Thusnavis Matha Blog

Punitha Thusnavis Matha

OUR LADY OF SNOWS – PRAY FOR US | புனித தஸ்நேவிஸ் மாதாவே - எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்களின்  புதுமைகள் November-5-புதுமை

 
உத்தரிக்கிற ஸ்தலத்து தண்டனைகளின் கொடுமை 
 
பூமியில் இருக்கிற துயரங்களைவிட, கடுமையான வேதனைகளைவிட உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பினால் ஏற்படும் வேதனை மிகமிகக் கொடியது என்கிறார் அர்ச். அகுஸ்தினார். 
 
ஆஸ்திரியா நாட்டில் ஒரு மடத்தில் இருந்த இரண்டு குருக்கள் தங்களுக்குள்ளே வெகு நட்பாயிருந்து பல புண்ணிய காரியங்களைச் செய்து புனிதர்களைப் போலவே வாழ்ந்தனர். இவ்விருவரில் ஒருவர் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் நேரம். அவருடைய காவல் சம்மனசு அவருக்குத் தோன்றி “அவர் சற்று நேரத்தில் இறந்துபோவது மட்டுமல்லாமல், அவருடைய அற்பப்பாவங்களுக்குத் தண்டனை பெற உத்தரிக்கிற ஸ்தலத்து நெருப்பில் வாடும்போது அவருக்காக வேறு குருவானவர் திவ்விய பலிபூசை ஒப்புக்கொடுக்கும்வரை உத்தரிக்கிற ஸ்தலத்து துன்பம் தொடரும் என்றும் திவ்விய பலிபூசையை
  ஒப்புக்கொடுத்த பிறகு அவர் மோட்சத்துக்குப் போய்விடுவார்” என்றும் கூறி மறைந்தது. 
 
படுக்கையில் இருந்த குருவானவர் தன் நண்பராயிருக்கும் குருவானவரை வரவழைத்து நடந்த நிகழ்ச்சியைக் கூறி தாம் இறந்தவுடன் தாமதமின்றி உடனே ஒரு திவ்விய பலிபூசையை
நிறைவேற்றி தன் ஆன்மாவுக்காக ஒப்புக்கொடுக்கும்படி வேண்டினார். நண்பரான குருவானவரும் இதற்கு உடனே சம்மதித்தார். 
 
மறுநாள் காலையில் நோயிலிருந்த குருவானவர் மரணமடைய அவரை கல்லறையில் அடக்கம் பண்ணுவதற்குள், அவர் நண்பரான குருவானவர் உடனடியாக ஆலயத்தில் அவருக்காக திவ்விய பலிபூசையை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தார். திவ்விய பலிபூசையை முடிந்து ஆலயத்தில் அவர் செபித்துக் கொண்டிருந்தபோது, இறந்த குருவானவரின் ஆன்மா அவரிடம் தோன்றி வருத்தத்தோடு பேசியது. “சகோதரரே, உம்முடைய நட்பு என்ன ஆனது? நீர் ஏன், என் பேரில் இரக்கமில்லாமல் போனீர்?” என்று கேட்க, திகைப்படைந்த குருவானவர் “சகோதரரே, ஏன் இப்படிச் சொல்லுகிறீர்?” என்று வினவ, இறந்த ஆன்மா பதிலாக “நான் இறந்தவுடன் எனக்காக உடனே திவ்விய பலிபூசையை ஒப்புக்கொடுப்பேன் என வாக்கு கொடுத்ததை நீர் நிறைவேற்றாமல் நான் இறந்து ஓர் ஆண்டுக்குப் பிறகே திவ்விய பலிபூசையை ஒப்புக்கொடுத்தீர், இப்படித் தவறவிட்டதால் உம்மால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் நான் ஒரு வருட காலம் கொடிய வேதனை அனுபவித்தேன்” என்று துயரத்தோடு கூறினார். 
 
குருவானவர் மறுமொழியாக “அது எப்படி? இன்றைக்குத்தான் நீர் இறந்தீர். இன்னமும் உமது உடலை கல்லறைக்கு முதலாய் கொண்டுபோகவில்லை. உம் உயிர் பிரிந்தவுடனேயே ஆலயத்துக்குச் சென்று திவ்விய பலிபூசையை நிறைவேற்றி ஒப்புக்கொடுத்தேன். உண்மை இவ்விதமிருக்க, ஓராண்டுக்குப் பிறகே நான் திவ்விய பலிபூசையை நிறைவேற்றியதாக நீர் கூறுவது எப்படி?” என்று கேட்டார். 
 
இறந்த குருவானவர் “உத்தரிக்கிற ஸ்தலத்து வேதனை கொடுமையாக இருக்கிறதால் கொஞ்சநேரம் கூட அநேக ஆண்டுகள் போலத் தெரிகின்றது நான் இறந்த சிறிது நேரத்தை உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஒரு வருடம் என்று எண்ணினேன். ஆனால் நீர் எனக்காக உடனே ஒப்புக்கொடுத்த திருப்பலியால் என் வேதனையெல்லாம் தீர்ந்தது. இப்போது நான்மோட்சம் போகிறேன். எனக்கு நன்மை கிடைக்க உதவிய உமக்காக மோட்சத்தில் எப்போதும் நான் தொடர்ந்து ஆண்டவரை வேண்டுவேன்” என்று மகிழ்ச்சியோடு கூறியவராய் மோட்சத்துக்குப் போனார். 
 
சகோதரசகோதரிகளே! மரித்த அந்தத்துறவிக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்த சிறிதுநேரம் கூட ஒருவருடம்போல் தோன்றியது. அப்படியென்றால் நீங்கள் உங்கள் பாவங்களினால் உத்தரிக்கிற ஸ்தலத்தில் அநேக காலம் இருக்க நேர்ந்தால், அந்த வேதனையினால் ஒருவருடம் கூட ஆயிரம் வருடம் போலத்தோன்றும். எனவே, இப்போது பாவம் செய்யாதிருப்பது மட்டுமல்லாமல் செய்த பாவங்களுக்காக இப்பொழுதுதிலிருந்தே பரிகாரம் செய்துவர வேண்டும். 
 
உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறந்தவுடன் உடனே தாமதமின்றி அவர்கள் ஆத்துமங்களுக்காக செபம், தானதருமம், திவ்விய பலிபூசை
ஒப்புக்கொடுத்தல் போன்ற நற்காரியங்களை உடனே செய்ய ஆரம்பிக்க வேண்டும். நீங்கள் ஒருமாதம் இரண்டு மாதமென புண்ணிய காரியங்களைச் செய்ய தாமதித்தால் அந்த ஓரிருமாதங்களும் அநேக வருடங்கள் போல் மரித்த ஆத்துமாக்களுக்குத் தோன்றும் அல்லவா? 
 
உங்கள் வீட்டு மாடு கிணற்றில் வீழ்ந்தால் ஆட்களைத் திரட்டி உடனடியாக படாதபாடுபட்டு காப்பாற்றுவீர்கள் இல்லையா? உறவினர்களின் ஆன்மா நெருப்புக் கிணறாகிய உத்தரிக்கிற ஸ்தலத்தில் அவதியுற்றால் அவர்களின் வேதனை தீர்ந்து மோட்சம் அடைய உடனே உதவாமல் காலதாமதம் செய்வது சரியா? உங்களுடைய தாமதிப்பினால் அவர்கள் எவ்வளவு அவதியுற வேண்டியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். நீங்கள் தாமதித்தால் அது அவர்களுக்கு கடினமான கொடுமை அல்லவா?  
 
ஆமென்.  
 
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமைஉண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை 

Leave a Reply