகள் சொல்லியிருக்கும் வண்ணம் பரிசுத்த கன்னிகையின் சாவானது ஓர் மதுரமான நித்திரையைப்போல் சம்பவித்ததாம். திவ்விய தாயானவள் வருத்தப்படாமலும் கஸ்தி அனுபவியாமலும் இளைப்பாறுவது போல இந்தக் கண்ணீர் கணவாயை விட்டு விட்டு ஆனந்தமான நித்தியத்துக்குச் சேர்ந்தார்கள். மரித்தது வயதின் மிகுதியினாலேயாவது, வருத்தத்தினாலேயாவது நிகழாமல் அன்னையுடய திருஇருதயத்தில் சுவாலை விட்டெரிந்த தேவ சிநேக அக்கினியால் வந்தது! மரத்தின் கொம்பிலே நின்று பழுத்த கனி விழுகிறதைப்போலவும், சூரியன் பகலிலே எங்கும் உஷ்ணப் பிரகாசத்தைப் பொழிந்து தன்னாலே அஸ்தமிக்கிறதைப் போலவும் தேவமாதாவின் திரு ஆத்துமம் எல்லாப் புண்ணியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு தன்னிடத்தில் எரிகிற சிநேக உக்கிரத்தினால் தேவன்னையின் திருச்சரீரத்தை விட்டுப் பிரிந்தது. இந்தப் பரம நாயகியின் அமிர்தமான மரணத்தைக்கண்டு அகமகிழ்ந்து நாம் இஷ்டப்பிரசாதத்தோடு சாகும் பொருட்டு அன்னையை மன்றாடக் கடவோம். நல்ல மரணத்தை அடையதக்க பக்தியோடு நடக்கக்கடவோம்.

சாகிறவர்களுக்கு அடைக்கலமாய் இருக்கிற விதம்.

தேவமாதா சாகிறவர்களுக்கு அடைக்கலமுமாய் மாதிரிகையுமாய் தமது திருமைந்தனால் நியமிக்கப்பட்டவர்களாகும். மரண வேளையில் பசாசு செய்கிற கடின சோதனைகளில் நாம் விழாதபடிக்கு நமக்கு உதவி செய்து அப்பொழுது வருத்தமான இக்கட்டுகளில் ஆதரவாயிருந்து நாம் பாக்கியமான மரணத்தை அடைய விசேஷ கிருபை செய்கிறார்கள். இதுவுமல்லாமல் பாக்கியமான மரணத்துக்கு ஏதுவாயிருக்கிற ஆத்தும சுத்தத்தையும் அருந் தவத்தையும் உலக வெறுப்பையும் தேவ சிநேகத்தையும் மற்ற புண்ணியங்களையும் அனுசரிக்கிறதற்கு உதவி செய்கிறார்கள். நீங்களும் நித்திய பாக்கியத்தையாவது, நிர்ப்பாக்கியத்தையாவது வருவிக்கிற மரண வேளையில் இந்தத் திவ்விய தாயார் உஙகளுக்கு ஆதரவாய் இருக்கும்படிக்கு அன்னையைப் பார்த்து, தினம்தோறும் மிகுந்த பக்தி நம்பிக்கையுடன், சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளுமென்று மன்றாடக் கடவீர்கள். இப்படி மன்றாடினால் நித்திய பாக்கியத்தைக் கொடுக்கும் நல்ல மரணம் உங்களுக்கு கிடைக்கும்.

செபம்.

என் அன்புள்ள தாயாரே! நீசப் பரவியிருக்கிற அடியேனுக்கு நல்ல மரணம் வருமோ, அகோரமான மரணம் வருமோவென்று நான் நினைக்கிறபோது அங்கலாய்த்துப் பயந்து நடுநடுங்குகிறேன். நான் எத்தனையோ முறை கனமான பாவங்களைக் கட்டிக்கொண்டு எனக்கு நரகத்துக்குப் போகிற ஆபத்து வருவித்தேனென்று அறிந்து தேவ தீர்வைக்கு மிகவும் பயப்படுகிறேன். கஸ்திப்படுகிறவர்களுக்கு ஆதரவே, இந்தக் கஸ்தி சமயத்தில் என்மீது இரங்கி என்னைக் காப்பாற்றியருளும். அப்போது பொல்லாத பசாசு என்னைக் கெடுக்கவும் நரகத்திலே இழுக்கவும் விடாதேயும். உமது திருமைந்தனிடத்தில் எனக்காக உருக்கமாய் மன்றாடி, நான் செய்த எண்ணிக்கையில்லாத பாவத்துக்கு மனஸ்தாபப்பட்டு, இன்று முதல் இடைவிடாமல் தேவ கற்பனைகளை அனுசரித்து, விசேஷமாய் நான் மரண அவஸ்தைப்படும் பொழுது ஆண்டவர் பாதத்தை சிநேகத்தோடு பற்றி பாக்கியமாய்ச் சாகும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். என் தாயே! என் நம்பிக்கையே, அப்போது என்னைக் கைவிடாதேயும். நான் உம்மிடத்தில் சேருமளவும் எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

மரியாயே, இஷ்டப்பிரசாதத்தின் மாதாவே, தயையின் சமுத்திரமே, என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றி என் மரண வேளையில் என்னைக் கைவிடாதேயும்.

இருபத்திநான்காம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

இயேசுக்கிறிஸ்துநாதரின் திரு இருதயம் மனிதர்பேரில் வைத்த அளவறுக்கப்படாத அன்பை நினைக்கிறது.

புதுமை!

அர்ச்சியஷ்டவர்கள் எல்லாரும் தேவமாதாவின் பேரில் மிகுந்த பக்தி விசுவாசமுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பது சத்தியமாம். ஆனால் அவர்களுக்குள் இயேசு சபையை சேர்ந்த புனித ஸ்தனிஸ்லாஸ் என்பவர் இந்தப் பாரம்பரிய பக்தியின் பேரில் அதிக அன்பும் நம்பிக்கையும் வைத்தார் என்று சொல்ல வேண்டும். அவர் சிறு பிராயத்திலேயிருந்து பரம நாயகியை மிகுந்த அன்போடு நேசித்து வணங்கினதுமல்லாமல் அன்னையுடைய பழுதற்ற கன்னிமையைக் குறித்துச் சந்திரனுடைய வெண்மையான கதிர் போலிருக்கிற கற்பென்கிற புண்ணியத்தைச் சொல்லிலடங்காத எச்சரிக்கையுடன் அனுசரித்துக்கொண்டு வந்தார். யாராவது இந்தப் பரிசுத்த வாலிபர் முன்பாக ஓர் ஆகாத வார்த்தையைச் சொல்லுவானாகில் உடனே அவர் பயந்து நடுங்குவார். அவருடைய செளந்தரியமுள்ள முகத்தை கண்டவர்கள் எல்லாரும் புண்ணியத்தின் பேரில் அதிக மதிப்பையும் பிரியத்தையும் அடைவார்கள். அவர் தேவமாதாவின் விசேஷ உதவியால் ஓர் அற்ப குற்றமில்லாமல் நடந்தார். அவர் படிக்கும்பொழுது கடின வியாதியாய் விழுந்து அவஸ்தையாகி மரணத்தறுவாயிலிருந்தார். அப்பொழுது தேவமாதா குழந்தையான இயேசுக்கிறிஸ்துநாதரோடு அவருக்குக் காண்பித்துத் திருப்பாலனை அவருடைய கையிலே வைத்து அவருடைய மனம் சந்தோஷ வெள்ளத்தில் அமிழ்ந்தியிருக்கச் செய்தாள். பின்பு பரம நாயகி, என் மகனே! நீ இப்பொழுது சாகமாட்டாய், நமது திருக்குமாரன் இயேசுநாதருடைய சபையிலே பிரவேசித்து அதில் சர்வேசுரனுக்கு ஊழியம் பண்ண வேண்டுமென்று சொல்லி மறைந்து போனாள். அவர் இந்தக் காட்சியில் அடைந்த சந்தோஷத்தினால் விரைவில் குணமடைந்து இயேசு சபையில் சேரும்படி அதிகம் முயற்சித்தார். அதில் சேர்ந்து எவ்வித புண்ணியங்களையும் அதிகமதிகமான சுறுசுறுப்போடு அனுசரித்து வந்தார். தேவமாதாவின் திருநாமத்தை அவர் உச்சரித்தாலாவது மற்றவர்கள் உச்சரிக்கிறதைக் கேட்டாலாவது தமக்குள்ளே உண்டான சந்தோஷ மிகுதியால் பரவசமாய் இருப்பார். தமது மனதில் எரிகிற தேவ சிநேகத்தின் உக்கிரத்தினால் அடிக்கடி உஷ்ணமடைந்து தமது நெஞ்சின் மேல் குளிர்ந்த தண்ணீர் வைத்துத் தாம் அனுபவிக்கிற தேவ உஷ்ணத்தைத் தணிக்கப் பிரயாசைப்படுவார். அவருடைய நல்ல மாதிரிகைகளைப் பார்த்தவர்கள் எல்லாரும் அவர் மனிதனல்ல. சம்மனசாயிருக்கிறார் என்பார்கள். அப்படியே சிறிது காலத்தில் புண்ணிய சாங்கோபாங்கத்தில் மிகுந்த தேர்ச்சி பெற்று பிரக்யாதி பெற்ற அர்ச்சியஷ்டவர்களுக்கு ஒப்பானார். சுகிர்த பிரகாசமுள்ள இந்த ஞான மாணிக்கமானது குப்பை போல் இருக்கிற இந்த உலகத்தில் இருக்கக்கூடாதென்றும், அவர் அனுபவிக்கிற தேவசிநேக அக்கினியை இந்த அழிந்துபோகிற சரீரமானது பொறுக்கக் கூடாதென்றும் சர்வேசுரன் அவரைத் தம்மிடத்தில் வரவழைக்கச் சித்தமானார்.

தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளை மோட்சவாசிகள் எல்லாரும் மோட்சத்தில் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள் என்று நினைத்து புனித ஸ்தனிஸ்லாஸ் தாமும் அவர்களோடுகூட அந்தத் திருநாளை மோட்சத்தில் கொண்டாடப் போகவேண்டுமென்று மிகவும் ஆசையாயிருந்தார். அதற்காக அந்தத் திருநாளுக்கு முன்னதாக அந்த பாக்கியம் தமக்குக் கிடைக்க வேண்டுமென்று ஓயாது மன்றாடிக் கொண்டிருந்ததுமல்லாமல் இந்த திருநாளை மோட்சத்திலேயே கொண்டாடப் போவேன் என்று எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் நினைத்ததுபோல் திருநாளுக்கு முன் நாலைந்து நாள் வியாதியாய் விழுந்து மிகுந்த சந்தோஷப்பட்டார். திருநாளுக்கு முந்தின நாள் அதிக அவஸ்தையாகி அவஸ்தைப் பூசுதலை பெற்றுத் திவ்விய நற்கருணை வாங்கித் தேவமாதாவின் திருப்பெயரை மிகுந்த பக்தியோடு உச்சரித்து சொல்லொணா மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்கியிருந்தார். நடுச்சாமத்தில் கூட நின்றவர்கள் அவஸ்தை ஆயத்தம் சொல்லும்போது எண்ணிக்கையில்லாத கன்னிகையோடு மோட்ச இராக்கினி அவரிடத்தில் வந்து, மோட்ச பாக்கியத்திற்குரிய மகிழ்ச்சியை மனதில் உண்டாக்கி அவர் மோட்சத்தில் தம்முடைய திருநாளைத் தம்மோடே கூடக் கொண்டாட வரவேண்டுமென்று சொல்லி, அவரை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவர் சாகிறபொழுது அவருக்கு வயது 18.

கிறிஸ்தவர்களே நீங்களும் மரண வேளையில் பசாசின் தந்திரங்களில் அகப்படாது பாக்கியமான மரணத்தை அடைய விரும்பக் கடவீர்கள். இந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைக்கும்படியாக ஓயாது அன்னையின் அனுக்கிரகத்தைக் கேளுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 23

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 23
தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவியின் பேரில்!

அவர்களுக்குத் தூண்டுதலாய் இருந்தது.

சர்வ ஆராதனைக்குரிய உலக இரட்சகர் இவ்வுலகை விட்டு வெற்றி வீரராய் மோட்சத்துக்கு எழுந்தருளியபோது தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சபைக்கு ஓர் தூண்டுதலாகவும், ஆலோசகராகவும் இருக்கவும் பூர்வீக கிறிஸ்தவர்கள் கொண்ட சந்தேகங்களைத் தீர்க்க ஞான ஒளியாய் இருக்கவும் செய்ய வேண்டிய புண்ணியங்களுக்கு போதனையாயிருக்கவும் தமது நேச அன்னையை இவ்வுலகில் நிலைநிறுத்த திருவுளங்கொண்டார்.

அக்காலத்திலிருந்த விசுவாசிகள் தங்களுடைய ஆண்டவளைப் போலவும் போதகியைப் போலவும், எண்ணி அன்னையிடத்தில் ஆலோசனைக் கேட்க வருவார்கள். அப்பொழுது அந்த திவ்விய நாயகி அவர்களுடைய சந்தேகங்களைத் தெளிவித்து அறியாமையை நீக்கித் தம்மிடமுள்ள அறிவு விவேகத்தின் ஞானச் செல்வங்களை மகா அன்போடு அவர்களுக்குத் தந்தருள்வார்கள். நீங்கள் படுகிற சந்தேகங்களில் உறுதியான நம்பிக்கையோடு தேவ மாதாவினிடத்தில் ஓடிவந்து, உங்கள் புத்திக்குப் பிரகாசம் கொடுத்து உங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடுவீர்களாகில் உங்களுக்கு வேண்டிய ஞானப் பிரகாசங்களையும் வரப்பிரசாதங்களையும் நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.

அவர்களுக்கு மாதிரிகையாய் இருந்தது.

மனத்தாழ்ச்சி, ஒடுக்கம், தேவபக்தி, பிறர் சிநேகம் இவை முதலான சுகிர்த புண்ணியங்களையெல்லாம் மகாப்பிரகாசத்தோடு தேவமாதாவினிடத்தில் துலங்கிக் கொண்டிருந்தன. இந்தப் பரம நாயகியின் வாழ்வெல்லாம் பரிசுத்தத்தின் உத்தம மாதிரிகையாக இருந்தது, எவ் வயதும், எவ் வந்தஸ்து முள்ள கிறிஸ்தவர்களையும் புண்ணிய வழியில் தீவிரமாய் நடக்கச் செய்தது. பூர்வீக விசுவாசிகள் அன்னையிடத்தில் உன்னத சாங்கோபாங்கமாக இருக்கிறதைக்கண்டு அதிசயப்பட்டுத் தங்களால் இயன்ற மட்டும் அவர்களைப் பின்செல்லப் பிரயாசைப்பட்டார்கள். நீங்கள் அந்தத் தேவதாயாருடைய புண்ணியங்களைக் கண்டுபாவித்து அன்னையின் உத்தம மாதிரிகையைப் பின் சென்று நடக்கக்கடவீர்களாக. அன்னையுடைய நடக்கையையும் உணர்ச்சிகளையும் இடைவிடாது தியானித்து ஆராய்ந்து பார்ப்பீர்களாகில், சர்வேசுரனுக்குத் தக்க பிரமாணிக்கத்தோடு ஊழியம் பண்ணவும், புறத்தியாருக்குச் செய்ய வேண்டிய உதவி செய்யலாம். கற்பை நேசிக்கவும், பரிசுத்தமாய் வாழவும் அவசியமான வழி வகைகளை அறிந்துகொள்ளுவீர்கள். அப்படி எல்லாவற்றையும் பார்க்கச் சர்வேசுரனை அதிகமாய்ச் சிநேகித்து, உங்களுடைய சரீரத்தைப் பகைத்து, மனத்தாழ்ச்சியும் அடக்க ஒடுக்கமும் தேவ பக்தியும் உங்கள் கடமைகளைச் செலுத்துவதில் பிரமாணிக்கமும் உள்ளவர்களாய் இருக்க தேவமாதாவினிடமிருந்து கற்றுக் கொள்வீர்களாக.

அவர்களுக்கு அடைக்கலமாய் இருந்தது.

தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்கு அடைக்கலமாயிருந்தார்கள். அவர்கள் தாங்கள் அடைந்த கஸ்திகளிலும் திருச்சபைக்கு உண்டான துன்பங்களிலும் தங்களுக்கு அவசரமான காரியங்களிலும் தேவமாதாவின் அடைக்கலத்தைத் தேடி ஓடிவருவார்கள். அன்னை தங்கள் பேரில் மிகவும் பிரியமுள்ளவர்களாயும் தம்முடைய திருக்குமாரனிடத்தில் சர்வ வல்லபமுள்ளவர்களாயும் இருக்கிறதை அறிந்து கெட்டியான நம்பிக்கையுடன் அன்னையின் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்கள். நீங்களும் இந்த நியாயங்களை கண்டுனுர்ந்து தேவமாதாவின் பேரில் தளராத நம்பிக்கைக் கொள்ளக்கடவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் இலெளகீக இக்கட்டுகளிலும் உங்களுக்கு தேவையான ஞானக் காரியங்களிலும் உங்களுடைய திருத்தாயாரை நோக்கி அபயமிட்டு மன்றாடுங்கள். அந்தப் பூர்வீக கிறிஸ்தவர்கள் செய்ததைப்போல் பக்தியோடு மன்றாடுவீர்களாகில், உங்களுடைய மன்றாட்டுக்களுக்கு இரங்குவாளென்பது நிச்சயம். சில சமயங்களில் நீங்கள் கேட்கிற காரியங்களை அடையாதிருந்ததினால் நீங்கள் பக்தியுடன் வேண்டிக்கொள்ளாமல் இருந்ததினால்தான் அவைகளை அடையவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

செபம்.

பரிசுத்த மரியாயே! என் தஞ்சமே! எத்தனையோ பாவத்தைக் கட்டிக்கொண்டு பசாசுக்கு அடிமையாகி நித்திய நரகத்திற்குப் போவதற்குப் பாத்திரவானானேன்! நீர் என் பாவக்கட்டுகளை அவிழ்த்து என் எதிரிகளின் கையில் நின்று என்னை மீட்டீர். ஆனால் கெட்ட பசாசு என்னைக் கொடுக்க இடைவிடாது எனக்குச் சோதனை கொடுப்பதினால் அதற்குத் திரும்பி அடிமையாய்ப் போவேன் என்று மிகவும் பயப்படுகிறேன். பரிசுத்த கன்னிகையே! எனக்கு ஆதரவாயிரும். தஞ்சமாயிரும், உமது உதவியுடன் என் எதிரிகளை வெல்லுவேன் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு வரும் தந்திர சோதனைகளிலும், விசேஷமாய் என் மரணவேளையில் பசாசு என்னுடன் தொடுக்கும் கடின யுத்தத்திலும் நான் உம்மை மறந்து போகாமல் உமது அடைக்கலத்தை உறுதியான விசுவாச நம்பிக்கையுடன் தேடும் பொருட்டு எனக்கு விசேஷ உதவி செய்தருளும். அப்பொழுது இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருநாமத்தையும், உம்முடைய இன்பமான திருப்பெயரையும், ஜெபமாலையை பக்தியோடு சொல்லி இஷ்டப் பிரசாதத்தோடு நான் மரிக்கும்படிக்கு கிருபை செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கன்னிகைகளுக்குள் உத்தம கன்னிகையே! நான் என் பாவங்களை வெறுத்து எப்பொழுதும் உம்மை நோக்கி சிந்திக்கும்படியாக உதவி செய்தருளும்.

இருபத்தி மூன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஏழைக்கு, உணவளிக்கிறது.

புதுமை!

புனித சிலுவை அருளப்பர் தேவமாதாவின் பேரில் பக்தியுள்ளவராய் நடந்து பலமுறை அன்னையுடைய உதவியைப் பெற்றுக்கொண்டார். விசேஷமாய் அவருக்கு வந்த மரண ஆபத்திலிருந்து தேவமாதாவின் உதவியால் அற்புதமாய்த் தப்பித்துக்கொண்டார். பதிமூன்று வயதில் அவர் சில பிணியாளருக்கு சேவை செய்ய பல இடங்களுக்குச் செல்லும்பொழுது ஆழமான ஓர் கிணற்றில் கால் தவறி விழுந்து விட்டார். அருகில் நின்ற சிலர் தண்ணீர் நிறைந்த கிணற்றில் அவர் விழுந்ததைக் கண்டு அவர் இறந்திருப்பாரென்று நிச்சயித்து கிணற்று ஓரத்திலிருந்து அழுது கூப்பிட்டார்கள். அதில் விழுந்த அருளப்பரோ வென்றால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுமொழியாக நீங்கள் அழ வேண்டாம், எனக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லை. எனக்கு ஓர் கயிற்றை விட்டால் உடனே ஏறி வருவேன் என்றார். அவர் சொல்லிய படியே அவர்கள் போட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு எத்தகைய ஆபத்துமின்றி மேலே ஏறினார். அவரைக் கண்ட சனங்கள் ஆழத்திலே விழுந்தும் ஆபத்து இல்லாமல் ஏறினதெப்படியென்று கேட்க அவர் அவர்களை நோக்கி : நான் விழுந்த கணத்தில் செளந்தரியமுள்ள ஓர் இராக்கினி தமது ஆடையை விரித்து அதில் என்னைத் தாங்கினார்கள். மற்றும் நான் தண்ணீரில் அமிழ்ந்திப்போகாதபடிக்கு நீங்கள் கயிறு போடும் வரையில் என்னைத் தமது கையால் தூக்கிக்கொண்டார்கள் என்றார். இந்தப் புதுமையைக் கேட்டவர்கள் மிகவும் அதிசயப்பட்டு தேவ மாதாவுக்குத் தோத்திரம் பண்ணினார்கள். புனித சிலுவை அருளப்பர் தம்மைக் காப்பாற்றின தேவமாதாவின் பேரில் நாளுக்குநாள் அதிக பக்தி வைத்து அன்னையுடைய திருநாட்களையும் அவைகளில் விசேஷமாய் அன்னை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த திருநாளையும் மிகுந்த விசுவாசத்தோடு கொண்டாடி மற்றவர்களும் நம்பிக்கையாய் இருக்கும் படிக்கு வெகு பிரயாசையோடு பிரசங்கித்து கடைசியில் தேவமாதாவின் உதவியினால் நல்ல மரணம் அடைந்து புனிதராய் விளங்கினார்.

இரண்டாவது

சோமாஸ் என்கிற சந்நியாசிகளுடைய சபையை உண்டாக்கின புனித ஏரோணிமூஸ் என்பவர் ஒரு பட்டணத்துக்கு அதிபதியாயிருந்து ஆளுகிறபொழுது, பகைவர்கள் பெரிய படையோடு வந்து அந்தப் பட்டணத்தை முற்றுகையிட்டுப் பிடித்தார்கள். இவரும் அவர்கள் கையில் அகப்பட்டு அடிமையாய்ச் சிறையில் தள்ளப்பட்டார். இதிலிருக்கும்பொழுது தேவமாதாவை வேண்டிக்கொண்டு, தான் அந்த அடிமைத்தனத்தை விட்டு நீங்கி விடுதலை அடைந்தவுடன் தேவமாதாவின் கோயிலுக்குப்போய் வேண்டுதல் செலுத்துவேன் என வார்த்தைப்பாடு கொடுத்தார். அவர் அப்படி வேண்டிக்கொண்டவுடனே தேவமாதா அவருக்குக் காட்சியில் காண்பித்து அவர் கையிலும் காலிலுமிருந்த விலங்குகளை ஒடித்து சிறைச்சாலையின் திறவுகோலை அவர் கையில் கொடுத்து மறைந்து போனார்கள். அவர் கதவைத் திறந்து வெளியே வந்து பகைவர்களைக் கண்டதினால் பயந்து போனார், திரும்ப வேண்டிக்கொண்டார். அன்னையும் திரும்பி வந்து, அவர் கையைப் பிடித்து பகைவர்கள் அவரைக் காணாத படி அவர்கள் நடுவிலேயே அவரைக் கூட்டிக் கொண்டுபோய் அவருக்கு குறித்த ஊரில் விட்டு விட்டார்கள். அவர் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று தன்னோடு கொண்டு வந்த விலங்கை, தேவமாதா செய்த புதுமையின் ஞாபகமாக வைத்து புண்ணிய சாங்கோபாங்கத்தில் நிலை கொண்டு புனிதராக மரித்தார்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் படும் இன்னல்களில் தேவமாதாவை நம்பி அன்னையிடம் பக்தியோடு வேண்டிக் கொள்ளுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 22

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 22
இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியம்!

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே விரும்பிக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது நாம் அனைவரும் தேவமாதாவுடனும் இயேசுநாதருடைய சீடர்களுடனும் ஒலிவேத் மலைக்கு நினைவினால் சென்று அதில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அனைத்துலகிற்கும் ஆண்டவராயிருக்கிற பரம இராஜாவாகிய இயேசுநாதர் தம்முடைய திருத் தாயாருக்கும், பிரியமான சீஷர்களுக்கும் சுகிர்த புத்திமதிகளைச் சொல்லி அவர்களை ஆசீர்வதித்துத் தமது மட்டற்ற வல்லபத்தைக் கொண்டு நிகரில்லாத மகிமைப் பிரதாபத்தோடு மோட்சத்துக்கு ஜெயசீலராய் எழுந்தருளிப் போகிறார். அச்சமயத்தில் தேவமாதா அடைந்த மகிழ்ச்சிப் பெருக்கையும் தம் மைந்தனோடு கூடப் போக வேண்டுமென்று அவர்களுக்கிருந்த அளவுகடந்த ஆசையையும் எவரும் சொல்லுந்தரமன்று. அந்த நாள் துவக்கி தமது திருமரணம் வரையிலும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எப்பொழுது வந்தடைவேனோவென்றும் எனது திரு மைந்தனை எப்பொழுது மீண்டும் காண்பேனோவென்றும் விரும்பிக் கொண்டிருந்தார்கள். நாமும் பரிசுத்த தேவதாயைப்போல் இவ்வுலகை பரதேசமா எண்ணி இதனுடைய சம்பத்துக்களையும் செல்வ பாக்கியங்களையும் வெறுத்து, நம்முடைய மெய்யான இராச்சியமான வான்வீட்டை நாடி விரும்பி நித்திய கிரீட முடிகளை அடைய நம்மாலான பிரயாசைப்படக் கடவோம்.

தேவமாதா மோட்சத்தை மாத்திரமே நாடிக் கொண்டிருந்தார்கள்.

தேவமாதா தம்முடைய திருக்குமாரன் மோட்சத்துக்கு எழுந்தருளி போனதைப் பார்த்த பின்னர் மோட்சத்தை மட்டுமே நாடிக் கொண்டிருந்தார்கள். அன்னையின் நினைவு விருப்பம் உணர்ச்சியாகவும் அதன்மீது வைத்திருந்தார்கள். இப்பூமியையும் அதனுடைய பற்பல பொருள்களையும் ஒரு சிறிதும் விரும்பாமல் தாம் புண்ணியத்தில் அதிகரிக்க வேண்டுமென்றும், தாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட வேண்டுமென்றுள்ள தமது திருமைந்தனுடன் ஐக்கியமாகப் போக வேண்டுமென்றும், கவலையாயிருந்தார்கள். நாமோவென்றால் நம்முடைய திருத்தாயார் நமக்குக் காண்பித்த நல்ல மாதிரிக்கைகளின்படி பின்பற்றாமல், நம்முடைய மெய்யான வீடாகிய மோட்சத்தை நோக்காமல் அழிந்து போகும் இந்தப் பூமியில் அருவருப்பான புழுக்களைப்போல் தவழ்ந்து திரிந்து நிலையற்ற செல்வத்தை அக்கறையோடு தேடி முடிவில்லாத மோட்ச பேரின்ப செல்வ பாக்கியத்தை அடைவதற்கு சிறிதேனும் முயலாதிருக்கிறோம். இதைப்போல் மதியீனம் இவ்வுலகில் வேறு ஏதாவது உண்டா?

தேவமாதா மோட்சத்தைக் குறித்து மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பரம நாயகி அப்போஸ்தலர்கள் மற்றும் விசுவாசிகள் இவர்களுடன் இருக்கும்பொழுது மோட்சத்துக்குப் போக வேண்டுமென்ற நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் படுகிற கஸ்திகளில் அவர்களைத் தேற்றி ஆறுதல் கூறி வந்தார்கள். மோட்சமானது அவர்களுடைய உடைமையும் சொந்த இராச்சியமும் இளைப்பாறும் இடமாயிருக்கிறதாகச் சொல்லி, அவர்கள் துவக்கின வேலைகளிலும் அனுபவித்த துயரங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்கள். மோட்சத்துக்கு போவதற்கென்றே நாமும் பிறந்திருக்கிறோம். அப்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் சேரும் பொருட்டு நமக்கு வேண்டிய உதவிகளை நல்க இயேசுக்கிறிஸ்துநாதரும் தேவமாதாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் மோட்சத்தை அடைய ஒன்றும் செய்யாமலும் கஷ்டப்படாமலும் உலக பற்றுதல்களைக் கொண்டிருப்போமானால் நிச்சயம் நாம் ஒருநாளும் ஈடேற்றத்தை அடைய மாட்டோம்.

செபம்.

பரிசுத்த கன்னிகையே! இவ்வுலகத்தில் பட வேண்டிய பாடுகளும் கஸ்தியும் வருத்தமும் கொஞ்சக் காலத்திற்காக இருந்த போதிலும் அவை பேரின்ப வீட்டில் அமர்வற்ற நித்திய ஆனந்தமும் மட்டற்ற மகிமையும் எங்களுக்குப் பெறுவிக்குமென்பது குன்றாத சத்தியமாம். ஆகையால் எங்கள் தாயே! உங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ந்து மிகுதியான சந்தோஷத்தை அனுபவிக்கின்றது. இத்துன்பம் நிறைந்த ஜீவியகாலம் எப்பொழுது முடியுமோவென ஆவலுடன் காத்திருக்கிறோம். உமது அண்டையில் சேர்ந்து சகல மோட்சவாசிகளுடன் உம்மை வாழ்த்திப் புகழ்ந்து, அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? எங்கள் தாயே! பாவம் அறியாத இடமும், புயலடிக்காத துறைமுகமும், இருள்படாத பிரகாசமும், மரணமில்லாத ஜீவியமுமான மோட்சத்தில் நாங்கள் சேருமளவும் எங்களைக் கைவிடாமல் மகா அன்போடு நடப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது:

எங்கள் தாயே! நாங்கள் சாகிற வேளையில் எங்கள் ஆத்துமம் மோட்ச பேரின்பத்தை அடைய கிருபை செய்தருளும்.

இருபத்தி இரண்டாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது:

ஞானவாசகப்(வேதாகமம்) புத்தகத்தை வாசித்து சிந்திக்கிறது.

புதுமை!

பெரிய அல்பேர்த் என்பவர் சிறு வயதிலிருந்தே தேவமாதாவின் மீது அதிகப் பக்தியுள்ளவராயிருந்தார். தேவதாயைக் குறித்துத் தினமும் பற்பல செபங்களை வேண்டிக்கொள்வதுமின்றி 16-ம் வயதில் புனித சாமிநாதர் சபை உடையை தரித்துக்கொண்டு அந்தச் சபையில் உட்பட்டுக் கல்வி சாஸ்திர மடத்துக்குப் படிக்கப் போனார். அதில் இருக்கும்பொழுது மற்ற பிள்ளைகள் நல்ல படிப்புள்ளவர்களாய் இருக்கிறதைக்கண்டு, கல்வி சாஸ்திரத்துக்குத் தகுதியான புத்தி தமக்கு இல்லாததினால் மிகவும் மனம் தளர்ந்து அதைப் பொறுக்க முடியாதவராய் ஒருநாள் பசாசு சொன்ன தூர்ப் புத்தியால் மடத்தைவிட்டு வீட்டுக்கு போக தீர்மானித்து இருந்தார். அவ்வாறு செல்ல ஆசையாய் இருக்கும்பொழுது தேவமாதா அவர்மேல் இரங்கி, அவருக்கு ஒரு காட்சியைக் காண்பித்தார்கள். இரவிலே நித்திரை செய்யும் பொழுது அவர் ஓர் ஏணியை எடுத்து மடத்து சுவரின் மேல் சாற்றி அதில் ஏறினதாகவும், அப்பொழுது ஓர் இராக்கினி அவரை கீழே தள்ளினதாகவும் அவர் திரும்பி ஏறின்பிறகு அந்த இராக்கினி ஏன் இந்த மடத்தை விட்டுச் செல்ல எண்ணி இருக்கிறாயென அவரைக் கேட்க, அதற்கு அவர், எவ்வளவு முயற்சித்தும் கல்வி சாஸ்திரங்களைப் படிக்க என்னால் கூடவில்லை. ஆனதினாலே இனி முயற்சித்துப் பயனில்லை என்று தப்பி ஓட வழிபார்க்கிறேன் என்றார். நீ தைரியமாயிருந்து கவனமாய்ப் படித்தால் தேவமாதாவின் உதவியினால் ஓர் பெரிய சாஸ்திரியாக ஆவாய். அந்த சாஸ்திரமெல்லாம் முயற்சியினால் அல்ல, பரமநாயகியின் இரக்கத்தினால்தான் வந்ததென்று அறிந்துகொள், நீ இனிமேல் மற்றவர்களுக்கு வெகு முதன்மை கல்வி புகட்டியபின் கடைசி காலத்தில் உன்னுடைய கல்வி சாஸ்திரமெல்லாம் திடீரென உன்னை விட்டு நீங்கிப்போகும் என்றதாகவும் கண்டார். அவர் அந்தக் காட்சியைக் கண்டு ஆறுதல் அடைந்து வெகு பிரயாசையோடு படித்து தர்க்க சாஸ்திரத்திலேயும் தேவ சாஸ்திரத்திலேயும் மற்ற சாஸ்திரங்களிலேயும் மிகவும் தேர்ந்த நிபுணராகி அநேக புஸ்தகங்களை எழுதினார். ஆனால் பல வருஷங்களுக்குப்பிறகு அவர் மரிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் கொலோனியா என்ற பட்டணத்தில் திரளான சனங்களுக்கு படிப்பித்துக் கொடுக்கும் பொழுது முன் அவர் படித்த கல்வி சாஸ்திரங்களை முழுதும் திடீரென மறந்துபோய் ஒன்றும் அறியாதவரைப் போல் ஆகி விட்டார். அப்பொழுது தேவமாதா அவருக்கு சிறுவயதில் காண்பித்த காட்சியை நினைத்து அதை மக்களுக்கு வெளிப்படுத்தி மடத்துக்குச் சென்று செபத்திலும் தியானத்திலும் மூன்று வருஷமளவாக நிலைபெற்று பாக்கியமான மரணத்தை அடைந்தார். இப்போது அவர் புனித அல்பெர்த்து என்ற வேத சாஸ்திரியாய் விளங்குகிறார்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நமது பரிசுத்த வேதத்தின் மெய்யான அறிவு வரும் படியாக தேவமாதாவின் அனுக்கிரகத்தைக் கேட்டுக்கொள்வீர்களாக.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 21

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 21
இயேசுகிறிஸ்து நாதர் கல்லறையிலிருந்து உயிர்த்து எழுந்தருளித் தம்முடைய திருத்தாயாருக்குக் காண்பிக்கிறார்!

தேவமாதா தமது திருமைந்தன் உயிர்த்ததைக்கண்டு அடைந்த பேரானந்தம்.

நம்முடைய ஆத்துமங்களுக்கு இரட்சகரான இயேசுக் கிறிஸ்துநாதர் நரகக் கொடுமையையும் சாவினுடைய கொடூரத்தையும் வென்று கல்லறையைவிட்டு அளவில்லாத பிரதாபத்தோடு வெற்றி வீரராக உயிர்த்து எழுந்தார். அவ்வேளையில் தம்முடைய திருமாதாவை மறக்காமல் அன்னைக்குத் தாம் அடைந்த மகிமையோடு காணப்பட்டார் என்பது பக்தியுள்ள சத்தியமாம். இயேசுக்கிறிஸ்துநாதர் சொல்லொணா கஸ்தி அவமானப்பாடுகளை அனுபவிக்கும் பொழுது அந்தப் பரம நாயகி அவரை விடாமல் மனோவாக்குக் கெட்டாத துக்க சாகரத்தில் அமிழ்ந்திருந்தார்கள். தமது திருச் சரீரத்தில் அனுபவித்த வருத்தம் அனைத்தையும் அன்னை தம்முடைய இருதயத்தில் அனுபவித்தார்கள். ஆகையால் உயிர்த்து எழுந்த இயேசுக்கிறிஸ்துநாதர் அடைந்த கஸ்தி துன்பங்களுக்குத் தகுதியான ஆனந்த சந்தோஷத்தை அளிக்க வேண்டுமென்று எண்ணி அன்னைக்குத் தம்மைக் காண்பிக்கச் சித்தமானார். அவ்வாறே சர்வ நீதியுள்ள தயாபர சர்வேசுரன் தாம் மனிதருக்கு வழங்குகிற ஞான நன்மைகளை அவர்கள் தம்மைப்பற்றி அனுபவித்த வருத்தங்களுக்குத் தகுதியானபடி வழங்குகிறார். ஆகையால் உலக மீட்பரை முழு மனதோடு நேசித்து அவர் அடைந்த துன்பங்களுக்கு இரங்கி அவருடைய திருச்சிலுவையை சுமக்கிறது போல் அவரைப் பின்பற்றிக் கல்வாரி மட்டும் பின் செல்வோமானால் அவர் பொழிகிற ஞான சந்தோஷத்துக்கும் கொடுக்கிற உன்னத மகிமைக்கும் பங்குபற்றுபவர்களாக இருப்போம்.

தேவமாதா தம்முடைய திருமைந்தன் மட்டற்ற மகிமை பெற்றதைக் கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுக்கிறிஸ்துநாதர் மட்டற்ற மகிமையோடு உயிர்த்ததைக்கண்டு தேவமாதா அடைந்த சொல்லிலடங்காத சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அந்தப் பரமநாயகி தமது திருமைந்தன், சூரியனை மங்கச் செய்யும் பிரகாசத்தை அடைந்த அட்சம், சூட்சம், இலகு, பிரகாசம் என்ற மகிமை வரங்களைப் பெற்றதைக் கண்டு, தாம் முன்னர் அடைந்த வியாகுல வேதனைகளுக்குப் பதிலாக மட்டற்ற மகிழ்ச்சியால் பூரிக்கப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய திரு உடலில் வெற்றி அடையாளங்களைப் போல் இருக்கிற திருக்காயங்களை முத்தமிட்டார்கள். மோட்சவாசிகள் பேரின்ப வீட்டில் உணருகிற இன்ப சந்தோஷத்தை அனுபவித்தார்கள். அநித்திய உலகில் இருந்தபோதிலும் அவர்கள் மேலான இராச்சியத்திற்குரிய மனோவாக்குக் கெட்டாத பேரின்பத்தை, நுகர்ந்தார்கள். நமது ஒப்பற்ற அன்னை சொல்லொணா ஆனந்தத்தை அனுபவிக்கிறதைப்பற்றி வாழ்த்தி, நம்மை இவ்வுலக பாக்கியங்களை வெறுக்கச் செய்து தாம் அடைந்த மோட்ச ஆனந்தத்தை நாமும் அடையும்படி கிருபை செய்ய வேண்டுமென மன்றாடுவோமாக.

தேவமாதா தமது திருமைந்தனிடத்தில், அவரை விட்டுவிட்ட சீஷர்கள் திரும்பிச் சேருவதைக்கண்டு அடைந்த ஆனந்தம்.

இயேசுநாதர் உயிர்த்ததற்குப் பின்னர் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் அவரிடத்தில் திரும்பி வந்து சேருகிறதைக் கண்டு, தேவமாதா எவராலும் கண்டு பிடிக்கக்கூடாத சந்தோஷத்தை அடைந்தார்கள். அவர்கள் எல்லோரும் அர்ச். அருளப்பர் நீங்கலாகப் பயந்து ஓடிப்போய்த் தங்களுடைய மேய்ப்பன் சாகிற வேளையில் ஆட்டுக்குட்டிகள் சிதறிப் போகிறது போல் சிதறி இருந்தார்கள். இயேசுக் கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்ததின் பின் அவர்கள் மன உறுதி அடைந்து புது மனிதராகித் தங்களது மேய்ப்பனிடத்தில் வந்து சேர்ந்தார்கள். நாமும் அடிக்கடி பாவங்கட்டிக் கொண்டு பசாசுக்கு அடிமையாகி இயேசுக் கிறிஸ்துநாதரை மறுதலித்து விட்டு நமது திருத்தாயாருக்கு மிகுந்த கஸ்தி வருவித்தோம். எப்பொழுதும் மிகுந்த அன்போடும் ஆண்டவரை நேசித்துவரும் பரம நாயகிக்கு சந்தோஷம் வருவிப்போமாக. பரிசுத்த கன்னிகையே, எங்களுடைய பலவீனத்தால் ஒன்றும் கூடாமையால் எங்களைக் கைதூக்கி நாங்கள் பாவத்தில் ஒருக்காலும் வீழாதபடிக்குக் கிருபை செய்தருளும்.

செபம்

எவ்வித சுகிர்த பாக்கியத்தாலும் நிறைந்த தாயாரே! உமது திருமைந்தன் உமக்குக் காணப்படும்பொழுது அந்த மகிமையான இராஜாவைத் தொடர்ந்து பிதா பிதாக்களும் தீர்க்கதரிசிகளும் ஆதித்தகப்பன், ஆதித்தாய் முதற்கொண்டு நாலாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்த புண்ணிய ஆத்துமாக்கள் எல்லாரும் உம்மைத் தங்கள் இராக்கினியாகவும், நல்ல உபகாரியாகவும் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள். நீர் அவர்களுக்குள்ளே ஆண்டவளாய் நின்று அவர்களைப் பார்க்க அதிக சந்தோஷமும் பாக்கியமும் அனுபவித்தீரே. நீசப் பாவியாகிய நானும் அவர்களோடு உம்மை மோட்ச இராக்கினியாக வாழ்த்தி, உமது திருமைந்தன் உயிர்த்ததினால் சந்தோஷப்படுகிறேன். நான் மீட்புப் பெறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும் என்று பிரார்த்திக்கிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

பரிசுத்த கன்னிகையே! இயேசுநாதருக்குப்பின் நீரே என் உறுதியான நம்பிக்கையாயிருக்கிறீர்.

இருபத்தி ஒன்றாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரிகையாவது :

ஆலயத்திற்கு கொஞ்சம் எண்ணெய்யாவது ஓர் மெழுகு திரியாவது கொடுக்கிறது.

புதுமை!

முற்காலத்தில் லீயோ இசோரியா என்னும் அரசன் அப்பொழுது வாழ்ந்து வந்த பதிதர்களுக்கு உதவி செய்து, தானும் பதிதனாகி, தேவமாதா முதலான அர்ச்சியஷ்டவர்களுடைய அர்சியஷ்ட பண்டங்களையும் சுரூபங்களையும் வணங்க வேண்டாமெனப் பணித்து கிறிஸ்தவர்களுக்கு அநேக விதங்களில் இன்னல் விளைவித்து வந்தான். அப்பொழுது புனித தமாஸென் அருளப்பர், கலிப் என்ற அரசரின் அமைச்சராக தமாஸென் பட்டணத்தை ஆண்டு கொண்டிருந்தார். அவர் பதிதான சிங்கம் என்ற அரசரை எதிர்த்து நின்று அவன் இராச்சியத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பற்பல நிரூபங்கள் எழுதி அவர்களைச் சத்திய வேதத்திலும் விசுவாசத்திலும் திடப்படுத்தினார். சிங்கம் என்ற அரசன் இதை அறிந்து அவர்மீது பகை வைத்து அவரைக் கெடுக்க வேண்டுமென்ற ஆசையினால் ஒரு கபடமான தந்திரம் செய்தான். பொய்யான ஓர் கடிதம் எழுதி அதில் சிங்கமென்ற அரசர் தமாஸென் பட்டணத்துக்கு படையோடு வந்தால், தான் அந்த பட்டணத்தை அவருக்குக் கையளிப்பேனென்று எழுதி வைத்த, அந்தக் கடிதம் தமாஸென் அருளப்பர் தனக்கு அனுப்பினாரென்று பொய் சொல்லி அந்தக் கடிதத்தைக் கலிப் என்னும் அரசருக்கு அனுப்பினான். அரசர் அந்தக் கடிதத்தை வாசித்து இது நன்மை என்று ஏற்று தன் அமைச்சரால் தமாஸென் அருளப்பரை வரவழைத்து அவருக்கு அதை காண்பித்தான். அவர் தம் கையெப்பம் வைத்திருக்கிறதையும், தம் எழுத்துப் போலிருக்கிறதையும் கண்டு இது என் மீது உண்டான கபடமென்றும், நான் அத்தகைய காகிதத்தை ஒருக்காலும் எழுதவில்லையென்றும் எவ்வளவோ அவரிடத்தில் எடுத்துச் சொல்லியும் அவர் சொன்ன நியாயங்களை ஏற்றுக்கொள்ளாமல் அவரைக் கோபித்து அவருடைய வலது கையை அறுக்கக் கட்டளையிட்டான். அறுக்கப்பட்ட கையை, தெரு வீதியில் அவர் செய்த குற்றம் எல்லாரும் அறியும் வண்ணம் கழுமரத்தில் கட்டிவைக்கச் சொன்னான். அப்படியே செய்தார்கள். புனித தமாஸென் அருளப்பர் ஒரு கை இல்லாதவராக தமது வீட்டுக்கு சென்று அரசரின் கோபம் அமர்ந்தபிறகு அன்று மாலை மீண்டும் அரசரிடம் அறுக்கப்பட்ட கையை திரும்பத் தமக்கு கொடுக்க வேண்டுமென கெஞ்சி மன்றாடினார். அரசரானவர் இராசன் எழுதின காகிதம் கள்ளக் காகிதமென்று அறிந்து சந்தேகப்பட்டு, புனித தமாஸென் அருளப்பர்மீது மனமிரங்கி அறுக்கப்பட்ட கையை அவருக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான். அவர் அதை வாங்கித் தேவமாதாவின் கோவிலுக்குச் சென்று மிகுந்த பக்தியோடும் நம்பிக்கையோடும் மன்றாடினதாவது: என் ஆண்டவளே! உம்முடைய சுரூபங்களை வணங்காமல் இருக்கக்கூடாதென்று நான் எழுதினதினால் என் கை அறுக்கப்பட்டதே, அந்த, வணக்கம் உமக்கு ஏற்கும் வணக்கமென்றும் என் பேரில் எழுதின காகிதம் பொய்யான காகிதமென்றும் எல்லாரும் அறியும்படிக்கு என் கையை ஒட்ட வைப்பீரானால், அதைக்கொண்டு இனிமேல் உம்முடைய வணக்க ஸ்தோத்திரத்துக்காக எழுதுவேனென்று மன்றாடினார். அப்படியே மன்றாடின பிறகு தேவமாதாவை நம்பி தமது கைப்பட்டையில் துண்டிக்கப்பட்டக் கரத்தைக் கோர்த்து வைக்கவே அற்புதமாக இரண்டும் முன்னிருந்தாற்போல் ஒட்டிக் கொண்டன. அந்தப் புதுமை உடனே ஊர் முழுதும் பரம்ப அரசர் அதைக் கேள்விப்பட்டு அவரை அழைத்து அவருடைய கையை அறுத்ததற்கு மன்னிப்பு கேட்டதுமல்லாமல், என்னிடம் எதைக் கேட்பீரோ அதெல்லாம் கொடுப்பேன் என்று சொன்னான். அவரோவென்றால் எனக்கு வேறொன்றும் வேண்டாம். அமைச்சர் உத்தியோகத்தை விடுவதற்கு உத்தரவு கொடுத்தால் போதும் என்றார். அந்த உத்தரவைப் பெற்றபின் சாகும் வரையிலும் தேவமாதாவின் பேரில் நன்றியறிந்தவராய், மிகுந்த பக்தி வைத்ததினால் நல்ல மரணத்தை அடைந்து புனிதராய் கொண்டாடப்படுகிறார். சாகும்வரையில் அவரிடத்தில் தேவமாதா செய்த புதுமையின் அடையாளமாக அவருடைய கை ஒட்டின இடத்தைச் சுற்றிச் சிவப்பான ஓர் தழும்பு இருந்தது.

கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர! சகோதரிகளே இடைவிடாமல் தேவமாதாவினுடைய திருப்படங்களையும். சுரூபங்களையும் நீங்கள் வாங்குவதுமின்றி அவைகளை உங்களால் இயன்ற அளவு மற்றவர்களும் வணங்கு

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 20

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 20
தேவமாதாவின் கடைசி வியாகுலங்களின் பேரில்!

கன்னி மாமரி பட்ட வியாகுலங்கள் எவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

இயேசுநாதர் தம்மை பலியாகத் திவ்விய பிதாவுக்கு ஒப்பு கொடுக்கும் காலம் வந்துற்றபொழுது தம்முடைய தாயாகிய கன்னிமரியாயிடத்தில் வந்து, நான் மனிதரை மீட்கும் பொருட்டு சாகப்போகிறேன் என்று சொல்லி உத்தரவு கேட்டுப் போனார். தேவமாதாவோவெனில், கொடிய யூதர் தமது திருமைந்தனை கொல்லுவார்களென்று மகா துக்கத்தோடு இருந்து மறுநாள் அவரை இன்னும் ஒருமுறை காண வேண்டுமென்று வெளியிலே புறப்பட்டு போனார்கள். அப்பொழுது தமது மாசில்லாத குமாரன் துஷ்ட மனிதனைப் போல பின் கட்டு முறையாக கட்டப்பட்டு எருசலேம் பட்டணத்தின் தெரு வீதிகளில் இழுக்கப்பட்டதையும் அவர் பேரில் சொல்லப்பட்ட பொய்சாட்சிகளையும் அவருடைய திருச்சரீரம் ஐயாயிரம் அடிபட்டு இரத்தத்தினால் வேறுபட்டிருக்கிறதையும் கொடியவனான பிலாத்து என்பவன் அநியாயமாக தீர்ப்பை சொன்னபிறகு இயேசுநாதர் சிலுவையை சுமந்து கபால மலைக்கு போகிறபொழுது சுமத்தப்பட்ட சிலுவையின் பாரத்தை தாங்காது சோர்ந்து களைத்து தரையில் விழுந்ததையும், மலையில் சேர்ந்து இரண்டு கள்ளருக்கு நடுவில் சிலுவையில் அறையுண்டு மூன்று மணி நேரம் அவஸ்தையாயிருந்து பாவிகளுக்காக கடின மரணத்தை அடைந்ததையும் கண்டு தேவமாதா அனுபவித்த வியாகுலப் பெருக்கமானது வேத சாட்சிகள் எல்லோரும் பட்ட கொடூரமான வேதனைகளை விட ஆயிரமடங்கு கொடூரமாயிருந்தது. அப்பேர்ப்பட்ட வியாகுலமானது மனிதர் செய்த பாவங்களினால் உண்டானதென்பது நிச்சயம். ஆகையால் பாவத்தின்பேரில் மெய்யான மனஸ்தாபத்தை உங்கள் மனதில் வருவிக்க வேண்டுமென மன்றாடுவீர்களாக.

அவற்றின் முகாந்தரம் என்னவென்று ஆராய்ந்து பார்க்கிறது.

தேவமாதா அவ்வளவு வியாகுலம் அனுபவித்ததற்கு முகாந்தரம் என்னவென்றால் மகா கொடிய பாடுகள் பட்ட தமது குமாரனாகிய இயேசுநாதருடன் வேதனை அனுபவிக்கும் படியாகவும் அன்னைக்கு மோட்ச இராச்சியத்தில் அதிக பாக்கியம் கிடைக்கும் படியாகவும் அன்னையை பார்க்கும்பொழுது மனிதர் தங்களுக்கு ஏற்படும் துன்பமனைத்தையும் பொறுமையோடு அனுபவிக்கும் படியாகவும் இம்மூன்று முகாந்தரங்களினால் சர்வேசுரன் தேவமாதாவுக்கு அதிக வியாகுலத்தை அளிக்க திருவுளம் கொண்டார். ஆகையால் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் மரிக்கும் வரையிலும் சொற்ப குற்ற முதலாய் கட்டிக்கொள்ளாத தேவமாதா வியாகுல சாகரத்தில் அமிழ்ந்திருக்கையில் நீசப்பாவிகளான மனிதர் மட்டும் ஏதாவது துன்பப்படும்போது குறைபடுவானேன்? தனது சிலுவையை சுமந்து என்னை பின் செல்லுகிறவன் மோட்சம் அடைவானென்று இயேசுநாதர் திருவுளம் பற்றினார். தனது சிலுவையாகிய துன்பம், நோவு முதலான நிர்ப்பந்தங்களை பொறுமையில்லாமல் அனுபவிக்கிறவன் மோட்சத்தை அடைவது அரிது என அறிந்து பொறுமை என்னும் புண்ணியத்தை தர வியாகுலமாதாவை பார்த்து மன்றாடுவோமாக.

அவற்றை எப்படி அனுபவித்தார்கள் என்றும் ஆராய்ந்து பார்க்கிறது.

சிலுவை அடியில் நிற்கும் வியாகுலமாதாவிடம் விளங்கின புண்ணியங்களை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். வேதசாட்சிகளின் இராக்கினியான கன்னிமரியாயே சிலுவையில் அறையுண்டு மரண அவஸ்தைப்படுகிற இயேசுநாதரோடு கூட இருக்கிற பொழுது அவர் மாசில்லாதவரென்றும், அவர் பெயரில் இட்ட தீர்வை அநியாயமான தீர்வை என்றும், அவரைக் கொல்லுகிற யூதர்கள் பெரிய பாதகம் கட்டிக் கொள்கிறார்களென்றும் அறிந்திருந்தாலும் அப்பேர்ப்பட்ட அநியாயத்தின் பேரில் முறைப்படாமல் தேவசித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமது பிராணனை பார்க்க அதிக உருக்கமாய்த் தாம் சிநேகித்த தமது நேசக்குமாரனை மனிதர் இரட்சணியத்துக்காக தேவ நீதிக்கு ஒப்புக்கொடுத்தார்கள். அவ்வேளையில் கன்னிமரியாள் அனுபவித்த வியாகுல பெருக்கம் எவ்வளவென்று கேட்டால், அந்த வியாகுலத்தை உலகத்திலிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சர்வேசுரன் கொஞ்சங் கொடுக்க சித்தமானால் எல்லாரும் சாவதற்கு போதுமென்று வேதபாரகர் எழுதி வைத்திருந்தார்கள். ஆகையால் உங்கள் ஆத்துமத்துக்காக அப்பேர்ப்பட்ட வியாகுலத்தை அதிசயமான பொறுமையோடு அனுபவித்தவர்களுமாய் மனிதர்பேரில் வைத்த அளவுகடந்த பாசத்தினால் உங்களுக்காக தமது குமாரனைப் பலியாக ஒப்புக்கொடுத்தவர்களுமாய் இருக்கிற தேவமாதாவின் பேரில் முழு நம்பிக்கையாயிருந்து பாவத்தால் இனி துன்பம் வருவிக்காமல் புண்ணியத்தை செய்து உகந்த பிள்ளைகளாகக் கடவீர்களாக.

செபம்.

வியாகுலமாதாவே! சிலுவையிலிருந்து இயேசுநாதர் அருளப்பரைக் காட்டி இதோ உம்முடைய மகனென்று சொன்னபொழுது கிறிஸ்தவர்கள் எல்லாரையும் உமக்கு பிள்ளைகளாக ஒப்புக்கொடுத்தாரென்பது மெய்யான சத்தியமாகையால் நீர் எனக்கு தாயாராயிருக்கிறீரென்று நிச்சயிக்கிறேன். ஆனால் இன்றுவரையில் நான் உம்முடைய பிள்ளை என்பதற்கு தக்க பிரகாரமாய் நடவாமல் என் பாவத்தினால் உமக்கு அநேகம் விசை துன்பம் வருவித்தேன். இனி நான் பசாசின் தந்திரத்தில் அகப்படாதபடிக்கு என் பேரில் இரங்கி என்னைக் காப்பாற்றி உம்மோடு கூட மோட்ச இராச்சியத்துக்கு கூட்டிக் கொண்டு போகவேண்டுமென்று மன்றாடுகிறேன்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

தயாளமுள்ள தாயாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

இருபதாம் நாளில் செய்யவேண்டிய நற்கிரியையாவது :

தேவமாதாவைக் குறித்து ஒரு திருப்பலி செய்விக்கிறது. அல்லது திருப்பலி காண்கிறது.

புதுமை!

முதலாவது :

விதவையாக இருந்த ஓர் சீமாட்டி தான் பெற்ற மகனை அதிகம் நேசித்து வந்தாள். அந்தப் பையன் ஒருநாள் தெருவீதியில் போகும் பொழுது ஓர் துஷ்ட மனிதன் அவனுடன் சண்டையிட்டு அவனைக் கொன்று போட்டான். பின்னர் அக்கொலைபாதகன் சேவகர் தன்னை பிடிக்க வருவார்களென பயந்து ஓர் வீட்டில் புகுந்து ஒளிந்து கொண்டான். அந்த வீடு மேற்சொல்லிய சீமாட்டியின் வீடாக இருந்தாலும் அந்த மனிதன் உள்ளே இருந்தது அவளுக்கு தெரியாது போயிற்று. சிறிது நேரத்திற்குப் பிறகு கொல்லப்பட்ட மகனை அவளிடத்தில் கொண்டு வந்தபோது அவள் தன் மகனெனக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்து அவனைக் கொன்ற துஷ்டன் தன் வீட்டில் இருக்கிறதையும் அறிந்து முதலில் இவனை சேவகருக்குக் காட்ட வேண்டுமென்று நினைத்தாள். ஆனால் தேவமாதா தம்முடைய திருமைந்தனை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளித்ததையும், சிலுவை அடியிலிருக்கும் பொழுது அன்னை அடைந்த சொல்லிலடங்காத வியாகுலத்தையும் நினைத்து வியாகுலமாதாவைப் பார்த்து அந்த துஷ்ட கொலை பாதகனுக்கு முழுமனதோடு மன்னிப்பு அளித்ததுமன்றி பணத்தையும், வஸ்திரங்களையும் அளித்து அவனைப் பிடிக்க வந்தவர்கள் கையினின்றும் அவன் தப்பிச் செல்ல ஓர் குதிரையையும் அவனுக்கு தயார் செய்து கொடுத்தாள். அப்பேர்பட்ட நற்கிரிகையை செய்தபிறகு அன்று இரவில் மரித்த தன் மகனுடைய ஆத்துமம் அவளுக்கு தோன்றி சொன்னதாவது: நான் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகு வருஷம் இருக்க பாத்திரமாயிருந்தேன். ஆனால் நீங்கள் அந்த துஷ்ட மனிதனுக்கு வியாகுலமாதாவைக் குறித்து செய்த உபகாரத்துக்கு சம்பாவனையாக தேவமாதா இன்றுதானே என்னை மோட்சத்துக்கு கூட்டிச் சென்றார்கள் என்றான்.

ஆம் கிறிஸ்து இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே பிறர் உங்களை புறம் கூறினால் அவர்களுக்காக ஜெபியுங்கள் பிறர் உங்களை காயப்படுத்தும் போது அவர்களை மன்னியுங்கள் ஏனென்றால் அடுத்த நொடிப்பொழுது கூட நமக்கு நிச்சயம் இல்லை இந்த உலகில் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம் – ஆமென்

இரண்டாவது :

ஓர் பிரபுவின் மகன் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் மெய்யான வேதத்தை அனுசரியாமல் பசாசுக்கு ஊழியம் செய்து பாவச்சேற்றில் இருபது வருஷமாக உழன்று வந்தான். அவன் சாகிற வேளையில் இயேசுநாதர் அவன் மேல் மனமிரங்கி அப்பொழுது வாழ்ந்து வந்த புனித விறிசித்தம்மாளுக்கு தம்மை காண்பித்து ஓர் குருவானவரை அந்த மனிதனிடத்தில் போகும்படிக்கு சொல்ல கற்பித்தார். குருவானவர் வியாதிக்காரனிடத்தில் வந்து அவனைப் பாவசங்கீர்த்தனம் செய்யச் சொன்னார். அதற்கு அவன் சம்மதியாமல் குருவானவர் சொன்னதை மறுதலித்து அவரைப் போகச் சொன்னான். மூன்று விசை அப்படி நடந்தது. கடைசியில் இயேசுநாதர் விறிசித்தம்மாளுக்கு காண்பித்த காட்சியை குருவானவர் வியாதிக்காரனுக்கு வெளிப்படுத்தி அவன் மனந்திரும்பினால் சர்வேசுரன் பொறுப்பாரெனச் சொன்னார். வியாதிக்காரன் அந்த செய்தியைக் கேட்டு வியந்து அழுது, நான் இருபது வருஷ காலம் பசாசுக்கு ஊழியஞ் செய்தேனே; எண்ணிக்கையில்லாத பாவங்களைச் செய்த பிறகு கரையேறுவது எப்படி என்றான். குருவானவர் நீ செய்த பாவங்களை வெறுத்து மெய்யான உத்தம மனஸ்தாபப்பட்டால் சர்வேசுரன் பொறுப்பார் என்பதற்குச் சந்தேகமில்லையென்று சொல்ல, அப்பொழுது அந்த பிரபுவின் மகன் அதைக்கேட்டு ஆறுதல் அடைந்து குருவானவரைப் பார்த்து, சுவாமி நான் அவநம்பிக்கையாயிருந்து, நான் செய்த பாவம் எண்ணிக்கையில்லாததினால் நரகத்துக்கு தப்பி மோட்சத்தை அடைய முடியாதென்று இருந்தேன். ஆனால் நான் இப்பொழுது உத்தம மனஸ்தாபப்படுகிறதினால் சர்வேசுரன் பொறுப்பாரென்று முழுதும் நம்பியிருக்கிறேன்.

ஆகையால் இப்பொழுதே பாவசங்கீர்த்தனம் செய்ய ஆசையாய் இருக்கிறேனென்று சொல்லி அன்றுதானே நன்முறை பாவசங்கீர்த்தனம் செய்து மறுநாள் நன்மை வாங்கி மிகுந்த சந்தோஷத்துடனே மரித்தான். அவன் இறந்த பிறகு இயேசுநாதர் புனித விறிசித்தம்மாளுக்கு தோன்றி: அந்தப் பாவியானவன் பாவச் சேற்றில் உழன்றபோது வியாகுல மாதாவை அடிக்கடி நினைத்து வேண்டிக்கொண்டதால், தேவமாதாவின் வேண்டுதலைக் குறித்து நாம் அவனை நரகத்தில் தள்ளாமல் அவன் உத்தரிக்கிற ஸ்தலத்தில் சிறிது நேரம் இருந்து, பிறகு மோட்சத்துக்கு அழைத்துக்கொள்வோம் என்று சொன்னார்.

மூன்றாவது :

வாலிபன் ஒருவன் வியாகுலமாதாவின் மீது பக்திவைத்து சுரூபத்துக்கு முன்பாக தினமும் வேண்டிக்கொண்டு வந்தான். அந்த சுரூபத்தின் நெஞ்சில் தேவமாதாவின் ஏழு வியாகுலங்களைக் குறித்து ஏழு வாள்கள் இருந்தன. அவன் ஒரு இரவில் பசாசின் தந்திரத்தால் ஒரு சாவான பாவத்தை கட்டிக்கொண்டான். விடியற்காலையில் வியாகுல மாதா சுரூபத்துக்கு முன் வழக்கம்போல தான் குறித்த செபங்களை முடிக்க வருகையில் தேவமாதாவின் நெஞ்சிலே ஏழு வாள்களோடு எட்டாம் வாள் ஒன்று இருக்கிறதைக் கண்டான். அந்த அதிசயத்தை கண்டு யோசித்து கொண்டிருக்கும் பொழுது நீ இந்த இரவில் செய்த பாவமே தேவமாதாவின் எட்டாம் வாளாயிருக்கிறதென்ற சத்தத்தை அவன் கேட்டு அஞ்சி தன் பாவத்தால் தேவமாதாவுக்கு கஸ்தி வருவித்ததையும் சர்வேசுரனுக்கும், கோபம் வருவித்ததையும் நினைத்து மனஸ்தாபப்பட்டு கண்ணீர் விட்டு அழுது உடனே பாவசங்கீர்த்தனம் செய்தபின் சுரூபத்தின் முன்பாக திரும்பி வந்து அதில் முன் போல் ஏழு வாள்களைக் கண்டு தேவமாதாவின் இரக்கத்தால்தான் பாவம் பொறுக்கப்பட்டதென அறிந்து மகிழ்ச்சியுற்றான் பாவத்தில் மீண்டும் விழாது நல்லவன் ஆனான்.

கிறிஸ்தவர்களே! உங்களுக்கு கிருபையுள்ள தாயாராயிருக்கிற தேவமாதாவின் வியாகுலங்களை நினைத்திரங்கி உங்களுடைய பாவங்களால் அவளுக்கு கஸ்தியை உண்டாக்காதீர்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 19

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 19
தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களின் பேரில்!

சேசுநாதர் படாத பாடுபட்டு மரிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப்பட்டது.

தேவமாதா தமது குமாரனுக்குச் சம்பவிக்கப் போகும் அனைத்தையும் தூரதிருஷ்டியினால் முன் அறிந்திருந்தார்கள். ஆனதால் அவருடைய திருமுகத்தைப் பார்க்கும்பொழுது அந்தத் திருமுகம் இரத்தத்தினாலும் அசுத்தமான உமிழ்நீரினாலும் அவலட்சணமாகுமென்றும் அவருடைய திருக் கைகளைப் பார்க்கும்பொழுது அவைகள் இரும்பாணிகளினால் ஊடுருவப்படுமென்றும் அவருடைய திருச்சரீரம் காயம்பட்டுச் சிலுவையில் அறையப்படுமென்றும் அறிந்திருந்தார்கள். மீண்டும் தேவாலயத்துக்குப்போய் அதில் வேத முறைமையின்படி சர்வேசுரனுக்கு யாதோர் பலியை ஒப்புக்கொடுக்கிறதை பார்க்கும்போது, தம்முடைய குமாரனாகிய சேசுநாதர் தமது இரத்தமெல்லாம் சிந்தி மனிதர்களை மீட்க பிதாவாகிய சர்வேசுரனுக்குத் தம்மை ஒப்புக் கொடுப்பாரென்றும் நினைத்துக் கொண்டு வருவார்கள். இந்த வர்த்தமானங்கள் எல்லாம் தேவமாதா முன்னறிந்து மனதில் இடைவிடாமல் தியானித்ததினால் அன்னை சொல்லொண்ணா மனோ வியாகுலம் அனுபவித்தார்கள். ஆனால் நரகத்தினின்று நம்முடைய ஆத்துமங்களை மீட்பதற்கு இவையெல்லாம் வேண்டியிருப்பதால் தேவமாதா பட்ட கிலேசம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொறுமையோடு அனுபவித்து ஒருபோதும் முறைப்படாமல் இருந்தார்கள். அன்னை நமக்காக பட்ட கிலேசமானது வீணாகாதபடிக்கும் நமது ஆத்துமம் கெட்டுபோகாதபடிக்கும் அன்னையை நோக்கி வேண்டிக்கொள்ளுவோமாக.

சேசுநாதர் வேதம் போதிக்கிற வேளையில் மிகுந்த துன்பத்துயரங்கள் அனுபவிப்பாரென்று தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

தேவமாதா வியாகுலம் அனுபவித்ததற்கு இரண்டாம் முகாந்தரம் என்னவென்றால் தமது குமாரனாகிய சேசுநாதர் படுகிற வருத்தங்களையும் எளிமைத்தனத்தையும் அவருடைய விரோதிகள் அவர் போரில் வைத்த வர்மம் காய்மகாரத்தையும் அவருக்கு வருவித்த நிந்தை அவமானங்களையும், அவர் மீது சொன்ன அபாண்டம், பொய்சாட்சி முதலான துன்பங்களையும் கண்டு தேவமாதாவின் ஆத்துமத்தில் அதிக கஸ்தியுண்டானதுமல்லாமல், அதெல்லாவற்றையும் தமக்கு செய்தாற்போல் அனுபவித்தார்கள் என்பதற்கு சந்தேகமில்லை. ஆனால் இவை தேவ சித்தத்தின்படியே நடக்கிறதென்றும், இயேசுநாதர் அந்த துன்பங்களுக்கு மனப்பூர்வமாய் உட்படுகிறாரென்றும் அறிந்து, தேவ சித்தத்துக்கு கீழ்ப்படிந்து தமக்கு வந்த துன்பத்தை வெகு பொறுமையோடு சகித்து வந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் நமக்கு துன்பம் சலிப்பு வருத்தம் நோவு வியாதி வேதனை முதலியன வரும் வேளைகளில் அவையெல்லாம் சர்வேசுரனுடைய உத்தரவின்படியே சம்பவிக்குமென்று நினைத்து பொறுமையோடு சகித்து முறைப்படாது இருக்கக்கடவோம்.

அநேகம் பாவிகளுக்கும் அவர் பட்ட பாடுகள் வீணாகப் போகுமென்றும் தேவமாதா அறிந்து மன வேதனைப் பட்டது.

ஆனால் தேவமாதா மீளாத் துன்பங்கள் அனுபவித்ததற்கு விசேஷமான முகாந்தரமானது: சர்வேசுரன் அனுப்பின மீட்பரை மனிதர்கள் அறியாமல் அவருடைய திவ்விய போதனை முதலான உபகாரங்களை நிந்தித்து வருகிறதையும், தங்களை மீட்க வந்த இயேசுநாதருக்கு அவர்கள் காண்பித்து, நன்றிகெட்ட தனத்தையும். செய்த கொடூரத்தையும் கண்டு தேவமாதா பிரலாபித்து அதிக கஸ்திபட்டதுமன்றி தமது தேவக்குமாரனின் திருப்பாடுகள் பாவிகளில் அநேகருக்கு வீணாய்ப்போகும் என்றும், தமது சனங்களாகிய யூதர்கள் மூர்க்கத்தினாலும் பாதகங்களினாலும் சர்வேசுரனுடைய கோபத்தை தங்கள் பேரில் வருவித்து கொண்டு மெய்யான வேதத்தை இழந்து, சபிக்கப்பட்டு தள்ளப்படுவார்களென்றும், மோட்ச வழியை புறக்கணித்து கண்களை மூடிக்கொண்டு ஞானகுருடராய் திரிவார்களென்றும் தேவமாதா கண்டு சொல்லிலடங்காத வியாகுலம் அனுபவித்தார்கள்.

கிறிஸ்தவர்களே! நீங்கள் பாவம் செய்யும்போது இயேசுநாதர் பட்ட பாடுகள் உங்கள் மட்டில் வீணாய் போவதற்கு பாவமானது காரணமானதினால் தேவமாதாவுக்கு மறுபடியும் கஸ்தி வருவிக்கிறீர்கள். ஆதலால் யூதர்களுக்கு இடப்பட்ட ஆக்கினையை சர்வேசுரன் உங்களுக்கும் இடுவாரென்று பயப்பட்டு அவருடைய கோபத்தை அமர்த்த வேண்டுமென்று தேவமாதாவை மன்றாடுவீர்களாக.

செபம்

இயேசுநாதருடைய பரிசுத்த தாயாரே ! ஆண்டவர் எனக்கு செய்தருளிய எண்ணிறந்த, உபகாரங்களையும் நான் அவருக்கு காண்பித்த நன்றிகெட்டதனத்தையும் நினைக்கும்போது கொடூரமான தீர்வைக்குள்ளாவேனென்று பயப்படுகிறேன். ஆனால் பாவிகளுக்கு அடைக்கலமாகச் சர்வேசுரன் உம்மை வைத்திருக்கிறாரென்று நினைவுகூர்ந்து எனக்காக வேண்டிக்கொள்ளுவீரென்றும் நான் உமது திருக்குமாரனிடத்தில் கணக்கு சொல்லப்போகிற நாளில் எனக்காக மனுப்பேசுவீரென்றும் நம்பிக்கையாய் இருக்கிறேன். ஆகையால் முன் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்து இனிமேல் நான் அந்த பாவங்களை செய்யாதிருக்க எனக்கு உதவி செய்தருளும்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுக்கு சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

பத்தொன்பதாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரியையாவது:

சர்வேசுரன் உங்களுக்கு செய்த எண்ணிக்கையில்லாத உபகாரங்களை நினைத்து அவருக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

கப்பல் ஒன்று கடலில் ஓடுகிற பொழுது லொரேத்தோ என்ற தேவமாதாவின் அற்புதமான கோவிலிருக்கிற அண்டைக்கு வந்தது. மறுநாளில் மாதாவின் திருநாட்களில் ஒன்று கொண்டாடப்படும் என்று அறிந்து, அந்த கப்பலிலே இருந்த சனங்கள் எல்லாரும் அந்த கோவிலுக்குச் சென்று திருப்பலி காணவேண்டுமென ஆசையுடன் இருந்தனர். இதற்கு எல்லாரும் சம்மதித்தார்கள். கப்பல் ஓட்டுகிற ஒருவன் மாத்திரம், சனங்களெல்லாரும் கப்பலைவிட்டு அப்புறம் போனால் தன் கப்பலுக்கு ஆபத்து வருமென்று சம்மதியாமல் இருந்தான். அப்படி இருக்கையில், கப்பல் ஓட்டுகிற அந்தோனி என்ற பெயருடைய ஒருவன், நீங்கள் எல்லாரும் கோவிலுக்கு சென்று திருப்பலி காணலாம். நான் தேவமாதாவின் உதவியைக் கேட்டு கப்பலுக்கு ஆபத்து வராதபடிக்கு காவலாய் இருப்பேனென்று உறுதியாகச் சொல்லி எல்லோரும் தேவமாதாவின் பேரில் நம்பிக்கையாய் இருக்கச் செய்தான். ஆகையால் அதிகாலையில் எல்லாரும் புறப்பட்டுபோன சிறிது நேரத்துக்கெல்லாம், கப்பலில் தனியாக இருந்த அந்தோனி தூரத்தில் ஓர் பெரிய கப்பல் வருகிறதைக் கண்டான். அது அருகில் வந்த பிற்பாடு அதில் பகைவர்களான பிறமதத்தினர், தான் இருக்கிற கப்பலை பிடிக்க வருகிறதை அறிந்து கலங்கினான். ஆனால் தேவமாதாவை உறுதியான விசுவாசத்தோடு நம்பி எல்லாரும் திருப்பலி காணப் போனதை அன்னை ஞாபகப்படுத்தி, ஒரு கோடாலியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கப்பலின் ஓரத்தில் ஓர் மூலையில் மறைந்து நின்றான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஒருவன் வந்து அந்தோனி ஒளிந்து கொண்டிருந்த கப்பலை ஓர் கையால் பிடித்து அதனுள் ஏற முயன்றான். அந்தோனி அதை அறிந்து எழுந்திருந்து கோடாலியால் அவனுடைய கையை வெட்டிப் போட்டுவிட்டு திரும்பவும் ஒளிந்து கொண்டான். கை வெட்டப்பட்டவனோவென்றால் அபயமிட்டு, இதோ இதில் அநேகர் கபடமாய் ஒளிந்து கொண்டிருக்கின்றனர். நாம் இந்தக் கப்பலில் போனால் எல்லோரும் கொல்லப்படுவோமென்று உரத்த சத்தமாய் சொல்லி மற்றவர்களுக்கு பயத்தை உண்டுபண்ணினான். ஆகையால் கடற்கொள்ளைக்காரர்கள் இந்த கப்பலை பிடிக்காமல் அதைவிட்டு ஓடிப்போனார்கள். சிறிது நேரத்திற்குப்பிறகு அந்தோனி தலையை உயர்த்தியபோது அவர்கள் தூரத்தில் ஓடுகிறதைக் கண்டு முழந்தாளிட்டு தேவமாதாவுக்கு தோத்திரம் பண்ணினான். மற்றவர்கள் திருப்பலி கண்டு வருகையில் அந்த கப்பல் ஓடுகிறதைக்கண்டு, ஐயோ! எங்கள் கப்பலுக்கு ஒருவேளை ஆபத்து வந்ததோ வென சந்தேகப்பட்டனர். ஆனால் அந்தோனி அவர்களிடம் வெட்டப்பட்ட கையையும் கோடாலியையும் அவர்களுக்காட்டி நடந்தவை அனைத்தையும் அவர்களுக்கு அறிவித்தான். இதைக் கேட்ட எல்லோரும் தேவமாதாவின் பிரார்த்தனையைச் சொல்லி கிறிஸ்தவர்களின் சகாயமாகிய அந்த பரம நாயகிக்கு நன்றி செலுத்தினார்கள்.

கொடிய புயல் உள்ள இவ்வுலக சமுத்திரத்தில் பயணம் செய்யும் கிறிஸ்தவர்களே! புயல் அடிக்காத துறையாகிய மோட்ச இராச்சியம் சேர வேண்டுமானால் விடியற்காலத்து நட்சத்திரமாகிற பரம நாயகியான பரிசுத்த கன்னிகையை எப்போதும் நம்பிக்கையுடன் மன்றாடுங்கள்.

தேவமாதாவின் வணக்கமாதம் – மே 18

தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தின் பேரில்!

கன்னிமரியாள் தமது மைந்தனைப் பார்த்த பொழுது அடைந்த சந்தோஷம்.

மிகுந்த நேசமுள்ள கன்னிமரியாள் அளவில்லாத அன்புக்குரிய தமது மைந்தனாகிய இயேசுவைப் பார்த்த பொழுது ஆத்துமமானது மிகுதியான சந்தோஷத்தால் நிரப்பப்பட்டது. எல்லா மனிதரிலும் செளந்தரியமுள்ளவராய் இருக்கிற இயேசுநாதரிடத்தில் சகல இஷ்டப்பிரசாதங்களும், ஞானத்திரவியங்களும், தேவ இலட்சணங்களும், அடங்கியிருக்கிறதென்றும், அவர் உலகத்தை இரட்சிக்கிறதற்கு அனுப்பப்பட்டவரென்றும், எண்ணிக்கையில்லாத ஆத்துமங்களை மோட்சத்துக்குக் கூட்டிக்கொண்டு போவாரென்றும், அவர் மெய்யான சர்வேசுரனாகையால் மனுக்குலத்தார் எல்லோரும் அவரை ஆராதிப்பார்களென்றும் கன்னிமரியாள் அறிந்து, மகிமையை அவர் அடைந்ததினால் சொல்லிலடங்காத மகிழ்ச்சி வணக்கத்துடன் அவருக்கு ஊழியம் செய்து வந்தார்கள். இவ்வாறு நாமும் திவ்விய நன்மை வாங்கும் பொழுது தேவமாதாவின் திருமைந்தனாகிய இயேசுநாதர் நமது அத்துமத்தில் வருகிறாரென்பது நிச்சயமாகையால், மிகுந்த பக்தி வணக்கத்தோடும் சிநேகத்தோடும் அவரை உட்கொள்ளக்கடவோம்.

அவரோடு பேசினபொழுது அடைந்த சந்தோஷம்.

கன்னிமரியாள் தமது திருக்குமாரனோடு சல்லாபித்த பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். வேதத்துக்கடுத்த சத்தியங்கள் திருச்சபையில் ஸ்தாபிக்கப்படும் ஒழுங்குகள், அதில் நடக்கப்போகும் அதிசயமான வர்த்தமானங்கள், வேதசாட்சிகள் தங்கள் பிராணனைக் கொடுக்கப்போகும் அதிசயத் துணிவு, உலக முடிவு பரியந்தம் எண்ணிக்கையில்லாத மகாத்துமாக்கள் செய்யும் புண்ணியங்கள் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் இயேசுநாதர் தமது அன்னைக்கு வெளிப்படுத்தினார். கன்னிமரியாயோ அவருடைய வார்த்தைகளை மிகுந்த வணக்கத்தோடு கேட்டு, அவர் திருவுளம் பற்றினவைகளை எல்லாம் இடைவிடாது தியானித்து மிகவும் மகிழ்ந்தார்கள். வேதத்திலுண்டான சத்தியங்களைக் கிறிஸ்தவர்கள் அடிக்கடி தியானித்தால் ஞான சந்தோஷத்தை அடைவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை. ஆனால் அழிந்துபோகிற உலக காரியங்களின் மேல் கவலை வைத்து அழிவில்லாத வேத காரியங்களின் மட்டில் அசட்டையாக இருந்தால் பிரயோசனமென்ன? அழிந்து போகிற சரீரத்துக்காக வெகு பிரயாசைப்பட்டு முடிவில்லாத நித்திய வாழ்விற்கு வழியாயிருக்கிற வேதத்தை அறியாதிருந்தால் பலனேது? ஆகையால் வேத ஒழுங்கின்படி நடக்கும்படிக்கும், வேதகாரியங்களைப் பக்தியோடு தியானித்து அறியவும், அவைகளை உறுதியாய் விசுவசிக்கவும், வேண்டிய உதவிகளைத் தேவதாயாரிடம் கேட்கக்கடவீர்களாக.

அவர் தம்முடைய வேதம் போதிக்கிறதைக் கேட்ட பொழுது அடைந்த சந்தோஷம்.

இயேசுநாதர் வேதத்தைப் போதிக்கும் பொழுது கன்னிமரியாள் சந்தோஷமடைந்து தமது குமாரன் எண்ணிலடங்காத அற்புதங்களைச் செய்கிறதையும், அவரைப் பின் செல்லத் திரளான சனங்கள் வருகிறதையும் ஆரோக்கியத்தை அடைவதற்காக அவரை பிணியாளர் தேடுகிறதையும், எங்கும் உள்ள மனிதர் அவருக்கு புகழ்ச்சி, நமஸ்காரம், ஆராதனை செய்கிறதையும், தேவமாதா கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தார்கள் அன்றியும் இயேசுநாதருடைய சீஷர்களும், அவருடைய திருவாக்கியங்களை அதிசயத்தோடு கேட்டவர்களும், அவரால் பிணி தீர்க்கப்பட்டவர்களும், ஏன் உயிர் பெற்றவர்களும் தேவ மாதாவிடத்தில் வந்து வணங்கி அப்பேர்ப்பட்ட குமாரனைப் பெற்றதினால் தோத்திரம் சொல்லி, பேறுபெற்றவர்களென்றும், ஆசீர்வதிக்கப் பட்டவர்களென்றும், புகழ்ந்து வருகையில் அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷம் இருந்திருக்கும்! நாமும் கன்னிமரியாயிக்கு மகிழ்ச்சி வருவிக்க வேண்டுமென்ற ஆசையோடு நமக்காகப் பெற்ற குமாரனைக் குறித்து அன்னைக்குத் தகுதியான மங்கள வார்த்தையைச் சொல்லக்கடவோம்.

செபம்.

என் திவ்விய தாயாரே! என் பேரில் மிகுந்த அன்புவைத்து எனக்கு எண்ணிக்கையில்லாத உபகாரங்களைச் செய்து, இஷ்டப்பிரசாதத்தால் வருகிற மன அக்களிப்பை என் ஆத்துமத்தில் விளைவிக்கும்படிக்கு எவ்வளவு பிரயாசைப்பட்டீர்! நான் உமக்கு சந்தோஷம் வருவிக்கத் தக்கதாக இன்றுவரையில் எதிலும் பிரயாசைப்பட்டவனல்ல. ஆகையால் உமது திருமைந்தனாகிய இயேசுநாதர் வெளிப்படுத்தின வேத சத்தியங்களை இனியேனும் அறிந்து விசுவசிக்கவும், அதன்படி நடக்கவும் ஆசையாயிருக்கிறேன். இயேசுநாதரிடத்தில் நீர் அடைந்த சந்தோஷத்தைப் பார்த்து என் ஆசை நிறைவேறும்படி என்பேரில் தயவாயிருந்து எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

இத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :

கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பதினெட்டாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது:

உங்களுடைய காவலான சம்மனசையும் அவரால் உங்களுக்கு வந்த உபகாரங்களையும் நினைத்து அவருக்குத் தோத்திரம் சொல்லுகிறது.

புதுமை!

மகா பேர்பெற்ற சில்வெய்ரா கோன்சலேஸ் என்னும் இயேசுசபைக் குருவானவர் ஆப்பிரிக்காவிலுள்ள மோனோமோத்தப்பா என்னும் நாட்டுக்கு மெய்யான வேதத்தைப் பிரசங்கிக்கப் போன பொழுது தம்மோடு தேவமாதாவின் ஓர் படத்தை எடுத்துச் சென்றார். அவ்விடத்தில் சேர்ந்த தம் அரசரின் பிரதானிகளில் ஒருவன் அவரைக் காண வந்தபோது அவர் அறையில் இருந்த படத்தைக் கண்டு, இது உயிருள்ள உருவமோ, உயிரில்லாத உருவமோ என கண்டுகொள்ள முடியாததால் அரசரிடத்தில் வந்து, அந்தக் குருவானவரிடத்தில் நான் அழகுள்ள ஒரு பெரிய இராக்கினியைக் கண்டேன் என்று சொன்னான். அரசர் அந்த இராக்கினியைக் காண வேண்டுமென்ற ஆர்வத்தோடு குருவானவரிடத்தில் ஆளனுப்பி, ஆண்டவரே! நீர் நம்மண்டைக்கு உம்முடன் இருக்கும் இராக்கினியைக் கூட்டிக் கொண்டு வர வேண்டுமென்று மன்றாடினார். குருவானவர், மன்னரின் வேண்டுகோளின்படி அவரண்டையில் வந்து தேவமாதாவின் படமல்லாமல் தம்மோடு வேறு இராக்கினியில்லாமையால் அதை எடுத்து மன்னருக்கு காண்பித்தார். மன்னர் அப்படத்தைக் கண்டு அளவிள்ளாத ஆனந்தங்கொண்டு தம்முடைய அறையில் மிகுந்த அலங்காரத்தோடு வைக்கச் சொன்னார்.

அன்று இரவில் தேவதாய் மிகுந்த பிரகாசத்தோடு அந்தப் படத்தின் வடிகரூபமாய் அவரது நித்திரையில் தம்மைக் காண்பித்து அவரிடம் பேசினார்கள். ஆனால் அரசரால் இவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்போல் ஐந்து நாள் இரவிலும் சம்பவித்ததைக் கண்ட அரசர் குருவானவரிடத்தில் வந்து அந்த இராக்கினி என்னோடு அறியாத மொழியில் பேசுகிறதினால் நான் கஸ்திபடுகிறேன், அதை அறியும்படி என்ன செய்யலாமென்று கேட்டதற்கு குருவானவர் பதில் மொழியாக: அந்தப் பரம இராக்கினி பேசுகிற மொழி பரலோக மொழியானதால், அதை அறிய வேண்டுமானால் ஞானஸ்நானம் பெற்று மெய்யான வேதத்தை அனுசரித்தால் அறியலாமென்று சொன்னார். அதைக் கேட்ட அரசர் அந்த மொழியை அறிய ஆசையுள்ளவராய் இருந்ததால் ஞானஸ்நானத்திற்கு சம்மதித்து செபங்களும், வேதப் பிரமாணங்களும் படித்த பிறகு, அவரும் அவருடைய தாயாரும் பிரதானிகள் அநேகரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்பொழுது தேவமாதா பேசுகிற மொழியை அறிந்து தாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு அந்தப் பரம இராக்கினி தெரிந்து கொண்ட வழி இதுதான் என்று நிச்சயித்து அன்னைக்கு நன்றியறிந்த தோத்திரம் சொல்லி அது முதல் மெய்யான வேதத்தில் பிரமாணிக்கமாயிருந்தார்.

கிறிஸ்தவர்களே! உங்கள் மனதில் பரிசுத்தாவியாகிய சர்வேசுரன் கொடுக்கிற ஞான ஏவுதல்களை நீங்கள் கேட்கும்படியாக தேவ மாதாவின் அனுக்கிரகத்தை மன்றாடுங்கள்.