Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின்  புதுமைகள் November-6-புதுமை

உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரம் செய்யாததால் வந்த ஆக்கினை

பெறாரா என்ற நகரத்தில் ஒரு மனிதன் அழகான மாளிகை ஒன்றைக் கட்டி அதில் தன் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு அம்மாளிகையினுள் இரவு வேளைகளில் பயங்கரமான சத்தங்களைக் கேட்டதால் அப்பிள்ளைகள் அங்கே குடியிருக்கப் பயந்து வேறு இடம் தேடிப் போனார்கள். செய்தியறிந்த மற்றவர்களும் அந்த மாளிகைப் பக்கம் பயந்து போய் போகாமலே இருந்தார்கள்.

இம்மாளிகைக்கு உரிமையாளனின் மூத்த மகன் தங்கள் மாளிகை பயன்படுத்தப்படாது பாழாகிக் கிடப்பது குறித்து பிறரோடு வருத்தத்தைப் பகிர்ந்தான். அவர்களில் ஒருவன் துணிச்சலோடு “ஐயா, நான் வேண்டுமானால் அந்த மாளிகையில் குடியிருக்கிறேன். ஆனால் நீர் குறிப்பிடும் பயங்கர சத்தங்கள் நின்று போனால் எனக்குப் பரிசாக பத்தாண்டுகள் அம்மாளிகையில் உரிமையோடு குடியிருக்கக்கூடிய அனுமதியைக் கொடுக்க வேண்டும் என்றும் பத்தாண்டுகள் முடிந்த பிறகு மாளிகையைத் திரும்ப உம்மிடம் ஒப்படைக்கிறேன். இதற்கு சம்மதமா?” என்று கேட்டான்.

அதற்கு மூத்த மகன் சம்மதித்ததால் அவனும் அதிக அளவு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அம்மாளிகையில் குடியேறினான். அங்கே பகலில் பயமில்லாமல் இருந்தாலும் இரவில் பாரமான சங்கிலிகள் இழுக்கப்படும் ஒலியைக் கேட்டான். உள்ளுக்குள் அவன் பயந்தாலும் ஓடிப் போகாமல் தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் ஒன்றை வாசிக்கலானான். ஆனாலும் யாராவது தன்னை நெருங்கி வருகிறார்களா வென்று அவ்வப்போது சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான்.

திடீரென்று அவன் கண்ட காட்சி இதுதான். உயரமான ஒரு மனிதன் தன் கை கால்களில் பெரிய சங்கிலியால் கட்டப்பட்டவனாக தன்னிடம் வருவதைக் கவனித்தான். அருகில் வந்த அவன் நீ என்ன புத்தகத்தை வாசிக்கிறாய்? என்று கேட்டதற்குப் பதில் கூறிய அவனுக்கு வேறு வார்த்தை பேசாது அவனருகிலேயே இரவு முழுக்க அமர்ந்தான் அந்த உயரமான மனிதன்.

இரவு வேளையில் துறவிகள் மடத்திலிருந்து எழுப்பிய மணியோசை கேட்ட உயரமான மனிதன் மெல்ல எழுந்து நடக்கலானான். இறுதியில் அந்த உயரமான மனிதன் ஒரு கல்லறையில் நுழைந்து மறைந்து போனான். அம்மாளிகையில் தங்கியிருந்தவன் மறுநாள் அந்தக் கல்லறை பற்றி அக்கம் பக்கத்தில் விசாரித்தான். அவன் தங்கியிருக்கும் மாளிகையைக் கட்டிய உரிமையாளனின் கல்லறை என்பது தெரிய வந்தது. அவன் சில குருவானவர்களை அழைத்து அம்மனிதனுடைய ஆத்துமத்துக்காக பல திருப்பலிகள், ஜெபமாலை ஒப்புக் கொடுக்கச் செய்தது மட்டுமில்லாமல் வேறு புண்ணியச் செயல்களையும் செய்தான். அந்த ஆன்மாவுக்கு ஞான உதவி முடிந்த பிறகு அதன்பின் அம்மாளிகைக்குள்ளிருந்து எவ்வித பயங்கர சத்தமும் கேட்கவில்லை. அநேக ஆண்டுகள் அங்கே மனிதர்கள் குடியிருக்கும் சூழ்நிலையும் உருவாகியது.

கிறிஸ்தவர்களே! இப்போது குறிப்பிடப்பட்ட மாளிகையின் உரிமையாளன் இறந்த பிறகு அவன் பிள்ளைகள் தங்கள் தந்தையுடைய ஆன்மா சாந்தியடைய கிஞ்சித்தேனும் உதவி செய்யாததால் அங்கே குடியிருக்க அஞ்சி வேற்றிடம் சென்றனர். அம்மாளிகையில் இரவில் தங்கியவன் அந்த ஆத்துமத்துக்கு செய்த உதவிகளால் பயமும் துன்பமும் மறைந்து போனது.

தாய் தந்தை மரிக்கும் வேளையில் தங்களுக்கு அவர்களால் கொடுக்கப்படும் சொத்து, சுதந்திரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு அனுபவிக்கும் பிள்ளைகள் தம் பெற்றோர் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவதியுறும்போது அவர்களின் ஆன்ம இளைப்பாறுதலுக்காக எவ்வித உதவிகளையும் செய்யாததால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அதிகம் துன்பப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட இழப்பு உங்களுக்கு வராதபடி தாய் தந்தை உறவினர் ஆத்துமங்களுக்காக திருப்பலி மற்றும் புண்ணிய காரியங்களைச் செய்ய வேண்டுவது உங்களது கடமையல்லவா?

நீங்கள் செய்வது போல்தானே உங்கள் பிள்ளைகளும் நீங்கள் இறந்தபின் உங்கள் சொத்தை அனுபவித்துவிட்டு உங்களைப் பற்றி மறந்து போவார்கள்.

அம்மாளிகையில் தங்கியிருந்தவர்கள் இரவு நேரங்களில் பயங்கர சத்தத்தைக் கேட்டு இது பிசாசின் வேலையோ? என்று அச்சப்பட்டனர். பிறகுதான் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மா எழுப்பிய ஓசை என்பது தெரிய வந்தது. இப்படித்தான் சில கிறிஸ்தவர்கள் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவாது அவர்களை உதாசீனப்படுத்துகிறார்கள். உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களுக்கு உதவ முன் வரும் பொருட்டு சில கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய அனுமதியின்பேரில் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் தரிசனத்தை உணர்கிறார்கள்.

இறந்துபோன உறவினர்களின் ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றியடைய வேண்டுதல், தர்மம் செய்தல், திருப்பலி, ஜெபமாலை ஒப்புக்கொடுத்தல் ஆகிய புண்ணிய காரியங்களை செய்தால் அவர்கள் விரைவில் மோட்சம் போக முடியும். அப்படிப் போன பின் நன்றியுடன் உங்களுக்காகவும் கட்டாயம் தொடர்ந்து வேண்டிக்கொள்வார்கள்.

ஆமென்.

பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை

Leave a Reply