Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

பரிசுத்த ஜெபமாலை பற்றிய சுருக்கமான வரலாறு- Part-2

By Rev.Fr. PANCRAS M. RAJA

தற்போதைய வடிவத்தில் ஜெபமாலை – மாதாவின் மங்கள வாழ்த்து மாலை

கிபி 1214 இல், ஒரு புனிதமான மற்றும் போற்றத்தக்க பாரம்பரியத்தின் படி, சுவாமிநாதர் சபையின் நிறுவனர் புனித குஸ்மான் சுவாமி நாதருக்கு மகாப்பரிசுத்த கன்னிகை தாமே தோன்றி, இந்த பக்தி முயற்சியை அர்ச்சிக்கும் விதமாக, பிரான்ஸ் நாட்டின் தென் பகுதிய அழித்துக்கொண்டிருந்த அல்பிஜென்சியன் தப்பறையை எதிர்த்துப் போரிடுவதற்கான ஆயுதமாக ஜெபமாலையை அதன் தற்போதைய வடிவத்தில் வழங்கினார்கள்.

மரியாயின் மாபெரும் அப்போஸ்தலரான புனித லூயிஸ் தே மோன்ட்போர்ட், அந்த பெரிய நிகழ்வு நடந்த சூழ்நிலைகளைப் பற்றிச் சொல்வதாவது:

“ஆல்பிஜென்சியர் மனந்திரும்புவதற்குத் தடையாய் இருக்கிறது மனிதர்களுடைய பாவங்களின் கனாகனமே என்பதைக் கண்டு, புனித சுவாமி நாதர், துலூஸ் நகருக்கு அருகிலுள்ள ஒரு காட்டிற்குள் சென்று, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் இடைவிடாமல் ஜெபம் செய்தார். இந்த நேரத்தில், அவர் சர்வ வல்லமையுள்ள சர்வேசுரனின் கோபத்தைத் தணிப்பதற்காக அழுது புலம்புவதையும் கடுமையான தவம் செய்வதையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவர் தனது சாட்டையை எந்த அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தினார் என்றால், அதனால் அவரது சரீரம் கிழித்துச் சிதைக்கப்பட்டது, இறுதியாக அவர் மயங்கி விழுந்தார்.’

“இந்த நேரத்தில் மாதா அவருக்கு மூன்று சம்மனசுக்களுடன் தோன்றிக் கூறினார்கள்: ‘அன்புள்ள சுவாமி நாதரே, உலகத்தைச் சீர்திருத்த பரிசுத்த தமதிரித்துவ தேவன் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்த விரும்புகிறார் தெரியுமா? ‘

“ஓ, மாதாவே,” புனித சுவாமி நாதர் பதிலளித்தார், “என்னை விட உங்களுக்கு மிகவே நன்றாகத் தெரியும், ஏனென்றால் உமது சுதன் சேசு கிறிஸ்து நாதருக்கு அடுத்தபடியாக, நீங்களே எப்போதும் எங்கள் இரட்சணியத்தின் முக்கிய கருவியாக இருந்தீர்கள்.’

“பின்னர் மாதா பதிலளித்தார்கள்: “இந்த வகையான போரில், செம்மையாக அடித்து நொறுக்கும் ஆட்டுக்கடா, எப்போதும் புதிய ஏற்பாட்டின் அடித்தளமாக இருக்கும் சம்மனசின் மங்கள வாழ்த்து மாலை என்பதை நீர் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆகையால், நீர் இந்த கடினப்பட்ட ஆத்துமங்களை அடையவும், கடவுளிடம் அவர்களை வெல்லவும் விரும்பினால், என் சங்கீத மாலையைப் பிரசங்கம் செய்யும்.’

“ஆகவே, ஆறுதலடைந்து அவர் எழுந்து, அந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் மனந்திரும்புதலிற்காக ஆத்தும தாகத்தால் பற்றி எரிந்தபடி, நேராக மேற்றிராசனக் கோவிலலிற்கு விரைந்தார். அதே நேரத்தில் கண்ணிற்குத் தெரியாத சம்மனசுக்கள் மணிகளை அடித்து மக்களை ஒன்று திரட்டவே, புனித சுவாமி நாதர் பிரசங்கம் செய்யத் தொடங்கினார்.

பிரசங்கத்தின் ஆரம்பத்தில் ஒரு பயங்கரமான புயல் உண்டானது, பூமி அதிர்ந்தது, சூரியன் இருண்டது, இடியும் மின்னலும் ஏற்பட்டது, அனைவரும் மிகவும் பயந்தனர். ஒரு முக்கிய இடத்தில் அனைவரும் காணும்படியாகத் தோன்றிய ஒரு மாதாவின் படத்தைப் பார்த்து அவர்களின் பயம் மேலும் அதிகரித்தது. மேலும் அவர்கள் மனந்திரும்பத் தவறினால், கடவுளின் பழிவாங்கலை அவர்கள்மேல் விழச் செய்யும் அடையாளமாகவும் தங்கள் வாழ்க்கையைத் திருத்தி கடவுளின் தாயின் பாதுகாப்பைத் தேடும்படியாகவும், மாதா மூன்று முறை தம் கரங்களை பரலோகத்தி நோக்கி உயர்த்துவதைப் பார்த்தார்கள்.

கடைசியாக, புனித சுவாமி நாதரின் வேண்டுதலால் புயல் முடிவுக்கு வந்தது, அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். பரிசுத்த ஜெபமாலையின் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் அவர் எவ்வளவு தீவிரமாகவும் த்ர்மானமாகவும் விளக்கினார் என்றால், கிட்டத்தட்ட துலூஸ் நகரின் அனைத்து மக்களும் அதை ஏற்றுக்கொண்டு தங்கள் தவறான விசுவாச கொட்பாடுகளைக் கைவிட்டனர்.” (ஜெபமாலையின் ரகசியம், மாண்ட்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ், Bay Shore, NY, 1954, pp 18 – 19)

ஜெபமாலை பிரசங்கிப்பதன் மூலம் பெறப்பட்ட விசுவாசத்தின் இந்த அற்புதமான வெற்றிக்குப் பிறகு, புனித சுவாமி நாதர் போற்றுதற்குரிய இந்த பக்தியைப் பரப்ப புது உற்சாகத்துடன் முயற்சித்தார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு 1221, அவருடைய பிரசங்கத்தின் நினைவு அதைக் கேட்ட கிறிஸ்தவர்களின் மனதிலிருந்து படிப்படியாக மறைந்துவிட்ட படியால், ஜெபமாலை மீதான பக்தி குறைந்தது.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஜெபமாலை மீதான பக்தி ஏறக்குறைய புதைக்கப்பட்டு மறக்கபட்டுவிட்டது.
……………… தொடரும்……

Leave a Reply