உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின்  புதுமைகள் November-6-புதுமை

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் செய்யாததால் வந்த ஆக்கினை

பெறாரா என்ற நகரத்தில் ஒரு மனிதன் அழகான மாளிகை ஒன்றைக் கட்டி அதில் தன் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு அம்மாளிகையினுள் இரவு வேளைகளில் பயங்கரமான சத்தங்களைக் கேட்டதால் அப்பிள்ளைகள் அங்கே குடியிருக்கப் பயந்து வேறு இடம் தேடிப் போனார்கள். செய்தியறிந்த மற்றவர்களும் அந்த மாளிகைப் பக்கம் பயந்து போய் போகாமலே இருந்தார்கள்.

இம்மாளிகைக்கு உரிமையாளனின் மூத்த மகன் தங்கள் மாளிகை பயன்படுத்தப்படாது பாழாகிக் கிடப்பது குறித்து பிறரோடு வருத்தத்தைப் பகிர்ந்தான். அவர்களில் ஒருவன் துணிச்சலோடு “ஐயா, நான் வேண்டுமானால் அந்த மாளிகையில் குடியிருக்கிறேன். ஆனால் நீர் குறிப்பிடும் பயங்கர சத்தங்கள் நின்று போனால் எனக்குப் பரிசாக பத்தாண்டுகள் அம்மாளிகையில் உரிமையோடு குடியிருக்கக்கூடிய அனுமதியைக் கொடுக்க வேண்டும் என்றும் பத்தாண்டுகள் முடிந்த பிறகு மாளிகையைத் திரும்ப உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதற்கு சம்மதமா?” என்று கேட்டான்.

அதற்கு மூத்த மகன் சம்மதித்ததால் அவனும் அதிக அளவு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அம்மாளிகையில் குடியேறினான். அங்கே பகலில் பயமில்லாமல் இருந்தாலும் இரவில் பாரமான சங்கிலிகள் இழுக்கப்படும் ஒலியைக் கேட்டான். உள்ளுக்குள் அவன் பயந்தாலும் ஓடிப் போகாமல் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றை வாசிக்கலானான். ஆனாலும் யாராவது தன்னை நெருங்கி வருகிறார்களா வென்று அவ்வப்போது சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.

திடீரென்று அவன் கண்ட காட்சி இதுதான். உயரமான ஒரு மனிதன் தன் கை கால்களில் பெரிய சங்கிலியால் கட்டப்பட்டவனாக தன்னிடம் வருவதைக் கவனித்தான். அருகில் வந்த அவன் நீ என்ன புத்தகத்தை வாசிக்கிறாய்? என்று கேட்டதற்குப் பதில் கூறிய அவனுக்கு வேறு வார்த்தை பேசாது அவனருகிலேயே இரவு முழுக்க அமர்ந்தான் அந்த உயரமான மனிதன்.

இரவு வேளையில் துறவிகள் மடத்திலிருந்து எழுப்பிய மணியோசை கேட்ட உயரமான மனிதன் மெல்ல எழுந்து நடக்கலானான். இறுதியில் அந்த உயரமான மனிதன் ஒரு கல்லறையில் நுழைந்து மறைந்து போனான். அம்மாளிகையில் தங்கியிருந்தவன் மறுநாள் அந்தக் கல்லறை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தான். அவன் தங்கியிருக்கும் மாளிகையைக் கட்டிய உரிமையாளனின் கல்லறை என்பது தெரிய வந்தது. அவன் சில குருவானவர்களை அழைத்து அம்மனிதனுடைய ஆத்துமத்துக்காக பல திருப்பலிகள், ஜெபமாலை ஒப்புக் கொடுக்கச் செய்தது மட்டுமில்லாமல் வேறு புண்ணியச் செயல்களையும் செய்தான். அந்த ஆன்மாவுக்கு ஞான உதவி முடிந்த பிறகு அதன்பின் அம்மாளிகைக்குள்ளிருந்து எவ்வித பயங்கர சத்தமும் கேட்கவில்லை. அநேக ஆண்டுகள் அங்கே மனிதர்கள் குடியிருக்கும் சூழ்நிலையும் உருவாகியது.

கிறிஸ்தவர்களே! இப்போது குறிப்பிடப்பட்ட மாளிகையின் உரிமையாளன் இறந்த பிறகு அவன் பிள்ளைகள் தங்கள் தந்தையுடைய ஆன்மா சாந்தியடைய கிஞ்சித்தேனும் உதவி செய்யாததால் அங்கே குடியிருக்க அஞ்சி வேற்றிடம் சென்றனர். அம்மாளிகையில் இரவில் தங்கியவன் அந்த ஆத்துமத்துக்கு செய்த உதவிகளால் பயமும் துன்பமும் மறைந்து போனது.

தாய் தந்தை மரிக்கும் வேளையில் தங்களுக்கு அவர்களால் கொடுக்கப்படும் சொத்து, சுதந்திரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு அனுபவிக்கும் பிள்ளைகள் தம் பெற்றோர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவதியுறும்போது அவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக எவ்வித உதவிகளையும் செய்யாததால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அதிகம் துன்பப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட இழப்பு உங்களுக்கு வராதபடி தாய் தந்தை உறவினர் ஆத்துமங்களுக்காக திருப்பலி மற்றும் புண்ணிய காரியங்களைச் செய்ய வேண்டுவது உங்களது கடமையல்லவா?

நீங்கள் செய்வது போல்தானே உங்கள் பிள்ளைகளும் நீங்கள் இறந்தபின் உங்கள் சொத்தை அனுபவித்துவிட்டு உங்களைப் பற்றி மறந்து போவார்கள்.

அம்மாளிகையில் தங்கியிருந்தவர்கள் இரவு நேரங்களில் பயங்கர சத்தத்தைக் கேட்டு இது பிசாசின் வேலையோ? என்று அச்சப்பட்டனர். பிறகுதான் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா எழுப்பிய ஓசை என்பது தெரிய வந்தது. இப்படித்தான் சில கிறிஸ்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவாது அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவ முன் வரும் பொருட்டு சில கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய அனுமதியின்பேரில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் தரிசனத்தை உணர்கிறார்கள்.

இறந்துபோன உறவினர்களின் ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றியடைய வேண்டுதல், தர்மம் செய்தல், திருப்பலி, ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல் ஆகிய புண்ணிய காரியங்களை செய்தால் அவர்கள் விரைவில் மோட்சம் போக முடியும். அப்படிப் போன பின் நன்றியுடன் உங்களுக்காகவும் கட்டாயம் தொடர்ந்து வேண்டிக்கொள்வார்கள்.

ஆமென்.

பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின்  புதுமைகள் November-5-புதுமை

 
உத்தரிக்கிற ஸ்தலத்து தண்டனைகளின் கொடுமை 
 
பூமியில் இருக்கிற துயரங்களைவிட, கடுமையான வேதனைகளைவிட உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பினால் ஏற்படும் வேதனை மிகமிகக் கொடியது என்கிறார் அர்ச். அகுஸ்தினார். 
 
ஆஸ்திரியா நாட்டில் ஒரு மடத்தில் இருந்த இரண்டு குருக்கள் தங்களுக்குள்ளே வெகு நட்பாயிருந்து பல புண்ணிய காரியங்களைச் செய்து புனிதர்களைப் போலவே வாழ்ந்தனர். இவ்விருவரில் ஒருவர் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் நேரம். அவருடைய காவல் சம்மனசு அவருக்குத் தோன்றி “அவர் சற்று நேரத்தில் இறந்துபோவது மட்டுமல்லாமல், அவருடைய அற்பப்பாவங்களுக்குத் தண்டனை பெற உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வாடும்போது அவருக்காக வேறு குருவானவர் திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுக்கும்வரை உத்தரிக்கிற ஸ்தலத்து துன்பம் தொடரும் என்றும் திவ்விய பலிபூசையை
  ஒப்புக்கொடுத்த பிறகு அவர் மோட்சத்துக்குப் போய்விடுவார்” என்றும் கூறி மறைந்தது. 
 
படுக்கையில் இருந்த குருவானவர் தன் நண்பராயிருக்கும் குருவானவரை வரவழைத்து நடந்த நிகழ்ச்சியைக் கூறி தாம் இறந்தவுடன் தாமதமின்றி உடனே ஒரு திவ்விய பலிபூசையை
நிறைவேற்றி தன் ஆன்மாவுக்காக ஒப்புக்கொடுக்கும்படி வேண்டினார். நண்பரான குருவானவரும் இதற்கு உடனே சம்மதித்தார். 
 
மறுநாள் காலையில் நோயிலிருந்த குருவானவர் மரணமடைய அவரை கல்லறையில் அடக்கம் பண்ணுவதற்குள், அவர் நண்பரான குருவானவர் உடனடியாக ஆலயத்தில் அவருக்காக திவ்விய பலிபூசையை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார். திவ்விய பலிபூசையை முடிந்து ஆலயத்தில் அவர் செபித்துக் கொண்டிருந்தபோது, இறந்த குருவானவரின் ஆன்மா அவரிடம் தோன்றி வருத்தத்தோடு பேசியது. “சகோதரரே, உம்முடைய நட்பு என்ன ஆனது? நீர் ஏன், என் பேரில் இரக்கமில்லாமல் போனீர்?” என்று கேட்க, திகைப்படைந்த குருவானவர் “சகோதரரே, ஏன் இப்படிச் சொல்லுகிறீர்?” என்று வினவ, இறந்த ஆன்மா பதிலாக “நான் இறந்தவுடன் எனக்காக உடனே திவ்விய பலிபூசையை ஒப்புக்கொடுப்பேன் என வாக்கு கொடுத்ததை நீர் நிறைவேற்றாமல் நான் இறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகே திவ்விய பலிபூசையை ஒப்புக்கொடுத்தீர், இப்படித் தவறவிட்டதால் உம்மால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் நான் ஒரு வருட காலம் கொடிய வேதனை அனுபவித்தேன்” என்று துயரத்தோடு கூறினார். 
 
குருவானவர் மறுமொழியாக “அது எப்படி? இன்றைக்குத்தான் நீர் இறந்தீர். இன்னமும் உமது உடலை கல்லறைக்கு முதலாய் கொண்டுபோகவில்லை. உம் உயிர் பிரிந்தவுடனேயே ஆலயத்துக்குச் சென்று திவ்விய பலிபூசையை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தேன். உண்மை இவ்விதமிருக்க, ஓராண்டுக்குப் பிறகே நான் திவ்விய பலிபூசையை நிறைவேற்றியதாக நீர் கூறுவது எப்படி?” என்று கேட்டார். 
 
இறந்த குருவானவர் “உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை கொடுமையாக இருக்கிறதால் கொஞ்சநேரம் கூட அநேக ஆண்டுகள் போலத் தெரிகின்றது நான் இறந்த சிறிது நேரத்தை உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு வருடம் என்று எண்ணினேன். ஆனால் நீர் எனக்காக உடனே ஒப்புக்கொடுத்த திருப்பலியால் என் வேதனையெல்லாம் தீர்ந்தது. இப்போது நான்மோட்சம் போகிறேன். எனக்கு நன்மை கிடைக்க உதவிய உமக்காக மோட்சத்தில் எப்போதும் நான் தொடர்ந்து ஆண்டவரை வேண்டுவேன்” என்று மகிழ்ச்சியோடு கூறியவராய் மோட்சத்துக்குப் போனார். 
 
சகோதரசகோதரிகளே! மரித்த அந்தத்துறவிக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்த சிறிதுநேரம் கூட ஒருவருடம்போல் தோன்றியது. அப்படியென்றால் நீங்கள் உங்கள் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அநேக காலம் இருக்க நேர்ந்தால், அந்த வேதனையினால் ஒருவருடம் கூட ஆயிரம் வருடம் போலத்தோன்றும். எனவே, இப்போது பாவம் செய்யாதிருப்பது மட்டுமல்லாமல் செய்த பாவங்களுக்காக இப்பொழுதுதிலிருந்தே பரிகாரம் செய்துவர வேண்டும். 
 
உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறந்தவுடன் உடனே தாமதமின்றி அவர்கள் ஆத்துமங்களுக்காக செபம், தானதருமம், திவ்விய பலிபூசை
ஒப்புக்கொடுத்தல் போன்ற நற்காரியங்களை உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் ஒருமாதம் இரண்டு மாதமென புண்ணிய காரியங்களைச் செய்ய தாமதித்தால் அந்த ஓரிருமாதங்களும் அநேக வருடங்கள் போல் மரித்த ஆத்துமாக்களுக்குத் தோன்றும் அல்லவா? 
 
உங்கள் வீட்டு மாடு கிணற்றில் வீழ்ந்தால் ஆட்களைத் திரட்டி உடனடியாக படாதபாடுபட்டு காப்பாற்றுவீர்கள் இல்லையா? உறவினர்களின் ஆன்மா நெருப்புக் கிணறாகிய உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவதியுற்றால் அவர்களின் வேதனை தீர்ந்து மோட்சம் அடைய உடனே உதவாமல் காலதாமதம் செய்வது சரியா? உங்களுடைய தாமதிப்பினால் அவர்கள் எவ்வளவு அவதியுற வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் தாமதித்தால் அது அவர்களுக்கு கடினமான கொடுமை அல்லவா?  
 
ஆமென்.  
 
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமைஉண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை 

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின்  புதுமைகள் November-4-புதுமை

 
தேவமாதா உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின்மீது இரக்கம் மிக்கதாய் 
 
பரலோக அரசியான தேவமாதா, புனித பிரிட்ஜித்துக்குத் தோன்றி உத்தரிக்கிற ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்களுக்கு தாம் தாயாக விளங்குவதாகவும் தம்முடைய வேண்டுதலினால் அவர்களுடைய வேதனை குறைகிறது என்றும் அறிவித்தார்கள். 
 
ஓர் ஆன்மா உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து ஒருநாள் இவ்வுலகுக்கு வந்து “தேவமாதா விண்ணேற்பு அடைந்த நாளில் எண்ணற்ற அவருடைய பரிந்துரையால் ஆன்மாக்கள் உத்தரிப்பு ஸ்தலத்திலிருந்து மோட்சத்துக்குப் போகின்றன” என்று சொன்னது. “தேவ மாதாவின் உதவிமட்டும் இல்லாவிட்டால் அந்த ஆன்மாக்கள் தங்கள் பாவங்களுக்காக உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகுகாலம் வேதனைப்பட வேண்டியதிருக்கும்” என்று தம்மிடம் கூறியதாக அர்ச். தமியான் இராயப்பர் எழுதிவைத்துள்ளார். 
 
இப்புனிதர் மேலும் கூறியிருப்பதாவது: “ரோம் நகரில் ஒரு குருவானவர் தியானத்தில் இருந்த போது ஒரு தரிசனம் கண்டார். அதில் தேவமாதா அரசியென வீற்றிருக்க அவர்களைச் சுற்றி அநேக கன்னியாஸ்திரீகளும், சம்மனசுக்களும் இருந்தனர். அங்கே வந்த ஒரு பெண்மணி  தேவமாதாவின் முன் மண்டியிட்டு ‘தேவமாதாவே!’ இப்போது இறந்த அருளப்பனுடைய ஆத்துமத்தின் பேரில் இரக்கம் வையுங்கள். ஏனெனில் அருளப்பனுடைய ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பிலே மிகுந்த வேதனையை அனுபவிக்கிறது” என்று அழுகையோடு மன்றாடினாள். இந்த வேண்டுதலுக்கு தேவமாதா உடனே பதில் கூறவில்லை. அந்தப் பெண்மணியும் விடவில்லை. “தேவமாதாவே! நான் யாரென்று உமக்குத் தெரியுமே, நான் உம்முடைய ஆலய வாசலிலே பிச்சையெடுப்பவள். குளிரினால் ஒரு சமயம் நான் உடல் நடுங்கி வருந்திய போது இதோ இப்போது இறந்துபோன அருளப்பன்தான் எனக்கு உதவினார். கோயிலுக்குள் நுழைந்த அருளப்பனிடம் உம்பேரில் உதவும்படி வேண்டினேன். அவரோ உம்பெயரைக் குறிப்பிட்டதும் இரக்கம் கொண்டவராய் தம்முடைய போர்வையை எனக்குக் கொடுத்தார். இப்படிப்பட்ட புண்ணியத்தைக் குறித்தே அவருடைய ஆத்துமம் பேரிலே இரக்கப்பட வேண்டுமெனக் கேட்கிறேன்” என்றாள்.  
 
தேவமாதா மகிழ்ச்சியோடு “அம்மா, அருளப்பன் தன்னுடைய பாவங்களுக்காக வெகுகாலம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கவேண்டுமென்பது ஆண்டவரின் கட்டளை. ஆனால், தர்மம் செய்வதும் என் சுரூபத்தின் முன் விளக்கேற்றி செபிப்பதும் ஆகிய இரு புண்ணியங்கள் அவனுக்கு இருப்பதால் அவனுக்காக நான் பரிந்துரை செய்வேன்” என்று கூறி அருளப்பனுடைய ஆன்மாவைத் தமக்கு முன் அழைத்து வரும்படி சம்மனசுக்களுக்கு தேவமாதா கட்டளையிட்டார். 
 
சம்மனசுக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்துக்குப் போய் அருளப்பனுடைய ஆத்துமத்தை அழைத்து வந்தனர். தேவமாதா அருளப்பனைக் கட்டியிருக்கிற நெருப்புச் சங்கிலியை சம்மனசுக்களைக் கொண்டே அவிழ்த்துவிடச் சொல்லி அவனைத் தம்முடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்றார். 
 
சகோதர சகோதரர்களே! நீங்கள் வாழுங்காலத்திலேயே இறைவனைக் குறித்து பிறருக்குத் தர்மம் செய்யுங்கள். நீங்கள் இறந்த பிறகு உங்கள் ஆத்துமம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தால் இப்படிப்பட்ட தர்மங்கள் மூலம் அந்த ஆன்மாவுக்கு உதவிகிடைத்ததுபோல உங்களுக்கும் கட்டாயம் உதவி 
கிடைக்கும். நீங்கள் தேவமாதாவின் சுரூபத்துக்கு முன் விளக்கேற்றி செபித்தால், அல்லது வேறு புண்ணியங்கள் செய்தால், உங்கள் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் வெகுகாலம் வேதனைப்பட நேர்ந்தாலும், அருளப்பனுக்கு நேர்ந்த நன்மையைப் போல் உங்களுக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தின் வேதனை தேவமாதாவின் வழியாய் விரைவில் ஒழிந்து போகும். பாவத்திலேயே வாழ்ந்து மரித்துப்போய் நரகத்தை அடைந்தவர்களுக்கு இது பொருந்தாது. 
 
அருளப்பன் அந்த ஏழைக்கு போர்வையைக் கொடுத்ததால் அவன் இறந்தவுடனேயே அப்பெண் அவனுக்காக வேண்டிக்கொண்டாள். 
 
சகோதரசகோதரர்களே! உங்கள்பெற்றோர் உற்றார் உறவினர் உங்களுக்காக எத்தனையோ சொத்து சுதந்திரங்களை அளித்திருப்பார்கள். அவர்கள்  வாழ்நாளில் எவ்வளவு செலவழித்திருப்பார்கள் என்பதும் கணக்கில்லையல்லவா? ஆனால், உங்கள்தாய்தந்தையர் இறந்தபிறகுஅவர்களுடைய ஆத்துமங்களுக்காக வேண்டிக்கொள்ளாமல் அவர்களை மறந்துபோவதுநியாயமா? 
 
தாம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்குத் தாயென்பது தேவமாதாவே திருவுளம் பற்றியிருக்கிற போது அத்தாயின் பிள்ளைகளாகிய உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்காக வேண்டுதல், பிச்சைமுதலானதர்மம்கொடுத்தல், ஒருசந்தி முதலியவற்றைச் செய்தல் ஆகியபுண்ணியச் செயல்களால் தேவமாதா மகிழ்ச்சியுறுவது மட்டுமல்லாமல் இப்புண்ணியங்களைக் உங்கள்மீதுஅன்புமிகக்கொண்டவராக அல்லவாஇருப்பார்கள்! 
 
ஆமென்.  
 
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை