Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

பரிசுத்த ஜெபமாலை பற்றிய சுருக்கமான வரலாறு- Part-3

By Rev.Fr. PANCRAS M. RAJA

Part-3

பரிசுத்த ஜெபமாலையின் பக்த சபைகள்

இந்த பக்தி முயற்சியை அதன் அழகிய பக்தி ஆர்வத்தில் மீண்டும் நிலைநாட்ட மாதா பிரான்ஸ் நாட்டிலுள்ள தீனன் நகர் சுவாமி நாதர் சபை மடத்தில் இருந்து ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன் தெ லா ரோச் என்பவரைத் தேர்ந்தெடுத்தார்கள். 1464 ஆம் ஆண்டில், நமதாண்டவர், மாதா மற்றும் புனித சுவாமி நாதர் ஆகியோரின் காட்சிகளுக்குப் பிறகு, ஆசீர்வதிக்கப்பட்ட ஆலன் ஜெபமாலையைப் பற்றி பிரசங்கம் செய்யத் தீர்மானித்து, 1475 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்து அதைச் செய்து வந்தார். இக்கால கட்டத்தில்தான் கொலோன் நகர் சுவாமி நாதர் கன்னியர் மடத்தில் பரிசுத்த ஜெபமாலையின் பக்த சபையானது முதல் முதல் நிறுவப்பட்டது. ஜெபமாலை சொல்பவர்களுக்குரிய தமது வாக்குறுதிகளை இவருக்கும் புனித சுவாமி நாதருக்கும் தான் மாதா வழங்கினார்கள்.

இன்னும் பல்வேறு இடங்களில் ஜெபமாலையின் பக்த சபைகளை நிறுவியதுதான் ஜெபமாலைபற்றி ஏராளமான புத்தகங்களை அச்சிட வழிவகுத்தது. ஐரோப்பா முழுவதும் இப்பக்த சபைகள் விரைவில் பரவின. அருள் நிறைந்த மந்திரங்களைச் சொல்லும்போது தியானிக்க வேண்டிய பதினைந்து தேவ இரகசியங்களின் பட்டியலை ஏற்றுக்கொள்வதற்கு இந்த பக்த சபைகள்தான் முக்கிய காரணமாக இருந்தன. சுவாமி நாதர் சபையைச் சார்ந்தவரான பாப்பரசர் புனித 5 ஆம் பத்தி நாதர்தான் இப்பட்டியலை 1569 ஆம் ஆண்டு தனது ‘கோன்சுயேவேருந்த்’ என்னும் நிரூபத்தின் மூலம் வெளியிட்டார்.

லெப்பாந்தோ ஜெபமாலை சிலுவைப் போர்

அதற்குள், துருக்கியப் பேரரசின் வலிமையால் ஐரோப்பா முழுவதும் பேரழிவிற்கு அச்சுறுத்தப்பட்டது. பாப்பரசர் புனித 5 ஆம் பத்தி நாதர் கிறிஸ்தவ உலகைக் காப்பாற்ற ஒரு சிலுவைப் போருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பல நாடுகளில் கிறிஸ்தவ மக்கள், மறுமலர்ச்சியின் காரணத்தால் மந்தமாக இருந்தார்கள் அல்லது புரோட்டஸ்டாண்டிஸக் கொள்கையால் திருச்சபையின் ஒற்றுமையிலிருந்து விலகிவிட்டார்கள். எனவே பாப்பரசரின் அழைப்பிற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. ஆனால் பாப்பரசரின் மாநிலங்களாகிய மால்டா, ஸ்பெயின், நேயாப்பொலிஸ், சிசிலி, வெனிஸ் மற்றும் ஜெனோவா மாநிலங்களிலிருந்து சுமார் 200 பிரிவுகள் கொண்ட ஒரு கடற்படையை ஏற்பாடு செய்யும் வரை பரிசுத்த தந்தை ஓயவில்லை.

புனித பாப்பரசரால் மகாப் பரிசுத்த கன்னிகையின் பாதுகாப்பின் கீழ் ஏற்படுத்தப்பட்ட இந்த கிறிஸ்தவ கடற்படையானது, ஸ்பெயின் தேசத்தின் அரசர் இரண்டாம் பிலிப்புவின் சகோதரராகிய ஆஸ்திரியாவின் தோன் ஜுவான் தலைமையில் புறப்பட்டது. முஸ்லீம் கடற்படையானது கொரிந்து வளைகுடாவின் குறுகிய நுழைவாயிலுக்குள் இருக்கும் லெப்பாந்தோ துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 50 மைல் தொலைவில் காணப்பட்டது.

அக்டோபர் 7, 1571 அன்று போர் ஆரம்பமானது. கிறிஸ்தவ உலகின் எதிர்காலம் அதன் விளைவையே நம்பியிருந்தது.

நான்கு நீண்ட மணிநேரங்களில், போர் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதின, மஸ்கட் குண்டுகளும் அம்புகளும் எல்லா திசைகளிலும் வீசப்பட்டன, எங்கெல்லாம் எதிரிகளின் கப்பல்களைப் பிடித்துக் கொள்ள முடியுமோ அங்கெல்லாம் வீரர்கள் திரண்டனர்.

முதலில் கிறிஸ்தவர்களுக்கு விஷயங்கள் மோசமாக நடந்தாலும், இறுதியில் அவர்கள் வெற்றி பெற்றனர். முஸ்லீம் கடற்படையின் தளபதியான அலி பாஷா கொல்லப்பட்டார் மற்றும் அவரது கொடியானது கைப்பட்டப்பட்டது. முஸ்லிம்கள், தைரியம் இழந்து, ஓடத் தொடங்கினர்.

இந்த போர்முனையானது அஞ்ஞானிகளைக் கொன்றொளிக்கும் சாதனமாக மாறியது. 24,000 முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாகவும் 5,000 பேர் கைதிகளாகப் பிடிக்கப் பட்டதாகவும் கணக்கிடப்பட்டது. கிறிஸ்தவர்கள் 177 கப்பல்களைக் கைப்பற்றி, துருக்கிய போர் கப்பல்களில் அடிமைகளாகப் பிடிக்கப் பட்டிருந்த 15,000 கிறிஸ்தவப் படகோட்டிகளை, விடுவித்தனர்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களில், பாப்பரசர் புனித 5 ஆம் பத்திநாதர் கர்தினால்மார்களுடன் ஒரு விசேஷ அலுவலில் ஈடுபட்டிருந்தார். திடீரென்று அவரது வேலையை நிறுத்திவிட்டு, எழுந்து ஜன்னலைத் திறந்து, அவர் வானத்தைப் பார்த்து கூக்குரலிட்டு: “நமது அலுவலை நிறுத்துவோம்; தற்போது நமது பெரிய பணி கிறிஸ்தவ இராணுவத்திற்கு கடவுள் கொடுத்துள்ள வெற்றிக்கு நன்றி சொல்வதாகும்” என்று கூறினார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கடலின் புயல்களால் தாமதமான ஒரு கூரியர் செய்திக் கடிதம், லெப்பாந்தோவின் கடற்படை வெற்றிச் செய்தியுடன் ரோம் வந்து சேர்ந்தது. இஸ்லாமிய சக்தியானது ஒரு அதிர்ச்சியூட்டும் வல்லமையால் அடித்தொழிக்கப்பட்டது, அதிலிருந்து அது ஒருபோதும் மீள முடியாது என்று பாப்பரசர் ஆனந்தக் கண்ணீர் விட்டழுதார். அப்போது ரோமாபுரியின் அனைத்து பக்த சபை அமைப்புகளின் உறுப்பினர்களும் ஜெபமாலை ஊர்வலங்களை நடத்திக்கொண்டிருந்தன. அவ்வமயம், இந்த வெற்றிக்காக பரிசுத்த கன்னிகைக்கு நன்றி தெரிவிக்க, புனித 5 ஆம் பத்தி நாதர் புனித கன்னி மரியாயின் பிரார்த்தனையுடன் “கிறிஸ்தவர்களின் சகாயமே” என்னும் வேண்டுதலை இணைத்துக்கொண்டார். மேலும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை ஜெய மாதாவின் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது, பின்னர் இத்திருவிழா பாப்பரசர் 13 ஆம் கிரிகோரியாரால் மிகவும் பரிசுத்த ஜெபமாலை மாதாவின் திருவிழாவாக மாற்றப்பட்டது.

1716 இல் சவோய் இளவரசர் யூஜினால் ஹங்கேரியில் நடந்த பீட்டர்வர்டீன் போரில், துருக்கியர்கள் மீது அடைந்த ஒரு புதிய வெற்றிக்குப் பிறகு, பாப்பரசர் 11 ஆம் கிளெமென்ட் ஜெபமாலை மாதாவின் திருவிழாவை உலகளாவிய அளவிற்கு விரிவுபடுத்தினார். மாபரும் புனிதர் பாப்பரசர் 10 ஆம் பத்தி நாதர் இத்திருவிழாவை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு மாற்றினார்.
……………………தொடரும்..

Leave a Reply